*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, December 31, 2009

2010...ஈழம்

நீ
நான்
போட்டி
பொறாமை
காட்டிக்கொடுப்பு
கட்சி
ஏற்றம்
தாழ்வு
அடிமைத்தனம்
மாற்றமில்லா பூமியில்
ஆண்டின் மாற்றமும்
அதன் வேகமும்
பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் என்றபடி
வந்தும் போய்க்கொண்டும்தான்.

இதைவிடப்
போர்
நோய்
இயற்கை என
அழிப்புக்களும் இடைக்கிடை.
வருந்தாத வருஷம் மாறியபடிதான்.

நாயும் நரியுமாய்
போட்டி போடும் அரசியலின்
நடுவில் இறைச்சித் துண்டாய்
என் இனம் என் தேசத்தில்.
பசி வறுமையோடு
இரத்தம் தோய்ந்த வருடம்
அங்கும் சிவப்பாய் வந்தபடிதான்.

என்றாலும் பனிபடர்ந்த பூமிக்குள்
என் வெப்பக் கண்ணீர் தெளித்தே
உரு(க்)கியபடி வழ்ந்துகொண்டிருக்கிறேன்.

தீபாவளி புத்தாண்டு என்றில்லாமல்
நித்தம்
சிவப்பு வைனும்
ஆட்டிறைச்சியும்
முட்டையும்
சலாட்டுமாய்த் தின்று
திடமாயிருக்கிறேன்.

"உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்"
என்று
எப்படிச் சொல்ல நான்
என் இனத்திற்கு.
வாழ்கிறார்களா அவர்கள் !!!

என் இனிய நண்பர்களுக்கு மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹேமா(சுவிஸ்)

Monday, December 28, 2009

ஏன் அழைத்தாய்...

நீ என்னை அழைத்த வேளையில்
தொலையும் என்னை
இழுத்து நிறுத்திக்கொண்டிருந்தேன்.

கம்பீரமாய் மயக்கினாலும்
அன்று இரும்புக் குழாய்களுக்குள் சிக்கி
வயலின் இசைத்த நிகழ்வொன்றை
வந்து கலைத்தது உன் குரல்.

மண்ணின் பசளைக்காகவே
பயிரிடப்படுவது போலானது
என் மண்ணில் பலர் வாழ்வு.

இப்போதும் நக இடுக்குகளில்
வழியும் இரத்தமும் சதைக்குவியலும்
அப்படியேதான்.
உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்
என் இறப்பு இன்றைய நாளிலேயே.

சொல்லிகொள்ளாமலே வருகிறது
என் அறைக்குள்
இரவும் பகலும்
சந்திரனும் சூரியனும்
பெயர் தெரியாத பூவின் வாசனையும்
உன் சுவாசம் கலந்த
சிகரெட்டின் வாசனையும் கூட.

சமயம் கிடைக்கும்போது வா
என்னோடு நீயும் காண !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, December 26, 2009

முடியாத இரவொன்றில்...


மாட்டிய கயிற்றின் இடைவெளியில்
என் இறுதி மூச்சு.
அதுக்கும் எனக்குமான தூரம்
ஒன்றும் அதிகமில்லை.

முரண்பாடுகளோடுதான்
நேற்றைய கனவும்.
வாதாடிய முகம் நெருக்கமானதாய்
என் கையைப் பிடித்தே
என் குரல்வளை நெரித்தபடி அது.

முன்னைய இரவுகளிலும்
கனவுகள் கலைத்து
நானே என் கனவைக்
கலைத்துக்கொண்டதாய்
குற்றம் சுமத்தியுமிருக்கிறது.

வண்டாய் என் மகிழ்ச்சி குடைந்து
மண்ணுக்குள் புதைத்து,
சிரிப்பைப் பறித்து
திரும்பவும் எனக்கே
சில்லறைக்கு விற்பனை செய்து
சித்திரவதை செய்யும் சனியன் அது.

காற்றுப் புகவும்
கவிதை எழுதவும் கதவடைத்து,
அணிலும் குயிலும் கடித்த மாங்காயை
பறித்துண்ணவும் பழகியிருக்கிறது.

மனம் முட்டி எழுத நினைக்கையில்
எழுதுகோல் ஒழித்து,
கூரை தட்டி மழை தரும் கவிதை
தடுக்கும் பிசாசு.
இனியும்....
நான் இருக்கப் போவதில்லை இதனோடு.

தடுக்கமாட்டீர்கள்
நீங்கள் யாரும் என்னை.
ஏனென்றால்
நீங்களும் கூட்டுத்தானே அதனோடு.

யாரோ ஒரு கை என் கயிறறுத்து
சொல்லட்டும் நாங்களில்லை
அது உன்னோடு உறங்கும்
தாழ்வான எண்ணமென்று.
தொங்கியபின் பின்னால் சொல்வீர்கள்
ஐயோ பாவமென
அதுவும் எனக்குத் தெரியும் !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 22, 2009

சொல்வதற்கில்லை...

சொல்வதற்கில்லை...
எங்கு சரி....யார் தப்பு.
அழிவு அழிவு...
முற்றுப்பெறாத முடிவிலியாய் வாழ்வு.
நிமிடங்கள் கூட நிச்சயமற்றதாய்.
அக்கிரமங்கள் ஆக்கிரமிக்க
இயற்கையின் அகோர தாண்டவம்.
தானே உண்டாக்கிய கர்வத்தில்
உயிர்களின் உயிரோடு விளையாடியபடி.

ஏப்பமாய் பிரசவிக்கிறது
ஆயிரமாய்...இலட்சமாய்
உயிரகளை விழுங்கிய இயற்கை.
கடலாய்...மண்சரிவாய்...வெள்ளமாய்...
புயலாய்...தீயாய்...நோயாய்...
பட்டினியாய்...போராயும் கூட.
வானம் தவறிய பெய்கையால் விவசாய அழிவு.
உயரும் வாழ்க்கைச் செலவு.

மனிதன் வாழ்வும் வளமும்
இயற்கையின்றிச் சாத்தியமில்லை.
வாரி வழங்கும் இயற்கையே
எரிச்சலோடு போர் அரக்கனாய்.
தன்னையே பரீட்சிக்கும் மனிதனுக்கு
எதிராய்...
தானும் ஆயுதம் தூக்குகிறதோ!

உலகம் எங்கும்
கூச்சல்...அவலம்...
கூக்குரல்...இரத்தம்...இறப்பு
என்னதான் நடக்கிறது?
யாரை...எவரை...எதை
நினைத்தாலும் மனம் சங்கடமாய்.

இதில் எப்படி...
எம் வெற்றி கொண்டாட?
இதுவரை தமிழன்...
வென்றதும் பெரும் வெற்றிதான்.
இனியும் வெற்றி மேல் வெற்றிதானே!
முற்றுப்புள்ளியென்றாலே...
அடுத்து ஆரம்பம்தானே!
தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்.
சொல்வதற்கு இல்லை...
இனி என்னதான் நடக்கும்!!!
எதுவும் ஆகும்!!!

[மீள்பதிவு]
ஹேமா(சுவிஸ்)

Thursday, December 17, 2009

மாற்றங்கள்...

எப்போதாவது நான் கடக்கும்
ஒரு தெரு
ஒரு வீடு
ஒரு தோட்டம்
நிலைத்த மரங்கள்
குறுக்கே கடக்கும் ஒரு பூனை
குருவிக்கென தொங்கும் உணவு
சிவப்புக் கார் ஒன்று.

இன்று...
"நல்வரவு ஜஸ்மின்"
கதவில் பெரிதாய் எழுதிய வாசகம்.

ஓ....
நீண்ட நாள் காதலர்கள்
கல்யாணம் எப்போ நடந்து
குழந்தை பெற்றிருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்
கடந்து செல்கிறேன்.

பின்னொரு நாளில்
மீண்டும் அதே தெரு
அதே வீடு
அதே தோட்டம்
நிலைத்த மரங்கள்
குறுக்கே கடக்கும் அதே பூனை
குருவிக்கென தொங்கும் உணவு.

இவற்றோடு
புதிதாய் சாய்த்தி வைக்கப்பட்ட
சின்னச் சைக்கிள்
விளையாட்டுக் கார்.

ஓ... குழந்தை வளர்ந்திருக்கிறாள்.
அம்மாவின் கைபிடித்து
அப்பாவின் மடியில்
ஜஸ்மின்
அழகாய்ச் சிரிக்கிறாள்

இன்னொரு ஆறு மாதமிருக்கும்
பாதை மாறியதாவும் இல்லை
மறதியும் எனக்கில்லை.

அதேவீடு
அதே தோட்டம்
நிலைத்த மரங்கள்
குறுக்கே கடக்கும் அதே பூனை
குருவிக்கென தொங்கும் உணவு.

காரின் நிறம் மாறியிருக்கிறது.
தோட்டத்தில் இருக்கும்
அப்பா மாறியிருக்கிறார்.
அதே அம்மாவின்
விரல் பிடித்து
விளையாடுகிறாள் ஜஸ்மின்.

எப்போ புரிந்து தேடுவாள்
தன் அப்பாவை !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, December 11, 2009

தொட்டுச் சென்றது ஒரு குடை...

விநாடிதான்
குடையென நிழல் தந்து
சட்டெனெ
மறைந்த அதிசயமாய் அது.

சுருங்கிய கணங்களுக்குள்
கண் மடல் தீண்டி
புன்னகைக்கும்
சின்னத் தென்றலின் தழுவலாய்.

மேகமாய் முட்டிய
சின்னக்குடையால்
சிந்திய துளியில்
நனைந்தே போனது
நமைத்த இதழொன்று.

சில்லென்ற குளிர்ந்து
தேகம் சிலிர்க்க
கிஞ்சித்து
தொட்டு....விட்டு
சுகம் தந்து....விட்டு
நிமிடத்தில் கடந்த விதம்.

காற்புள்ளி அரைப்புள்ளி
முற்றுப்புள்ளியாய் முத்தமிட
மல்லுக்கட்டிய தடுமாற்றம்
தூவுகின்ற மழைத்துளிக்கும்.

மெல்ல மௌனம் கலைக்க
மூச்சிளைத்து முகில் பாட
களையாமல் கரைகிறது
களைப்பும் வியர்வையும்.

தோய்த்து உலர்த்திய துணிகள்
காய்ந்து விறைக்க
அடுத்த குடையாய்
வரும் வரை
வெக்கை விரட்ட முடியாமல்
வியர்த்தபடி !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, December 06, 2009

நே[கா]ற்று முத்தம்...

என் கண்ணுக்குள் நீயாய்
நெஞ்சுக்குள் நிறைவாய்.

இன்னும் இன்னும்
கன்னம் இனிக்க
நீ...
காற்றலையில் தந்த
உன் முதல் முத்தத்தை
பெற்றவளாய் ரசித்தபடி.

இப்போ என்னை இறக்கச்சொல்
மாட்டேன் என்று மறுக்காமல்
உன் காலடியில்.

ஒரே ஒரு சிடுக்கு மட்டும்
மனசோடு
ஒதுங்கிய கிளிஞ்சல்களாய்
உன்னையும்
உன் நினைவுகளையும்
சேர்த்துச் சேர்த்து
நிறைத்து வைத்திருக்கிறேன்
மனக் கிடங்குகள் எங்கும்.

பக்குவமாய்
யாரிடம் கொடுத்துச் செல்ல
நான் !!!

முத்த மயக்கத்தோடு
ஹேமா(சுவிஸ்)

Thursday, December 03, 2009

பதியம்...

துடைத்தெடுத்த வீதிகளும்
வெள்ளை மரங்களும்
நாட்டுப்பற்றுள்ள மனிதர்களுமாய்.

வெளுத்த உலகத்தில்
அழுதபடி அக்குழந்தை.
குளிரூட்டப்பட்ட சாலையில்
யார் குரலுக்கும் சாயாமல்
மிரட்சியோடு என் பக்கமாய்.

தன் வீட்டு மரங்களை
பிடுங்கி வந்து
சட்டிக்குள் முளைக்க வைத்த
சாமர்த்தியம் இவர்களுக்கெப்படி !

திருடன் இல்லா உலகத்தில்
மூடிய கதவுகள்.
நாளைய நாட்களில் பயமில்லை.
உறவுகள் தேவைப்படாத
வாழ்வுக் கோப்புக்கள்.

இத்தனை இருந்தும்
விம்மல் விலக்கி என்னை
அழுத கண்ணீரோடு
எப்போதும்
சிநேகித்த கை நீட்டலோடு
கிட்ட வரும் பிஞ்சுக் கால்கள்.

ஏன் ?
ஏன் ?
ஏன் ?

நடு வீட்டுக்குள் முனகும்
நாய்களும் பூனைக்குட்டிகள்.
அன்பு காட்டினாலும்
பழக்கமில்லாத வெளுத்த முகங்கள்
அடங்கிக் கிடக்கும் தெருக்கள்.

ஒன்ற மனமின்றி
ஓவென்று அலறிய பிஞ்சுக் குரல்
என் கைகளுக்குள் அடங்கிய அந்த விநாடி.

பூத்திட முடியாக் கிளையொன்றைப்
பதியமிட்ட சங்கதி.
ஆபிரிக்காவில் தத்தெடுத்த
கறுப்பு மரக்கிளையொன்று அது.
ஒட்டி ஆறியபடி என்மீது
தன் உறவுகளின் நினைவோடு.

ஏனென்றால் நானும் கறுப்பு !!!

ஹேமா(சுவிஸ்)