இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு.
ஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து
போனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம்.
ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே.
என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடாவெண்டா...!
சும்மாயிருங்கோப்பா.அது நல்லசாதிப் பேடுபோல இருக்கு. வளர்ந்து முட்டை போட்டா...பக்கது வீட்ல நல்ல வெள்ளடியன் சேவல்வேற நிக்குது ...பிறகு அடை வச்சுக் குஞ்சு பொரிக்குமெண்டு நான் கற்பனை பண்றன்.
அடி விசரி நீயும் உன்ர கோழிக்கனவும்....!
நீங்கள் பாருங்கோவன் ஒருநாளைக்கு எங்கட வீட்ல வெள்ளடிச் சாவல்ன்ர பமிலியே இருக்கும்.ஆசையா அடை வைக்க நான் ஒரு முட்டை கேக்கக்கூட உவள் சுமதி தரமாட்டன் எண்டவளெல்லே.
என்னவாலும் செய்து துலை. இங்க ஆராச்சும் படலை திறந்து வம்பு சண்டைக்கு வராம இருந்தாச் சரி.எப்பதான் நான் சொன்னதைக் கேட்டிருக்கிற நீ.நான் உன்னைக் கட்டி...உன்ர கொப்பருக்கு உதைக்கவேணும்.பாவம் வயசு போட்டுது எண்டுதான் பேசாமலிருக்கிறன்.இல்லாட்டி....
இல்லாட்டி இல்லாட்டி....கோழி பிடிக்கிறதுக்கும் அப்பருக்கும் ஏன் முடி போடுறியள் இப்ப...
அடி போடி கொப்பரை உதச்சு எதுக்கு.கள்ளக்கோழி அமத்திற
ஆக்கள்தானே நீங்கள்.....சரி சரி விடு !
இரண்டு மாசம் போனபிறகு....
ஏனப்பா ஆரெண்டாலும் தேடினவையே அந்தச் சிவப்பியை.சரியப்பா இண்டைக்குப் போய் அவள் சிவப்பியைக் கொண்டு வந்து விடுவமே.எதுக்கும் வேற கலர் பெயிண்ட் அடிச்சுக் கொண்டு வந்து விடுவமேப்பா.
நாசமாப் போக நீ.ஏன் அதைச் சாகடிக்கச் சொல்றியே.அதுக்குத்தானே அண்டைக்கே
சொன்னனான் சட்டிக்க வைப்பமெண்டு.
ஏனப்பா பெயிண்ட் அடிச்சா என்ன.எங்கட புதுக்கோழியெண்டு
சொல்லலாமெல்லோ.உங்களுக்கு அறிவே இல்லையப்பா....
ஓமடி....ஓமடி உனக்கு நிறைஞ்சு வழியுது அறிவு.சும்மா கலர் அடிச்சா மழையில கழுவுப்பட்டுப் போகாதே.சரி கழுப்படாத பெயிண்ட் எண்டா கோழியிண்ட றெக்கை (இறகு) ஒட்டிக்கொள்ளுமெல்லே.
ஓம் எனக்கு விசர்தான்.எனக்கு யோசிக்க வரேல்லத்தானப்பா.சரி பின்னப் போய் கொண்டு வாங்கோ.அதை இப்ப அடையாளம் கண்டு பிடிக்க மாட்டினம்.அது வளந்திட்டுதப்பா.
கோழி கொண்டு வந்துவிட்ட கொஞ்ச நாளான பிறகு பிறகு....
இஞ்சாருங்கோப்பா....எங்கட சிவப்பியக் கவனிச்சீங்களே.உந்த வெள்ளடியன் சிவப்பிட்ட இங்க வருமெண்டு பாத்தா சிவப்பிய மெல்ல மெல்ல தன்ர வீட்டையெல்லே கொண்டு போய்ச் சேர்க்குது.ஒருக்கா அவையளிட்ட சொல்லி இஞ்சால கலைச்சுக்கொண்டு வாங்கோப்பா.நல்ல வடிவா வந்திட்டுது.நான் போய்க்கலைக்க என்னை உச்சுக் காட்டுது.இப்பிடியே அங்க பழகிட்டுது எண்டா அங்கயெல்லே முட்டை போடப்போகுது.நானும்
அடை வைக்கவெண்டு கனவு கண்டுகொண்டிருக்கிறன்.
ஓமடியப்பா நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன்.இப்பெல்லாம் அங்கதான் மினக்கெடுது எடுபட்டுப் போகப்போகுது.எவ்வளவு கஸ்டப்பட்டு சாப்பாடும் போட்டு
வளத்துக்கொண்டு வாறம்.ஆனா ஒண்டு இந்தச் சாட்டில உன்ர கொம்மாவும் கொப்பரும் ஒரு கணக்கு ஒதுக்கிப் போட்டினம் இருக்கட்டும் அவையள்.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.என்னையும் கள்ளக்கோழி மாதிரியெல்லே அமுக்கிப் பிடிச்சனியள்.
ஓஓ...பெடிக்கும் கல்யாணம் செய்து குடுக்கப் போறம்.இப்பத்தான் உங்கட செருக்குக் கதை.வாயை மூடிக்கொண்டு கோழியைக்கலைச்சுக்கொண்டு வாருங்கோ முதல்ல.தம்பி அடுத்தமாசமளவில வாறனெண்டு சொன்னவனப்பா போன்ல.நான் சொல்ல மறந்திட்டன்.வந்தா இனி கொழும்புப் பக்கத்துக்கு விடாம இஞ்சனைக்க ஒரு வேலையப் பாத்துக்கொண்டு இருக்கச் சொல்லவேணும்.
எப்ப எடுத்தவன் தம்பி.எப்ப வாறானாம்.உது சரிவராது.இரு பிடிச்சுக்கொண்டு வாறன்.ஆக மிஞ்சிப்போச்சுதெண்டா தம்பி வந்து நிக்கேக்க கையைக் காலை முறிச்சுச் சட்டிக்கதான் வைக்கவேணும்.
இஞ்சப்பா கொதி வரப்பண்ணாதேங்கோ.சும்மா கறி...சட்டி எண்டுகொண்டிருக்காம போய்த் துரத்திக்கொண்டு வாங்கோ.
போய்க் கொஞ்ச நேரத்தில திரும்பி வாறார்....
இஞ்சாரப்பா....அங்க எங்க காணேல்ல சிவப்பியை.வெள்ளடி மட்டும்தான் நிக்குது.
வெங்காயமடி நீ...சொல்லச் சொல்லக் கேக்கேல்ல.அவளவை சட்டிக்க வச்சுப்போட்டாளவைபோல.இப்ப எனக்கும் இல்ல உனக்கும் இல்ல.....
என்னப்பா சொல்றியள்.நானும் 2-3 நாளாக் கவனிக்கேல்லத்தான் நானும்.கோதாரி போக அவளவை.வயிறு அவிஞ்சு கொள்ளையில போக.பாப்பம் இண்டைக்கு பொழுதுபட அடைய வருதோவெண்டு.
கோழி இரவாகியும் வரேல்ல மரத்தில அடைய. .....
அடுத்த நாள்...உந்தக் கோடாலி எங்கயப்பா.உந்த முருங்கை மரத்தை வெட்டிச் சரிக்கிறன்.பாவங்களெண்டுதான் விட்டு வச்சனான்.முழுக்கொப்பும் இஞ்சாலதான் சரிஞ்சு கிடக்கு.அவ்வளவு குப்பையும் நாங்கள் நித்தமும் கூட்டி அள்ளுறம்.அங்கனேக்க ஒண்டிரண்டு முருங்கக்காயைத் தானே நாங்கள் பிடுங்கிறம்.கீரையும் எப்பாலும் ஒடிச்சு எடுக்கிறம்.அவளவை எங்கட முழுக்கோழியையே திண்டு போட்டாளவையே.
சும்மா இரடி லூசி.....என்ன என்ன எங்கட கோழியோ....நல்ல பகிடிதான்.உந்த முருங்கை மரம் மாமரத்தால எங்களுக்கு எவ்வளவு லாபம்.இரவில கோழிகள் 2 அதிலதான் அடையுது.இரவோடஇரவா எவ்வளவு மாங்காயை பிடுங்கி வித்தனி.உதுகளை விட்டு
வச்சிருக்கிறபடியால்தான் எங்கட 2 தென்னைமரத்தை விட்டு வச்சிருக்கிறாள் சுமதி.தேங்காய் அவைன்ர கிணத்துக்கையெல்லே அடிக்கடி விழுது.எத்தனை தரம் சொல்லிப்போட்டு விட்டு வச்சிருக்கிறாள்.கோழியைக் காணேல்லயெண்ட கவலை எனக்கு மட்டும் இல்லையே.
பொறுங்கோ பொறுங்கோ நான் கண்டு பிடிக்கிறன் கள்ளரை.நாசம் விழ அவையளின்ர தலையில.நாளைக்கே போய் சாத்திரம் கேக்கிறன்.
மண்டைக்க சரக்கேதாலும் கிடக்கே உனக்கு.நல்லாப் போய்க் கேளு.எங்கப்பன் கொல்லைல இல்லயெண்டு சொல்ற மாதிரி கள்ளி நீதான் எண்டு சாத்திரி சொல்லும்.
ஏனெண்டா கோழி எங்கடையில்லை.சும்மா கிடவடி.
இல்லையப்பா உவையளை விடப்படாது.கள்ளர்கூட்டம்.பாருங்கோவன் சரியாக் கண்டுபிடிச்சணெண்டா செய்வினை செய்து கையை அழுகப்பண்ணாட்டி நான் ...நான் இல்லை.சொல்லிப்போட்டன்.
எடி விசரி...எப்பிடியடி கண்டு பிடிப்ப.சும்மா புலம்பாதை.எங்களிட்ட தானா வந்த கோழிதானே.விடு.அவளவை கோழி இறக்கையைக்கூட குப்பையோட குப்பையா எரிச்சுக் கொளுத்தியிருப்பாளவை.அவையளை நான் வேற வழியால சரிப்படுத்துறன்.
உந்தக் கோழியின்ர யோசனைல வந்த கடிதத்தையும் மறந்திட்டன்.இந்தாப்பா தம்பியின்ர எழுத்துப்போல கிடக்கு.ஏன் போன் எடுக்காம கடிதம் போட்டிருக்கிறான்.
அதப்பா நான் அண்டைக்க்குக் கதைக்கேக்க இப்ப கிட்டடியில எடுத்த
போட்டோவொண்டு அனுப்பச் சொல்லிக் கேட்டனான்.அதாத்தான் இருக்கும்.இஞ்ச தாங்கோ.
அன்புள்ள அம்மாவுக்கு சுகம் சுகம்தானே.இன்னும் இரண்டு கிழமைல வாறன் உங்க.அம்மா அப்பா கொழும்பில இருந்து என்ன வாங்கிக்கொண்டு வரவேணும் நான்.சொல்லுங்கோ.கொண்டு வாறன். நானும் சாமான்கள் வாங்கி வச்சிருக்கிறன்.
அப்பாவுக்கு ஒரு போனும்கூட.அம்மாவுக்கு கிரண்டரும் புது மொடல்ல.
அம்மா உங்களிட்ட நான் ஒண்டு சொல்லவேணும்.அம்மா நீங்கள் எனக்குக் கல்யாணம் பேசவெண்டு சொன்னியள்.நான் சொல்லப்போறதைக் கேட்டு கொஞ்சம் மனவருத்தம் உங்களுக்கு வரலாம்.அம்மா நான் இங்க ஒரு பிள்ளையக் காதலிக்கிறன் கொஞ்சக் காலமா.அவளைத்தான் கல்யாணம் செய்யவெண்டு சத்தியம் பண்ணிப்போட்டன்.நான் வரேக்க கூட்டிக்கொண்டு வாறன்.நல்ல வடிவாயிருப்பளம்மா.பழகிப் பாத்திங்களெண்டா உங்களுக்கும் பிடிக்கும் அவளை.திடீரெண்டு கூட்டிக்கொண்டு வந்தா உங்களுக்கு அதிர்ச்சியாப்போடும் எண்டுதான் இப்பவே சொல்றன்.ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ.
சரியாப்போச்சு....தலையில இடி விழுகிறமாதிரி உவன் என்ன எழுதிருக்கிறான் எண்டு பாருங்கோப்பா.வீடு வாசல் நகை நட்டெண்டு நான் நல்ல சீதனத்தோட இஞ்ச கல்யாணம் பேசிக்கோண்டு தரகர்மாருக்கும் அள்ளிக்குடுத்துக்கொண்டு திரியிறன்.
நாசமா போறன் எண்டு உந்தப் பெடி என்ன சொல்லுதெண்டு.
உதுக்குத்தான் சொன்னனான் கொழும்புப் பக்கம் அனுப்பாதயெண்டு.உனக்கு எல்லாத்திலயும் பேராசை.நல்ல சம்பளம் நல்ல வேலையெண்டு ஒற்றைக்காலில அவனோட ஒத்துப்பாடிக்கொண்டு அனுப்பின.அனுபவி.உதுக்கு நான் என்ன சொல்லக் கிடக்கு. எவளைக் கூட்டிக்கொண்டு வாறானோ.பாத்தியே நீ கள்ளக் கோழி அமத்திப் பிடிச்ச.எங்கட பெடியை யாரோ அமத்திப்போட்டாளவ.சரி கோழி துலைஞ்சமாதிரி திரும்பி எங்களிட்டயாவது வாறானே.அதுவே போதும் சந்தோஷம்.விடு.
அடுத்த பதினைஞ்சு நாள் போக...
தம்பி இண்டைகெல்லேப்பா வாறனெண்டவன்.சரி அவனுக்குப் பிடிச்சதாச் சமை.இப்ப என்ன அவன் அவளாரோ ஒருத்தியையும் கூட்டிக்கொண்டுவாறான்.கதைச்சுப் பாப்பம்.புலம்பாமச் சமை அவன் வந்திடுவான்.மெல்ல மெல்ல மாத்திப்போடலாம் அவனை.
சமையல் நடந்துகொண்டிக்கும்போதே ஒரு ஆட்டோ வந்து நிக்குது.....
இஞ்சப்பா தம்பி வந்திட்டான் போல.இந்த அடுப்பை பாத்துக்கொளுங்கோ.சீலையச் சுத்துக்கொண்டு ஓடி வாறன்.சொன்னதைவிட நேரத்துக்கு வந்திடான்போல.வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு வாங்கோ.உங்க பக்கமெல்லாம் விடுப்புப் பாக்கும் சனம்.
ஆட்டோவிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் மகன் தன் ஒன்றரை வயதுக் குழந்தையோடு வந்து இறங்குகிறான்.
வந்த மகனோடு பேசிச் சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கேக்க சிவப்பியும் 6 குஞ்சுகளோட வேலி நுழைஞ்சு வளவுக்குள்ள வந்துகொண்டிருக்குது.
ஏதோ என்னால.....இவ்வளவுதான் நகைச்சுவை முடியுது !
கதையின் சுருக்கம்....
புதுசாய் ஒரு கோழி எப்பவும் எங்கள் வீட்டில உலவுது.ஒரு கிழமைக்குப் பிறகு வீட்டுக்காரம்மா சொல்றா கோழியொன்று புதுசா எங்கள் கோழிகளோடு உலவுது.இடம் பெயர்ந்தவர்களின் கோழியாக இருக்கலாம்.இன்னும் 2-3 நாள் பார்த்துவிட்டு எங்கள் அம்மா வீட்டில் கொண்டு போய்விட்டு வருவோம். வளர்ந்தபிறகு கொண்டுவரலாம்.பக்கத்துவீட்ல நல்ல இனச் சேவல் ஒன்று நிற்குது.அதன் பரம்பரை எங்கள் வீட்லயும் வேணும்.பக்கத்துவீட்டுக்காரம்மா அவங்க வீட்ல ஒரு முட்டை அடை வைக்கக் கேட்டுக் குடுக்கல.அதனால இந்தக் கோழியோடு இணைந்தால்....கற்பனை.வீட்டுக்காரர் அடிச்சுச் சமைக்க நினைக்கிறார்.அவ இல்லைன்னு அவங்க அம்மா வீட்ல கொண்டு விட்டு 2 மாசம் கழிச்சு கொண்டு வந்து விடறா.
சேவல் இங்க வரும்ன்னு பாத்தா சிவப்பிதான் அங்க போய் எப்பவும் நிக்குது.திடீர்ன்னு ஒருநாள் சிவப்பியைக் காணோம்.ஊர்ல எங்க வீட்டு மரம் அடுத்தவீட்ல தலை நீட்டினா....சண்டைதானே.கோழி தொலஞ்சதில சின்னதா அதிலயும் குழப்பம்.முருங்கை மரம் மாமரம் இவங்கவீட்ல தலை நீட்டுது.இவங்க அதில களவாயும் தெரிஞ்சும் பயன் எடுத்துக்கிறாங்க.இவங்க தென்னை மரம் அவங்க கிணத்தை அசுத்தப்படுத்துது.
கோழியை அவங்கதான் பிடிச்சு சமைச்சிருப்பாங்கன்னு சந்தேகப்பட்டு இந்தப் பக்கம் வரும் கொப்புகளை வெட்ட வெளிக்கிட்டு அப்புறம் தென்னை மரத்தை நினைச்சிட்டு விட்டு வைக்கிறாங்க.சாத்திரம் கேட்க நினைச்சிட்டுப் போகல.காரணம் சாத்திரி இவங்க்ளையே கள்ளர்ன்னு சொல்லிடுவார்ன்னு பயம்.
இப்பிடியிருக்கும்போது கொழும்பிலிருக்கும் மகன் தான் ஒரு பெண்னைக் காதலிப்பதயும் கூட்டிக்கொண்டு வந்து காட்டிப் பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்கப்போவதாயும் திடீரென்று வந்தால் அதிர்ந்துபோவார்கள் என்று போனிலயும் சொல்லமுடியாமல் கடிதம் போட்டிருக்கார்.
திட்டிக்கொண்டாலும் மகனின் வரவை எதிர்பார்த்திருக்கார்கள்.மகனும் வந்தார்.ஒரு வெள்ளைக்காரப்பெண் ஒரு குழந்தையுடனும்.அதே நேரம் சிவப்பியும் 6 குஞ்சுகளோடு வளவுக்குள் நுழைகிறது.கிராமப் பக்கங்களில் பற்றைகளுக்குள் கோழிகள் அடை காத்துக் குஞ்சுகளோடு வருவதுண்டு.அந்த 21 நாட்களும் சில வீடுகளில் சந்தேகத்தால் பக்கது வீட்டிக் காரர்களோடு பெரிய சண்டையே நடக்கும்.கொஞ்சம் நகைச்சுவையோடு சொல்ல முயற்சித்திருக்கிறேன்.சரியோ.......யோயோயோயோயோ !
ஹேமா(சுவிஸ்)