*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, June 09, 2012

காதல் குரல்...

நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை...
வசப்பட்டு வளைகிறேன்
ஓரிழையாய் உனக்காக
உன்னோடு என்னை!

மண்டியிட்டு மறுத்த
மௌனங்களைப் பிசைந்து
பேசும் பெண்ணாக்குகிறாய்
என் சொற்களால்
உன் வார்த்தைகளை
உடைத்த பாவமும் இப்போது!!!

உப்புமடச் சந்தியில்..."ஒரு தந்தையின் பிரசவம்!"

ஹேமா(சுவிஸ்)

Sunday, June 03, 2012

அவள் அப்படித்தான்...

விதிகளை நிர்ணயிக்கும்
நூதன மாத்திரைகளை
விழுங்கியிருந்தாள் அவள்.
வேம்புக் குயில்
மூங்கிலுக்குள் சாரம் அனுப்ப
சுவைத்தவன் நாக்கில்
ஒட்டிக்கொள்கிறது கசப்பு.

மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்...

சகாயங்களேதும் செவிநுழையா
சஞ்சாரப் பொழுதுகளில்
வெள்ளைச்சுருட்டு
சுட்டுப் புகைக்கிறாள்
சூரியக் கண்களில்.

மூங்கிலிசைத் துவாரம்
நொதித்து நிறம்மாற
நோய் எதிர்ப்புச்சக்தி
அதிகமாய்த் தேவையென
முறைப்பாடு வைக்கிறாள்
மாத்திரைக்கும்
பின் அவனுக்குமாய்!!!

ஹேமா(சுவிஸ்)