உயிர் உருகும் வேளையிலும்
யாழ் கோட்டைத் திசை
கை அசைத்துஇ
"புலிக்கொடி பறக்கும் ஒரு நாள் பார்"
என்ற பார்த்திபனின்
நினைவின் நாள் இன்று.
கலங்கித் தவிக்கிறோம் திலீபா.
வா ஒரு கணம்...
எம் முன்னால்.
திருத்தப்படா தேசம் திருத்த
நேசம் கொண்டு உன்னையே இழந்த
சிநேகிதனடா நீ.
தன் இனம் சுவாசிக்க
சுதந்திரமாய்
தன் சுவாசம் நிறுத்திய
நாயகனாய் நல்லவனே.
சித்தார்த்தன்
எழுதத் தவறிய போதனைகள்
பார்த்திபனால்
திருத்தி எழுதப்பட்டதாய்.
காந்தீயம் மறந்த பாரதம்
மீண்டும் ஒரு முறை
அகிம்சையை அசை போட
பறை தட்டிய அறிவாளியாய்.
உலகம் அழியும் முன்
அழிக்கப்பட்டவனாய்.
ஈழம் தளைக்க...முளைக்க
தானே
முன் விதையான சத்யவான்.
நம் மண் நனைய
முகிலோடு உரஞ்சிய சிரஞ்சீவியாய்.
முத்தாய் உருவாகச்
சிப்பிக்குள் துளியான
தியாகி திலீபன்.
மரணம் துரத்த தூரதேசம் பறந்த
நாங்கள் எங்கே...
நீ எங்கேயடா!
விந்தைக் குழந்தையடா நீ.
ஈழத்து வானின்
விடிவெள்ளியாய் வடிவானவன்.
யாழ் மக்களின்
செல்லப் பெடியன் அவன் சின்னவன்.
மரணத்தையே மலர் தூவி வரவேற்று
வாகனத்தில் ஏற்றி வலம் வந்த
வீரத் தாயின் தமிழன்.
சட்டங்கள் சரி செய்ய
தானே சரிந்த செம்மல்.
வல்லரசுக் களத்தினிலே
வாளாய் மாறிய சிறுத்தை.
சுதந்திர வேட்கைப் பசிக்கு
தானே உணவான உத்தமன்.
தமிழ் ஈழம் சமைக்க
தன்னைத் தானே
சமைத்துக் கொண்ட சூரியன்.
தாயகம் காக்க
துணிவையே ஆயுதமாக்கித்
தீயாகித்...தீபமான தங்கமகன்.
பொய் அரசியல்
பேசிப் பேசியே
காலம் கடத்திய கயவருக்குள்ளும்
சரித்திரமாய் வாழும்
புத்தகமான அற்புதன்.
இயமனுக்கே
நாட் குறித்துக் கூப்பிட்ட
நாட்டுப் பித்தனாய் சித்தார்த்தன்.
தன் நோய் மறந்து
தாய் தேசம் நினத்த
தாயாய் திலீபன்.
எங்கே....எங்கே
இருபத்தொரு வருடங்களாய் அவன்?
நல்லூர்க் கந்தன் காலடியில்
மயிலான மாயன்
அவன் எங்கே?
மன்னன்...மாவீரன்
மருத்துவப் பீடத்து
மருந்தான போராளி.
யார் சொன்னார் இறந்தானென்று?
இறந்தால்தானே பிறப்பொன்று.
ஈழம் பிறக்கையிலே
இன்னொரு பக்கத்தில்
பூத்திருக்கும்
கார்த்திகை மலராய்
பக்கத்திருப்பனாய்
பார்த்திபன்
எம் திலீபன்.
மறவோம் நாம்
மறவோம் நல்லவனே.
வாழும்
உன் நினைவோடு
உன் புகழும்.
தமிழன் என்றொரு
இனம் வாழும் வரை!!!
21 ம் ஆண்டு திலீபனின் நினைவோடு
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||