புன்னகை சிந்தின 83ஆடியில்
நான் நினைப்பதுண்டு
"எனக்குண்டான வாழ்விது
என்னை வாழவிடு"
கெஞ்சுவதாக இல்லையா அது.
ஒட்டிய வயிறோடு
உயிர் விட்டிருந்தன
பசியோடு இருந்த
தமிழ்க் குழந்தைகள்
பெற்றவர்களின் கைகளில்.
1953 தொடக்கம்
சிங்கள
ஆட்சிக் கொடியெங்கும்
கொட்டிச் சிதறிக்கிடந்தன
தமிழ் இரத்தம்.
83 ஆடியில்
போதாத
சவப்பெட்டிகளுக்காக
காத்திருக்கவில்லை
தமிழ்ப்பிணங்கள்
தம்மைத் தாமே
அடக்கம் செய்துகொண்டன
கண்களைத் திறந்தபடி.
ஆடி இருளில்
வருடங்கள் கடக்கையிலும்
மெழுகுதிரிப் பொய் ஒளியில்
என்ன கொண்டு வந்தாய்
இந்த வருடத்திலாவது என்றபடி
காத்திருக்கின்றன அவைகள்
கரும்புலிகளையும் சேர்த்துக்கொண்டு.
உங்கள் நினைவு நாளில்
வேண்டுமென்றே வைத்த
உள்ளூராட்சித் தேர்தலில்
வெற்றி தமிழுக்கே
என்று சொல்வதைத் தவிர
இப்போதைக்கு வேறொன்றுமில்லை
பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||