நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்...
நீர் தெளித்து
புள்ளியிட்ட கோலத்தில்
மஞ்சளாய்
காக்கை எச்சம்
திருஷ்டிப்பொட்டென...
சுழித்தோடும்
நீருக்குள் போராடி
கடலட்டையொன்று
செத்து
மீண்டும் மேலெழுந்து
சுழன்றபடி....
தளிர்கொன்ற சூரியன்
அதேமரத்தில்
வேரொட்டி வளரும்
குருவிச்சைக்கும்
பச்சையம் பகிர்கிறான்....
ஒரு ஆற்றாமைக்
கவிதையை
ச்சீ....என்கிறது
எழுத்துலகம்....
பிற்போடப்பட்ட செய்திகளை
வாசிப்பதாக உறுதியளித்தவன்
இறந்துவிட்டதாக
அடுத்த செய்தியில்....
கருத்தரிக்காத் தாயின்
கல்லறை நிழலில்
தேம்பியழும்
அநாதைக் குழந்தை....
ஊடறுத்த
சில சொற்களில்
குற்றம் இருப்பதாக
வரையறுத்து
தூக்கிலிடப்படுகிறது
நூலகமொன்று....
மாதங்களற்ற சிசுவொன்றை
பெற்றெடுக்கிறாள்
பார்வையற்ற
பெண்ணொருத்தி....
முலையறுத்த
எம் தேசப் பெண்களுக்கு
குறியறுத்த மனிதர்களை
காட்டி
போர் வேண்டாமென
போதிக்கிறது
உலக சமாதானம்....
இயற்கையில்
நஞ்சு படிகிறதாமென
போராடி
ஆயுத விற்பனையில்
வெற்றி பெறுகிறது மனிதம்...
எல்லாமும்
அவரவர் நினைவில்
சரியாகவும்
அடுத்தவர் பார்வையில்
தவறாகவும்....
தொடர்ந்துகொண்டிருக்க.....
நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||