*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, December 28, 2010

நான் கருப்பா...

கருப்பில்லை...கனபேர்
யார் சொன்னது
உண்மை சொன்னா
நானும் வெள்ளையில்லை.

வெள்ளைக்காரன் கருப்பாயில்லை
அவிஞ்ச கண்ணை பாக்க சகிக்கேல்ல‌
ஏனோ எனக்கு அவனை பிடிக்கேல்ல
எங்கட‌ குணங்கள்தான்
அவனுக்குப் பிடிக்கேல்ல.

காக்கையில்லை இங்க
குயிலும் சுத்தக் கருப்பில்ல
கண்ணன் கருப்பென்றால்
நல்லவேளை கண்ணனுக்கு
கருப்பா ஒரு குழந்தையில்ல.

கருப்பைக்குள் கருப்பென்றால்
அம்மா அங்க லைட் போடேல்ல.
உப்பில்லை சப்பில்லை
கவிதையிலயும் கருத்தில்ல.
இருக்கென்று சொன்னாலும்
நம்பப்போறதுமில்ல.

இவ்ளோ கருப்பான்னு கேட்டதால
வஞ்சகம் பண்ணின கடவுளில வெறுப்பில்ல
கருப்பா ஏன் பிறந்தேனோன்னு
கோவமில்ல மனசில அமைதியில்ல
சமாதானமும் தேவையில்ல.

அம்மாவுக்கு விசரில்லை
அவவிலயும் கோவமுமில்ல
கருப்பு அப்பாவைக் காதலிச்சதால
என்னையும் கருப்பில்லையாம்.

மைக்கல் ஜக்சன்போல
விருப்பமுமில்லை கலரை மாத்த
அவஸ்தையில்லை எனக்கு இப்போ
என் பிள்ளை கருப்பில்லை
ம்ம்ம்.......
என் கருப்பியும்தான்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, December 24, 2010

தீர்க்கப்படாத தீர்மானங்கள்...

கடந்துவிட்ட பேச்சு வார்த்தைகள்
பிச்சை போட்ட கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளாததால்
இல்லையென மறுக்கப்பட்டதாம் ஈழம்
சொல்கிறது
இலங்கை அரசாங்கம்.

தனித்தும் இல்லாமல்
சேர்த்தும் கொள்ளாமல்
தவிப்போடு தொடர்கிறது வாழ்க்கை.

இணைவதும்...ஏற்பதுமான
இயல் வாழ்வு இனி எப்போ ?

இல்லை என்று சொல்லாவிட்டாலும்
யார் நீ.....
என்பதான தள்ளி வைப்பு.

பேசித் தீர்க்காத வார்தைகளாலேயே
இடைநிறுத்தப்பட்டதாய் உணர்கிறேன்.
எனக்கான தீர்மானங்கள்
அந்த வார்தைகளுக்குள்ளும்
அடங்கியிருக்கலாம்.

நீ....
மௌனித்திருந்தாலும்
நாடு கடந்த
போராட்டம்போலத் தொடரும்
என்....
பேசித் தீர்க்காத வார்த்தைகள்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, December 17, 2010

சொல்லித் தந்தால் என்ன...

அப்பா அம்மா விளையாட்டு இண்ணைக்கு !

நான் அம்மா
சமைப்பதாய் சைகை !

அவன் அப்பாவாம்
கணணியும் கையுமாய் !

"என்னப்பா...எனக்கொரு சந்தேகம்."

"ம்...சொல்லு...கேளு எப்பவும்போல !"

"எப்பிடிப்...பிறந்தே...நீ ?!"

"அப்பாவும் அம்மாவும் சேர்ந்து பெத்தாங்க."
தெரிந்த அறிந்த தீர்மானமாய் !

வெளி வந்த விழி அதிசயிக்க...
"எப்பிடி...அப்பிடி !"

"ம்ம்ம்...சரி...சரி
நீ...எப்பிடிப்...பிறந்தே ?!"

"ஏஞ்சல் ஒன்று என்னை தூக்கிப்போய்
பக்குவமா பட்டில சுத்தி
பாடுற குயில் வாயில மாட்ட
அதுவும்...
பக்கத்தில உள்ள பூக்காட்டில
"பொத்"ன்னு போட்டும்விட
அழுதேனாம் நானும் கத்திக் கத்தி.
எடுத்திட்டு வந்தாளாம் அம்மா அப்போ !"

பலவாய் திரித்த கதைகள்
பருதியாய் உருள...
எக்கச்சக்கமாய் சிக்கிய
விழுங்கும் இடியப்பமாய்...

"ஓ...
இத்தனை கஸ்டமாய்
பிறந்தியா நீ!!!"


ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 14, 2010

தேவை ஒரு மரணம்...

மரணம்....
அறிதல் எப்படி
அதன் வலி
கடைசி நிமிடத் தவிப்பு !

இறந்தபடிதானே வாழ்வு இப்போ.
இதைவிட வலியாய்
இல்லை...
இதைவிட சுகமாய் அது !

எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.
உன்னால் மிஞ்சியதை
கொன்றுவிட
நீயேதான் வசதி
கொன்றுவிடு
ஒரு மரணம் பார்க்க !

மரப்பாச்சிக் கட்டையை எரிக்க
மலங்க மலங்க மறுகுகிறாய்.
ஓ...பாவம் பார்க்கிறாயோ
பாவம் என்கிற
வார்த்தையையே வெறுக்கிறேன் நான்!

வாழும் ஆசையில் இழவு விழுத்திய நீ
எதற்காக யோசிக்கிறாய்
நடிக்காதே சொல்வதைச் செய் !

ம்ம்ம்...நடத்து
ஏதாவது செய்
மரணம் தா !

எரித்தலே பிடிக்கும்
என்றாலும்...
புதைப்பதும் எரிப்பதும்
உன் வசதி.
புழு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா !

எதற்கும்...
இந்தப் பதிவைப்
பிரதி செய்து கொள்கிறேன்.
எனக்கும் உனக்கும்
ஒரு சாட்சியாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 06, 2010

தேற்ற ஒரு விதி...

முட்டுதலும் மோதலும்
வாழ்வில் இயல்பானாலும்
முட்டிய மதில்களே வாழ்வாய்
பகிர்ந்து கொடுக்க முடியாத
பங்கீடுகளாகி.

காக்கை கரைதலும்
பல்லி சொல்லுதலும்
பூனையின் குறுக்கு நடையும்
சமாதான வார்த்தைகளில்
தங்கிவிடும் விதிகளாய்.

எவருமில்லா தீவுகளில்
விதித்த விதிகள்
சில உயிரினங்களுக்கு
கீறிக் கிழித்த
பொத்தலான பைகள் போல
ஒழுகியபடி.

குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!

ஹேமா(சுவிஸ்)

உயிரோசையில் முதன் முதலாக வந்த கவிதை !

Friday, December 03, 2010

உன் பேச்சிலே...

காதல்
கடவுள்
கருணை
மலர்கள்
மலைகள்
மழை
குழந்தை
வலி
வேதனை
விரகம்
ஓவியம்
கவிதை
இசை
தேவதைகள்
இரவு
பிறைநிலவு
மறையும் சூரியன்
ஆனந்தம்
அழுகை
வீரம்
ஏழ்மை
இரைச்சல்
சிரிப்பு
அலையோசை
என அத்தனையும் காண்கிறேன்.

உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து
இன்னும்...
என் கவிதைகளுக்குள்
உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!

ஹேமா(சுவிஸ்)