*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, June 29, 2013

எனக்கான காடு...


உனக்கும் எனக்குமான
இந்தப் பெரும் காட்டில்
இல்லாதிருக்கிறது
என் சந்ததிக்கான இடம்.

பாறைகளில் மோதி வீழும்
பறவையல்ல நான்
வல்லமையற்ற மனதோடு
திசைகளை
மாறிக் கீறிக்கொள்ள
முட்டாள்களின்
வழித்தோன்றலும் அல்ல.

புகைப்படங்களிலும்
பொருட்காட்சிச்சாலையிலும்
தொங்கும் காட்சிப்பொருளல்ல
எங்கள் அவல வாழ்வு.

முன்னையோர் சேகரிக்காத
எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....

இது எனக்கான காடு
இளங்கன்றுகள் பயமறியாது
எச்சரிக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 28, 2013

ஞாலத்துளி...


கடக்காது கரை
ஆர்கலி (கடல்)
மீள்கூடும் கூழாங்கல்.

சிதைந்துலர்ந்த வர்க்கபேதம்
உருமேறு தெருநாயின்
நச்சுப்பல் புண் புணர்வு
இரவுக்குறியோசை.

கல்லும் உதவும் ஒருக்கால்
எள்ளின் புல்லும்
சூடாற்ற புவிபரவ
மனிதம்
மதியாக் காளான்
கோட்டமாய்
மண்சாடிக் காலிறங்கும்.

குருதி குடித்த சாத்தானின்
சூன்யச் சீரழிவு
கடைவாய் வழி
நாகரீக அலங்காரமென
நிர்வாண காதம்
பேச்சு உடை.

கொட்டாவி ஊழியன்
தட்டும் தகரம்
ஊர்வெளியில்
நிர்மாலியச் சடங்காய்
 
நிருத்தம்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 24, 2013

சொல்லித் தொலைந்தவர்...


கூப்பிய கரங்களுக்குள்
அகப்படாத ஒரு கடவுள்
தோரண நூல்களைப் பிரித்து
வெளிநடப்புச் செய்திருந்தார்
இன்று காலை.

நேற்றுப் பேசிக்கொண்டிருக்கையில்
பறந்தடித்த
புழுதிக் கடதாசியில்
தன் இருப்பிட விலாசத்தை
தந்தும் போயிருந்தார்.

அர்ச்சனைப் பூக்களோடு
ஒரு குழந்தை
தானும் தேடிக்கொண்டிருப்பாதாய்
தெருவழி என் கை பற்றி
வரைந்தும் காட்டியது
கன்னக்குழி ஒட்டிய
அந்தக் கடவுள் முகத்தை.

இரவெல்லாம்
இருவரும் பாடித் தீர்க்கிறோம்
தேவாரம் தவிர்த்து
தாலாட்டுப் பாடல்களை
சொல்லித் தொலைந்தவருக்காக.

அக்கடவுளின்
ஒரு நிமிடச் சலசலப்பு
நீள்கிறது
வெறுமை விலக்கி
காலையும் மாலையும்
தொடரும் இரவும்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, June 19, 2013

எழுதா வரிகளில்...


உருவம் உலர்ந்து
மரித்துக்கொண்டிருக்கும்
பறக்கவியலா
எண்ணெய் தோய்ந்த சிறகொன்றை
பெயரில்லாப் பூச்சியென
புல்லிடுக்கில்
முண்டி வளரும் புல்லென
கண்டிருந்தேன்
புறநகர் வீதியொன்றில்.

பெரியாரையும்
ஓஷோவையும்
சேகுவராவையும்
தனக்கான அடையாளங்களோடு
தன் அலமாரியின்
இரண்டாவது அடுக்கில்
சேமித்து
வம்சம் வளர்க்க
நானென்ன இயந்திரமாவெனக்
கேட்டவளை....

எழுதப்படா
என் கவிதை வரிகளில்
நீண்ட வகிடெடுத்து
இரட்டைப்பின்னலோடு
சில கம்பீர வரிகளில்
பொருத்தியுமிருந்தேன்.

அலட்சியங்களுக்குள்
அர்த்தமற்ற சுலோகமென
புதைகிறது
சில இலட்சியங்கள்!!!

ஹேமா (சுவிஸ்)

Sunday, June 16, 2013

அப்பா...


சிற்பியென
பாறை செதுக்கி
மொழியறிவித்து
வலிதாங்கும் வேராய்
இன்றும் அப்பா.

இளைத்தவிரல்
ஆதுரமாய் பற்றி
இறைந்துகொண்டிருக்கும்
என் இருப்புக்களை
எப்போதும்
'அம்மாக்குட்டி'யென.

தன்வழி
உதிர்த்துப் போகுமென்
குஞ்சுக்கால சிறகுகளை சேமித்து
தன் நிழலில் இளைப்பாற்றி....

பெருவெளியோடு
அடர்ந்த நீல
விளிம்புகளை
நான் வரைய அனுமதி தந்து....

ஒப்பீடென விரல் நீட்டி
சொல்லமுடியா
இரையும் அக்கடல்
அகதிதேசம்வரை
சரியாய் செதுக்கும்
தச்சனென இப்போதும்
என்னை.

தூரதேசதிலிருந்தபடி
உப்புக் கண்ணீர் வரைகிறது
ஒரு வரி அப்பா!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, June 13, 2013

அன்பான செல்ல ஹிட்லருக்கு...

என் தோள் தொட்டணைத்த என் வீரனுக்கு.....

சுகம் சுகம்தானே.சுகமாய்த்தானிருப்பாய் என்றாலும்...... கடிதம் என்பதின் சடங்கு சுகம் கேட்பது !

உன் வியர்வை வாசனையோடு உன் நீண்ட பல கடிதங்களைச் சேமித்து வைத்திருக்கிறேன் மினுங்கும் மஞ்சள் பை ஒன்றில்.சில சமயங்களில் உன்னோடு கோவப்பட்டு உன் முன்னாலேயே சில கடிதங்களை எரித்துமிருக்கிறேன்.சாம்பலாகிய கடிதங்கள் ஒரு போதும் நினைவுகளை கரைத்து விடுவதில்லை தெரியுமா !

காதலில் சில நியாயங்கள் உறுதிப்பாடானது.உலகின் எந்த நியதிகளுக்குள்ளும் அடங்காதது.தனக்காகச் சில விதிகளை எழுதிக்கொள்ள காதலால் மட்டுமே முடிகிறது.காதலின் தீர்மானங்கள் முடிச்சாகும் இடங்கள் அதிசயமாயும் அதிர்ச்சியாயும் நம்பமுடியாமலும் இருக்கும்.காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது தன்னைத்தானே.இதில் நானும் நீயும் விதிவிலக்கா என்ன !

எமக்கான சந்திப்புக்களும் பேச்சுக்களுக்கும் சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கிறது.நான் என் வேலியோரத்து பூவரசோடுதான் அதிக நேரம் செலவழிக்கிறேன்.சந்திக்கும் நேரங்களிலும் நாம் கதைத்துக்கொண்ட நேரங்கள் மிக மிகக்குறைவே.சில சமயம் வார்த்தைகள் தீர்ந்துபோயிருக்கலாமோ !

இருந்தும்.....

உன்னை நினைத்துக்கொண்டே உன அருகாமையை அணைத்துக்கொண்டே உன் ஆயுதம் கொஞ்சம் தள்ளி வைத்து என்னில் பொய்க்கோபம் கொள்ளும் உன் கண்களைச் சரிப்படுத்தவோ,உன் புன்சிரிப்பை இலகுவாக்கவோ,எம் ரகசியங்களை தவிர்க்கவோ, பக்க இருக்கைகளை உறுதி செய்யவோ இந்தக் கடிதம் இப்போ உனக்கும் எனக்கும் தேவைப்படுகிறது !

இது நம் இடைவெளிக்கான ஒரு நேசிப்புமடல் மட்டுமே.நாம் சந்தித்துக் கனநாளாயிற்று.காணும் நிகழ்வொன்றுக்கான காலத்தை அனுமதி கொடுத்து அனுப்பிவிடு செல்லா.ஏங்கி இடைமெலிகிறேன் என்பதைச் சொல்ல வெட்கமாவும் இருக்கிறது !

பிரியங்களைக் கடந்து போதல் கடினம்தான் என்றாலும் அது கைவிடுபவர்களை விட்டு நீங்குவதில்லை.நினைவுகளைக் கரைக்கமுடியாக் கண்ணீரும் தோற்றுப்போய் இறுகிவிட்டது என்னோடு !

எந்த எதிர்பார்ப்புகளுமற்ற ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசாக அனுப்பிவிடு நீ சுவாசிக்கும் கந்தகக் காற்றுவழி.என்னை நிராகரித்து சட்டைசெய்யாது தாய் தேசத்தின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் உன்னிடம் காலம் முழுதும் தன்னையும் தன் மொத்த அன்பையும் கொட்டிக்கொண்டிருக்கிறாள் இங்கொருத்தி காதல் கிளியென !

ஒரு மனிதனின் அந்தரங்கம் என்பது ஒரு இருண்ட குகைவெளி மட்டுமல்ல அது மலர்வனங்களையும் கொண்டிருக்கிறது என்பதை ஈவா கண்டுபிடித்தாள் ஹிட்லரிடம்.நானும் கண்டிருக்கிறேன் அதே ஹிட்லரான உன்னிடம்.காதலின் புன்னகை ஒன்று உனக்காக மட்டுமே உன் வானில் நிலவாக வாழ்ந்துகொண்டிருப்பதை என்றும் நினைவில் கொள் !

என் உடலுறவுக்கும் ,உண்மைக் காதலுக்கும் உரிமையானவனல்ல நீ.உயிரைத் தாய்நாட்டுக்காய் அர்ப்பணித்த செல்லப்போராளி.அன்பை ஒரு பூவுக்குள் ஒளித்து என் தலையணைப் பூவாய் வரைந்து அதில் உறங்கிக்கொண்டிருக்கும் உனக்கேயானவளின் அன்பு மடலிது.விரைவில் ஒரு முறை உன் கண்களைச் சந்திக்க விடுவாயென்கிற நம்பிக்கையில் உன் நினைவுகளோடு உறங்கிக்கொள்கிறேன் !

சந்திப்போமடா....என் செல்ல ஹிட்லரே !

ஹேமா(சுவிஸ்)