குண்டுச் சட்டிக்குள்
குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை.
அலுவலக அறைக்குள்
பூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு
அன்னிய மொழியில் அளவாய் அறுத்து
பொய்யாய்ச் சிரித்து வரவேற்று
அந்தி சாய
நெரிசல் குறைந்த
பேரூந்துக்காய் காத்திருந்து ஏறி
வீட்டு வாசல் வரும்வரை
சொல்லிவிட்ட சாமான்கள்
ஞாபகத்திற்கு வரவேயில்லை.
ஜோனிவாக்கர்
கோலா கலந்து குடிக்கிற வரை
முன்னம் இருந்த
கறுப்பன் வெள்ளையன்
சாதி பேதம்
போன இடம் புரியவில்லை.
அறியா நண்பனிடம்
தீப்பெட்டி உரசப் போய்
தொத்திக் கொண்ட உறவாய்
கல்லறைத் தொழிலாளி
பேதம் தெரியவில்லை.
வாழ்வு என்னமோ
என்னை சுற்றி என்கிற மாதிரி.
வாழ்வின் வட்டம் கடந்து
மாயை உலகம்
மயக்க வாழ்வு பற்றிப் பேசும் வரை
சுமை போன இடம் புரியவில்லை.
எல்லாம் முடித்து வீடு வர
முதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||