புவியின் ஈரலிப்பை
சொற்களுக்குள்
தேக்கி வைத்திருக்கிறது
உன் கவிதைகள்.
எழுதமுன்
ஒரு முத்தம் தருகிறாய் காற்றுவழி
சில குழந்தைகள் தங்களுக்காகவும்
சில அம்மாக்கள் குழந்தைகளுக்காகவும்
சேமித்த நிலவிடம்.
நிலவுக்கும் காலாவதித் திகதியிருக்கும்
அதற்குள் தீர்த்துவிடு உன் முத்தத்தூதை !
நேற்றிரவு
நீ....
கன்னத்தில்
வரைந்த
மீசைக் கோலங்களை
சிநேகிதி...
கேலிச் சித்திரமாய்
வளைந்து காட்ட
நான்...
நாண வண்ணங்கள்
பூசி மறைக்க
வேண்டியதாயிற்று
இன்று !
முத்தத்திற்கு
விடுமுறை விட்டவன்
சொல்லவேயில்லை
எப்போ....
விடுப்பு முடியுமென...
நிலவடி நீயெனக்கென
சொல்லிச் சொல்லியே
ரசித்த
என் கிராதகன்
தேயவைக்கிறான்
காக்கவைத்து
அவன் நினைவுகள்
என்ன....
எனக்கான
அவன் குழந்தையோ
நடு இரவிலும்
தூங்கவிடாமல் !
இதழ் ஒற்றி
எனக்காய்
வழியனுப்பும்
அத்தனை முத்தங்களும்
சுற்றி வளைத்த
ஈட்டி முனைகளில்
சிறைப்படுகிறது.
நினைத்திருக்கிறேன்
தப்பிதலுக்கான இறகொன்றை
இனி வரும் கனவில் அனுப்ப.
அதுவரை
நீர்த்த முத்தமாய்
ரூபமெடுக்கட்டும் அவைகள் !
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||