ஞாபகத்தில் இருக்கிறது
அழகாய் நிழலாய் ஒரு முகம்.
ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை.
அலையும் நீரில்
அலைவதாய் அது.
வயது தொலைந்து
வாழ்வின்
எல்லையின் தனிமையில்
இளமையை
அசை போட்டபடி.
நிறைவாய் ஒரு
நீ.........ண்ட
ஞாபக உறவு.
வாழ்வு
இயல்பாய் நகர்ந்தும்
அம்முகம் அடிக்கடி
வரும்... மறையும்.
கொல்லைப்புறத்துப்
பொட்டு வேலிதான்
அவனது போக்கு வரத்து.
பனம்பாத்தியடியில்
கிளுவங்குச்சி முறித்துக்
கொட்டில் கட்டி,
குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி
மரப்பாச்சி பொம்மையும் செய்து,
கொட்டாங்குச்சியில்
சோறும் காய்ச்சி,
தொட்டாச்சிணுங்கி இலையும்
தேங்காய்ப்பூக் கீரையும்
கறிகளுமாய்.
அம்மாவின்
சோட்டிக்குள் நானும்,
அப்பாவின்
வேட்டிக்குள் அவனுமாய்.
கூட்டாஞ்சோறு ஆக்கி
பூவரசமிலையில் போட்டுப்
பக்கத்தே மூக்குப்பேணியில்
தண்ணியும் கொடுப்பேன்.
இறப்பில் சொருகியிருக்கும்
தாத்தாவின் காம்புச்சத்தகமும்,
குத்தூசியும் களவு போகும்.
கம்மாலை வளவு
கலா அம்மாதான்
சின்னச் சுழகும்,
கொட்டாம்பெட்டியும்,
திருகணியும்
நீத்துப்பெட்டியும்
இழைத்துத் தந்தா.
சிலசமயம்...
நாவலடி,வேம்படி
அத்தியடி,புளியடியும்
எம் அடுப்படியாய்.
தும்பிக்கு வால் கட்டினாலும்
பிள்ளைப் பூச்சிக்குக்
குளறியழுவான்.
மண்ணுளிப்பூச்சி
இலங்கைப் படம் கீறுதென்பான்.
சுடலை என்றாலும்
பறைச்சத்தமும் பயம் அவனுக்கு.
கரப்பைக்குள்ளும,கடகத்துக்குள்ளும்
கூடத்துக் கள்ளுப்பெட்டிக்குள்ளும்
கோழியாய்
ஒளித்துப்பிடித்து விளையாட்டு.
கிளித்தட்டும்
கிட்டிப்புள்ளூம் எட்டுக்கோடும் கூட.
துலாக்கல்லடி,ஆட்டுக்காலடி
கப்பிக் கிணத்தடி,
துளசி மாடத்தடி,
கடைச்சல் பட்டறைப் பத்தியடி,
அம்மியடி,மாட்டுத்தொழுவத்தடி
மகிழமரத்தடி மாவடி அத்தனையும்
எங்களுக்கு அத்துப்படி.
ஞானவைரவர் ஒழுங்கை தாண்ட
ஒரு குச்சொழுங்கையில்தான்
அவன் வீடு.
நானும் போய்
ஊஞ்சல் ஆடியிருக்கிறேன்.
அவன் பாட்டியின்
அழகான நாச்சாரம் வீடு
நடுவில் ஒரு ஓட்டையோடு.
நாயனமும் வாசிப்பார் தாத்தா.
பினாட்டும் தந்து
குடுவையில் தேனீரும் வரும்.
பிலா இலையில் பிளா செய்து
கூழும் சிலசமயம் முற்றத்தில்
மூக்கு உறிஞ்ச உறிஞ்ச.
வயதும் வந்ததால்
வாழ்வில் தூரமானான்.
திரும்பவும் காண ஆவலோடு.
இவ்வளவையும்
பகிர்ந்து கொள்ள
அவனால்....
மட்டும்தானே முடியும்!!!!
(மறையும் தமிழ் சொற்களுக்காகவே செதுக்கிய கவிதை)
கொல்லைப்புறம்-வீட்டின் பின்புறம்
வேலிப்பொட்டு-வேலியில் போகவர சிறு புகுவழி
பனம்பாத்தி-பனங்கிழங்குக்காக பனங்கொட்டைகளை முளைக்க விட்ட மண்மேடு
குரும்பட்டி-தென்னம்(பாளை)பூவில் தேங்காயின் ஆரம்பம்
கொட்டாங்குச்சி- சிரட்டை
சோட்டி-அம்மா வீட்டில் அணியும் உடை
மூக்குப்பேணி-மூக்கு வைத்த தேநீர் கோப்பை
இறப்பு-வீட்டுக் கூரையின் கீழ்ப் பகுதி
காம்புச் சத்தகம்-சிறிய கூரான கத்தி
கொக்கச் சத்தகம்-உயரத்திலிருக்கும் மரக்கிளைகளை
முறித்தெடுக்கும் கத்தி (பெரிய நீண்ட தடியில் இணைத்திருப்போம்)
குத்தூசி-முற்றத்து இலை குழைகளைக் குத்தியெடுக்கும் கம்பி
கம்மாலை-(தச்சு) மரத்தொழில் செய்யும் இடம்
கொட்டாம்பெட்டி-ஓலையால் (பின்ன)இளைக்கப்பட்ட சிறு பெட்டி
திருகணி-சமையலின்போது சூடானவற்றை இறக்கி வைக்க
ஓலையால் பின்னப்பட்ட வட்டமான தாங்கி
நீத்துப்பெட்டி-ஓலையால் பின்னப்பட்ட புட்டு அவிக்கும் கூரான பெட்டி
மண்ணுளிப் பூச்சி-மண்னை உளுது போகும் சிறு பூச்சி
சுடலை-மயானம்(எம் இறப்பின் பின் எரிக்கும் இடம்)
பறை-தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி
அடுப்படி- சமையல் அறை
கரப்பை-கோழி அடைக்கும் மூங்கிலால் செய்த கூடு
கடகம்-பனை ஓலையால் செய்த பெரிய பெட்டிகள்
கூடம்-வீட்டில் கூடியிருந்து கதைக்கும் அறை
துலா-கிணற்றிலிருந்து நீர் அள்ள உதவும் நடுப்பகுதி
கப்பி-கிணற்றில் நீர் அள்ள உதவும் இன்னொரு முறை
கள்ளிப்பெட்டி-மரத்தாலான பெரிய பெட்டகம்
கடைச்சல் பட்டறை-இரும்பு வேலை செய்யும் இடம்
நாச்சாரம் வீடு-பழைய வகை வீட்டு அமைப்பு.
(சுற்றிவர அறைகளும் நடுவில் நிலா முற்றமும் இருக்கும்)
நாயனம்-நாதஸ்வரம்
பினாட்டு-பனம் பழத்தைப் பிசைந்தெடுத்து பாயில் பரப்பித் தகடுபோல எடுத்த உணவு.
குடுவை-தேநீர் குடிக்க மரத்தால் செய்யப்பட்டது
பிளா-கூழ் குடிக்கப் பிலா இலையைக் கோலி எடுத்துக்கொள்வது
மரங்கள்-கிளுவை,பூவரசு,மகிழமரம்,மா,நாவல்,வேம்பு,அத்தி,புளி
தொட்டால் சிணுங்கி,தேங்காப்பூக் கீரைச்செடி
ஹேமா(சுவிஸ்)