*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, February 27, 2008

நான்கு சிறகுகள்

சிந்தித்துக்
கொண்டிருந்தேன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
போதவில்லை எனக்கு...
சிறகுகள் இரண்டு
தனிமையில் பறக்க
துணிவும் இல்லை...
இறைவன் தந்தான்
உன்னை எனக்கு...
இன்னும் இரண்டு
சிறகுகள் சேர்ந்தன.
வருகிறாயா என்
இனிய நண்பனே...
இயலும் இப்போது...
உலகின் தேடலகள்
பலவிதம் பலவிதம்...
இறகுகள் இப்போ
நானகாய் ஆனதே...
இன்பமோ துன்பமோ
தேடலகள் சுகமாய்
மிக சுலபமாய்...
தனிமையில் தேடல்
சோர்வுதான் மிச்சம்...
உன் துணை சேர்ந்ததால்
உற்சாகமே உணவாய்...
என் சிறகுகள்
உனக்காய்
உன் சிறகுகள்
எனக்காய்
இடம் மாறி
போகிற போது
மனமும் சேர்ந்து
பறக்கிறதே...
அன்பின் சக்தி
இதுதானோ!!!

ஹேமா(சுவிஸ்)2007

Tuesday, February 26, 2008

எனக்கு யார்...நீ?


உனக்கு நானும்
எனக்கு நீயும்...
என்னவாய்
இருக்கிறோம்...
நீ சொன்ன...
பிரிந்தே கிடக்கும்
கதவுகளைப் போலவா
காத்திருப்போடு.
அமாவாசையாய்...
பெளர்ணமியாய்...
வருகிறாய் போகிறாய்
மெளனத்துள் முடங்கியபடி...
அமுங்கிபோன
கேள்விகள் பதில்களுடன்
மெளனமாய் நானும்...

இருண்ட மேகங்கள்
இடி முழக்கத்தோடு...
மழை இன்னும் இல்லை
என் மன நிலை போல
பார்வைக்காக காத்திருக்கிறேன்
விழி தர மறுக்கிறாய்...
உயிருக்காக காத்திருக்கிறேன்
சுவாசம் தர மறுக்கிறாய்...

பனி படர்ந்த தேசத்தில்
மணிக்கூட்டுச் சத்தம் மட்டும்
மெளனம் கலைத்த படி...
சூரியனின் வருகைக்காக
காத்திருக்கிறேன்
சிறு புல்லாய்...
பேசு...
நீ... முதலில்
நிறையப் பேசு
தெளிவுகள் பிறக்கும்
பேசிப் பேசியுமே...
தீர்க்கப்படாத...
தீராத தெளிவுகள்
எத்தனையோ
என் நாட்டு அரசியலாய்...

அன்பே...
பரந்த தேசததில்
அன்பும் உன் கையில்
ஆயுதமும் உன் கையில்
எதை விட்டெறிகிறாயோ
அதுவாய் உன் கையில்...அது
உன்னோடுதான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்...
நெஞ்சு முட்டி நிறைகிறது
உன் நினைவுச் சிதறல்கள்...
நன்றி சொல்லி... மறக்கவா
உன் ரசிகையானேன்...
அன்பே!!!!!!!!
எம்மை
பக்குவமாக சமைக்க
வழி செய்
வாழ்வு பக்குவப்பட...
அழகாய் எம் காதல்
பூக்கள் பூக்க!!!!!

ஹேமா(சுவிஸ்) 01.12.2006

Friday, February 22, 2008

விட்டு...விடு


தேறுதல் இல்லா
உன்...
நிசப்த இரவுகள்
தலையணையின்
துணையோடு
கண்ணீருக்குள்
கருக்கொண்டு
பெரு மூச்சாய் பிரசவிக்கும்.
குருதி வடியா
யுத்தம் உனக்குள்ளே.
எதிரியென்று
எவருமில்லை.
நீ தேடிய காதலே
உன் எதிரியாய்.
இறுக்கிப் பூட்டப்பட்ட
உன் பிரியக் காதல்
சாவி தேடுகிறது
வெளியில் பறப்பதற்காய்.
இனியவளே கொடுத்துவிடு
பிடிவாதம் என்?
வேண்டாம்...
விரும்பாத காதல்
நிரப்பாது நின்மதியை.
பிடிக்காத உறவது
படிதாண்டிப் போகிறது.
விரக்தியை விரட்டு
புது சக்தி பெறு.
விடியும் ஒரு பொழுது
உனக்காய்
உனக்கே உனக்காய்!!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, February 21, 2008

சர்வதேச மனித உரிமைகள் தினம்...


சந்தோசம்...
மனித உயிர்களுக்கும்...
உரிமைகளுக்கும்...
இலங்கைக்கும்
சம்பந்தமேயில்லையே.

மண்டை ஓட்டு
மேடையில்
தமிழன் குருதியில்
சால்வை போர்த்தும்
மாண்புமிகு
மகிந்தவின் ஆட்சியில்
மனித உரிமைகள் தினம்.

சிரிப்பாயில்லை!!!!!!!
காக்கைகளும் குருவிகளும்
மிருகங்களும் கூட
சுதந்திரமாய் உலவும் உலகில்,
இலங்கையில் மாத்திரம்
திறந்த சிறைச்சாலைகளிலும்
மூடிய சிறைச்சாலைகளிலுமாய்
பயங்கரவாதிகள் என்ற
பட்டத்தோடு தமிழர்கள்.
இவர்களைக் காக்க
ஒரு அரசாங்கம் வேறு.

இங்கு..... எப்படி....
மனித உரிமைகள்.
கைப்பொம்மைகளையும்
கைதிகளையும் காக்க
ஒரு கபட அரசாங்கம்.

தனக்கே தனக்காய்
தனக்கென்று
படைத்த பெருமிதத்தோடு
மகிந்த சிந்தனை...
புத்தனின் சிந்தனை
மறந்தவராய் ராஜபக்ச.

தாயிலும் மேலானவன்
அன்பையே போதித்த
சித்தார்த்தனின் மைந்தன்
மனித வேட்டையில் வல்லவராய்.
உண்மையில்
தலதாமாளிகையின்
மூலஸ்தானத்தில்
எந்த இளிச்சவாயனின் பல் ?

முஸ்லிம்கள்
தாய் தேசம் சவூதியாம்.
தமிழர்களின்
தாய் தேசம் இந்தியாவாம்.
அப்படியென்றால் இவர்களின்
திட்டம்தான் என்ன?

சேனனாயக ஆட்சி...
பண்டாரநாயக ஆட்சி...
தொடரும்...
மகிந்த ஆட்சி...
மனங்களில் மாற்றமில்லாத
ராட்சத ஆட்சியாளர்கள் நாட்டில்,
மனித உரிமைகள்
பேச்சிலும் பேப்பர்களிலும்
தூக்கம் தொலைத்த
தமிழனின்
கற்பனைக் கனவிலும்தான்.

ஆயுதங்களையும் கொடுத்து
கண்காணிக்கக்
குழுவையும் கொடுக்கும்
சரவதேசம்
முழுதுமாய் கண்டும் கேட்டும்
வாய் மூடி மெளனிகளாய்.
பாவப்பட்டுப் பிறப்பெடுத்த
ஜென்மங்களாய் இலங்கையில்
தமிழர்கள்தானே!!!!!!!

ஹேமா(சுவிஸ்) 11.12.2007

Thursday, February 14, 2008

மீண்டும் ஒரு காதலர் தினம்...


வாழ்வு முழுதும்
காதல்...
வியாபித்திருந்தாலும்
காதலர் தினத்தன்று
அந்த...
ஒற்றை றோஜாவுக்குள்
அத்தனை அன்பையும்
திணித்துக்கொண்டு
மிக அழகாய்
மீண்டும் ஒரு
காதலர் தினம்.
எத்தனை காதலர் தினங்கள்
நீ என்னிடம் வந்த பிறகு.
எட்டவே இருந்தாலும்
என்னை
உனக்குள் பூட்டிக்கொண்டு
சாவியைக் கூட
தர மறுத்தபடி.
என்னை
நான் நேசிப்பதை விட
நீதான்
என்னை நேசிக்கிறாய்
முழுமையாக.
யாரையுமே காணவில்லை
உன்னப்போல.
உன்னோடு யாத்திரையும்
தொடர்கிறது வருடங்களோடு.
கொஞ்சம் அழுவேன்
பொறுத்துக்கொள்.
புரட்டிப் புரட்டிப்
புடம் போட்டுப்
பதம் பார்க்கிறது
வாழ்க்கை என்னை.
கடும் புயலின் வேகத்திற்கும்
சுனாமியின் கோபத்திற்கும்
ஈடுகொடுக்கும்
பக்குவத்தோடு நான்.
அடுத்து என்ன...
அடுத்து என்ன...
கேள்வியின் கைகளுக்குள்
என் வாழ்வு.
இதற்குள் ஏன்
அநியாயமாய் நீ.
வாழ்வின் வழியில்
வழியோடு நிழலாய்
ஒளி விடும் நிலவு கூட
சிலசமயம்
அண்ணாந்து பார்க்கையில்
காறித்துப்புவதாய்.
நேராக நடக்கையில் சமூகம்
அண்ணாந்து பார்க்கையில் நிலவு
நடக்கக் கூட
மனதில் திடமற்று
நாதியற்று
நடக்கும் ஜடத்திடம்
ஏன்... எதற்கு
இப்படியொரு காதல்!!!!

ஹேமா(சுவிஸ்)14.02.2008

Monday, February 04, 2008

சுதந்திர தினமாம் இன்று...


அறுபதாவது
சுதந்திர தினமாம்
இலங்கையில் இன்று.

பிரித்தானியா
தாரை வார்க்க
பெரும்பான்மை
பெற்றுக்கொண்ட
பொன் நாள்.

தமிழன்
உரிமைகள் இழந்து,
எம் தாயவளுக்கு
விலங்கிட்ட
அமங்கல நாள்.

எம் தேசத்துக்
காற்றே சொல்
சுதந்திரம் உண்டா
இலங்கையில்.

தேசத்தின் வேதனை
விழிகளுக்குள் அழுத்த,
கடமைக்காக
வானம் வெடித்து,
இரத்தக் கண்ணீரோடு
விடிகின்ற கதிரவனே
நீ... சொல்
சுதந்திரத்தின்
சாயலாவது உண்டா
எம் தேசத்தில்.

உணவே இல்லை...
இருந்தாலும்
உண்ண நின்மதியில்லை.
தூக்கமே இல்லை...
தூங்கினாலும் அமைதியில்லை.

வாழ்வு இயல்பாயில்லை.
உயிருக்கு உத்தரவாதமில்லை.
வானம் பயம்,
பூமி பயம்
பேச்சுப் பயம்,
மூச்சும் பயம்
இலங்கையின்
அகராதியிலேயே
அகற்றப்பட்டதாய்
ஒரு பேச்சு
சுதந்திரம் என்னும் சொல்.

இறந்தவர் இரத்தமெல்லாம்
உறிஞ்சிக் கண் சிவந்த
சூரியனே...
கடனாய்க் கொடு
கொஞ்சம் குருதி.

நாடிக்குழாய்களும்
நாளக்குழாய்களும்
காய்ந்து கொண்டதாம்.
ஊட்டச்சத்தும்
அற்றுப்போனதாம்
எம் சிறுவர்களுக்கு.

எதிர்காலச் செல்வங்களைக்
கருப்பையிலேயே கழற்றி,
குருத்து வாழைகளை
முளையிலே வெட்டியெறியும்
வீரம் பார்த்தாயா.

முளை கிள்ளி
மூளை கிள்ளி
தலைமுறைக் குழந்தைகளைக்
குலையோடு சாய்க்கும்
சேதி அறிவாயா.

பட்டாம் பூச்சியாய்
பகலோ... இரவோ
அரசியலோ... ஆட்சியோ
அறியாத
எம் எதிர்காலக் குருத்துக்கள்
குருதிக்குள் மிதக்கும்
காட்சி கண்டாயா.

இயற்கையே
எம் சந்ததி
காத்துக் கொடு.
மீட்டுக் கொடு.

இரத்த ஆற்றிலேயே
குளித்தெழுந்து
உலகையே வலம் வரும்
பகலவனே...
சொல்லி வா
சர்வதேசச் செவிகளில்
உரக்க அறை.

எம் இளம் சந்ததிகள்
தொலையும் செய்தி பற்றி.
எம் தலைமுறையாவது
சுதந்திரமாய்ச் சுவாசிக்க
சுதந்திரமான....சுகமான
காற்றின் தேவை பற்றி !!!

ஹேமா(சுவிஸ்) 04.02.2008


விரைவில் அமைதி...


தேவைப்பட்ட அமைதி
தெருவில் இல்லை...
எனக்குள்ளும் இல்லை...
மனதில் தேடிப்
பொய்களைப் பேசினேன்
மகிழ்ச்சி தந்தது
மயக்கத் தூறலாய்.

என் ஊரில்,
இரவில் சூரியன்
பகலில் நிலவு.
சிவன் கோவில்
மூலஸ்தானத்தில்
சிலுவை தெய்வம்.

தாயே தேவையில்லை
மண்ணைப் பிளந்தே
முளைத்தவன் மனிதன்.

மூக்கால் சாப்பிட்டு
பேசி
சுவாசிக்கிறான் வாயால்.

விலங்கிற்கு
இரண்டு கால்கள்
மனிதனுக்கு
நான்கு கால்கள்
பெண்களுக்கு மீசை
ஆண்களுக்கு மார்பகம்.

கோழி குட்டி போட
கழுதையும் முட்டை
போட...
மனிதனைப் போல
மரங்களும் பேசுகிறது.

பூச்சியும் புழுக்களும்
புன்னகையோடு
பாட்டும் பாட...
பறவையின் முதுகில்
மனிதனின் பயணம்.
வாகனங்கள்
தண்ணீரில் இயங்க..
தண்ணீருக்குள்
மனிதனின் வாழ்வு.

விரைவில்
அமைதி...அமைதியென்று
ஏன் வார்த்தைகளை
வீணடிக்கிறாய்.
இப்போ...வாழும்
இன்றைய அமைதி
பேச்சில் மட்டும்
பொய்யாய்.

யாரும் காணா
அமைதி காண்போம்.
எப்போ....

அப்போ
நீயும்... நானும்
மயானத்திலும்
மையவாடியிலும்
கல்லறை
மண்ணுக்குள்ளும்!!!!!!

ஹேமா(சுவிஸ்) 04.10.2007