மகளே எழு...
விழித்தெழு... விரைந்தெழு
இன்னும் ஏன் அழுதபடி?
அடிமை ஓலை ஏதாவது
எழுதிக் கொடுத்தாயா?
சமூகம் எப்போதுமே
சலசலக்கும்
கவலை விடு.
நன்மைக்கும் சரி
தீமைக்கும் சரி
பின்னால் பேசும்.
செவி சாய்த்தால்
சாய்வது நீயேதான்.
நீ பறி கொடுத்த
வசந்தம் கூட
கைக்கெட்டிய தூரத்தில்
காத்துக்கிடக்கிறது
கவலையோடு உனக்காக.
காதல் வலைக்குள்
கல்யாணச் சிலந்தியாய் நீ.
உன்னை நீயே
புதைத்துக் கொள்கிறாய்
கல்லறைக்குள் ஏன்?
தன்னை
மறைத்துக் கொண்டிருக்கிறானே
தவிர மாறவில்லை
என்றும் ஆண்.
உன் வீட்டிலும் கூடத்தான்.
மனதால்...
முன்னூறு வருடங்களுக்கு
முன்னால் உன் கணவன்.
காலத்தின் கைதியாய்
எதற்கு நீ?
நீயும் தீக்கொளுத்து
உன் பயத்தை.
உபயம் யாருக்காக...
வாழ்வை அர்ப்பணிக்கிறாய்.
வாழ்வு வாழத்தான்...
திரும்பிப் பார்
நீ வாழ்ந்த வாழ்வையும்
இப்போ...
வாழாமல் புதை குழிக்குள்
வீழ்ந்து கிடக்கும் உன்னையும்.
தட்டு...
உன்மனத் தூசுகளைத் தட்டிவிடு...
தைரியத்தை தட்டியெழுப்பு...
தன்மானத்தை தூக்கியெடு...
அடிமைத்தனத்தைத் தூக்கியெறி...
பூவாய்... பாவையாய்
பெண்களைப் போற்றினாலும்
அதற்குள் புதைந்திருக்கும்
பூடகம் அறிவாயா.
வாடிய பூ பிறகெங்கே...?
பேசாத பொம்மை பேசினால்...?
பிறக்கிறது 2008
இன்னும் பெண்ணுக்கு
"அடுக்களையில் வேலையிருக்கு
கணணியில் உனக்கென்ன அலுவல்.
பிள்ளை அழுகிறது,
இப்போ என்ன
ஈமெயில் வேண்டியிருக்கு"
அன்புக்குக் கட்டுப்படு.
அடிமைத்தனத்தை
உதைத்துத் தள்ளு.
இன்னும் ஏன்
ஆணவமே உருவமான
ஆணுக்கு அடிமையாய் நீ!
அடிமை ராணியே எழுந்திரு...
வெட்டியெறி...
அடிமை விலங்கை.
மனிதம் வளர்..
தன் மானம் காட்டு...
நீ நீயாய் வாழ்...
உனக்காய் வாழ்...
இற...
பெண்ணின்
பெருமையோடு இற!!!
ஹேமா(சுவிஸ்) 26.12.2007
உள்ளம் ஓ...வென்றே பொங்க
கண்கள் குமுறிப் பொங்க
எண்ணத்துள் கோலம் பொங்க
மண்பானை பொங்க
நினைவுகள் அரிசியாய் வெல்லமாய் பொங்க
கோபமே நெருப்பாய் பொங்க
பொங்கிய காலங்கள் ஏங்கிப் பொங்க
தஞ்சமாய்த் தமிழன் தரணியெங்கும் பொங்க
அகதி நிலை அகற்றவே பொங்க
மதபேதம் மறந்தே பொங்க
ஜனவரி (தை 1)14 ல் உலகத் தமிழர்தினம் பொங்க
ஒன்றே கூடி நாம் ஒரே நாளில் பொங்க
இயற்கையை மறவாமல் ஏற்றிப் பொங்க
பனிமலை நாட்டில் கருமுகிலே விடியலாய்ப் பொங்க
பகலவன் மறைவாய் மின் அடுப்பில் பொங்க
வேண்டுதல் வேண்டிக் கைகளும் பொங்க
பொங்கலோ பொங்கல் ஓசை பொங்க
கதிரவன் தேடிக் கண்களும் பொங்க
சூரியன் வருவான் நம்பிக்கை பொங்க
தமிழீழம் நோக்கிப் பாலும் பொங்க
பெற்றவர் உறவோடு மீண்டும் கூடிப் பொங்க
காத்திருக்கும் அகதித் தமிழர் பொங்க
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்!!!!
ஹேமா(சுவிஸ்14.01.2008
துயரம் துயரம்.....
சொல்லொனாத் துயரம்.
மனதைப்
பிடுங்கியெடுத்து
எறியும் துயரம்...
ஐரோப்பியப் பிரதேசத்தில்
ஓ...வென்று குழறியழ
முடியாத் துயரம்.
இங்கு வாழும்
நாய்களின்
நின்மதி கூட
நம் தமிழனுக்குக்
கிடைக்காத துயரம்.
நித்தம்... நித்தம்
தமிழனின்
உயிர் விலை
சரிந்து கொண்டே
போகிற துயரம்.
என்றுதான்
இரத்தஆறு
இல்லையென்றாகி
சத்தம் சந்தடி ஓய்ந்து
சொந்தங்களோடு
சேரமாட்டோமா
என்கிற துயரம்.
கொல்லுதலும்
செத்தலும்
இல்லாமல்
கஞ்சியோ கூழோ
சஞ்சலமில்லாமல்
சாதி சனத்தோடு
சேர்வோம் என்கிற
ஏக்கத் துயரம்.
வாழ்கின்ற வயதில்
பிஞ்சுகளும் பூக்களுமாய்
பறையடிக்கப் பாடையிலே
போகிறாரெனப்
புழுங்கும் துயரம்.
நான்கு பிள்ளைகள்
பெற்றெடுத்தும்
அநாதையாய்
வயோதிப காலத்தில்
நாதியற்ற பெற்றவர்கள்
அவதியுறும் துயரம்.
எத்தனை அவலம் சந்தித்தும்
எல்லாமே
பலனற்றுப் போகும் துயரம்.
முயற்சிகள் அனைத்தும்
துன்பமாய் துயரமாய்
திரும்பத் திரும்பத்
தமிழன் தலையில்
இடிதான் என்கிற
துயரம்!!!!!!!!!
02.11.2007(சுப.தமிழ்செல்வன் இறந்த தினம்)
தேசம் கடந்திருந்தும்
நேசம் நிறைந்தபடி.
முகங்கள் மறைந்திருந்தும்
மனங்கள் நிறைந்தபடி.
யார் நீ...
பழைய உறவோ
பறந்து வந்து
பாசமாய் ஒட்டிக்கொண்டாயே.
மூடிய சிப்பிக்குள்
மண்ணா... முத்தா!!!
வெளியில் முகமும்
உள்ளுக்குள் மனமுமாய்
படைப்பின் இரகசியம்.
உடைக்க முடியவில்ல
மனதின் திரைகளை.
கலங்கிய பொழுதெல்லாம்
காற்றில் கை கோர்த்து
என் கண்ணீர்
துடைக்கின்றாய்.
கூடப் பிறந்தவனாய்
என் பாரம் சுமக்கின்றாய்.
பகிர்ந்து கொள்கிறாயே
எதிபார்ப்புக்கள்
எதுவும் இல்லாமல்.
பேசும் போதெல்லாம்
மனம் இலேசாகி
இறகாகிறதே நண்பனே.
வலி குறைந்து
கலவரம் நீங்கி
வாழலாம் போலிருக்கிறதே.
எப்போதும் நினத்துக்கொள்.
தூரம் தொல்லைதான்.
மனங்கள் தொலைவிலில்லை.
உண்மை அன்பு எம்
உள்ளங் கைகளுக்குள்.
தோழனாய்
நீ...
தோழியாய்
சோதரியாய்
நான்...
வாழ்வோம்
வா என்றும்!!!!
ஹேமா(சுவிஸ்)21.06.2007
கண்ணாய்... கனவாய்....
சொல்லாய்...சுகமாய்...
வானாய்...வடிவமாய்...
இனிமையாய்...ஏக்கமாய்..
இசையாய்...தமிழாய்...
தென்றலாய்...தீயாய்...
காதலாய்...கவிதையாய்...
குழந்தையாய்...இளமையாய்...
கண்ணணாய்...கணவனாய்...
தாயாய்...தோழனாய்...
பார்க்கின்ற திசையெங்கும்
பசுமையாய்...
சிந்துகின்ற சிரிப்பில் உள்ளம்
வெள்ளையாய்...
அத்தனையும் நீயாய்
காண்கின்ற போதிலும்...
வருடங்கள் ஏழு கடந்தும்...
தூரத்து நிலவாய் ஒளி மட்டும்
தந்து மறைகிறாய்...
ஏனோ?????
ஹேமா (சுவிஸ்)23.
05 2006