*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 22, 2011

வீட்டு ஞாபகம்...

அடிக்கடி
காற்றில் கலந்து வருகிறது
அம்மாவின்...அடியேய்
அப்பாவின்...ஆச்சியா
தங்கையின்...அக்காச்சி

துளையிட்ட இரும்புக் குழாயில்
பாசத்தின் பாவம் குறைந்திருந்தாலும்
தொட்டுவிடலாமென
எட்டும் கைகளில்
மின்சாரத் தொடுப்பு மட்டுமே.

குறுகிக் கசியும்
கனத்த மனதோடு
சமசதுரமாய் நாங்கள்!!!




சொல்ல நினைத்து
தவறிய வார்த்தைகளுக்குள்
அம்மா.

எப்போதும் நினைக்கிறேன்
சொல்லி முடிக்கவென்று
மனதிற்குள் உச்சரித்து
உன்னி வாய்க்குள்
கொண்டுவருமுன்
முத்தமிட்டு தலை தடவி
தன் அலுவல்களோடு.

அம்மா....
நாளையாவது
விடியும் பொழுதில்
பக்கத்தில் நீ!!!


ஹேமா(சுவிஸ்)

Thursday, April 14, 2011

பங்கு நீ சித்திரையில்...

வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்
இன்றைய நாளில்தான்
இருவருக்குமான
உரையாடல்கள் ஆரம்பித்து
ஆன்மாக்கள்
கை கோர்த்துக்கொண்டன.

மற்றைய நிறங்களை
நீயே நிறமற்றதாய்
உருமாற்ற இணங்கியுமிருந்தாய்.

நிராகரிக்காத உன் நேர்மையை
சுட்டுக் காய்ச்சிய நெருப்பிலிட்டு
சம்மட்டியாலும் அடித்தே
உறுதியாக்கிக்கொண்டேன்.

சறுக்காத உன் வார்த்தைகள்
சிவந்த தீயின் கண்களால்
உருமாற்றும்
கொல்லனின் உலைக்களத்தில்
அழகாய் வார்த்தெடுத்த
நெடிந்து அகன்ற கூரான வேல்போல!!!

ஹேமா(சுவிஸ்)

என் எல்லா நண்பர்களுக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வணக்கங்கள் !

Tuesday, April 05, 2011

சொல்ல...வா...

புதிர்களை அவிழ்க்க
நேரமுமில்லை
விருப்பமும் இல்லை
அவை அவைகளாகவே
இருக்கட்டும்
என்னைப்போலவே.

கடலின் ஆழத்தை
அதன் விரிவுகளை
அலையின் இரகசியத்தை
கரையோர மணலின்
தணிவுகளையும் கூட.

நதி எங்கு தொடங்கி
எங்கு வருகிறது
என்பதற்கான புதிர்களின்
தொடக்கங்களையும்
முடிவுகளையும்
கண்டறியத் தேடியதில்லை
என்றாலும் கண்முன்
நதியும் கடலும்
நிதர்சனமாய்.

இன்றைய தேடுதல்
புதிதாய்...அதிசயமாய்
இல்லை...இல்லை
எனக்குள்ளேயே சந்தேகமாயும்.

பிறை நிலவுக்குள் இருளையே
சிறைவைத்த உனக்கு
ஒரு பெயர்
தேடிக் களைத்து
இன்று...
காற்றுக்கு லஞ்சமாய்
முத்தம் கொடுத்தும்
பனியின் கூந்தல் தடவி
சிக்கெடுத்தும்
வானின் ஊத்தை தோய்த்தும்
கேட்டுப் பார்த்தேன்.
எப்படி இருப்பாய் நீ...
என்றல்லவா கேட்கிறார்கள்
எப்படிச் சொல்ல நான்.

கவிதை போல...
காலையின் பனி போல...
தூங்கத் தோள் தரும்
காதலன் போல...
தாலாட்டும் அன்னை போல...
காலை எழுப்பும் பூபாளம் போல...
என் தனிமை போக்கும் இசை போல...
எதைச் சொல்ல நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, April 02, 2011

உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011....

கைகள் கோர்த்துக்கொண்ட
இரு சாத்தான்கள்

மண்டையோடுகள் தவிர்த்து

மட்டையோடு

விளையாடும் நேரமின்று.

உள்ளும் வெளியிலும்
தமிழனின் சில உயிர்கள்

சிரட்டைகள் தங்கிய

மழை நீருக்குள்ளும்

அங்குமிங்கும்
மிச்சமாய்
இன்னும் கொஞ்சம்.

தமிழனின் தலைகளைப்
பந்தாக நினைத்தாலே
யாரோ ஒருவர் கையில்
உலகக்கோப்பை
உறிஞ்சும் இரத்தம்
உலகம் காணாமல்
மட்டையோடு
எலும்புகளும் பத்திரமாய்.

சூரியனைத் தொலைத்த
மொட்டைப் பனைமரமென

நீள வளர்ந்திருக்கிறது

உயிரற்ற நிலை

தாய் மண்ணுக்குள்

வாய்ப்பூட்டுப் போட்ட

மௌனப்போராடமும் அப்படியே.

இதுவும் கடந்து போகுமென

பேசமுடியாதிருக்கிறார்கள்

அவர்கள்...

விளையாடியபடிதான்

இன்னும் இவர்கள்!!!

இலங்கை வென்றால் இறந்த இராணுவத்தாருக்குச் சமர்ப்பணமாம் விளையாட்டில்கூட நாடா.....இனமா இந்தியாவே வெல்லட்டும் !

ஹேமா(சுவிஸ்)