*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, May 30, 2008

பூக்களைப் பறிக்காதீர்...

குறுகுறுத்தபடி மனம்.
கையில் ஒரு மல்லிகை மாலை.
பார்க்கிறது பரிதாபமாய்...
பரிகாசமாய்...
ஞாபக முடிச்சுக்களில்
அவிழ்க்க முடியாத பூக்களாய் இவைகள்.

வண்டுகள் கும்மி கொட்டிச் சுற்றிப் பாட
குண்டு குண்டாய்...
நீ அழகா நான் அழகா போட்டியோடு
காலைப் பனியில் பூக்கும் புன்னகைக் குழந்தை.
பொழுதின் நகர்வே பூக்களோடு.
பேசாமல் போனதில்லை.
தலை தடவி நலம் கேட்காமல்
நகராது நாட்கள்.
முற்றம் நிறைத்திருக்கும்
மல்லிகை,முல்லை,நந்தியாவட்டை
செவ்வந்தியின் நறுமணம்.
தேவதைகளின் சிரிப்புதான் பூக்களாய் பூக்குமோ!

அந்தி சாய மல்லிகை மொட்டு இடுங்கி
மாலையாய் என் தலையில்.
படுக்கையிலும் கசங்காமல்
நீர் தெளித்துப் பத்திரமாய்
அடுத்த நாளுக்காய்.
ஆசையில் பறித்த மொட்டுக்களின்
சாபமாய் இன்று நான்.

கொடியில் இருக்கும்
இன்றைய மொட்டுக்களின்
முணுமுணுப்பு...
குறு குறுப்பு...
அர்த்தம் புரிகிறது இப்போ.
பழி வாங்கிய
ஞாபக மொட்டுக்கள் அவைகள்.

"பூக்களைப் பறிக்காதீர்"
பறித்தேன் மொட்டுக்களை.
இலைகளின் நடுவில் இயற்கையாய் விடாமல்.
தன்வினை தன்னைச் சுடும்.
ஈர்பத்து வயதிலேயே பிடுங்கிவிட்டான்
இறைவனும்...
என்னிடமிருந்து மலர்களை.
மலர் சூடும் பெரும் பேற்றையே.
பூக்களைப் பறிக்காதீர்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 29, 2008

அப்பாவுக்கு ஒரு வேண்டுகோள்...

அப்பா மன்னித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் டயரி வாசித்தேன்.
இளமைப் பதிவுகள் எத்தனையோ.
இருந்தும் கேள்வியாய் ஒன்று.
நீங்களும்...
ஆணாதிக்கச் சர்வாதிகாரியா அப்பா!
எங்களுக்கோ...
அம்மாவுக்கோ...
அறிவான ஒரு நண்பனாய்த்தானே நீங்கள்.
அதிகாரியாய்
எந்தச் சந்தர்ப்பத்திலேயும்
கண்டதேயில்லையே உங்களை நான்.
அன்புக்குக் கட்டுப் படாதவரா
என் அப்பா!

45 வருட உங்கள் தாம்பத்திய வாழ்வில்
ஒவ்வொரு வருடப் பதிவிலும்
"இன்றோடு தொலந்தது சனியன்...
இனித் தொடமாட்டேன் சத்தியமாய்...
ராசுக்குட்டிக்கு மேல்
சத்தியமாய் இனி இல்லை"
இப்படி...இப்படி.
சத்தியம் என்ன
சக்கரைப் பொங்கலா அப்பா!
அம்மாதான் பாவம்.
சிகரெட் நாத்தத்தோடு
எப்படித்தான்...குடும்பம்
நடத்தினாவோ உங்களோடு.

கண்டதுண்டு நானும்
வீடு தொடக்கம் கழிவறை வரை
சிகரெட் கட்டைகளும்
நெருப்புக்குச்சிகளும் குப்பையாய்.
தோள் தாண்டி
நாங்களும் ஆளாகி விட்டோம்.
விட்டதாயில்லை சிகரெட்டை.
எங்களின் கட்டுக்குள்தானே எதுவும்.
எப்படி சிகரெட்டின் கட்டுக்குள் நீங்கள்?
நீங்கள் புகைக்கும் போதெல்லாம்
அம்மாவின் கண்களும் புகையும்
அறிவீர்களா நீங்கள்.
ஆயுளைத்தானே உள்ளுக்கும்
வெளிக்குமாக இழுத்து ஊதியபடி.

அப்பா...
இன்னும் கொஞ்சக் காலம்
வேணும் எங்களுக்கு நீங்கள்.
அம்மாவுக்கு அடுத்ததாய்
வேண்டுகிறேன்.
இனிமேலாவது தொலையட்டும் சனியன்.
இமைகள் கண்களுக்கு
அழகு மட்டும் அல்ல அப்பா.
காப்பதற்காகவும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 27, 2008

வீட்டு நடப்பு...

கொள்ளை ஆசைதான்
கோகிலா போலக் கொண்டை போட...
முடியமா???
மயில் ஆடுகிறதே என்று
வான் கோழியும் ஆட.
மழையும் வர தோகை விரிக்க.
வீட்டு நடப்பொன்று ஆர்ப்பாட்டமாக...
கவிதை போல.

கணவன் தரும் வருமானம் அளவாய்
அழகாய் இரண்டு குஞ்சுகள்.
எப்படித்தான் பட்ஜெட் போட்டாலும்
மாத முடிவில் போதாமல் போகும்.
இருப்பதை விட்டு விட்டு
பறப்பதைப் பார்த்து அண்ணாந்து ஆசைப்பட்டால்...
மாதக்கடைசியில் குடும்பம் கடனில் முட்டும்.
வட்டி வயிறு முட்டிக் குட்டியும் போடும்.
வீட்டில் எல்லாம் இருந்தும்
இல்லை...இல்லை...இல்லைதான்.
வீடு விடியுமா...வசிக்குமா வசந்தம்.
கட்டின புடவை திரும்பவும் கட்டக் கூடாதாம்.
ஆரும் பார்த்தா சிரிப்பினமாம்.
இரண்டு நாளுக்கு ஒரு முறை
நகைகள் மாத்தாவிட்டால் நகைப்பினமாம்.

ஆயிரம் சுவிஸ் காசு வட்டிக்கு வாங்கி
வாடகைக்குக் காரும் எடுத்துக்கொண்டு,
கோடைகால விடுமுறை கொண்டாடா விட்டால்
கூட்டத்தில் பெண்களோடு கலந்திருந்து
கதைபேச முடியாதாம்.
கணவனோ வெளியே கடன்காரனுக்கு வெட்கி,
தொலைபேசித் தொடர்பை வெட்டி
முகத்தில் முக்காடு போட்டபடி.
பாவம் அவன்...என்னதான் செய்வான்!!!
வீட்டுக்குள் வந்தாலோ...
புறுபுறுப்பும் கறகறப்பும்.

"உங்களைக் கட்டி நான் கண்டதுதான் என்ன?
குழந்தைகள் பெற்றதுதானே.
அங்க பாருங்கோ அங்க போகினம்.
இங்க பாருங்கோ என்னென்ன செய்யினம்"
வேலைக்கும் போவதில்லை.
மின்சாரத்தில் மின்னல் சமையல்.
என்றாலும்...
"அப்பப்பா விடிஞ்சா பொழுதுபட்டா
வெட்டி முறியிறன்.
அவிச்சுக் கொட்டியே அடிவயிறு வீங்கிட்டுது"

சொல்லிச் சொல்லியே
ஆண்களை அல்லாட ஆட்டி வைப்பவள்
குடும்பத்தைக் கட்டியாளும் கொண்டவள்தானே!
அவள் நினைத்தால்...
வரவை வைத்து நிறைவைக் கண்டு
கோவிலாக்கலாம் குடும்பத்தை.
போதுமென்ற மனமே பொன்னான வாழ்வு.
இருப்பதை வைத்து
மனம் நிறைத்து வாழ
வளமான நிறைவு...
நெஞ்சுக்கு நின்மதி!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, May 26, 2008

அகதியான காதல்...

எக்கணமும்...
நீ தந்த நினைவின் எச்சங்கள்
நெஞ்சோடு நிழலாடியபடி.
நெருப்பைச் சுமக்கும் வேதனை.
நடந்தே திரிகிற போதும்
பறக்கின்ற உணர்வு.
கடிவாளம் என் கைக்குள்
ஆனால் அகப்படாத மனக் குதிரை.

தேடிய பொழுதுகள் தீர்ந்து போக
உன்னைக் காணாமலேயே
என் காலம் கழிகிறது.
காதலுக்கும் எமக்கும்
காலாகாலத்துத் தொடர்பு போலும்.
உறவின் தொடர்புகள்
ஒருவரோடு ஒருவர்
அற்ற நிலையிலும்
தொடர்ந்த அன்பில் நாம் இருவரும்.

எங்காவது...எப்போதாவது
எதிர்பாராமல் ஏதாவது
உன் நினைவோடு
தட்டுப் படும் போதெல்லாம்...
நின்று நிதானமாய்
ஒரு கணம் உன்னைக்
கண்டு களிப்படைகிறேன்.
கனவில் காணுகின்ற
நேரத்தில் கூட
கதைக்க முடிவதில்லை உன்னோடு.
காதலின் புனிதம் இதுதானோ!

மணிக்கூட்டின் சப்தத்தைத் தவிர
ஒரே நிசப்த இரவு.
கும்மிருட்டைக்
கலைக்க ஒரு மெழுகுதிரி.
மூடிய நான்கு சுவர்களுக்குள்
நான் மட்டும் தனியாக.
அகதி வாழ்வின்
ஒரு பகுதி எமக்கு இப்படி.

என் நினைவில் நீ.
உன் ஞாபகக் கொப்புளங்கள்
கொதிக்கிறது.
தாய் மண்ணை விட்டுக்
காத தூரம் கடந்து வரும் போது
உன் நினைவுகளை மட்டுமே சுமந்தபடி.
எதையுமே எடுத்து வர முடியவில்லை.
நீ வாங்கித் தந்த எதையுமே.
இதயம் கீறி
அதற்குள் உன் பெயரையும்
என் பெயரையும் இணைத்து
எழுதிய வெள்ளைத் தாளைத் தவிர.
உன்னை அதற்குள் கண்டுகொள்கிறேன்.

தொடமுடியா தொலை தூரம்
விட்டு வந்த உறவுகள் நிழல்களாய்.
நினைவுகளில் மட்டுமே
மிக அருகாய் நீ.

என் தேசத்திற்கும்
இந்த அந்நிய தேசத்திற்கும்
வேற்றுமை வித்தியாசங்கள்
பெரிதாய் இல்லை.
மனிதர்களின் நிறம்
மாறியிருகிறதே தவிர
மனங்கள் அப்படியேதான்.
எத்தனை இருந்தும்
நீ இல்லாதது
எதுவுமே அற்றுப்
பரந்த தூரமெங்கும் வெறுமையாய்.

சிந்திக்கின்ற பொழுதுகளில்
நாம் நடந்த
சின்னக் குச்சொழுங்கைகள்...
மகிழ மர நிழல்...
முச்சந்தி வாசிகசாலை...
அம்மன்கோவில் குளத்தடி...
இன்னும்...இன்னும்.
அத்தனையும்
கண்ணுக்குள் நிழலாடும்போது
என் நினைவோடு நீயும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, May 24, 2008

யார் அங்கே....

Thursday, May 22, 2008

வாழ்வின் விளிம்பில்...

தனியாக...
நின்று சாதித்தது
எதுவுமேயில்லை
தொலைந்துதான் போயிருக்கிறேன்.
தொலைத்ததில்...இழந்ததில்
என் குழந்தைகளின்
வாழ்வும் கூட.
பதில் இல்லாத
என் வாழ்வு போல
கேள்விக்குறியோடு?
யாரைக் குறை சொல்ல!
இறைவனையா...
என்னையா...இல்லை....
கால அத்தியாயத்துக்குள்
புதைந்து கொண்டேயிருக்கிறேன்.
அநேகமாக
இனி என்னை
காணப்போவதில்லை
நீ...
கனவுகள் தாண்டிய
விலங்கிற்குள்
நீயே மாட்டிக்கொண்டு விட்டாய்.
தாயே உனக்காய்...
உனக்குள்
உறங்கும் உயிருக்காய்...
இனி வாழ்ந்து கொள்.
நான் உனக்குத்
தேவையில்லை
இனி ஒரு போதும்!!!

22.10.2004
ஹேமா(சுவிஸ்)

Wednesday, May 21, 2008

ஏக்கம்...


அடுக்களையும் பிள்ளையுமாக
அல்லல் படுபவளை
களைப்பாயிருக்கிறதா
என்ற ஓர் அனுசரனைப் பார்வை...

தொட்டோ தடவியோ
தைலம் போடாவிட்டாலும்
தாயன்போடு சின்னப் பார்வை...

வீட்டுக்குள் அடைந்தே கிடப்பவளிடம்
விடுமுறை நாட்களிலாவது
அருகமர்ந்து உணவருந்தி
"நீயும் சாப்பிட்டாயா"
அன்போடு ஒரு விசாரிப்பு...

வெளியே போகும்போது
கை கோர்க்காவிட்டாலும்
தூர நடக்காமல் மிக அருகோடு...

உணவும்,உடுப்பும்,பணமும்
பகட்டும்...பெரிதல்ல.
பாசமும்,பரிவும் மட்டுமே
தேடும்
பெண் மனம்
கணவனிடம்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 20, 2008

உயிரோடு...

Monday, May 19, 2008

வேண்டும் ஒரு விடியல்...


இருள் இருள் இருள்....
கருக்கு இருள்.
இந்த ஒரு
இரவு மட்டும்தானே,
இருக்கும்
கொஞ்ச இருள்
மட்டும் கழியட்டும்.
வரும் ஒரு
சுதந்திர விடியல்.

சூரியன்
வரத்தான் நாழியாகிறது.
பிரச்சனையில்லை
பிழைத்துக்கொள்வோம்.
சுகமான...
சுதந்திரக் காற்றுக் கொண்டு
சுந்தரச் சூரியன் வருவான்.
அச்சமற்று மூச்சு விடலாம்.
வரட்டும் ஒரு விடியல்.

இருள்தானே...
கறையானும்
காட்டு நரியும்
உணவு தேடிச்
சேமித்துக்கொள்ளட்டும்.
சுட்டெரிக்கச்
சூரியன் வந்துவிட்டால்.....
வரட்டும் ஒரு விடியல்.

இருட்டு அரங்கில்
குருட்டு மக்களோடு...
தமக்கென்ற
ஒரு கூட்டத்தோடு...
தொடரட்டும்
அரக்க நாடகம்.
பார்த்தும்...கேட்டும்
அசந்த நிலையில்
விடி வெள்ளி
ஓடுகின்ற வெளிச்சத்தில்
வெடித்துச் சிதறும்
நாடக அரங்கம்.
வரட்டும் ஒரு விடியல்.

இருளுக்குள் ஓர் உலகம்
நச்சு நாகம் நகர்ந்து வர,
வஞ்சகமும் சூதும்
சுற்றிப் படையெடுக்க,
தீப்பந்தம் ஒன்று
துரத்திக் கலைக்க,
அலறியபடி
சட்டென்று
கலைகின்ற கனவு.
இந்த இரவு
மட்டும்தானே...
ஓடிக் கழியட்டும்.
வரட்டும் ஒரு விடியல்.

மாறி மாறி
முடிவே இல்லாமல்...
எல்லையே தெரியாமல்...
ஏதோ ஒன்று
இருள் விலக்க
வருவதும்...
பின்பு மறைவதுமாய்...
மனதுக்குள் மட்டும்
சிறு துளி
நம்பிக்கை
வெளிச்சத்தோடு
மரணத்தின் வாசலில்...
இந்த ஒரு இரவு
மட்டும்தானே
கொடிய இரவு
கழியுமட்டும்
ஏக்கக் காத்திருப்பு...
வரட்டும் ஒரு விடியல்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, May 16, 2008

நட்பின் வாழ்த்து...

Glitter Graphics
முகம் காணா என் இனிய
இளைய நண்பனே.....
வெளியில் மழையில்லை
மனதில் அடை மழை.
எல்லாம் நிறைந்திருந்தும்
முற்றிலும் சூன்யமாய்.
நட்பை.....
வெறும் நட்பு
என்பது தவறு.
உண்மை நட்பை
உலகம் உணர்ந்தால்
யுத்தம் இல்லா பூமி
நித்தம் சிரிக்கும்.
வானவில்லாய்
வண்ணம் மாறும்
வாழ்க்கையில்...
எது கண்டு
கை கோர்த்தாய்.
நட்போடு கை கோர்த்து
கூடப்பிறந்தவனாய்
உறவு தருகிறாயே!
முற் பிறப்பில்...
பகிர்ந்து கொண்டாயோ
கருவறையை...
கோர்த்த மலர்
மாலையில்
அருகிருந்தாயோ
மலராய்....நீ!
இப்போதெல்லாம்
பாரதி என்றால்
எட்டயபுரத்து பாரதி
ஞாபகத்தில் இல்லை.
என் நண்பன் பாரதி
நீ மட்டுமே.
உப்பின்றி உணவில்லை...
நட்பின்றி வாழ்வில்லை...
நண்பனே...
வாழ்வோடு கூடி வா.
நானும் கூட வர
வரம் ஒன்று கேட்போம்
இருவருமாய்
இறைவனிடம்.
என்றும் சிரித்திரு.
என் இனிய
நட்பு வாழ்த்துக்கள்!!!

நட்போடு...உன் அக்கா ஹேமா(சுவிஸ்)05.08.2007

Thursday, May 15, 2008

பேசி(யில்)ய முதல் நாள்...

Monday, May 12, 2008

தந்தையின் சிறைக்குள்...

கண்கள் கூசி...
இப்போ பிறந்த குழந்தை போல
இருளுக்குள் உலகம்.
ஏதோ மூன்று உருவங்கள் தவிர
இங்கு ஏதுமில்லை.
வேறு எதுவும் கண்டதுமில்லை.
உணவும் நீரும் கொண்டு வரும்
ஒரு நெடிந்த உருவம் எப்போதாவது.
வெளிச்ச மண்டலத்துள் புகுந்ததாலே
மனக் குழப்பம்.

அதிசயங்கள்...
அழகா...இது அசிங்கமா
உணர்வைப் புரிய முடியாமலாய்
இவ்வளவு காலமும்.
வேற்று உலகமோ...
இப்படியும் ஓர் உலகம்
இருந்ததா...இருக்கிறதா!
சின்னதாய்...பெரிதாய்
உயரமாய்...கறுப்பாய்...வெள்ளையாய்
விதவிதமாய் என்னைப் போலவே
ஊர்ந்தபடி பல உருவங்கள்.
வறண்ட தோலும்,பறட்டைத் தலையும்
மஞ்சள் பற்களுமாய்.
நாம் மட்டும் வித்தியாசமாய்.

மொழியோ இன்னும் குழப்பமாய்.
தேவைப்பட்டபோது
அம்மா சொல்லித் தந்த மொழி தவிர
புரிய வழி இல்லை.
ஓஓஓஓ...ஜடம்போல.
அன்னையவள் அழும் மொழி...
மற்றைய என்னைப் போன்ற
இரு உருவங்களின் குசுகுசு மொழி...
இங்கு புதிதாய் ஓலங்கள்
தென்றலாய்...சங்கீதங்களாய்
மனதையும் இலேசாக்கியபடி.
முன்னமே சில சத்தங்கள் அறிந்திருப்பாளோ அம்மா.
அரற்றுகிறாளே இங்கு யாரோடோ.

சிந்திக்க முடியாத சுவர்களுக்குள்
சுவர்க்கம் கண்டோமே.
இயற்கை அன்னை உள் வந்ததும் இல்லை.
என் அன்னை வெளி உலகம் போனதும் இல்லை.
பன்னிரண்டு ஆண்டுகள்
மின்சார விளக்கின் ஒளியோடே.
தண்ணீருக்குள்
மீன் காணும் இன்பம் கூட
இழந்திருக்கிறேனே.

தாயின் கருச் சிறை கூட பத்தே மாதம் தான்.
தந்தையின் சிறை அனுபவித்த கொடுமை!!
பலியானோம் நால்வரும்
இருபத்து நாலு வருடங்கள்.
சாகின்ற வயதினிலே
தூக்காம் தண்டணையாம்.
யாரினதோ இறப்பு தந்துவிடுமா
இழந்து விட்ட சந்தோஷங்களை?
பரமனும்...
பாவமும் புண்ணியமும்
புத்தகப் படிப்பில் மட்டும் தான்.
பட்டுவிட்ட வேதனைகளுக்கும்
கொடுமைகளுக்கும்
பதில்தான் என்ன ?!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 11, 2008

அம்மாவுக்காக...

உயிர்களுக்கே உரித்தான
உலகின் பொதுமொழி அம்மா..
உயிரின் இசை மொழி அம்மா...
அமைதியும் அனபும் அறிவும் அடக்கமும்
உருவத்துள் ஓர் அழகாய்...
படைத்துவிட்ட உயிர்களுக்கு ஆறுதல் தர...
தன் ஒருவனால் முடியாதென்றே
தாயென்ற தெய்வமதை தரணியிலே தந்தானோ!
ஆறுதலாய் அணைக்காத...
பதிலே சொல்லாத...
கல்லான தெய்வங்களை விட
கண் காணும் தேவதையைத்
தந்தானோ தேவனவன்!

பருவத்தின் வயதினிலே வருகின்ற கலவரத்தை
தனக்குள்ளே தான் காவி-என்னை
பிசக்காமல் வழி நடத்தும் வழிகாட்டியும் அவள்.
தன்னைக் காப்பகத்தில் விட்டபோதும்
ஆன்மாவுக்குள் காவலாய் அன்னையவள்.
கற்றுக் கொடுக்கும் கலாசாலை...
காவல் தெய்வமும் அவள்.
உணர்கிறேன் அன்புத் தாயே
உன் வயதைத் தொட்ட போதே.

என் குழந்தை தமிழ் படிக்கும் உன் அறிவுச் சோலையிலே.
அம்மா...பாசப்புத்தம் நீ.
நீண்ட பாதையில் நிழல் தரும் மரம் நீ.
உறவுகள் பல இருந்தும்
உறவாடிப் பார்த்ததிலே சுய நலமில்லாச் சொந்தமாய் நீ.
என் நலத்தின் தவத் தாயாய் நீ.
நானே நீயா...நீயே நானா
என் தாயே.

தூபமும் படையலும் வேண்டாம்
இறந்த பின்னே உனக்கெதற்கு.
கண் முன்னே வாழ்கையிலே வாழ்த்தி விடு
உன் குழந்தை தலை தடவி.
பாசம் பேசும் உண்மையாய் உனக்குள்.
உன்னைத் தாண்டிய பாசமாய்
தாய் மொழியிலும்...தாய் நாட்டிலும்
அம்மா!!!

(அன்னையர் தினம்)

ஹேமா(சுவிஸ்)

Friday, May 09, 2008

20 நிமிட இலவசச் செய்தித் தாள்..!

Thursday, May 08, 2008

நம்பிக்கைகள்...

மனைவியில் நம்பிக்கை...
அவள் சமையலைச் சாப்பிடும் கணவன்.
கணவனின் அன்பில் நம்பிக்கை..
பழைய காதலை மறைக்காமல் சொல்லும் மனைவி.
அண்ணாவில் நம்பிக்கை...
தள்ளு வண்டிலில் தைரியமாய் தங்கையின் சவாரி.
காதலன் காதலில் நம்பிக்கை...
தன்னையே கொடுக்கும் காதலி.
வானத்தில் நம்பிக்கை...
பயிரிடும் விவசாயி.
அம்மாவில் நம்பிக்கை...
குழந்தை கருவில்.
நட்பில் நம்பிக்கை...
வீட்டில் தங்க வைக்கும் நண்பன்.
இறைவனில் நம்பிக்கை...
பக்தியோடு வைக்கும் நேர்த்தி.
மகனில் நம்பிக்கை...
கடன் வாங்கி வெளி நாடு அனுப்பும் அப்பா.
மகளில் நம்பிக்கை...
படிக்க என்று விடுதியில் தங்க அனுமதி தரும் அம்மா.
மின்சார இயந்திரங்களில் நம்பிக்கை...
தொழிற்சாலைகளின் இயக்கம்.
மக்களில் நம்பிக்கை...
கடன் கொடுக்கும் வங்கிகள்.
விதியில் நம்பிக்கை...
நாளைய எதிர்காலத் திட்டங்கள்.
தொழிலாளியில் நம்பிக்கை...
அலுவலக சாவி அவன் கையில்.
ஓட்டுனரில் நம்பிக்கை...
தொலை தூரப் பயணங்கள்.
எவரது நம்பிக்கை...
எவர் கையில் !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, May 05, 2008

திசையறியாப் புதுவாழ்வு...!

எமது என்ற...
வாழ்வைத் தொலைத்துவிட்டு
வேற்று நாடுகளில்
தலை எது... வால் எது
புரியாத நம் வாழ்வு.
பேசவும் தவழவும்
கத்துக்குட்டிக் குழந்தைகளாய்.

இருந்தும் ...
இங்கோ நடக்கின்ற சங்கதிகள்.
அதில் ஒன்று...
"எங்களுக்குப் புத்தகம் தந்திட்டான்கள்"
இப்போ நாங்கள் சிட்டிசன்காரர்.
சிறீலங்கன் இல்லை.
கலர் மட்டும்தான் கொஞ்சம் கறுப்பு...
ம்ம்ம்...பரவாயில்லை.

அகதி வாழ்வு....அழிந்து போய்
அந்த நாட்டு அந்தஸ்த்து வாழ்வாம்.
தாய் நாட்டை
விட்டதற்காய்...விற்றதற்காய்
கை குலுக்கலும் வாழ்த்துக்களும்.

அடுத்த நாடு செல்வதற்காய்
விசா கேட்டு
தூதரகம் அலைந்து திரியத் தேவையில்லை.
எந்த நேரமும் எங்கும் போகலாமே...
அப்பப்பா...
என்ன குதூகலிப்பு.
முருகன் பாதம் வைத்து
மரியாதப் பூஜை வேறு கடவுச்சீட்டுக்கு.
சில தினங்கள் தூக்கம் கூட பக்கம் இல்லையாம்.

அதிசயமாய் இருக்கு.
அந்நிய மண்ணில்
எம் எதிர்காலச் சந்ததி
தாய் மண் மறந்து...
தாய் மொழி மறந்து...
இரண்டும் கெட்டான் நிலையில்
தம் வழி எதுவென்று தெரியாமல்.

பாரம்பரியமும்...கலாச்சாரமும்...பண்பாடும்
ஒருபக்கம் இருந்தாலும்
நல் ஒழுக்கமாவது????
தாய் மொழி தெரியாத்
தன் குழந்தை தலை தடவி
"என் பிள்ளைக்குத் தமிழ் தெரியாது"
தாயவளுக்கு அத்தனை பூரிப்பு முகத்தில்!

தாத்தாவும் பாட்டியும்
எட்டாத்தூரத்தில்
பேரன் குரல் கேட்க ஆவலாய்.
பேரனோ!!!!
தாய் மொழியற்று
வலதில்லாதவனாய்.

அது ஒரு பக்கமிருக்க
"சிட்டிசன் தந்திட்டான்கள் எங்களுக்கு"
அப்பாவும் அம்மாவும்
சுவிஸ் சிட்டிசன் மட்டும்தான்.
பெயரும் பிள்ளைகளுக்கு
சுவிஸா... சுவிஸன்
மிச்சமெல்லாம்.....?

அகதிப் பதிவுதான் இருபதுவருடம்.
அந்த நாட்டு மொழி அச்சு பிச்சுதான்.
வேலையோ
கழுவலும்.... துடையலும்தான்.
இயல்புக் குணங்களாய்...
கொடுத்த கடன்
கேட்டால்தான் கிடைக்கும்.
சிலசமயம்... இல்லாமலே போகும்.
10 நிமிடம் பிந்தித்தான்
வேலைக்கோ, வைத்தியசாலைக்கோ,
அன்றாட அலுவல்களுக்கு.

கைத்தொலைபேசியுடன்
தெருவிலும் பேரூந்திலும் கத்திப் பேசியபடி.
குழந்தை குட்டிகளுடன்
தெருவோ,கடையோ,புகையிரதமோ
குப்பையும் போட்டு
குய்யோ முறையோ சத்தமும் போட்டபடி.
உணவோ...
எம் பாரம்பரிய
தட்டு நிறையச் சோறும் கறியும்தான்.
அணிகின்ற ஆடைகளே அதற்குச் சாட்சி.

அயல் நாட்டான் நற்செயல் எதுவும்
அணுவளவு கூட இல்லை.
"தந்திட்டான்கள் சிட்டிசன் எங்களுக்கு"
தலை முட்டி அழுதாலும்
தீராத வேதனை.

நம் மொழியும்...நாமும்
அழிந்து கொண்டிருக்கிறோம்
என்று அறியாமல்
நம்மவர் காட்டும் கூத்து.
இலக்கணத்தின் அர்த்தமே தெரியவில்லை
இதில் இலக்கியம் எப்படி...?

என்னதான் உயர உயரப் பறந்து பார்த்தாலும்
எப்போதும்
நாம்... நாம்தான்.
எத்தனை தலைமுறை தாண்டினாலும்
அகதித் தமிழன்...
என்ற பதிவையும்
தமிழன்...
என்ற அடையாளத்தையும்
யாரால் அழிக்க முடியும்!!!!

29.09.2007
ஹேமா(சுவிஸ்)

Saturday, May 03, 2008

என்னவன்...

love
சுமைகள் கனக்க
சோர்ந்தே போகிறேன்.
சுமைதாங்கியாய்
என் பாரத்தை
சிறிது தாங்கிக் கொள்கிறாய்.
கொஞ்சம் ஆறிக்கொள்கிறேன்.
இலேசாகிறது மனமும் உடலும்.
நான் தந்த சுமைகளை
திருப்பி நீ...
தருவதாகவே இல்லை.
பங்கு போட்டுக் கொள்கிறாய்.
நட்பென்ற உறவின் அன்போடு
என் சோகங்களைச்
சுமக்கத் துணிந்த
நீ...
வாழ்வையும் பங்கு
போட்டுக் கொண்டாயே!
இனிய காதலனாக...
பாரங்கள் இனி
பாரமே இல்லை எனக்கு.
பரிமாறிக்கொள்ள
அன்புக் கணவனாக
நீ என் அருகில்!!!

ஹேமா(சுவிஸ்)