நெருங்கி வா என்கிறாய்.
வந்தாலோ...
நெருஞ்சி முள் ஆகிறாய்.
தூர விலகையில்
தூது விடுகிறாய்.
சேரும் நிமிடத்தில்
செருக்கும் காட்டுகிறாய்.
காணாத உன்னைக்
கனவிலே வரைகிறாய்.
காணும் வரமொன்றைக்
கண்ணாமூச்சி ஆக்குகிறாய்.
இரண்டாய்...
மூன்றாய்...
எதிர்காலம் சிறக்குமென்கிறாய்.
வாழ்வின் கனவை வளர்த்து
நீரும் பாய்ச்சுகிறாய்.
பார்க்கத் தவிக்கையில்
போர்வைக்குள் பதுங்குகிறாய்.
அயர்ந்து நான் தூங்குகையில்
கனகதை பேசுகிறாய்.
குழந்தையாய்
அள்ள நினைக்கிறேன்.
குமரனாய்
மெல்ல அணைக்கிறாய்.
தாளாத வேளை
தலை தடவி விடுகிறாய்.
ஏமாந்த நேரம் பார்த்து
மெல்ல மடி சேர்கிறாய்.
அன்பே...
எனை மயக்கும்
குன்னக்குடியின் தோடியோ...
கோடை காலத் துவானமோ...
நீ !!!!
ஹேமா(சுவிஸ்)2003
Tweet | ||||