Monday, March 30, 2009
புரியாத கனவு...
கேள்விக்குறியின் முதுகில்
பரந்த பாலைவனங்களில்
என் பயணிப்பு.
விடையே இல்லாத
கேள்விகள் போல
வெறும் கீறிட்ட கோடுகள்
நிறையவே.
எதிர்காலத்தின் முன்னால்...
எழுத்துக்கள் தொடர மறுக்கிறது.
தொடர்ந்த சிந்தனையை
முடிக்க முடியவில்லை.
கொஞ்சம் தண்ணீர்
குடித்துக் கொள்கிறேன்.
என்றாலும்
எப்போதுமே
வேதனைகள்
வெந்து தணிந்த பிறகு
எல்லையற்ற கற்பனைக்குள்
மனம் சுற்றிப் பறக்கும்.
விடியாத வாழ்வே ஆனாலும்
பசியால் வாடிய போதும்
உலகமே வெறிச்சோடி
தனித்து விடப்பட்ட போதும்
எனதென்று யாருமே
இல்லையென்று ஆனபோதும்
கனக்கின்ற மனம் நிரம்பி
கண்ணீராய் வழிந்தபோதும்
கனவில் வரும்
கற்பனைக்கு மட்டும்
கணக்கேயில்லை.
ஒரே ஒரு கனவு
திரும்பத் திரும்ப
ஒவ்வொரு நாளும் வரும்.
ஒளவைப் பாட்டிக்கு
அடுத்தாற்போல்,
நீல் ஆம்ஸ்ட்ராங் போல்,
நானும் ஓர் நாள்
நிலவில் நின்று
கொடி நட்டு...கை தட்டி
காற்றில் மிதப்பதைப் போல.
அப்படிக் கனவிலும்
ஓர் திடுக்காடு.
மனிதர்களைப் போல
நிலவுக்கும் மறுபக்கம்
இருந்துவிட்டால் !!!
ஹேமா(சுவிஸ்)
Tuesday, March 24, 2009
விழித்தெழு...வெளியே வா.
குனிந்த தலையோடு ஐயா...மாத்தையா
போட்டுப் போட்டு
குனிந்த முதுகை முன்னே வளைத்து
நிமிராது வாழ்கிறாய்.
அறிவே வராதா...அருகே பார்
மழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூட
மழை முடிய முடி தூக்கும்.
வறுமையின் விளிம்பில் விழித்துக் கொண்டிருப்பவனே,
அடுப்பங்கரைக் கூரையால் விழுந்து
அடுப்பை நிரப்பும் மழை நீர் கூட
உன் பொறுமையை எரிச்சலாக்கவில்லையா.
அட்டை உறிஞ்சிய மிச்ச இரத்தத்தை
உறிஞ்சும் முதலாளி வர்க்கத்தை
முன்னுக்கு நிமிர்த்துகின்ற முதுகெலும்பே நீதானே
பழைய புடவையிலே பக்கமெல்லாம் நூறு கண்கள்.
பஞ்சத்தில் உன் பருவம் திணற
தேயிலை மரத்திற்கு உரமாய் செரிப்பவனே,
மரத்துவிட்ட உன் இளம்
இனங்களைத் தட்டி எழுப்பு.
உப்புக் காரத்தோடுதானே
ஒரு வேளையாவது உண்கிறாய்,
தூங்காதே தோழனே.
உணர்ச்சி கொந்தளிக்க கொஞ்சம் பொங்கி எழு.
காம்பராவுக்குள் ஓரம் கட்டி உன்னை ஒதுக்கிவிட்டு
உன் ரத்தத்தை சாறாய் கசக்கிப் பிழிந்தே
வழிந்து விழுகிறது தேநீரின் சாயம்-ஆனால் நீ
சக்கைக்குச் சலாம் போட்டு
சத்தமே இல்லாமல் வாங்கிக் கொள்கிறாய்.
கேட்டுத்தான் பாரேன் கொஞ்சம்.
குட்டக் குட்டக் குனிகிறாயே
உனக்குள்ளும் ஓர் உணர்வு
உள்ளதென்று கண்டு கொள்ளட்டும்.
காலத்தின் காதிலும் உன் ஓலம்
ஓர் நாள் விழட்டும்.
உனக்குள் இருக்கும் இரகசியம் உலகமும் அறியட்டும்.
கட்டுண்டு களைக்காதே.
முன்னேறு...முன்னேறு
ஒன்றாக...மூன்றாக...முந்நூறு ஆகு.
மண்டி போடாதே.
இந்த பூமிக்குள்ளேதான் புதைகிறது உன் ஆணி வேரும்.
மனிதா மானத்தின் பொருளை விளங்கிக்கொள்
கண்களைத் திற.
மழைமுகிலின் இருளால் சூரியனைக் காணவில்லை.
மழையாய் அடித்துப் பெய்
இருள் விலகும்.
அடிமைச் சுகமே ஆனந்தம் என்று அடங்காதே
நாளைப் பொழுதை நன்றே கழிக்க
இன்றே எண்ணி விலங்கை விலக்கு
சுதந்திரக் காற்றைச் சுகமாய் சுவாசிப்பாய் !!!
இது 12 வருடத்திற்கு முன் மலையகச் சகோதரர்களுக்காக
என் எண்ணத்தில் எழுந்தது.இப்போ கலை இராகலை என் பதிவுகளோடு உலவியபின் தூசு தட்டி எடுத்தது.மாற்றம் செய்யாமல் பதிவில்.
ஹேமா(சுவிஸ்)
Sunday, March 22, 2009
நிலாக்கால நினைவுகள்....
மீட்டெடுத்து நட்டுவிட
நிலாக்காலத்து நினைவுகளாய்.
தொலைத்துவிட்ட காலங்களுக்குள்
உலா வர ஒரு விநாடியா!
நன்றிதான்.
வீணை நரம்பைத் தட்டிவிட
அதிரும் தந்திகள் இசைத்து அடங்க
நேரமெடுப்பது போல்
அன்றைய நினைவுகளைத் தட்டிவிட்டால்
நிற்குமா மனம் ஒரு நொடியில்.
அது ஒரு அழகான காலம்.
எங்கள் வீடுகளில் நாங்களே செல்லப்பிராணிகள்.
குறும்புகளுக்குக் கோடு போட்டுக் கட்டிவிட
யார் அங்கே ? யாருமேயில்லை.
எண்ணக் கனவுகளையும்
இனிக்கும் இளமையையும்
ஏன் வறுமையையும்கூட
தடுக்காத மிடுக்கான பாதைகள்.
மல்லிகைப் பந்தலைத் தொட்டுத்தடவி வரும்
இதமான தென்றலோடு,
முற்றத்து மணல் குவியலில்
ஒற்றைத்திரி விளக்கின் வட்டத்தில்,
குந்தியிருக்க
தம்பியோடு தங்கையுமாய்
நீ முந்தி நான் முந்தியென்று
நிலாச்சோறு தின்ற அந்த நாட்கள்.
அன்று எல்லாமே இருந்தது.
இன்று எல்லாம் இருந்தும் எதுமே இல்லாததாய்
தனிமையே துணையாய்.
ஏன் நிலவைத்தான் அண்ணாந்து பார்க்கத்தான்
அரைநிமிட நேரமுண்டா ?
நேர அட்டவணையோடு
ஒட்டிக்கொண்டு ஓடுகிறது கடுகதி வாழ்வு.
இயற்கை இல்லா இயந்திர நாட்டில்
இயல்பு இல்லா நாடக வாழ்வாய்.
ம்ம்ம்...சாப்பாடு முடிய கச்சேரி ஆரம்பம்.
சும்மாதான் தொடங்கும்.
பாட்டும்,கூத்தும்,வில்லுப் பாட்டுமாய்.
சுதி ஏற...ஏற உச்ச சுதியில்
தாள மேளத்தோடு தாண்டிப் போகும்.
பக்கத்து வேலியால் ஒத்துக்கு ஆளும் சேரும்.
சரியாப்போச்சு....
கார் ஒன்று "உர்"என்று உறுமி
வேம்பு வைரவர் ஒழுங்கைக்குள் இறங்க
ஒடுங்கிப்போய் ஒளிச்சுக்கொள்வோம் எல்லோரும்.
அம்மாவின் தம்பி.சின்னமாமா.
சந்தியில் மாடி வீடு.
தண்ணியில் மிதந்து "மருமக்களா" என்று நீந்தி வாறார்.
சித்தம் கலங்கி சட்டென்று சிட்டாய்ப் பறந்து
பதுங்கிக் கொள்வோம் கோழிக் குஞ்சுகளாய்.
இனி மாமாவின் கச்சேரி.
முகாரியாய் பொழிந்து நனைக்கும்.
நாடு போற்றிய நாதஸ்வரக் கலைஞர் அவர்.
இப்போ நம்மோடு இல்லை அவர்.
நினைவோடு மட்டுமே.
அவர் போதையில் அழ
அம்மா பாசத்தில் அழ
அங்கு பாசமலர் ஒன்றே அரங்கேறும்.
"அக்கா பசிக்குது சோறு தீத்திவிடு"
அம்மா "ஏண்டா ஐயா இப்பிடி உடம்பைக்
கெடுத்துக் கொள்கிறாய்"
அப்பப்பா...அந்த நிலவு கூட
கொஞ்சம் கலங்குமோ என்னமோ !
இப்படி இப்படி எத்தனை நினைவுகள்.
தொலைத்தோமா தவறவிட்டோமா !
இனியும் வருமா அந்த நிலாக்காலம்.
கனவில் மட்டும்தானா?
எண்ணித் தவிக்கையில்
வெறுமையைத் தவிர எதையுமே காணோம்.
பொத்திய நினைவுகள் பஞ்சு மெத்தையோடு.
ஓலைக் குடிசையில் கோரைப்பாயில்
கறையானோடு ஒடுங்கிப் படுத்த
பசுமையின் சுகம் சுமையாய் அழுத்த
இமையோடு என்றும் !!!
ஹேமா(சுவிஸ்)
Thursday, March 19, 2009
நான் ஓர் கடவுள்...
சரிகின்ற மலையைச் சரி செய்து
நூல் கட்டி நிமிர்த்தி நாளைய பொழுதின்
நன்மை சொல்லும் நான் ஓர் கடவுள்.
பாம்பைக் கழுத்தில் சுற்றியோ
வாரணமாய் அரசமரத்தடியிலோ
மயிலோடு முகிலுக்குள் பறந்தோ
சிரம் பன்னிரண்டோ
இல்லாமல்...
பற்றுக்கள் அறுத்து
பரந்த தேசத்தில்
பற்றையோ,பாம்புப் புற்றோ
பரதேசியாய் திரியும்
பசியின் இயல்பறியா
இறைவனின் சாயல் இல்லா
நான் ஓர் கடவுள்.
எனக்குள்ளே ஓர் உலகம்.
நானே கடவுள் அங்கு.
எதுவுமே களவு போகா
தாழிடாக் கதவுகளுடன்
என் சாலோகம்.
காதல் தேவதைகள்
சூரியனையே கூட்டி வந்து
வெப்பம் தணித்து பதநீர் தந்து
பரிமாறுகையில்
நான் அங்கு ஓர் கடவுள்.
காலையும் மாலையும்
இணையும் இரவில்
சிலசமயங்களில்
உங்களுக்குக் கேட்கலாம்
என் காலடி ஓசை.
சுடுகாடே வீடாய்
பிணம் சுட்டுப் பிண்டம் தின்று
திமிரை உடலாக்கி
வில்லாய் வளைத்து,
தன்வந்தரியாய் (தேவ மருத்துவன்)
தன்மாத்திரை (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்
பதித்து
நான் ஓர் கடவுள்.
நிபந்தனை-நிதானம்
நித்திலம் (முத்து)
நிடதம் (எட்டுப் பெருமலை)
நிட்டூரம்-நிகழ்வு
நிந்தை-நிமிடம்
நினைவு-நித்திரை
அத்தனைக்கும் நித்தம்
நித்தன் (கடவுள்) நானே.
உங்களுக்குள் புகுந்து ஓலமிடும்
ஓநாய்கள் உயிர் வெறுக்க
விரட்டி வேட்டையாடிச்
சுட்டுச் சுவைத்து,
அதன் பின்னும்
கேட்கக்கூடும் பின் இரவுகளில்
உங்கள் பூட்டுக்களோடு உரசும்
என் காவல் கம்புகளின் சத்தம்.
உங்களின் கதவுகளின் அருகில்
காவலாய் காத்திருக்குக்கும்
நான் ஓர் கடவுள் !!!
"நான் கடவுள்"தொடர் கவிதைக்கு எனக்குப் பிணைப்புத் தந்தவர்
மேவி http://mayvee.blogspot.com/
நான் இணைக்க நினைப்பது,
புதியவன் http://puthiyavanonline.blogspot.com/
ஜமால் http://adiraijamal.blogspot.com/
ஹேமா(சுவிஸ்)
Tuesday, March 17, 2009
முத்தம்...
காத்துக் கிடக்கிறேன்
உன் வரவுக்காக...
வீடு முழுதும் பரவும்
உன் வாசத்திற்காக...
மீண்டும்...
வழி அனுப்பும்போது
கிடைக்கும் உன்
சுவாசம் கலந்த
சூடான உன்
முத்தத்திற்காகவே !!!
ஹேமா(சுவிஸ்)
Friday, March 13, 2009
ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்...
பதைக்கிறது என் உயிர்.
பக்கத்து வீட்டில்
புஞ்சி பண்டாவும்-பொன்சேகாவும்
காமினியும்-லாலும்.
என் தங்கமணி அக்காவும்
சின்னராசு அண்ணையும்
பாபுவும்-புனிதாவும் எங்கே?
சிதறிய தேசத்துள்
தொலைந்த முகங்கள்
எங்கே களவு போனது?
தேவதைகள் தவழ்ந்து திரிந்த
என் மண்ணில்
தீயால் எம்மைச் சுட்ட
கொள்ளிக் கட்டைகள்.
சிங்கள ஆக்கிரமிப்பின்
அவதாரங்கள்.
சகிக்கமுடியாத அசிங்கங்கள்.
முருகண்டிப்பிள்ளையார் கோவிலுக்குள்
புத்தர் இருந்தாராம்
நூறு வருடங்களின் முன்பே
அதுவும் மூலஸ்தானத்தில்.
கேட்பார் யாருமே இல்லை.
கதிர்காமக் கந்தனும் தொலைந்தான்.
உப்புமடப் பிள்ளையார்
கோவிலுக்குள்ளும்
புத்தன் இருப்பான் இனி.
தலைமுறை கண்ட
கோயில்களின் கதைகளையே
தலை கீழாய் மாற்றும் ஏதிலிகள்.
சூரியனைக்கூட
எரித்துப் புதைத்து
அதன் மேல் "பன்சல"கட்டும்
பன்னாடைகள்.
புத்தன் சொன்னதில்லை
சரித்திரங்களை வைத்து
சொக்கட்டான் விளையாடு என்று.
அவன் நிலத்திலும் இல்லை.
பயணங்களின்
இலக்குகள் இடைமுறித்து
எறிந்து யாரோ
என் சிதிலங்களை
இறுக்கி மிதித்து,
அத்தனயும் தனதாக்கும்
திட்டத்தோடு
என் ஊருக்குள் சிங்களம்.
என் ஊரோடான பிணைப்பு
எளிதில் அறுக்க முடியா
தொப்பிளின் கொடி.
என் வீட்டு முகட்டுக் கூரையில்
என் ஏணைக்கயிறு.
நான் வாழ்ந்த
அத்தனை பகல்களும் இரவுகளும்
சாட்சிகளாய்.
மிஞ்சியிருக்கும்
என் உயிர் கொண்டு வருவேன்
உன் உயிர் பறிக்க.
காத்திரு நீ...
கைக்கு எட்டிய தூரத்திலேதான்
என் வரவு !!!
"பன்சல"புத்தரின் கோவில்
"கோண்டாவில்"புகைப்படம் நன்றி கானா பிரபா
ஹேமா(சுவிஸ்)
Wednesday, March 11, 2009
அவளுக்கு ஈழவனின் பதில்...
வீட்டு விளக்கை
எரிய வைக்க
கட்டு உடலைக்
காட்டலாமா சிட்டு!
பச்சைக்கிளியாம்
ம்ம்ம்,
பச்சையாக் காட்டுவதால்
பசுமையானாயோ!
வயிற்றுப்பசிக்கு
உண்டி தேட
உடலை விற்றுப்
வாழலாமா!
கூலி வேலை செய்தாலே
இன்பமாய்க் கூடியிருந்து
குடும்பமாய்க்
குடிக்கலாமே கூழ்!
நீயும் அழிந்து
உன்னை முகர்ந்தோரையும் அழித்து
நாகரீக வாழ்வுக்குப்
பணம் தேடும் பாவையே
எதற்காக இந்த இலக்கு!
உன்னைத் தொட்டானே
அவனும் கெட்டான்
அவஸ்த்தைப் பட்டான்
நோயை உண்டான்
வாழ்வை இழந்தான்!
அவளின் சில நிமிட சுகம்
அள்ளித் தந்த பரிசாய்
ஊரார் தூற்ற உறவினர் சிரிக்க
குடும்பத்தால் தனிமைப்பட்ட
எயிற்ஸைச் சுமந்த வாழ்வு!
"வானம் வெளித்த பின்னும்"வலைப்பதிவின்
'அவள்' கவிதைக்கு பதில்
எழுதியவர்: ஈழவன்-இலக்கியமேடு
என் இணைய நண்பர்களின் பதில்...?
Monday, March 09, 2009
அவள்...
மனம் அவர்க்கு இருப்பதில்லை.
மனம் வலிக்க
நொந்து அழுகின்றாள்.
சிவப்பு விளக்கு அவள்
சினந்தாலோ விரும்பி வரார்.
பணம்தான் அவள் இலக்கு
பாசம் அங்கு நிமிட நடிப்பு.
தன் வீட்டு விளக்கு எரிய
மெழுகாய்த்தான் எரிந்திடுவாள்.
யார் யாரோ தூற்றுகின்றார்
வேசியென்று பச்சையாய்.
பச்சைக்கிளி பாவம்
கொச்சையாய் அவள் வாழ்வு.
குமைகின்றாள் குழறுகிறாள்.
விரும்பியா ஏற்றுக்கொண்டாள்
வேசியென்ற பட்டத்தை.
அவளுக்கும் ஆசையுண்டு
ஒருத்தனோடு வாழவென்று.
இறைவன் படைப்பிலேயே
இதற்கென்றா படைத்திருப்பான்.
சறுக்கிச் சிதைந்ததால்
சதையையே விற்கிறாள்.
படிக்காமல் பட்டமும்
அவளுக்குப் பரத்தையென்று.
பரம்பரை வேசியா அவள்
பார்ப்போமா அவள் சரிதை.
சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
அவளைச் சதிசெய்து
சாய்த்திருக்கும் ஒரு வேளை
வாழ்வும் வழி மாறி இடறியிருக்கும்.
சிந்தித்தாள் சிலந்தி அவள்
தன்னைத் தானே கைது செய்தாள்.
வறுமை வேசியாக்கும்
வயதும் வேசியாக்கும்
நண்பனும் நாசம் செய்வான்
நாயகனும் நம்பிக் கெடுப்பான்
தனிமை கொடுமை செய்யும்
பேரம் பேசுவாள் காசுக்காய்
தாயும் தாசியாக்க.
அழகே காதலாய் மாறி
அதுவே துரோகம் செய்யும்.
சமூகம் சங்கதி பேசி
சுற்றம் குற்றம் சொல்லிச் சொல்லியே
சுமந்திருப்பாள் சாக்கடையை.
சாமி நான்தான் என்று
வீட்டில் ஒருத்தி காத்திருந்தும்
வேசி வீடு ரகசியமாய் ரசித்து வருவார்.
அருவருப்பாய்த் தூற்றினாலும்
திருடனாய் ருசித்து ரசிப்பார்.
எது எப்படியோ...
வாங்குவதும் விற்பதும்
அவள் விருப்பம்
அவள் உரிமை.
அடுத்தவன் பொருளையா
அவள் விற்றாள்.
உள்ளுக்குள் கள்வர்கள்
எல்லோரும் நல்லவர்கள்
சுகம் கொடுக்கும் பாவையோ
பார்வைக்குக் கெட்டவள்.
அசிங்கமாயில்லை...
பேசாதே...
பெண்ணின் கண் பார்த்துப்
பின் புறம் பேசாதே.
முடிந்தால் வாழ்வு கொடு
இல்லை பேச்சை விடு.
கண்ணில் கண்ணீரும்
மனதோடுதான் அவளும்.
ஆண்டாளின் கதைபோல
அவள் வலி உணர்.
நாற்றம் உனக்குள்
ஊர் துடைக்கிறாய் வாயால்.
திருந்து நீ...
சமூகம் திருந்தும் தானாய்.
சொல்லுங்கள்
நம்மில் யார் சுத்தம்
சாமியார்களா ???
சந்நியாசிகளா ???
பெரியார்களா ???
பெருங்குலத்தோரா ???
மண்ணைத் தொடுகிற வரை
விழுகின்ற மழைத்துளி தவிர !!!!
ஹேமா(சுவிஸ்)
Saturday, March 07, 2009
என் நிலாவுக்கு நாலு வயசு...
குழந்தைநிலாவின் குட்டி நிலா!
வானம் வெளித்து வந்த கவிதை நிலா!
நான்கு வயதின் நாயகி நிலா!
பிறந்த நாளின் பிள்ளை நிலா!
பூக்களும் அழகோ உன்னைவிட!
நிலவும் உன்னைவிட ஒளி தருமா!
மயிலும் பதமிடுமோ உன் பாதம் போல்!
தேனும் சுவைக்குமோ உன்னைவிட!
என் வானம் வெளிக்க வந்த
நிலவடி நீ எனக்கு!
கவிதைகள் தந்த
கருவடி நீ எனக்கு!
தனிமை தொலைக்க வந்த
தோழியடி நீ எனக்கு!
நிலா,உனக்கொன்று தெரியுமா!
வானம் தேடுகிறது
தன் நிலவைக் காணவில்லையாம்!
நான் எடுத்து வந்ததை அறியாமல்
நட்சத்திரங்களும்
வான் அழுத மழையில் கரைகிறதாம்!
ஏன்...குட்டியம்மா
இன்றைய உன் புன்னகையை
உனக்குள் சேமிக்கிறாய்.
வாய் விட்டுத்தான்
கொஞ்சம் சிரியேன்.
அகரம் எழுத மறுத்தாயோ!
முத்தம் இல்லை...போடி
என்றாளோ அம்மா!
அதனால் என்ன இப்போ.
வானின் மை எடு.
மேகத்திரையில்
ஒரு பொம்மை கீறு.
ஒரு முழக்கம் போடு.
வீடே அதிருமடி.
இனி என்ன...உன் கைக்குள்
மந்திரமாய் ஒரு பொம்மை
உன்னோடு விளையாட!!!
ஓராயிரம் நட்சத்திரங்களும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வாழ்த்துப் படிக்க
புன்னகை சுமந்ததாய்
உன் பாதைகள்.
விழிகளில்
குறுநகைக் குமிழி!
தேன் தமிழின் பிறப்பிடம்
உன் மொழி!
பிளந்த மாதுளையடி
உன் கன்னம்!
என் வானின் நிலவடி நீ!
நிலவுக்கு வகிடெடுத்த
மின்னலடி நீ!
இந்த நாளின் புன்னகை மறவாதே.
இயல்பின் புரிதல்கள்
என்றும் உன்னுடன் வலம் வர,
மனிதம்...
உனக்குள் முழுமையாய் வாழ,
எதிர்காலக் கனவுகளை
ஞாபகப்படுத்திக்கொண்டே
பிரவாகமாய் ஒளிரட்டும்
உன்
நாளைய நாட்கள்.
அன்பை...
உனக்குத் தர வழிகள்
தேடியபடி
எட்டாத் தூரத்தில் நான்.
குழந்தை நிலாவுக்குள் கொஞ்சம்
தொட்டுச் செல்லும்
தென்றலின்
முதுகில் கொஞ்சமுமாய்!
பிரித்துப் பார் கண்ணே.
வாங்கிக்கொள்
என் அன்பை.
கள்ளமில்லா
வெள்ளைச் சிரிப்பும்
களங்கமில்லா
உன் பூ முகமும்
சாயங்கள் ஏந்தாமல்
இயல்போடு வாழட்டும் !!!
ஹேமா(சுவிஸ்)
மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாக்குட்டிக்கு!!!
Tuesday, March 03, 2009
ஒரு கூதல் மாலை...
ஒதுங்கிய பகலவன்.
இருட்டின் அரசாட்சி.
பனி மூடிய மலைகள்
வழிய வழி இல்லை.
நாட்கள் விறைத்தபடி.
காற்றில் ஈரம் இறுகி
பனிப் பாதையாகி,
வழுக்கி வழுக்கி
தெருவில் திரிவதோ
செப்படி வித்தையாய்.
உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
என்றாலும் ஓர் இதம்
பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.
நிமிடங்கள் சேமித்து
ரசிக்க மறுக்கும்
தெருப்பாடகனின் பாடலாய்,
அவரவர்க்கான
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.
பூச்சாண்டி மனிதர்கள்.
பனி ரசித்து
பார்வைகள் கண்ணாடி உடைக்கும்
படியோடு நடை நிறுத்தும்
பூனைக்குட்டிகள்.
புகைத்தல் தடை
என்றாலும்,எல்லோருமே புகைத்தபடி.
மதுக்கடை வியாபார அமளி.
குருவிகள் காக்கைகள் எங்கே.
புறாக்கள் தவிர
பறப்பன கண்ணில் இல்லை.
பனிபூண்ட வெள்ளை மரங்கள்.
உருக் கொடுத்து உடைபோட்டு
கண்ணாடி அணிவித்த
மதிலோர பனி மனிதர்கள்.
துன்பம் மழித்து
தோளில் தூக்கா
வெள்ளை மனிதர்கள்.
ம்ம்ம்...
எங்கள் இருப்புக்கள்?
யுகங்கள் வேண்டும்
வெளுத்த வாழ்வுக்கு.
குளிரூட்டி இல்லாமல்
குளிரின் விறைப்பில்
பனியின் முகத்தை
பார்த்து ரசிக்க இலகுவாய்.
பறவை இறக்கையில்
மெத்தென்ற போர்வைக்குள்
குடங்கி முடங்கி
நானே என்னைக் கட்டிய தூக்கம்.
ரம்மியக் கலவியில்
குளிர் ஒரு கவிதையாய்.
பல கால ஆசை
பனி திரட்டி உருட்டிய மனிதன்
கை அளைந்த வண்ணமாய்.
வந்த புதிதில்
பனியை...
சுவைத்ததும் ரசித்ததும்
திருட்டுத்தனமாய்,
சிரிப்பாய் எனக்குள் இப்போ !!!
ஹேமா(சுவிஸ்)