*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 30, 2013

பெருங்கடலொன்றின் வார்த்தைகள்...


பாதி எரிந்தணைந்த
உடலொன்றொன்றுக்கான
இருப்பிடமாகிறது
என் பாறையிடுக்கு.

ஊத்தைச் சொற்களையும்
தின்றொழிக்கும்
சாலமோன் மீன்கள் ஒட்டிய
என்னில்
ஒரு கூச்ச நெருடல்.

தன் குஞ்சுகளை மூடி
மணலிடும் தாய் நண்டில்
கிளிஞ்சல்களை அள்ளியெறியும்
வலைவீச்சுக்காரனாய்
ஆதிக்க ஆர்ப்பாட்டங்கள்.

பேரூழியக்காரர்களின்
சாம்பல் கரையும் கடலில்தான்
இனம்பெருக்கும்
பெரும் சுறாக்களும்.

ஆடி அடங்கும்
ஆழக்கடலின் பாசிச்சிக்கலுக்குள்
பிறந்திறக்கும்
சாபப்பாறைகளின் நடுவேதான்
இத்தனை வாதைகளும்
நடப்புக்களும்
பரிமாற்றாங்களும்
படுகுழிகளும்
ஆசைகளின் பேரவலங்களும்.

பக்குவமில்லாப் பிறப்புக்களை
இனியும் அனுமதிப்பதில்லையென்கிற
விதியொன்று செய்ய
கடலூரிகள் முதுகில்
எழுதி வைத்துவிட்டே
காத்திருக்கிறோம்.

இம்மீதி உடலைக் கொழுத்த
நீளும் ஒரு கை.

அக்கை பற்றி விதி சொல்ல
ஒரு மொழி சொல் அலையே
ஆயிரமாயிரம் உடல்கள் கரைத்த
வாசனைக்குச் சாட்சி நானென!!!

 http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

ஹேமா(சுவிஸ்)

Friday, December 27, 2013

காதல் துளிகள் (11)

முந்தானை பிடித்திழுக்கும்
குழந்தையாய் தொடர்கிறேன்
தாயுமானவனே......
சுவை காட்டி
வெடுக்கென
இழுத்த இனிப்பானாய்
நீ எனக்கு !

நொடியொன்றில் கொல்லவும்
அதே மறுநொடியில்
உயிர்ப்பிக்கவும்
முடிகிறது உன்னால்

நீ...என்ன
கடவுளை வென்றவனோ
எத்தனை முறைதான்
இறப்பதும் பிறப்பதும் !

தெருவில்...
தொலைக்காட்சியில்...
தெருவில்...
வரும்...
போகும்...
முகங்களோடு
சமப்படுத்தித் தேடுகிறேன்
எவரெவரையோ
ஞாபகப்படுத்துகிறார்கள்
உன்னைத் தவிர....

நாளின் வேகப்புள்ளியில்
உன்னை
நினைக்காத நேரமில்லை
நினைத்தாயா
நீ இன்று என்னை !

நீ.....
எழுதி விட்ட
பாதிக் கவிதையில்
தொடருமென்று
புள்ளிகளிட்டு
முற்றுப்புள்ளி வைக்கா
பெரு விதி
வீதியில் நான் !

எதாகிலும்
ஏதாகிலும்
ஏதாகிலும் சொல்லிவிடு
உயிர்வாழ
நரம்பறுத்த கைகளில்
உன் பெயர் மிஞ்சியிருக்கும்
குருதி சொட்டச் சொட்ட !

ஹேமா (சுவிஸ்)

Wednesday, December 25, 2013

ஜீவஒளி...


சூரியக் கடவுளை நம்பிய
அகங்காரத்தில்
நம்மருகில்
விளக்கேற்றும் கடவுளை
ஒளித்து வைத்திருந்தான்
மனிதன்.

விளக்கேற்றிய
பத்தினிப் பெண்கள்
வீட்டு விலக்கென்றார்கள்
ஆனாலும்
வீட்டு விளக்குகள் ஒளிர்ந்தன.

கடவுள்...
களவு போன நாளிலிருந்து
கோயில்களில்
தஞ்சமடைந்திருந்தன இருள்.

விளக்குகளோ திரிகளோடு
ஒரு துளி நெய்யுக்காய்
தவமிருந்தன.

பின்னொருநாளில்
கடவுள் வந்தார்
கையில் ஒரு
செத்த மின்மினியோடும்
திரியில்லா
வெறும் விளக்கோடும்.

விளக்கில்லா ஈசல்கள்
சூரியனைச் சுற்றிச்
செத்துக்கிடந்தன!!!

ஹேமா (சுவிஸ்)

Monday, December 23, 2013

அழுக்குக் கடவுள்...


பாதாளக்கரண்டியொன்றுக்கான
கவிதைதான் ஞாபகம் வருகிறது.

தொலைத்து விட்ட
உன் வாழ்வைத் தேடியெடுக்கிறேன்
நீ வளர்த்துவிட்ட உறவுகளுக்குள்.

பாதங்களைக் கிழிக்கிறது
காலமுட்கள்
நம்பிக்கைகளைப் பதம் பார்க்கிறது
வார்த்தைச் சம்மட்டிகள்.

கொஞ்சம் அண்ணாந்து பாரேன்...

விண்மீன்களை ஓடிப்பிடித்தும்
நிலவுக்குள் பாட்டியைத் தேடியும்
பறவை விட்டுப்போன சிறகோடு
வானலையும் உன்னையும் கண்டு
எத்தனை காலம் நீ....?

நிசப்தக் கற்களால் வீடமைத்து
நிலா வழிய ஒரு சிறு துவாரமிட்டு
சாணக வாசனை நாசிக்குள் நிரப்ப
உயிரசைக்கும் இசை ரசித்து
எத்தனை காலம் நீ....?

கற்களைக் கடவுளாக்கி
நேர்த்திகளை
மரங்களில் ஊஞ்சலாக்கும்
மனிதர்கள் நடுவில்
அழுக்கான கடவுள் அழகற்றவர்தான்
ஒத்துக்கொள்.

ஒரு இரவின் பெருவெளி நிரப்பும்
என்றோ பாடிய
தெருப்பாடகனின் பாடலொன்று.

பறவையின் பசியையும்
எண்ணிக் கசியும் குழந்தையின் மனம்.

கொஞ்சம் பொறு
அன்பின் நீள்சுவரில் உன் பெயர்.

என்றோ தொலைந்த
நெடுங்கனவொன்றில்
சற்று நேரம்
உன் இரவை அகலப்படுத்தி
உறங்கிக்கொள்.

உனக்கான சவப்பெட்டியின்
இறுதி ஆணி
உன் உள்ளங்கையிலேயே
இருக்குமென்று
ஒப்பமிட்டு வாழப்பழகு
இனியாவது!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, December 18, 2013

குளிர்க்காதல்....


நோயாகிப்போகிறேன்
பனி மிரட்டும் தேசத்திலும்
அனல் பறக்கிறது
அவன் ரகசிய
வார்த்தைகள்.

கருத்த நினைவுகள் முனக
மெல்ல மெல்ல
எலும்புடைத்து நொருக்கி
மாத்திரைத் துகளென
இறங்குகிறது
அவன் குரல்
நினைவு மீட்டலோடு.

தொன்மத்தின் படிமமென
உறையும் சுவாசம்கூட
தீயாக
நெஞ்சுக்குள் உருளும்
உருளையொன்று
சொல்லிவிடு
கேட்டுவிடேனென
உயிரிடித்து உடைக்கிறது.

வதைகள் வேண்டாமே...

முத்தங்களைக் கேட்டு வாங்க
நானென்ன சும்மாவா
அவனைவிடத் திமிரானவள்
அட.....போடா !

ஹேமா(சுவிஸ்)

Friday, December 13, 2013

இந்த வேளையில்....


அறுத்து விடப்பட்ட காற்றலையில்
சுவாசிக்கவியலா அழுத்த அடர்வில்
மூச்சுக்குழல் புகுந்த உணவென ஒரு குரல்
இருண்ட பனைமரச் சுவர் உடைத்தெறிகிறது.

ஒரு சொல்லை
மனதில் புகுத்தவும்
பின் வாயால் கக்கிப் பறிக்கவும்
கற்றுக்கொடுத்திருந்தது சமூகம்.

கூதிர்கால நிலம்
கொஞ்சம் விறைத்து
வேர் மறந்த நிலையில்
இணக்கமற்ற ஒரு பனிநிரம்பிய
அதிசீதக் குளிரில் மலங்கி
பள்ளத்துள் தள்ளவைக்கிறது அது
உருப்போட்டு உருப்போட்டு
வளர்த்த ஆசையை.

பொழுதுகளைச் சுவீகரிக்கும்
சுவர்க்கோழியென
ஒக்கப்பாட்டற்ற அத்தியாயத்துள்
கூவத்தொடங்கும் கூத்தியாகி
ஒட்டடைக்குள்
கர்ப்பமற்ற அடைகாத்தல் ஆரம்பம்.

நேற்று இன்று நாளையென
பருவகாலங்களைப்
பிரித்திடா நிலையில்
அதீத துரவு மையப்புள்ளியொன்றில்
கேட்டுக்கொண்டிருக்கிறது அக்குரல்.

தொடர்ந்தும் துரத்தும்
துரக(த)த்தின் முதுகில்
உறவுகளை விட்டுவிட்டு
தீவொன்றில் ஊன்றிக்கொள்கிறது
இரண்டு வேர்கொண்ட மரம்
மீண்டும்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, December 11, 2013

யுகம் மாறாதவர்கள்...


அடித்துடைக்கும்
ஏழையின் தகரவீடென
வார்த்தைச் சிதறல்களைப் பொறுக்கி
சமாதான முயற்சியில்
வீட்டெறும்புகள்.

இறுக்கிக் கட்டும்
வார்த்தைகளை முறித்து
நொருக்கி
மிதக்கும் தக்கைக்கு
காரணம் தெரிந்தும்
விளக்கவியலா ஆணதிகாரம்
'மிதக்கிறது
அவ்வளவேதானென' அறிவிக்கும்.
அகங்கார கர்வம்.

இருள் கிழித்தெரிக்கும்
அக்கினியை
நிமிடங்களில் கையேந்தி
தட்டிலும் கட்டிலிலும்
தன்னை நிரப்பி
தடம் மாறி
சுயம் கடக்கும் பெண்மை
பார்வையிருந்தும்
பார்வையற்றவனைக்
கடக்கும் பாவனையில்.

யூகத்தில் கடக்கும்
ஆயிரம் ரகசியக் கேள்விகளை
"எல்லாம் என் விருப்பம்
வாதமிடாதே
சொல்வதைக் கேள்"
எதிர்க்கேள்விகள் இல்லா
பிரேதப்பெட்டியின் மூடியென
அடங்கும் பதில்களற்று.

கைகுலுக்கும் வெள்ளைச் சமூகத்தில்
படிப்பும் பொருளாதாரமும்
நிறைத்தாலும்
மனமென்னவோ
பெண்ணுக்கு ஆணியறையும்
ஆணாதிக்க சமுதாயத்தில்
ஆனாலும்....
உணர்வுகளை மதிக்கும்
மனிதராய்.

இயலாமையை
ஏங்கும் அன்பை
நசித்து புசிக்கும் பசியோடு
ஒரு வாழ்க்கைப் புரிதல்.

அன்றிலிருந்து இன்றுவரை
ஆதிக்க வர்க்கம்
இப்படியாகத்தான்
புதிரறுக்கும் சொற்களை
அவிழ்க்கும் அவளிடம்
சட்டென்று பறித்திழுக்கும்
உரிமையை .

பிரியங்கள்
வன்மையின் காயங்களைச் சரிசெய்யும்
நிச்சயமாகச் சொல்லமுடியாவிட்டாலும்
நிலைமை அதுவேதான்.

சொற்பமாவது பேசவிடுங்களேன்
புரிதலின் காற்று உள்வரட்டும்....!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 09, 2013

நிழல் சுருவம்...


சுருவங்களால்
ஆன வீடொன்று 
அடிக்கடி கனவில்
பச்சையம் தின்று 
காற்றைக் குடித்தவளிடம் 
ஏது இப்படியொரு வீடு
மீசை வைத்த 
ஒரு புள்ளி நகர்ந்து
பாரமாக்குகிறது நிகழ்வை.

சருகாகி வீழும்
இலையொன்றை 
ஏந்திப்பிடித்த அப்புள்ளி
தனக்கான 
கூரையின் இறப்பில்
செருகியும் கொள்கிறது
நான் பச்சையம் தின்று 
செத்த இலையாகவும் 
இருக்கலாம் அது.

உடைந்த நிலா 
நகரும்  வேளையில்
நம் உடல்கள் 
மெல்ல முளைக்க 
வெளிச்சத்தில்....
சவரக் கத்தி கண்டு 
கனகாலாமான ஒரு முகமும் 
தவளைகளை ஞாபகப்படுத்தும்
பச்சையம் தின்ற என் தோல்களும்.

புதிது புதிதான வாசனைகள் பரவ 
அனிச்சையான தொடுதல்கள்கூட 
அந்தரமாய்.....ஆசுவாசமாய்
நிச்சயமில்லா உறுதிகளைத் தர
இடைவெளிகளை 
பெருமூச்சால் நிரப்பி 
விலகிக்கொண்டிருந்தேன் 
தவளைத்தோல் செந்நிறமாக
சுருவங்களாலான வீடு 
அவனுடையதாகவுமிருக்கலாம்!!!


இறப்பு - வீட்டுக்கூரையின் கீழ்ப்பகுதி.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6096

ஹேமா(சுவிஸ்)