*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, August 11, 2011

கூழாங்கல்...

ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப
உருண்டுகொண்டேயிருக்கிறேன்.
குதித்தும் தாவியும்
நொருங்கியும் கரைந்துமாய்
சிக்கிக்கொண்டாலும்
தடையறுத்த ஆறுதல்
எவருக்குமில்லை.

உருண்டுகொண்டேயிருப்பதால்
அறுபட்ட சில நிகழ்வுகள்
மாறி மாறி...
இருள் ஒளி கடக்கும் முகடுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள்.

ஓ.....
பாறையில் வேர் விட்ட
சிறுவிதை.
குட்டி மீன்கள்
பெரிய மீன்களாய்.
படர்ந்த பாசி
அடியில் ஊடுருவும் விஞ்ஞானம்.

என்றாலும் தட்டித் தடக்கி
உருண்டுகொண்டே....யிருக்கிறேன்
ஒற்றைக்கல்லாய்!!!

ஹேமா(சுவிஸ்)


விடுமுறை விடுமுறை கோடை...பெரிய விடுமுறை.சந்திப்போம் நண்பர்களே !

Tuesday, August 02, 2011

இருள் வழி...

எங்கோ...
போயிருக்கிறது அது
கண்ணைக் கட்டி
இருளுக்குள் விட்டுவிட்டு !

மலையும் ஆறும் கலக்கும்
மிருகங்கள் புணரும்
காடுபோலிருக்கிறது
கண்ணாமூச்சி விளையாடி
கை விட்டுப் போனது யார் இங்கே !

பிந்திய இரவின் முனகலும்
பயந்து ஒதுங்கும் மானை
மயக்க முயலும் துணையுமாய்
விரகத்தின் வேதனையை
நீட்சியாக்கிவிட்டபடி...

மூடித் திறக்கும் கதவுவழி
ஏதேதோ உருவகங்கள்
கற்பனைக் கழிவுகள்...

ஓடிக் களைத்த வீராங்கனையாய்
கண்ணாடி பார்த்து
களிப்படைந்து
உடை மாற்றி
மீண்டும் வந்து
போர்வைக்குள் நுழைகையில்
ஏதோ ஒன்று
குறுக வைக்கிறது என்னையே!!!

ஹேமா(சுவிஸ்)