Monday, March 31, 2008

கனவின் கனவு...


நெருங்கி வா என்கிறாய்.
வந்தாலோ...
நெருஞ்சி முள் ஆகிறாய்.
தூர விலகையில்
தூது விடுகிறாய்.
சேரும் நிமிடத்தில்
செருக்கும் காட்டுகிறாய்.
காணாத உன்னைக்
கனவிலே வரைகிறாய்.
காணும் வரமொன்றைக்
கண்ணாமூச்சி ஆக்குகிறாய்.
இரண்டாய்...
மூன்றாய்...
எதிர்காலம் சிறக்குமென்கிறாய்.
வாழ்வின் கனவை வளர்த்து
நீரும் பாய்ச்சுகிறாய்.
பார்க்கத் தவிக்கையில்
போர்வைக்குள் பதுங்குகிறாய்.
அயர்ந்து நான் தூங்குகையில்
கனகதை பேசுகிறாய்.
குழந்தையாய்
அள்ள நினைக்கிறேன்.
குமரனாய்
மெல்ல அணைக்கிறாய்.
தாளாத வேளை
தலை தடவி விடுகிறாய்.
ஏமாந்த நேரம் பார்த்து
மெல்ல மடி சேர்கிறாய்.
அன்பே...
எனை மயக்கும்
குன்னக்குடியின் தோடியோ...
கோடை காலத் துவானமோ...
நீ !!!!

ஹேமா(சுவிஸ்)2003

Sunday, March 30, 2008

ஹேமாவின் முதல் கிறுக்கல்...


(8 வயதில் எழுதிய வாழ்த்து மடல்)

Friday, March 28, 2008

உயிர்வலி...

love
காலமும் நேரமும்
ஒத்து வராத
தேசம் உனது
வந்தாய்.... சென்றாய்
என் கண்
பார்த்துக் கொண்டிருக்க
உன்னையும் என்னையும்
பிரித்துப்...பிய்த்துக்
கொண்டு போனது
புகையிரதம்ஒரு நொடி கலங்கிப்
பின் சுதாகரித்தேன்.

நீ பிரியும்போது
சுவாசம் பட்ட வேதனை...
நீ பிரிந்தபோது
உயிர் வலித்த வலி...
உன் பார்வை
தந்த தாய்ப்பாசம்...
நம் கைகள்
விட்டு விலகினபோது
கலங்கிய நம் கண்கள்...
உணர்ந்தாயா
உனக்குள்ளும் நீ.

உன் ஞாபகமாய்
நீ விட்டுப்போனவைகள்
என்னிடம் நிறையவே
எதைக் கொண்டு போனாய்
என்னிடமிருந்து நீ.

கதவின் கண்ணாடியில்
நீ பதித்த
கை ரேகைகள்...
நீ துடைத்த
துவாயின் வாசம்
என் சுவாசம் வரை...
புகை பிடித்த
அடையாளங்கள்
பல்கனியில்...
வியர்வை மணத்தோடு
பாவித்த துணிகள்...
குளியலறையில்
படித்துப் போட்ட
குப்பையாய் புத்தகங்கள்...
படுத்துக் கசங்கிய
போர்வை...
இன்னும்... இன்னும்
எச்சங்களாய் என்னோடு.

ம்ம்ம்ம்ம்........
தனிமை எனக்குப்
பழகிய ஒன்றுதான்.
என்றாலும்
முடியவில்லை
குளிருக்கும்
தனிமைக்கும்
மட்டும்தான் துணை
என்று நினைத்த
தலையணை
இப்போ....
கட்டி அழவும்
கட்டி அணைக்கவும்
உன் நினைவோடு
என் அணைப்புக்குள்!!!!

ஹேமா(சுவிஸ்)25.10.2007

Thursday, March 27, 2008

எங்கோ இருந்து கொண்டு...

என்னதான் செய்கிறாய்
எங்கோ இருந்து கொண்டு...
மொழி தெரியாக் குழந்தை போல
ஒரே குழப்பம்.
உன் உணர்வின்
பார்வை மட்டும்
பட்டுத் தெறிக்கிறது.
என்றோ விட்டுப் போன
உறவொன்று
சட்டென்று
கை சேர்ந்தாற் போல
சொட்டுக் கண்ணீரில்
மனம் கரைந்து போகிறது.

கரைந்து கொண்டே
இருக்கிறது நேரம்.
கணங்கள் தேடும்
தவிப்பின் படபடப்பு.
மீண்டு விடுபட
நினைத்துத்
தோற்றுப் போகிறேன்.

நட்பின் கனத்த இதயம்
முகம் காணாமலேயே
முட்டி மோதுகிறது.
அங்கொன்றும்
இங்கொன்றும்
புள்ளிகள் போட்டதும்
தொட்டுப் போகும்
கோடுகள்...
கோலங்கள்
அழகழகாய்....
அன்பும்
தூர இருந்தாலும்
தொட்டுச் செல்கிறது
மனதை மிக அழகாய்!!!!

ஹேமா(சுவிஸ்)

காத்திருப்பு...

Thinking Of You Comments For Myspace
உனக்குப் பிடித்த
என் உதடுகள்
உன் உதடுகளின்
முத்தத்திற்காய்
காத்துக் கிடக்கின்றன.
இப்போதைக்குப்
பேசிக்கொள்ள
மட்டுமே முடிகிறது.
கற்பனை முத்தங்களோடு
எத்தனையோ நாட்கள்
தயங்கித் தயங்கி .....
கேட்கவும் முடியாமல்
கொடுக்கவும் முடியாமல்
வார்த்தைகள் கூட
உன் உதட்டோரம்
தடுக்கி விழுந்தபடி....
உன் குரல் தரும்
அசைவை
உதடு மொழி பெயர்த்து
தர....
ரசிக்க என்றே
என் உதடுகள்
சில நேரங்களில்
காத்துக் கிடக்கின்றன
மெளனமாய்....
என்றாலும்
காத்திருப்புக்கள்
உன்
முத்தத்திற்காகவே.....
உன் ஈர உதடுகள்
என் உதடுகளை
ஈரமாக்கும் வரை
காத்திருக்கும்
காதலொடு....
நானும் கூட !!!

ஹேமா(சுவிஸ்)17.01.2007

வாழ்வுக் கோலம்


தொலைந்த இடத்திலேயே
நின்று கொண்டிருக்கிறேன்.
நிலை தடுமாற வைக்கிறாய்.
வயதும் வாழ்வும்
வளர்ந்ததே தவிர,
மனமும் தவிப்பும்
அடம் பிடித்தபடி
அதே இடத்தில்
சின்னக் குழந்தையாய்.
சிரிக்கத்தான் வந்தேன்
கொஞ்சம்
மனம் விட்டு...


மனதையே
பறித்துக் கொண்டாய்.
விட்டு விட்டேன்
மனதை உன்னிடம்.
சொன்னது குறைவாய்
சொல்லாதது
நிறையவாய்...
சின்னவன்
உன்னிடம் மறைவாய்.

ஏக்கமும் தவிப்பும்
ஆசையும் அன்பும்
என்னக்குள்ளேயே
அடங்கி
எரிகின்ற நெருப்பாய்
அணையாமல்
என்றும்.
சொல்ல முடிந்ததும்
சொல்ல முடியாததுமாய்
மெல்ல அமிழ்கின்ற
வார்த்தைகள்.

கனவுகள்தான்
கை கோர்க்கின்றதே
தவிர
நினைவுகள்
நெடுந்தூரமாகி...
நக்கலும்
நையாண்டியுமாய்
முடியவில்லை.
சமூகமும் சொந்தமும்
சாக்கடைச் சகதிகள்.
சொல்வதற்கு
அவர்கள் என்றால்
சாவதற்கு
நான் மட்டும்தானா!!!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, March 24, 2008

மீண்டும் ஒரு காத்திருப்பு...


ஆணாய் கருவானவன்
ஆளப்போவது உலகானாலும்
கருவறைச் சிறை விட்டு
விடுதலை தருபவள் பெண்தானே.
சுதந்திரம் பெற்றதும்
சுதந்திரம் தந்தவளையே
தூக்கியெறிந்து
விலங்கும் ஒன்று போட்டு
ஆணாதிக்கச் சிறைக்குள் தள்ளும்
ஆணின் அக்கிரமம்.
பிறப்புத் தொடக்கம்
இறப்பு வரை
சார்ந்தே வாழ்வதாய் பெண்ணினம்.
முடியாமை மனதளவில்.
பெற்றவனுக்கு முதல் அடிமை.
கூடப்பிறந்தவனுக்கும் அடிமை.
கை பிடிப்பவனும் தொடர அப்படியே...
தானே தாலாட்டும்
பிள்ளைக்கும் தான் அடிமை.

இறைவன் முடிதொட்ட விஞ்ஞானம்
மனித இயல்பின் வாழ்வை
மாற்ற முடியாததாய்.
இன்றும் தலைமுறை
தொடரும் வாழ்வாய் இது.
தாலிக்கயிறே தூக்குக்கயிறாகி
கூண்டில் பறவையாகி
கட்டாயக் கைதியாகும்
கண்ணீர்ப் பறவையவள்.
தூக்குக்கயிற்றின்
முன்னோட்ட முடிச்சே
அவள் கழுத்தில்
மூன்று முடிச்சாய்.
102 சவரனில்
அழகாய் ஒரு தூக்குக்கயிறு.

கர்ப்பப்பை காலியானாலும்
காயாத கண்ணீர்ப்பை.
துக்கத்துள் தூக்கம்
தொலத்த பாவியவள்.
விழித்திருக்கிறாள்
இன்றும்...
தான் பெற்ற பிள்ளையாவது
தன் விலங்கை
அவிழ்ப்பான் என்ற
நம்பிக்கை ஏக்கத்தோடு !!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, March 23, 2008

விதிக்கு ஓர் வேள்வி...

வாழ்வு புயல் வேகம்.
விழுதலும் எழுவதுமாகி
வலிக்கிறது.
வழி கடக்க
உடம்பும் மனமும்
சேர்ந்தே சோர்கிறது.
வைராக்கியத்தை
விட்டு விட்டால்...
கிடையில் கிடந்தேவிடும்.
தொடர்ந்து நடக்க...
காடும் கரம்பும்
கல்லும் முள்ளும்.
மலர்ப்பாதை ஒன்றுக்காய்
தாகம் தீர்க்க...
தடாகம் ஒன்றுக்காய்
ஏக்கமும் எதிர்பார்ப்புக்களும்
வாழ்வுக்குக்குள்.
ஏக்கமும்...எதிர்பார்ப்புக்களும்
இயற்கையே.
வாழ்வே ஏக்கமானால்....?
விடுகதைக்கு விடையுண்டு.
விடையில்லா வாழ்விது.
விதி என்ற பெயரில்
வேளை என்ற பெயரில்
வாழ்வின் எல்லை வரை
எல்லாமே ஆசாபாசங்கள்.
கொள்ளை போகிறதே வாழ்வு.
விதியும் வேளையும்
எதுவரை...?
விதிக்கும் வேளைக்கும்
வராதா சாவொன்று.
கொள்ளி கொண்டு
நான் கொழுத்திவிட!!!!!!

ஹேமா(சுவிஸ்)11.02.2003

Friday, March 21, 2008

விதி....


வெறி கொண்டு....
வேட்டை ஆடுகிறான்
அரக்கன்.
விதி கொண்டு
வழி செய்வோம்.
எம் மண்ணை
நாமே மீட்போம்.
தமிழ்...
இன அழிப்பு
நித்தமும்.
இடம் விட்டு...
இடம் விட்டு...
இனி
இடம் பெயர
இடம் இல்லை
எமக்கு.
பொறுமை...
பொறுமை...
எருமை மாட்டில்
மழை பெய்த
கதைதான் அது.
தலைமுறை
தலைமுறையாய்
அடிமை வாழ்வு.
எழுவோம்
நாம்
இத்தலைமுறை.
அடிமை விலங்கை
விலக்கி
எழுவோம்.
போதுமடா சாமி
பிச்சை போட்டது.
பருக்கைகள் தூவி
பட்டினி ரசிக்கிறாய்.
போர்..போர்..போர்
கூப்பாடு போடுகிறாய்.
யார்தான் மாற்றுவது
உன் தலை விதியை.
யாமறியோம்
பராபரமே!!!

ஹேமா(சுவிஸ்) 19.03.2007

Thursday, March 20, 2008

நிமிடத்து வாழ்வோடு....

மறந்தால்தானே
நினப்பதற்கு...
எம் வாழ்வே நீங்களாய்
நிறைந்திருக்கும்போது
மறத்தல் எப்படி?
ஈழத்தாயின் கழுத்தில்
கார்த்திகை மலர்
மாலையாய்
என்றுமே நீங்கள்தானே.

பருவத்து வாசல் தாண்டி
வசந்தத்தை தூரவே விரட்டி
எந்த நேரத்திலும்
சாவை மட்டுமே
சந்திக்கத் துணிந்து
கந்தகக் குடுவையாகி
காவல் தெய்வங்கள்
நீங்கள்தானே.

சுதந்திரத் தாய்
உங்களைத் தாங்குகிறாள்.
நீங்கள் சிந்திய குருதியே
தமிழ் ஈழத்தின்
வரைபடமாய்.

நீங்கள்
இல்லையேயென்று
மனம் அழுதாலும்
இல்லை...... இல்லை
எம் நிமிடத்து
வாழ்வோடு நீங்கள்தானே.
நீங்கள் விட்டுப் போன
மூச்சைத்தானே சுவாசிக்கிறோம்
இன்று நீங்களே
எங்கள் மூச்சாய்.

தமிழ்த்தாயின் விலங்கொடிக்க
விலங்குகளோடு
விலங்காய் நீங்கள்.

ரணங்கள் தந்த வாழ்வில்
நிவர்த்தியே தவிர
நிவாரணம் தவிர்த்து,
வெளிச்சமாய்
இருந்து வழி காட்ட
நாங்கள்
அவ்வழி நடக்கிறோம்.

பெற்றவர் மானம் காக்க
பிறந்த மண் காக்க
சுற்றம் சூழல்
சுய நலம் மறந்து,
உறுதி கொண்ட மனதில்
ஒன்று மட்டுமே
எதிர்பார்ப்பாய்
உங்கள் இலக்கை
மட்டுமே கையிலேந்தியபடி
மெழுகுதிரியாய் நீங்கள்.

உங்கள் கல்லறைப்
புல் பூண்டுகள் கூட
முளை விடும்
உங்கள் இலக்கோடுதான்.

உங்கள் கனவுகளின்
தொடர் பாதையிலேதான்
இன்றைய
எம் இறுதிப் பயணங்கள்.

உம்மைக் கொடுத்து
எம்மை வாழ வைத்த
உங்களை மறத்தல் எப்படி?
எம் வாழ்வே நீங்களாய்
நிறைந்திருக்கும்போது!!!!!!

ஹேமா(சுவிஸ்)22.11.2007

Wednesday, March 19, 2008

அகதி...


குளிர்ந்து விறைத்த
இரவுக்குள்
உறைகளுக்குள்
புதைந்து கிடக்கின்றன
கைகளும் கால்களும்...
மனம் மட்டும்...
என் மண்ணில்
நேசித்த மனிதர்கள்...
ரசித்த பொழுதுகள்...
மண் குடிசைகள்...
கோவில்கள்...
வாழ்வின் மீதான
நிரம்பிய காதல்...
அத்தனையும்
கலைக்கப்பட்டு,
கனத்த மனத்தோடு,
மட்டும்...

நாடு கடத்தப்பட்டேனா
இல்லை
துரத்தப்பட்டேனா...

மூச்சு முட்டிய கேள்விகள்
ஆஸ்த்துமா வியாதிக்காரனாய்...

இவர்கள்
அரசியல் சூதாட்டத்திற்கு
அகப்பட்டவர்கள்
அப்பாவிகள்
நாங்கள்தானா...

இன்று
ஏதோ ஒரு
தேசத்தின்
ஒரு
மூலையில் நான்...

கண் மூடும் நேரமாவது
என் மண்ணில்
கால் புதைக்க...
தலை சாய்க்க...
என் மண்ணின்
தாகத்தோடு
விழித்தபடி
அகதியாய் !!!!

ஹேமா(சுவிஸ்)10.01.07

இனிமேல் இல்லை...


தொலைத்தலும் இழத்தலும்
என் வாழ்வின் வழமையாய்...
எல்லாம் இருந்தும்
எதுவுமே இல்லாதவளாய்...
வெறுமையாய்
என்னையே வெறுத்து
நின்ற வேளை
ஒளி தந்து
விழிதந்தவனாய் ஒருவன்.
இருளுக்குத்
தத்துவம் சொல்லி
வெளிச்சத்தை
அறிமுகம் செய்தவன் அவன்.
அதனாலேயே
என் பயணம்
இன்னும் தொடர்கிறது
அவன் பின்னால்.
ஊசி இலைக் காடுகளிடையே
திசை தெரியாமல்
நடத்தலும்
ஓடலுமாயிருந்த நேரம்
என்றோ வாங்கிய
கடனுக்காய்
வழி மறித்தவனாய்
அவன் கைகளுக்குள்
சிக்கவைத்தான்.
தலை நிமிர்ந்து
பேசவைத்தான்.
வாழலாம் வா...
உலகம்
உனக்காகவும் விரிந்து
உன்னையும் வரவேற்கிறது
என்றான்.
சுட்டு விரலால்
என் விரல் தொட்டு
தைரியம் தந்தான்.
ஓரக் கண்ணின்
கசிவைத் தவிர
மெளனித்தவளாய் நான்
இன்று.....
ஓவியமாய்...
சித்திரமாய்...
அழகாய் பதிய வைத்துப்
பூஜித்தபடி நான் இப்போ.
மயக்கத்தில் கூட
கால்கள்
அவனை நோக்கியே.
இனிமேல்
தொலைத்தலும் இழத்தலும்
என்பது அவன்.......
அவன்
மட்டுமாகத்தான் இருப்பான்
முதலும் முடிவுமாக!!!!

ஹேமா(சுவிஸ்)29.10.2007

வானொலிக் காதலன்...


யார் நீ எங்கிருந்தாய்
ஏன்...எப்படி
எனக்குள் இத்தனை
ஆழமாக.....
மேகம் மறைத்ததோ
முகில்கள் மூடியதோ
இன்று....
முன் வந்து
மழையாய் பொழிகிறாயே!!!
மகிழ்ச்சி மழையில்
நனைந்து
கொண்டிருக்கிறேன்.
பாடல் ஒன்று கேட்டேன்...
பாடல் ஆகினாய் நீயே.
காற்றின்
அலைவரிசைதானே
உன்னை எனக்கு
அடையாளம்
காட்டியது.
இன்று
எனக்கே அடையாளம்
தந்து
அடைக்கலமும்
தந்துவிட்டாய்.
அன்புக்காய்
என் நன்றி
உனக்கா....
இறைவனுக்கா!!!!!

ஹேமா(சுவிஸ்)05.09.2007

Friday, March 14, 2008

போகிறேன்...


நீ...
நிராகரிக்கப் பட்டிருக்கிறாயா
எப்போதாவது...
எதற்காகவாவது...
அதன் வலியை
அனுபவித்திருக்கிறாயா!
நான்
நிராகரிக்கப் படுகிறேன்
உன்னால்...
ஏனோ...
உனக்குப்
பிடிக்கவில்லை
என்னை.
எதற்காகவோ.
தவம் செய்கிறாய்.
கலைந்து போக
வேண்டாம் என்னால்
உன்
தவ வாழ்வு.
நானும்...
வேண்டிக் கொள்கிறேன்
உன்
வரத்திற்காக
என்றும்.

என் இமைக்குள்
சுமையாய்
உன் நினைவுகள்...
முடியாமலிருக்கிறது
உன்னை மறக்க!!!!!
மறந்தாலும்
நினைத்துக் கொள்
எப்போதாவது...
ஈழத்து மகள்
ஒருத்தி
உனக்காக...
என்றோ ஒரு நாள்
தவம் கிடந்தாள்
என்று!!!!

ஹேமா(சுவிஸ்)25.12.2006

"இளவரசி"


சிட்டுப்போல... பட்டுப்போல...
சின்னதாய்...
அழகானதாய்...
தொட்டால் கசங்கிவிடும்
பஞ்சுப்பெட்டகமாய்.
தொட்டுப்பார்
என் கன்னத்தை
தட்டித்தடவும்போது
விட்டு வெளியில் ஓடி
ஒளிந்திருந்து
"அம்மா"என்று
அழைத்திடும் அழகு.
சங்கத்தமிழில் சொல் கோர்த்துத்
தனக்கென்று ஒரு மொழியில்
மொழி பெயர்த்து
செவ்விதழ் விரித்து
"அம்மா"என்று
அழைத்திடும் அழகு.
இரு வர்ணம்
கலந்து தீட்டிய ஓவியமாய்
இரு பவளம் பதித்து
ஒளி கொடுக்கும் கண்ணிரண்டாய்
தாமரை இதழ் மடித்து
இரு காதுகளாய்
சின்ன வெண்கற்கள்
கோர்த்தெடுத்த பல்வரிசையாய்
குதறும் கூர்மையாய்
போதைச் சிரிப்பொடு
"அம்மா" என்று
அழைத்திடும் அழகு.
எட்டி நின்று ஜாலம் காட்டி
உருட்டி விட்ட பந்தைக்
கட்டிப்பிடித்து உருண்டெழும்பி
திரும்பவும் உருட்டக் கேட்டு
கண்ணால் கதை சொல்லி
"அம்மா" என்று
அழைத்திடும் அழகு.
கள்ளமில்லாப் பிள்ளையவள்
கொள்ளையின்பம் காட்டுபவள்.
குழந்தையும் தெய்வமும்
கொண்டவர் உள்ளம் வாழும்.
சூதில்லை வஞ்சகமில்லை
பொறைமையில்லை
பொச்செரிப்பில்லை
குறை நிறை சிறிதுமில்லை
சுட்டெரிக்கும் பார்வையில்லை
விளக்கங்கள் குழப்பங்களில்லை
வேஷமில்லை கோஷமில்லை
உன்னது என்னது இல்லை
பொய் பிரட்டுப் போலியில்லை
புரியாதது எதுவுமில்லை
இத்தனையும் இல்லையென்றால்
இக்குழந்தை ஜடமுமில்லை.
என்னை முகம் பார்த்துக் கனிவோடு
"அம்மா"என்று
அழைக்கும் அழகு.
ஆனால் இன்று
"அது"அதுதான்
அன்பு தந்த அந்தக்
குழந்தைக்கு உயிரில்லை.
ஆறுதலாய் நான் அணைத்த
அந்த உயிருக்கு உயிரில்லை.
முன்னைய இரு நாட்கள் முந்தி
என்னோடு உண்டு உறங்கி
அழகாக என்னை
"அம்மா"என்றழைத்த
அச்செல்வம் இன்றில்லை.
முந்தை நாள் அடுக்களை
நான் துடைக்க... தன் வாலால்
தானும் துடைத்து
வாய் நிறைய"அம்மா"என்றழைத்து
பால் குடித்துப் படிக்கட்டுக் கடந்த
என் "இளவரசி"
இருபது நிமிடங்கள் கடந்திருக்கும்
திடீரென்று ஓலமிட அவலப்பட்டு
அருகில் வர"அம்மா"என்று
அழகாக அழைத்து
அடங்கியே போனது.
"இளவரசி" என்கிற
என் அன்புப் பூனைக்குட்டி!!!!!!

ஹேமா(சுவிஸ்)
29.01.2003 Mr & Mrs Lüthi Markus & Sybille Swiss Bern.

Wednesday, March 12, 2008

Tuesday, March 11, 2008

Thursday, March 06, 2008

யார் யாரோ...யாரிவரோ

குழந்தையின் ஏணையில்
தாங்கும் சேலை
அப்பாவாய்,
பிணைக்கும் கயிறு அம்மாவாய்.
அத்தனை அன்பாய்...
இறுக்கமாய்... பிணைப்பாய்
அணைப்பாய்... பாதுகாப்பாய்.
பத்துக் குழந்தைகளுக்கும்
பத்திரமாய் பகிர்ந்து
அள்ள அள்ளக் குறையா
நிரம்பி வழியும்
அட்சயபாத்திரமாய்
அவள் அன்பு.

எமக்காய் தன் இன்பம்
தான் இழந்து
உழைத்து... உழைத்தே
குடும்பம் உயர்த்தும் அப்பா.
உடல் வற்றிய போதிலும்
எதிர்வரவு பாராத
வற்றாத அன்பாய்
அவர்கள் அன்பு.

சின்னத் துன்பத்திலும்
துடித்துப்போகும்
தொட்டில் அன்பு.
வானம் விட்டுத்
தாண்டிய உறவின்
வேறுலகம் அவர்களது.
வறுமை உலவினாலும்
வற்றாத அன்பு குழைத்து
நிலவு காட்டி ஊட்டிடும் தாயன்பு.

இயற்கை இதுதான்
என்றாலும்...என் வீட்டில்
அப்பாதான்
முழு நிறை அன்னையாய்
அம்மாவை விட
தாயன்பு நிறைவாய்.
தூக்கத்தில் முனகினாலும்
அணைக்கும் கை
முதலில் அப்பாதான்.

உடல் சோரும்போதெல்லாம்
தன் தூக்கம் தொலைத்துத்
தூக்கியே தோளில் தாங்கி
ஆரிரரோ பாடிடும் அன்பு.
அரிவரி படித்ததெல்லாம்
அப்பா நெஞ்சில்
தவழ்ந்தபடி.
சமைத்தும் தந்திடுவார்
விதம் விதமாய்.

அம்மாவோ....
அத்தனையும் செய்தாலும்,
அன்பு அதிகாரமாய்
வெளிக்கொணரும்
விதம் வித்தியாசமாய்.
இடி முழங்கித்தான்
மழை பெய்யும்
பூமியைப் பசுமையாக்க.

உணர்கிறேன் இன்று
வயதின் எல்லை
நான் எட்டித் தொட.
அதே அன்பு
இன்றும் குறையாமல்
அவர்களிடம்.
ஜென்மம் வேண்டும்
அவர் கடன் தீர்க்க.
மீண்டும் மடி தவழ
ஆசையோடு மனம் நிறை
வாழ்த்துக்களும் கேட்டபடி !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, March 04, 2008

உன் நினைவு


மன்னித்துக்கொள்...
இனியாவது
என் பொழுதுகள்
கொஞ்சம்
உனக்கானதாய்.
தாயின் கருப்பையில்
உயிர் உரசும்
குழந்தையாய்
உன் நினைவு...
மறக்கவே முடியாததாய்.
மன உளைச்சலும்
உடல் உளைச்சலும்
சேர்ந்தே உன்
நினைவையும்
நேரத்தையும்
விழுங்கிக்கொள்கிறது.
மன்னித்துக்கொள் மீண்டும்.
நீ வருகிறாய் என்பது
என்...
எத்தனை வருட
வேண்டுதல்.
அறிவாயா நீ.
பனிக்காலங்களில்
காணும்
பகலவனைப்போல.
சந்தோச வெப்பத்தோடு.
என் இறக்கைகள்
அறுக்கப்பட்ட நிலையில்
உன் இறக்கைகளின்
துணையோடுதானே
இன்று.
என் ஜீவனை
புதுப்பிக்கும் சக்தி
உன்னிடம் மட்டும்தானே.
புரிந்து கொள்
என் அன்பே
நான் உன் அன்பான
ராட்சதக் காதலிதான்.
உனக்குள்ளும்
ஆவல் இருக்கிறது
என் அன்புக்கும்
கொஞ்சலுக்குமாய்.
மனிதம் மறந்த
இயந்திர வாழ்வில்
உன்னோடு கழிக்கும்
அந்த மணிப்பொழுதுகளே
என் நின்மதிக் கணங்களாய்.
என்றாலும்....
சிலசமயங்களில்
அவ்வப்போது
உன் நினைவைத்
தொலத்துவிட்டு
புலம்புவது
என் அன்றாட
வழக்கமாகி
விடுகிறது!!!!!!

ஹேமா(சுவிஸ்)25.09.2007

Monday, March 03, 2008

நீ....


என்....
கனவுக் காலங்கள் நீ...
கவிதைகளின் நாயகன் நீ...
புதிதாய்ப் பக்கங்கள்
எழுதியவன் நீ...
வாழ்வையே
புரட்டிப் போட்டவன் நீ...
மூடியும் திறந்துமாய்
இருந்த என் பக்கங்களை
தொடர்ந்தும் படித்தவன் நீ...
இன்னும் பச்சை இருக்கிறதா
என்று பரீட்சித்துப் பார்த்து
மீண்டும் துளிர் விட
நீர் வார்த்தவன் நீ...
எனக்குள்ளும் இருந்த
நேசத்தின் கூச்சலை
அறிமுகப்படுத்தியவன் நீ...
நெருப்புக்குள் நின்ற
என்னை நீராக மாற்றி
குளிர்மையை
உணர்த்தியவன் நீ...
நச்சுப் பாம்புகளின் நடுவே
நம்பிக்கை ஒளி காட்டிய
நேர்மையின் சாயல் நீ...
மலையைக் கூட
மடி தவழும் குழந்தையாய்
மாற்றித் தந்தவன் நீ...
அலை புரண்ட மனதிற்குள்
கரையாய் நின்றவன் நீ...
உள்ளக்கலவரதின்
உரிமையாளனும் நீ..
வெள்ளை மலருக்கு
வர்ணச் சேலை கட்டி
வாழ்வின் வட்டம் விட்டு
வெளி வரச் செய்தவன் நீ...
எல்லாம்.....
எல்லாம் எல்லாமுமாய்
இருந்த உன்னை
முடியாது......
சொல்ல முடியாது.
வரிகள் வரவில்லை
எனக்குள் உயிரில்லை.
அழக்கூட முடியவில்லை
கண்மணியாய் நீ...
நம்பிக்கை தந்த
உன் சிறு விழிகளுக்குள்
அடங்கும் என்
வீரமும் விவேகமும்.
வேறு என்ன...எப்படி...
இனி எனக்கான புத்ககங்கள்
ஸ்தம்பித்துக்கொள்ளும்.
எதுவுமே எழுவதற்கில்லை
உன்னால்...
புரட்டப்பட்ட பக்கங்கள்
என்றும் உனக்கானதாய்.
நீ படித்து
விட்ட வரிகளிலேயே
காத்துக்கிடக்கப் போகின்றன.
என் நேசத்தின்
அடையாளத்தோடு!!!!!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, March 01, 2008

அன்பே வா...


சோககீதங்களின்
இசைத் தெரிவில்...
முரண்பாட்டு முடுக்கின்
தகராற்றுச் சந்தியில்...
அறிமுகமாகினாய் நீ.
தடவைகள் சில
தர்க்கப்பட்டாலும்
பறக்கின்ற பட்டாம்பூச்சி
தொட்டுச் செல்லுகையில்
விட்டுச் செல்லும்
வர்ணப் பொடியாய்
உன் சிநேகம்.
தாயின் மடி தேடும்
கன்றின் உறவாய்
உன் வரவு.
அன்றைய திகதியில்
நானோ...
மீண்டும் மீண்டும்
சோதனைச் சிலுவையில்
எனக்கு நானே
ஆணி அடித்துக் கொண்டு
சோகச் சாவடியில்.
நீயோ...
கிளிப்பிள்ளையாய்
சொன்னதையே
திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொண்டு
என்னடியில்.
இன்று....
அதிசயமாயிருக்கிறது
என்னை நினைத்தாலே.
இத்தனை ஆழமாகவா
எனக்குள் நீ!
அத்தனை அன்பா உனக்குள்!
நிறைந்த தைரியசாலிபோல
ஒரு திமிர் எனக்கு.
தெரிகிறது இப்போ அது
நீ தந்ததென்று.
இரும்பென்று இருந்த
என் இறுமாப்பு
மெழுகிலும் மெலிதாக.
என் அன்பின் வட்டத்துக்குள்
நீ மட்டுமே
உலாவியிருக்கிறாய்.
நீ என் பாதுகாவலன்.
உன் திடீர் பிரிவு
மனதை
முடமாக்கிக் கிடத்திவிட
ஆயிரம் கேள்விகளுக்கு
நீ ஒருவனே பதிலாய்.
நீ இல்லாத பொழுதுகள்
ஒவ்வொன்றும்
கணங்களாகி யுகங்களாகி.
மீண்டும்...
தனிமையாய் வெறுமையாய்
ஏழ்மையாய் ஆனதாய்
ஒரு தவிப்பு.
என் பலமும்
பலயீனமும் நீதானடா.
சின்னதாய் தனிமையாய்
இருந்த என் உலகத்துக்குள்
எப்படியோ
நுழைந்துகொண்டாய்
என்னையுமறியாமல் நீ.
என் இனியவனே...
உனக்குள் உறைவதிலும்
உனக்குள் தொலைவதிலுமே
ஒரு ஆனந்தம்.
உறங்கையிலும் நீயாய்
விழிப்பிலும் நீயாய்
நினைவுகள் நிறைய நீயாய்
கனவின் கற்பனைகளில் நீயாய்
கண்கள் முழுதும் அன்பே நீயாய்
நெஞ்சம் கனக்க
காதல் நிறைத்துக்
காத்திருக்கிறேன்.
உயிரே...
வந்துவிடு காற்றாய்
விரைந்து வந்து விடு!!!!

ஹேமா(சுவிஸ்)