*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, January 26, 2012

சாகச விரல்கள்...

விரல்களின் வேகத்தில்
சுண்டலின் விசையில்
நம்பிக்கைகள்
கைகள் சுழற்றும்
சோளிகளின் சாகசங்களை நம்பி.

முழங்கையை மடக்கி விரித்து
குலுக்கிப் போடும் சோளியில்
நிமிர்ந்தும் கவிழ்ந்தும்
கிடப்பதாகிறது கனவு வாழ்வு.

மீண்டும் மீண்டும்
உருளும் சோளிக்குள்
முழித்த பார்வைகளின்
முணுமுணுக்கும் வாக்குகள்
முத்தமிடும் முள்முடிகளாய்.

பணம் ஒரு சோளி
பாசம் ஒரு சோளி
குழந்தை ஒரு சோளி
பாய்ந்து புரண்டு
பன்னிரண்டு சோளி சொல்லும்
பகடைக்குள் திடுக்கிடுகிறது
எதிர்பார்ப்பு.

வீழ்பவன் மனிதன்
எழுபவன் வீரன்
இல்லாததும் இயலாததும்
ஏதுமில்லையென்றாலும்
எதையோ சொல்லிக்கொண்டு
சுழல்கிறது சோளி!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 17, 2012

உலரும் பருக்கைகள்...

கத்திரிவெயிலிலும்
சிரிக்க மறப்பதில்லை
பொய்க்காத பூக்கள்
மாறாத வண்ணங்களோடு.

ஒற்றை விடயம்
மாறுபட்ட பதில்கள்
ஒருவருக்கொருவராய்
மாறித் தெறிக்கும்
அடர் வார்த்தைகள்.

பிதிர்க்கடனெனத் தெளிக்கும்
எள்ளும் தண்ணீரும்
சிதறும் வட்ட வட்ட
திரவத் துளிக்குள்
சிரார்த்த ஆன்மாக்கள்.

சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும்
குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்
முங்கி அமிழ்ந்து திணறுகின்றன
சங்கடங்களும்
சந்தோஷங்களும்
இறந்த பின்னும்கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, January 16, 2012

நேற்றுப் பொங்கல்...

இன்னும் நம்பவில்லை !

வெறுத்துக் கக்கிய
வார்த்தைகள்தான் தெரிந்தன
பொங்கிச் சிதறிய துளிகளில்.

தொட்டுப் பார்க்கிறேன்
ஒரு துளியை
அன்பை நிராகரிக்கும்
எச்சிலாய் அது.

வாந்தியாய்த் துப்பிய
வார்த்தையின் ஓலங்களாய்
கொதித்துக்
கொந்தளிக்கும் நுரை.

அன்பே...
காணக் காத்திருக்கிறேன்
காணும் பொங்கலில்
காதலுடன்
உன் அன்பு முகம்!!!அதே வார்த்தைகள்...

நேற்றைய இரவில்
விகார உருவெடுத்து
தலையணைக்குள் சேகரித்த
என் காதலையும்
அசிங்கப்படுத்தியிருக்கிறது
அதே கொடூர வார்த்தைகள்
இபோதும் நீங்கள் காணலாம்
அந்த வெறுப்பையும்
அறுந்து தொங்கும்
நூலின் நிராகரிப்பால்
உதிரும் பஞ்சையும்!!!

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள்...ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 10, 2012

பூக்கள் விழும் குழிகள்...

கனமற்றதான
பூக்களோடு கலந்திருக்கிறேன்
இடியப்பச் சிக்கலான
ஆட்டத்தைப் பிரிக்க
மலமுருட்டும் வண்டுகள்
விடுதலை விரும்பிகளென.

தெற்கு நரிகளின் ஊழை
மௌனங்களைக் கிழித்தாலும்
சாக்காடாய்
உறக்கம் கலையாத வழிப்போக்கர்
மனிதனே கொல்கிறான்
மனிதனே இறக்கிறான்
யாரோ அவர்கள் யாரோ
யாருக்கோ என்ன.

பொத்திக்குள் வளர்ந்த அறிவு
விரிதலில் இல்லாமல் போயிற்றோ
ஒன்றுப(ட்)ட சிநேகம்
சகோதர முகங்களில்லை
இறு(க்)கிய சாரளங்களுக்குள்
அந்நியனாகவே.

சாம்பல் பறவைகளின் வெப்பம்
ஈரப்பலா முலை வெடிக்க
சிதறுகிறது
நான் கலந்திருக்கும் வாசனை மல்லி
வி...டு...த...லை...யென உதடு பிரிந்து மூட
நாயொன்றும் காவலிருக்கிறது
வைரவருக்கு விடுதலை வேண்டி
புத்தனின் மட்டறுத்த புன்னகையோ மாறாமல்.

பிந்திய செய்திகளின்படி
இனந்தெரியாதோரால் கொல்லப்பட்ட...!!!

அதீதத்தில் முதன் முதலாக....ஹேமா(சுவிஸ்)

Friday, January 06, 2012

இரண்டும் ஒன்றுதான்...

சிணுங்கிச் சத்தமிடும்
மெட்டி
வாங்கித் தந்துவிட்டு
இலக்கணம் தவறிய
இசையென
நகைக்கிறான்
என் நடையின்
தாளக்கட்டை.

பாடச்சொல்லிக் கேட்டுவிட்டு
பரிகாசம் செய்கிறான்
பார்...யாரோ
படலையடியில்
பிச்சைக்காரரென்று!!!
தொங்கும்...
வெறும் கூட்டில்

தூ(தொ)ங்கிக்கொண்டிருக்கிறது
சுகமான அவன் நினைவுகள்.

கனவு முட்டையிட
பொரித்த காதல்குஞ்சை
இறக்கை முளைக்கமுன்
பறக்கப் பழக்கியது யார் ?

கனவும் முட்டையும்
காதலும் கூடும்
இறக்கையும் ஏக்கமும்
காத்திருக்கிறது
தொங்கும் மனதிற்குள்
தூக்கணாங் குருவியாய்
கூட்டை நிரப்புமுன்
காணாமல் போன
ஜோடிக்குருவிக்காய்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, January 01, 2012

முத்தக் க/கு 2011...



வருடம் முழுதும்
விட்டு விட்டு நாம் உதிர்த்த
மொத்த முத்தங்கள்
ஆயிரங்கள் தாண்டுமிதை
ஆடையிட்டு அனுப்புகிறேன்.

என்னது...உன்னது
கன்னம்...உதடு
கண்...கழுத்தெனப் பிரி
பிடித்த முத்தம்
பிடிக்காத முத்தமெனக்
கணக்கிடு.

பயந்து தந்தது
மயக்கத்தில் தந்தது
மறந்து தந்தது
இன்னும்...
பூச்சி கடித்தாற்போல
ராட்சத முத்தம்
கலவி முத்தம்
வெட்க முத்தம்
வலித்த முத்தம்
குட்டி முத்தம்
ஊடல் முத்தம்
சும்மா போனால் போகுதென்ற
முத்தங்கள்...
கொசுறுகள்கூட சில...

"சப்" என்ற சில "ச்" களை
வீணாய்ப் போனதாய் விடு
பூச்சி கடித்ததைக் கழி
நீ...
ஒளித்து வைத்ததைக் கூட்டு
சொல் இப்போ
இருவருக்கும் இல்லாமல்
எத்தனை உதிரிகள்
உதிர்ந்து போனது ?

பூச்சிய முடிவில் வருமந்த
முத்தங்களை மட்டும்
சத்தமாய்ச் சொல்லாதே.

அன்பு...ஆசை...ஆறுதல்
அது கணக்கில் இல்லை
அது நித்த முத்தம்.
மிச்சமிருக்கும் எல்லாம்
உனக்கும் எனக்குமானது.

கடன் முத்தமும் இருக்கிறதோ!

கள்ளக் கணக்கெடுப்பாய்
காவலுக்கு நடுவில்
நம் கைத்தொலைபேசி.

சரி...இப்போ
என் கை கோர்
உடல் சேர்
இறுக இறுக்கு
ம்....
ஒரேயொரு
எச்சில் முத்தம்
புதிய கணக்கில்
நான்...தூங்கவும்
நீ...விழித்திருக்கவும்!!!

என் மனம் நிறைந்த இனிய 2012ன் அன்பு வாழ்த்துகள் உறவுகள் எல்லாருக்குமே !

ஹேமா(சுவிஸ்)