சூரியன் திசை தவறிய தேசத்தில்
எமக்காய்
உருகி வழிகிறோமென
சில மெழுகுவர்த்திகளின்
கூக்குரலில்
விழித்தெழுகிறோம் நாளும்.
மனக் கல்லறைக்குள்
உயிர் உருக்கி
ஏற்றிய தீபங்களோடு
கார்த்திகைப்பூக்களை
கரிகாலர்கள் நடந்த
காடுகளில் விட்டெறிகிறோம்.
காலம் சபித்ததால்
விளக்குகள் அணைந்த
அநாதை மரங்களுக்கு
மின்மினிகள்கூட
ஒளிதர மறுத்த உலகிது.
பார்த்துப் பார்த்து
அழித்தொழிக்கப்பட்ட
என் சனத்தில் கையில்
கருத்த சூரிய
பொம்மையொன்று திணித்து
சண்டை முடிந்த பூமியின்
சமாதான பொம்மை
இதுதான் என்கிறார்கள்.
குருதி குடித்த தேசம்
விட்டகன்றபோது
கடைசியாய்
ஓடிய ஓடத்தில் கிடைத்தது
ஒரு குப்பி விளக்கு மட்டுமே.
பயங்கரவாதியொருவன்
பயங்கர ஆயுதங்களுடன்
தப்பிவிட்டதாய் செய்தி.
ஏதுமறியா விளக்கொன்று
புலம்பெயர்ந்து தவிக்கிறது
யாராவது
தீராத்தாகம் தீர்த்தெரிந்து
ஒளிபரப்ப
எண்ணெய் ஊற்றும் வரை!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||