வெட்டவெளியில்
காற்றசையும் மொழியில் பிறக்கிறது
உமக்கும் எனக்குமான உரையாடல்
தலைதடவிப் போகிறது
ஒரு கிளை
சூரியக்கதிரின் ஸ்பரிசத்தோடு.
கண்கள் இருளுடைக்க
கேட்கின்றீர் ஆயிரம் கேள்விகளை
கனவுகளில் தேடிக் கிடைத்த
உமக்கான
வசியச்சொற்களின் அலங்காரத்தோடு.
மடித்த வானத்துள் மனசை மறைத்து
தலை குனிந்தே
மண் பார்த்துக் கவிழ்கிறேன்.
நீரைப்போல் சுழித்தோடியவர்களிடம்
கரையாத உணர்வோடு
பெருமூச்சொன்றை
வெப்பமாய் வெளித்தள்ளி
பலஜென்மத்து மீதமென
விரட்டும் விந்தையோடு
உயிர் குடிக்கும் விஷப்பாம்பின்
கதை சொல்கிறேன்.
சப்பாத்திக் கள்ளி காலில் குத்த
திரை விலக்கிய காற்றில்
நீட்டும் ஒரு கையில்
என் குருதி.
சுவறேறும் எறும்புகளின்
கனவுக்கான வேண்டுகோளோடு
ஈரக்காற்றில்
முகம் புதைந்திருக்கும் என்னிடம்
பிரிந்து போவதற்கான
வார்த்தைகளை அவிழ்க்கிறீர்கள்.
தோழர்களே....
மீண்டும் வருவீர்களோ
காத்திருக்கிறோம்!!!
ஹேமா(சுவிஸ்)