*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, June 30, 2008

ஐரோப்பாக் கோப்பை 2008

Sunday, June 29, 2008

நிலவு...

கொள்ளை நட்சத்திரங்கள்
தன்ணொளியோடு
வானில் இருந்தும்
இரவல் ஒளியில்
அழகு ராணியாய்
வலம் வரும் வானத்துப் பெண்.
காணாமல் போய்விடுகிறாள்
அடிக்கடி எங்குதான்?

மனம் சோர்வெடுக்க
ஓய்வெடுத்துக் கொள்கிறாளோ
பூமியின் அக்கிரமங்களைச்
சகிக்க முடியாமல்!

ஈழத்தின்
பட்டினிப் போராட்டம் பார்த்தே
பாதி தேய்ந்தே போகிறாளோ!

நாணித்தான்
முகிலுக்குள் ஒளிகிறாளோ
காதலின் புனிதம் இழந்து
காமத்தின் கோரத்துள்
காவடி ஆடும்
இளைஞரைக் கண்டு!

ஐயோ...
என்னதான் செய்வாள்
பாவம் அவள்
ஏதாவது சொல்லப் போக
அவளுக்கும் துளை போட்டு
ஓட்டையாக்கி விட்டால்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 27, 2008

அநாதையில்லை யாரும்...


உயரப் பறக்க
சிறகுகள் அற்று
அழுது களைக்க
அடுத்த கிளையில்
அசந்தே போனேன்.

கொத்திக் கலைத்த
அதே காக்கா...
அழைத்துப் போனது
தின்ன உணவும் தந்து அன்பாய்
மன்னிப்பும் கேட்டது.

இன்னும் நிறைவாய்...
கட்டித் தருவேன்
கூடும் ஒன்று.

இல்லை...இல்லை
கூட்டிப்போவேன்
உன் இனம் வாழும்
பகுதிக்கு என்றது.

பாம்பும் ஒன்று மரத்தடியில்
புற்றுக்குள் காத்திருக்கு
இரையாக்க
என் குஞ்சுகளை.

பாம்பின் புற்றால்
புத்தியும் வந்தது.
தூரப்பறந்தே உணவும் தேட
மனமும் இன்றி
உதவியும் இன்றி
குஞ்சுகள் வாடிப் படுக்க
பசியின் அவதிக்குள் நான்.

அகதிகளுக்காய் வானில் இருந்து
வந்து விழுந்த
உணவுப் பொட்டலம்
விழுந்தது எனக்கும்.
வயிறாற உண்டபின்
வந்தாய் என் ஞாபகத்தில் நீ.
நான் அழ...
காக்கா அழ...குஞ்சுகள் அழ...

அன்பு காட்ட
அடுத்தவர் இருக்கும்வரை
அநாதையில்லை யாரும்.
அப்படிப் பார்த்தால்...
ஆதியில் பிறந்த மனிதனும்
ஆதாம் ஏவாளும் அநாதை.

அநாதரட்சகன் கூட...
அநாதைதானே!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, June 25, 2008

இயலாமையின் எல்லை...

கற்பனைகள் உடைந்த கற்குவியலுக்குள்
கனத்த மனதோடு.
நேசித்தலின் அளவை விட
வெறுத்தலின் வேக்காட்டோடு.
இனி ஒன்றும் செய்வதற்கில்லை
விலகுவதைத் தவிர.
சலசலத்த சமூகத்தின் இடையே
சின்ன அமைதியோடு நான்.
உன்னால் அதுவும் தொலையும் தறுவாயில்.

மன்னித்தலும் மறத்தலும்
உன்னைப் பொறுத்தவரை
தேவையற்ற ஒன்று.
வருடங்கள் எட்டின் வாக்குவாதங்கள்
செவிடன் காதில் ஊதிய சங்காய்.
சாக்கடைக்குள் கலந்து கொண்டிருக்கும் உனக்கு
என் புத்திமதிகள்
சாத்தான் காதில் ஓதும் புலம்பலாகவே.

இப்போ எல்லாம்
என்னைவிட புகையும் போதையும்
உன் துணையாக.
கட்டி வைத்துக் காவல் காக்க
ஒன்றும் குழந்தையல்ல நீ.
அன்பின் கட்டுக்குள் அடங்காத நீ
அழிவை நோக்கியே.

என்னவனே...
கண்கள் வலிப்பதை அறிகிறாயா.
கற்பனையில் காதலித்த
அந்த அழகான நாட்கள்.
உனக்குள்ளும் இப்படியா...
நீயுமா... என்பதுபோல.
கற்பனைக்கும் உண்மைக்கும்
எட்டாத் தூரமாய்.
சிறுக்கி நான் ஏமாந்தது என் குற்றமே
சொன்னாயா நீ என்ன!

திறமைகள் நிறைந்திருந்தும்
முயற்சியோ தேடலோ அற்றவனாய்.
மற்றவர்களைக் குறை சொல்லியபடி.
இன்றிருந்தோர் நாளையில்லை.
உலக ஒற்றுமைக்காய்
கூக்குரலிடும் ஒரு பத்திரிகைவாதியாய்.
இருந்தும் அசிங்கமான வார்த்தைகளோடு
படிப்பை பண்பை மறந்து
பிற்போக்காய் ஏனடா நீ.

ஏற்றிவிட ஏணி தருகிறேன்
ஏறாமலேயே எட்டியும் உதைக்கிறாய்.
தனித்த இரவில் கூட வந்து பார்
உன்னோடுதான் பேசிக்கொண்டிருப்பேன்
உலகம் ஒன்று எங்களுக்காய் உருவாக்கியபடி
உன் உயர்வின் எதிர்பார்ப்போடு.
காற்றோடு கலக்கும்
உன் திறமைகளைத் திரும்பவும்
கேட்க மிகுந்த ஆவலுடன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 23, 2008

நம்பமுடியவில்லை...

காற்றுப் பதிந்து
தந்தது...
உன் நஞ்சு கலந்த
நாராசமான
வார்த்தைகளை.
உயிர் இருந்தும்
இறக்க வைத்தாயே
உன் உயிர் கலந்த
உறவு கூட
ஒரு கணம் மயிர்
கூச்செறிந்தது.
உன் நேசத்தை மட்டுமே
சுவாசித்த என் மூச்சும்
மூச்சுத் திணறியது.
உன் உருவம் தேடி
நகர்கிற நொடிகள் கூட
நடுங்கி
நிலை கலங்கிப் போனது.
உன் வரவுக்காகவே
காத்திருக்கும்
கனவுகள் கூட
வெறுத்துக் கறுத்து
இருட்டாகிப் போனது.

உன் குரலின் இனிமைக்காக
காத்திருக்கும்
தொலைபேசி கூட
மெளனமாய்
மொழி இழந்தது.
நினைவுகளில்
உனை நிறுத்தி
கற்பனையில்
உனை வளர்த்துக்
காத்திருக்கும்
என் நினைவுகள் கூட
கதி கலங்கி போனது.

இன்றுவரை
என்னை உன்னோடு
சிந்தனையில்
சேர்த்து வைத்த
என் செவிகள் கூட
பொய்யானதோ
உன் காதல் என்று
பைத்தியமாகிப் பிதற்றியது.
எனை விட
உனை நேசித்த
என் நிழல் கூட
நொருங்கிப் போனது.

நீ......
சொன்ன நச்சு வார்த்தைகள்
நீ.... உனை
மறந்த பொழுதானாலும்
என் வாழ் நாளில்
ஒரு பொழுதும்
மறக்காத
வலி தந்த வடுவை
மாற்ற
இனி ஒரு போதும்
முடியாது உன்னால்!!!!

02.02.2007
ஹேமா(சுவிஸ்)

Saturday, June 21, 2008

காலக் கைதி...


விதியே வழிவிடு...
நீ மாத்திரம் என்னை
பற்றிக் கொண்டிருக்கிறாயே ஏன்?
உன்னை நான் வெறுக்கிறேன்.
வாழ என்று நினைக்க
ஏன் மறுக்கிறாய் நீ மட்டும்.
நான் களைத்துவிட்டேன்.
கண்களுக்குள் காளான்கள்
கண்ணீர் விட்டே வளர்க்கிறேன்.
காலத்தின் கொடுமை கண்டு
கலங்கி நடுங்கித் தவிக்கிறேன்.
உன்னால்...
உண்மை அன்பின்
தன்மை புரியாமல்
வெறுப்பதா...விரும்புவதா
தெரியாமல் இறுகிப் போகிறேன்.
ஏன் நான் மாத்திரம்
உன் சிலுவையில்
அறையப் பட்டுக் கொள்கிறேன்.
அன்பின் நாயகன்
அறியாமை யூதர்களால்
சிலுவையில் அறையப் பட்டது போல்.
என்னை எவருமே
புரிந்து கொள்ளவில்லையே.
உன்னை நான்...
வெறுப்பதை விட
என்னை நானே
வெறுத்துக் கொள்கிறேன்
வேதனையோடு!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 20, 2008

காத்திருக்கிறேன்...

Wednesday, June 18, 2008

பட்டினிச் சாபம்...

பசி...பட்டினி
இறப்பு...இடப்பெயர்வு
அகதி...அனாதை
நிலம்...புலம்
இதைப்பற்றிய அக்கறை ஏதுமற்று,
எம் அரசியல்
நகர்வுகளும் பேச்சுக்களும்
அவர்களது அதிகாரம் பற்றியும்,
நீயா நானா என்பதிலும்,
விட்டுக்கொடாமையிலும்,
யுத்தத்தைச் சொல்லிச் சொல்லியே
அயல் நாடுகள் முழுதும்
பிச்சை எடுப்பது பற்றியும்,
இன ஒழிப்பிற்காய்
ஆயுதங்கள் வாங்கிக் குவித்திட
நிதி ஒதுக்கீடு பற்றிய
திட்டங்களிலுமாய்.

வேடன் வலையில்
சிக்கிய புறாக்களாய் மக்கள்
விடுவிப்பார் யார் என்கிற தவிப்பில்.
அரசியல் அரக்கர்கள் ஒரு பக்கமும்
பசி அரக்கன் மறு பக்கமுமாய்.
கேட்பார் அற்ற வீதியில்
அலறும் தத்துவப் பாடலாய்
தமிழரின் அழுகுரல்கள்.

வீராப்பையும் விரோதத்தையும்
அக்கிரமத்தையும் அநியாயத்தையும்
மனதில் நிறைத்துக்கொண்டு,
தம் தப்பை மறைக்க
தாமரைப் பூ வைத்து
புத்தரை முட்டுக்காலில்
ஆராதிக்கும் அரக்கரை,
பட்டினிப் பிடிக்குள் சிக்கி
சொட்டுச் சொட்டாய்
உயிர் விடுகின்ற உயிர்களில்
ஒரு உயிராவது
உரத்து
பசியின் வலி சொல்லி
பசியின் கொடுமை சொல்லி
இரக்கமாய்
அவர்கள் நெஞ்சைத் தொட்டு
மெதுவாய்
மனக் கதவைத்
தட்டித் திறந்து செல்லுமா!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 16, 2008

வேண்டும் ஒரு கனவு...

இன்னும்...இன்னும்
இறுக அவனை
அணைத்துக் கொள்கிறேன்.

புலம் பெயரும் முன்
எங்கள் கோவில்
திருவிழா உற்சவம்
தொடங்கியிருக்க,
வீட்டிலும் திருவிழாக் கோலம்
களைகட்டியிருக்க,
கடவுளுக்கு மாலை
கட்டிக்கொண்டிருக்கிறேன்.

பல வண்ணப் பூக்களையே
ஆடையாய் அணிந்துகொண்டு
வசந்தகால ஆனந்தமாய்
பறவைகளோடு பறவையாய்
கூவுகின்ற...
குயில்களின் இடையே
உன் இரு கைகளையும்
கோர்த்தபடி பறக்கிறேன்.

வெண்மேகப் பஞ்சுக்குள்
நீந்துகின்ற...
நட்சத்திரங்கள் நடுவில்
நானும் நடுவிருந்து
நட்போடு நகைக்கிறேன்.

என் அபிமானக் கவிஞருக்காய்
விமான நிலையம் காத்திருந்து
என் ஒரு கவிதையின்
கீழ் கையெழுத்து
வாங்கிக்கொள்கிறேன்.

காரைக்குறிச்சியார்
நாதஸ்வரத்தில்
தோடி ராகத்தைத் தேடி
மழையாய் பொழிந்துகொண்டிருக்க
அதில் நானும்
நனைந்து கொண்டிருக்கிறேன்.

வெளியில் பனியில்லை...
ஆடிமாதக் கோடை காலம்...
ஆனாலும் உடம்பு
நடுங்கிக் குளிர்கிறது.
விழித்துக் கொள்கிறேன்.
ஓ.......
என் மகன்
என்னையும்
நனைத்துவிட்டான்.

திரும்பவும் அவனை இறுக்கமாய்
அணைத்துக்கொள்கிறேன்.
மீண்டும் வரும் இன்பமான
ஒரு கனவிற்காய்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 13, 2008

காதலித்துப் பார்...

Glitter Graphics
காதல் என்கிற கவிதை கூட
எழுதக்கூடாது என்கிற
தேசமொன்றில் அவள்
சோகங்களைச் சுமந்தபடி.
மனதின் சுமையோடு
துயரத்தின் பிடியில்
இடறி விழுந்து எழுந்து
திரும்பிப் பார்க்கையில்
தவறிய தாலியும்
விதவை என்கிற பட்டமுமாய்.
உணர்வுகளும் எண்ணங்களும்
உள்ளுக்குள்ளேயே
அழுத்தி அமுக்கியபடி.

அழகான காதலின் அரிச்சுவடிதான்
அவளது ஆரம்பம்.
காலத்தின் கடூழியத்தால்
கலைந்த காதல்.
வெள்ளைப் புடவையும்
வெற்று நெற்றியும்
வெறுமையாக்குமா
உள்ளத்தை என்ன?
காதலின் யாகம்
தொலை தூரத்தில்
வியாபித்து எரிகிறது.
தொட்டாலே பாவமாம்
பண்பாடு பாடுகின்ற பாவலர் பலர்.

பாசத்தின் ஏக்கத்தோடு
தோள் சாய்த்து
தலை கோத முடியாத
காதலொடு இவள்.
காதல் மதிக்கப்படுகிறது
கல்லறைகளில் வணங்கப்படுகிறது.
காலத்தால் முறிந்த காதல்
வராதோ மீண்டும்.
கல்லெறிதானோ சொல்லெறியோடு.

குழந்தையாய் ஒரு மடி தேடுகிறாள்
சுருண்டு அணைந்துகொள்ள.
ஒத்துக்கொள்ள எவருமே இல்லை.
பசப்புப் போர்வைக்குள்
பலவீனம் பார்த்து
படுக்கையை மட்டும் பகிர வரும் சிலர்.
காதலுக்காய் ஏங்கும் அவளிடம்
காதலின் கலர் என்னவென்று
கேள்வியாய் கேலியாய்
கேட்கிறது சுயநலக் கூட்டம் ஒன்று.

இன்று செத்தால்
அழைத்த பெயர் மாறி
பிணமாய் ஆகிவிடும்
பிண்டச் சதையை
பிய்த்துத் தின்னக்
காதல் என்னும் புனிதத்துள்
பெருச்சாளிகள் ஊர்வலம்.
பொய்யான உலகில்
எப்படிக் காதலிப்பாள்
வாய்ப்பில்லை காதலிக்க!
மயில் இறகின் தேவைக்காய்
மயிலின் தோலையே
உரிக்கும் உலகம் இது.

காதலிக்க ஆசைதான்
மனம் நிறையக் காதல்தான்
வழி விட்டு வாழ விட்டால்
காதலொடு அன்புக் கதை கூட
தினம் தினம் சொல்வாளே.
வெள்ளை மலரை
வாழ வைக்க யார்!!!

ஹேமா(சுவிஸ்)2003

Thursday, June 12, 2008

இல்லை... இல்லை...

நீயும் நானும் நிலைப்பதும் இல்லை
நிலைக்கும் எதுவும் சொந்தமும் இல்லை
பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை
பிரம்மனின் படைப்பில் பேதங்கள் இல்லை
மண்ணின் நிகழ்வுகள் மரணத்தில் இல்லை
மனங்களின் நிகழ்வுகள் மரணிப்பது இல்லை
கவலைகள் எதுவும் தொடர்வதும் இல்லை
சந்தோஷங்கள் எதுவும் நிலைப்பதும் இல்லை
கோபத்தைக் குறைத்தால் கெடுதிகள் இல்லை
நமது எதிரி நோயைப்போல் இல்லை

உண்டு என்ற ஒன்று உன்னிடம் இல்லை
இல்லை என்பது என்றுமே இல்லை
ஊருடன் பகைத்தால் வாழ்வதற்கு இல்லை
பையில் வெறுமை பந்தங்கள் இல்லை
காண்பவை எல்லாம் உண்மையும் இல்லை
வீணையின் நாதம் விரல்களில் இல்லை
வதந்தியின் வேகம் வாகனத்திற்கு இல்லை
காதலின் ஆவல் கல்யாணத்தில் இல்லை
(நேர்)கோடுகள் இரண்டு இணைவதும் இல்லை
பிறப்பின் ஆனந்தம் இறப்பில் இல்லை
பேதங்கள் பார்த்தால் ஒற்றுமை இல்லை

அந்தியின் மயக்கம் விடியலில் இல்லை
அம்மாவின் அன்பு எங்குமே இல்லை
நினைப்பது எல்லாம் நடப்பதும் இல்லை
கனவின் நின்மதி நினைவில் இல்லை
கானல் உறவு கண்டபின் இல்லை
நாக்கின் நடுவில் சத்தியம் இல்லை
நட்பின் நிகர் வீட்டுக்குள் இல்லை
உறுதி மொழிகள் ஊர் சென்றதும் இல்லை
உத்தம மனிதர் நம்மிடை இல்லை !!!!

ஹேமா(சுவிஸ்
)

Wednesday, June 11, 2008

உன்னோடு நான் வாழ....

உயிரே எங்கே என்னைத் தேடுகிறாய்.
உன் உயிருக்குள்...உணர்வுக்குள்
கலந்தே காண்கின்றேன்
பார்...
ஊன் உருகித் தேடுகிறாய்
ரசிக்கிறேன் உன்னை நான்.
மலை அருவியாய் விழுகின்ற
சத்தத்தை வழிமறித்து
உச்சமாய்...
பாசத்தின் பரிதவிப்போடு
விழிக்கிறது உன் குரல் மட்டும்
காற்றலைகளில்.
உன் பாசமான
அன்புப் பாடல்களைத் தவிர
என் மனதிற்குள்
சந்தோஷப் பாடலகள் தர இங்கு
யாருமே இல்லை
எதுவுமே இல்லை.
வாழ்வின் அர்த்தத்தையே
தொலைத்துவிட்டு
ஏனோ தானோவாய்
நாட்களின் பின்னால் நானா
என் பின்னால் நாட்களா என்று
உருண்டோடிக் கொண்டிருக்கிறேன்.
உன்னோடு ஆத்மார்த்தமாக
அடங்கிக் கிடக்க நினைத்தாலும்
என் கனவுகள் யாவும்
விடை தெரியாமல் புதிராய்
கலைந்து புரியாமல் கிடக்கிறது.
இருண்டு விட்ட என் வானத்திற்குள்
வெளிச்சம் தர
எத்தனையோ போலி நட்சத்திரங்கள்.
அஞ்சி ஒதுங்கையில்
உன் மெல்லிய ஒளி மட்டுமே
என்னைத் தாண்டும் போது
உயிர் கலந்து
சலசலத்துப் போகிறது.
எம் அன்பு உண்மையென்றால்...
இறைவனும் அருள் தந்தால்...
உன்னோடு உயிர் கலந்து
உள்ளவரை வாழ்ந்துவிட
என் உயிரும் உணர்வுகளும்
காத்திருக்கும்
காலம் முழுதும்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 09, 2008

முத்தம்...

Saturday, June 07, 2008

இன்றைய செய்திகளின் வலி...

என்ன இது!
உயிர்களின் விலை
பெற்றோலை விடவும்
இத்தனை மலிவாய்
இலங்கையில்.

இரத்தத்திலேயே
பிரயாணம் செய்யும்
அரசியல்வாதிகள்.
பெற்றோலாய் இருந்தால் என்ன!
பொதுமக்களின்
குருதியாய் இருந்தால் என்ன!

இலட்சிய புருஷர்கள் அவர்கள்.
நோக்கமெல்லாம்
பதவியும்...புகழும்
கதிரையும்...அதிகாரமும்.
யாரும் எக்கேடும்
கெட்டுப் போகட்டுமே.

மக்கள் இல்லாத
அரசாங்கம்
நடத்தக் கூடத் தயாராய்.

அது சரி...
பேய் பிசாசுகள் என்பதும்
பழி வாங்கும் என்பதும்
உண்மையா?

உண்மையென்றால்
எத்தனை பேய்கள்
எப்படியெல்லாமோ பழி வாங்குமே
இவர்களை இலங்கையில்.
அது கூடப் பொய்யான
பிரச்சாரமோ
பித்தலாட்டமோ
அரசியல் போல.

இல்லை...
பேய்களே பயந்து ஒதுங்கும்
பேய்களோ
எங்கள் அரசியல்வாதிகள்.

எப்படியோ
அழியும்...
இலங்கை மக்கள் ஒழிக!

வாழ்க...
இலங்கை அரசியலும்
அரசியல்வாதிகளும்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, June 05, 2008

நான் யார்???

எங்கே...எங்கே
??நான்...யார்??
தேடிக்கொண்டே இருக்கிறேன்
பல காலமாக.
முயன்று முயன்று
முண்டியடித்தும்
முடிவு தோல்விதான்.
பயமும் பலயீனமும் தான்
என்னை வழி நடத்தும்
பைத்தியங்களாய்.
தலையாட்டுவது மட்டுமே நானாய்.
நான் நானாய் இல்லை.
மந்திரவாதியின் கைகளுக்குள்
இசைவாய் பிசைந்தெடுக்கும்
களி மண்ணாய்.
எனதென்ற சிந்தனை இல்லை...
நம்பிக்கை துணிவு இல்லை...
வாழ்வே ஆனந்தம் இல்லாமல்.
வாழ்வு நரை கண்டு
செல்லரித்த பின் தான்
புது அறிவோடு.
கண் கெட்ட பின்னர் தான்
சூரிய நமஸ்காரமாம்.
பிடித்திருக்கும்
பேய்களைத் தொலைத்துவிட்டால்
நான் நானாய் இருப்பேன்
எனக்குள் முழுமையாக.
இப்பொழுதே எனக்குள்
நான்...
நான் மட்டுமே.
சுற்றி நிற்கும் சத்துருக்கள்
இன்றோடு செத்துத் தொலைய
இன்றிலிருந்து பேய் விரட்டல்.
வேப்பிலை தேடுகிறேன்
நானே!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, June 04, 2008

காணவில்லை...

ஆண்டவனும் இல்லையோ
ஆதரிக்க யாருமின்றி
அகதியாய் போனானோ
அயல் நாட்டில் தஞ்சம் கேட்டு!
பேய்களின் ஊழியாட்டம்
பெரும் பாடாய் இருக்கையிலே,
ஆண்ட தமிழ் இனம்
அவதியுறும் ஈழத்தில்...
ஆண்டவனும் இல்லையோ
ஆதரிக்க யாருமின்றி
அகதியாய் போனானோ!
யாரிடம் போயுரைக்க.

சின்னதாய் கூடு கட்டி
அன்றிலாய் வாழ்ந்திருந்தோம்.
பெற்றவர் உற்றவர் என்று
அன்புக்குள் அடைகாத்தோம்.
உயிர் காத்து பயிர் வளர்த்த
கதிர் நாங்கள் பதர் ஆனோம்.

இலங்கையில்,
வெலிக்கடை...களுத்துறை
கலிகால காவல் கூடங்கள்,
பலிகள் கேட்கும் கிலி கொண்ட
கொலைக் கூடம் ஆனதே.
செங்கீரை ஆடிய
எம் செல்வக் குஞ்சுகள்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
செஞ்சோலைச்
செல்வங்கள் ஆயினரே.

எம் இனத்தின் விடுதலைக்கு
தம் உயிரைத் தானம் செய்த
விம்முகின்ற தலைமுறைக்கு
நம்மவரின் விலை இது.
வன்னி மலைக் காட்டின் இடையே
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய ஒளியோடு,
பொன்னான நாள் ஒன்றை
சின்னதாய் நினைத்து ஏங்கும்
கண்ணான நம்மவர்
உண்மை நிலை காண...
ஆண்டவனும் இல்லையோ
ஆதரிக்க யாருமின்றி
அகதியாய் போனானோ
அயல் நாட்டில்
தஞ்சம் கேட்டு !!!

ஹேமா(சுவிஸ்)2003Feb

Sunday, June 01, 2008

மற...கொஞ்சம்...சிரி

நண்பா...
மறத்தல் என்பது வேறு
நிறுத்தல் என்பது வேறு.
உன் நினைவுகளை
நிறுத்தித்தான் வைத்திருந்தேன் நான்.
மின்னல் அடித்த வேகத்தில்
நிலவைத் தொலைத்த
வானம் போல நீ.
மெளனமே உன் மெளனத்தைக்
கலைப்பதாகக் குற்றம் கூறுவாய்.

பூ ஒன்றால்...
புன்னகை இழந்திருக்கிறாய்.
எத்தனையோ முறை
பொறாமைப் பட்டிருகிறேன்
உன் புன்னகை பார்த்து நானே.

எதுவுமே எரிச்சல் தரக்கூடிய
பொழுதுகள் உனது.
நட்பின் விசாரிப்புக்கள் கூட
நரகமாய்.
மனதிற்குக் கொஞ்சம்
மெழுகு பூசு.
மூடிவிட்டு முயற்சி செய்
கொஞ்சம் சிரி.
வாழ்வு வசந்தமாய் வாசம் தரும்
மறத்தல் இயல்பாய் இருந்துவிட்டால்.

முரண்பாடுகளே
நிறைந்த பாதையில்
மறத்தல் மட்டும்
விதிவிலக்கா என்ன!!!

ஹேமா(சுவிஸ்)

வருத்தம்...