*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, November 27, 2013

தொலைந்த பின்னும்...


சேடமிழுத்த
செவ்வரிப் பாம்புக்கு
இலையுதிர் காலத்து
பால் வார்ப்பு...

கிளறிய சோற்றில்
திரண்ட
வைக்கோல் குதிர்...

கரித்தட நீர் உறிஞ்சி
கைக்குழந்தை
பசி விரட்டி
உப்பிய வயிற்றில்
மொழி முத்தம்...

பிணங்கள் தாண்டி
இறந்த கடவுள்களை 
விரல் எண்ணிய
அசாதாரண மனிதர்கள்...

பாதுகாப்பை
பதுங்கு குழிகளில்
படுக்கவைத்து
நிலவேர் துருத்தும்
அரவமெனப் பின்னி இறுகி...

நுண்ணிய இசை மறந்து
அதிரும் போரில்
நினைவு தப்பி
நுடங்கி வளைந்து
செவி பொத்திய வான்பூதம்...

அடகிட்ட ரசனை
நீர்கடுக்க
விழுங்கிய எச்சிலோடு
மூத்திர இருள் கௌவ...

சுமத்தலை விரும்பி
உணர்வில்லா
பல்லக்கு மனிதர்களை
உறவாக்கி ஆயுள் கூட்டி...

பல்லியக் கோடாய்
சொல்லில் புகா வார்த்தை
கதைகளுக்குள்
இரத்த மண்மேட்டுத் துயரம்...

அகதிச் சமையலில்
உப்புறிஞ்சிய மேகம்
ஈழத்து இசையென
பொழியும்
மரண ஓலம்...

சாரளமில்லா வீடுகளில்
அகதியாகா
நம்பிக்கைக் கம்பிகள்
அடித்தள
அடுக்கு மணலில்
கறளில்லா மனிதர்களாய்!!


நமக்காய் உயிருதிர்த்த அத்தனை மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்கும்,எல்லா உயிர்களுக்கும் என் தலை சாய்ந்த வீரவணக்கம் !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 26, 2013

அடங்காத் தமிழன்...

 
தமிழின் சொற்களுக்குள்
அடங்கா வீரன்
அண்ணா நீ....

வருவாய்....
இனம் வாழ்ந்து பெருக
காத்திருப்பின் காந்தள் பூக்களுக்குள்
மகரந்தம்
எடுத்துப் போயிருப்பாயென்ற
நம்பிக்கை.

கார்த்திகைப் பேரலையின்
கிளிஞ்சல்களை
கிழித்தெழுதிக் காத்திருக்கிறோம்
அழுத கண்ணீரோடு.

ஆதிக்க அழுத்தம்
எதுவரை அண்ணா
அடங்கியே போகிறோம்
அமுங்கிக் கிடக்கிறோம்
எல்லாம் சொன்னாய்
எல்லாம் செய்தாய்
இல்லாமல் போவேனென
சொல்லாமல் போனதென்ன
என் அண்ணா.

வருவாய்....
தளரா நம்பிக்கை
காலம் தவிர்த்தாலும்
வந்துவிடுவாய்
விடுதலைச் சூலமேந்தி
யாரோவாய்
வந்துவிடுவாய்...

எதிர்காலமாவது
தலை நிமிர்ந்து நடக்கட்டும்
உன்னைப்போல.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பிரபா அண்ணா
தம்பியண்ணா!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, November 25, 2013

பிரத்தியேகக் கொலைகள்...

என் பற்கள் பிடுங்பட்ட நிலையில்
என் தமிழைக் காவுகிறது
பெருங்கடலொன்று
உன்னை நீயே காத்துக்கொள்ளெனவும்
உன் இருப்புக்களை
நான் விட்டு வைத்திருக்கிறேனெனவும்
சொல்லிக் கடக்கிறது
ஈவு இரக்கமில்லாமல்.

என் இருப்பு என்னைச் சாகடிக்க
என் தமிழை
காவிச் செல்லும் கடலை
தீராச் சாபக் கற்கள்
கொண்டெறிந்துகொண்டிருந்தோம்
பலர் கூடி.

அலைகள் கண்டறியும்
இருள் சுமக்கும் இரவுமறியும்
கடலின் நாவுகள் ஓர் நாள் சிதையும்
என் வதையில் நான் தோற்கமாட்டேன்
கடலும் வதையும்
பக்குவப்படாயிற்று எனக்கு !

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 14, 2013

வாழ்வு (3)


நம்பிக்கைகளை நெரித்துக் கொன்று
தின்றுவிட்டு ஏப்பம் விடும் உலகம்
தின்னும் உணவென சமைத்தெடுக்கிறான்
மனிதன்  மனிதத்தை !

பெயர் குறித்த மரங்களிடை
பெயரில்லாப் பெருவெளியில்
பெயரற்று வருகிறோம்
பெயர்களுக்குள் நுழைந்துகொள்கிறோம்
பெயர்களை விட்டுச் செல்கிறோம்
பறவைகளுக்கும்
பாம்புகளுக்கும்
பூச்சிகளுக்கும்
பெயரிருக்குமா என்ன?!

சில நிமிடங்களில்
நடந்தேவிடுகின்றன
நாமறியா நிகழ்வுகள்
பின்வரும் விளைவறியாமல்
எதிரியின் துப்பாக்கியை
செயலிழக்க வைத்த
துருப்பிடிக்கா
துப்பாக்கி இவள்
என்னிடமும் உண்டு
ஒன்று
அவர்களிடமும்
ஜனநாயகம் வாழ
வாழ்த்துங்கள் ! (பெண்போராளி தமிழினிக்காக)

''ம்'' ல் தொடங்கி
''ம்'' முடிகிறது
காதலும் வாழ்க்கையும் !

கூடுகளோடு சில பறவைகள்
மரங்களைத் தேடியபடி !

அசையும்
சுவர் மணிக்கூட்டின்
பெண்டிலம்கூட
எரிச்சலாயிருக்கிறது
கருவறை அமைதி
தேவையெனக்கிப்போ !

இழப்புக்களின் பின்
மனம் போதுமென வறண்டாலும்
இன்னொரு அன்பால் ஈரமாகிக்கொள்கிறது
அடுத்த இழப்பிற்கான ஆயத்தத்தோடு
இதயமும் வாழ்வும் !

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 10, 2013

தமிழ் இசைப் ப்ரியங்கள்...


அவகாசமேதும் தந்து
பேசவில்லை அவர்கள்.

புணர்தல்
அதுவும்....
இவள்
'பிரபாகரனின் மகள்'
என்கிற நோக்கிலேயே
எத்தனை தரம்
எப்படிப் புணரலாம்
என்பதில் மட்டுமே
குறிக்கோளாயிருந்தனர்
புத்தனின் புத்திரர்கள்.

’நான் அவள் இல்லை’
என்பதை ஏற்கக்கூட
அவர்களிடம் நிதானமில்லை.

புதைகுழி மூடமுன்
விழும் துளிக் கண்ணீரை
அழிக்கும் மழைபோல்
தாட்சண்யமற்றுக் கிடந்தது
அவர்களின் திட்டும்
ஏச்சும் நடத்தையும்.

ஒவ்வொருவனின்
புணர்தலையும்
காறித்துப்புதலில்
வீணானது என் சக்தி.

ஒரு கோழிக்குஞ்சின்
பலம் கொண்டமட்டும் கொத்த
முத்தமிட முயல்வதாய்
டிக் டக் வார்த்தைகள்.

சமாதானத்துக்காய் ஏந்தி
சமாளிக்கப் போர்த்திய
வெள்ளைத்துணியில்
என் பரம்பரைக்கான
முட்டைகள் செத்திருக்கலாம்
சில உயிரணுக்கள்
மண்மூடிய
ஏதோவொரு மடியில்
நிறைந்திருக்கக்கூடும்.

நான்....
என்னைத் தின்று தின்றுதான்
செத்துக்கொண்டிருந்தேன்
யாரும் என்னைக்
கொல்லமுடியாதென்பதை
அறியாத சாத்தான்கள்
புணர்ந்தது
அவர்களின் காய்ந்த நாட்களை.

சேற்றில் கலைந்த
என் மானம் காத்திருக்கும்
சிவப்புச் சால்வைகளின்
கழுத்து வாசலில்.

அவர்கள்
வீட்டை நக்கும்
வளர்ப்பு நாயல்ல நான்
நான் நானாய்த்தான்
தமிழ் காத்த
தமிழச்சியாய்த்தான்
செத்துக்கொண்டிருந்தேன்!!!

ஹேமா(சுவிஸ்)