*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, August 07, 2014

பச்சைக் கள்ளன்...

நீ...
உதடு
பதித்தெழுதியபோது
தெரியவில்லை
நம்
உயிர் தொட்டெழுதும்
வாழ்வின் உயிலென்று.

உன் நிழலால்
புசிக்கப்பட
என் மிச்சங்கள்
பாசியாய் வழுக்கி
எம்பிப் பறக்கிறது
உதட்டுப் பூக்களென
பச்சை பச்சையாய்.

காதலாய்
மலைப்பாம்பெனப்
பற்றிக்கொண்டு
என் இறகையும்
பறித்துக்கொண்டு
பற்றிக்கொண்டதும்
பறித்துக்கொண்டதும்
நானென
பறையடிக்கிறாயே
இறகுக்கள்வனே.

பறவையாதலும்
பைத்தியமாதலும்
சுகம்தான்
அன்பின் தோள்களில்.

பச்சைக் கள்ளா
உனக்கா தெரியாது
அன்பின் பாரம்!!!

குழந்தைநிலா ஹேமா.

Wednesday, August 06, 2014

குறிப்பற்ற யாசகம்...

ஆயுள் அவிரும்வரை
அஞ்ஞிமிறுக்கு
குறுஞ்செய்தியனுப்பலாம்.

தற்கொலையோ
இல்லை இயல்போ
இறுதியாய்த்தானே
உதடிறுகும்.

காத்திருக்கிறேன் குரல் கேட்க
நகச்சதை கடித்துத்துப்பி
இரத்தக்களறி...நுகர்ந்தும்
வந்தபாடில்லை அது
ஆனால்
அத்தனை கொடியதுமில்லை.

இன்றைய வெயிலை
உலர்த்தும் தென்றலிலும்
சில தீர்வுகள் இருக்கலாம்
சிந்திக்குமுன்
ஆவி நழுவுகிறது
சில பஞ்சுப்பூக்களோடு.

உரையாணி தேவையாயிருக்கிறது
பிரியங்களை மௌனமாய் மாற்றி
கனவுகளுக்குள் குறித்துக்கொள்ள.

இனிப்பெனத் தரும் கசப்பை
சொட்டுச் சொட்டாய்
உயிருருவிச் சிதிலடைத்து
வா........
எனக்கூறிவருமொருநாள்
மரணம் புதிர் அறுத்து.

சதுர்யுக யாசகம்
நெடுக நெடுக...!!!

குழந்தைநிலா ஹேமா.

Friday, August 01, 2014

நினைவோடு வாழ்த்து ....

முழுமதியன்று
என் தேநீர் குவளையில்
தவறி விழுந்த
ஓர் பால்நிலாத்துண்டு
அலைந்து களைத்துப்போய்
உருகித் தேய்ந்து தத்தளிகிறதே...

ம்...
எடுத்து வைக்கிறேன்
குளிர்ந்த பாலில்
அவன் வரும்வரை
சிந்தும் முத்தங்களை
சிந்தாமல் சேமித்து
சந்தம் பாடியே
மூழ்கிய நிலவை
முழுதாய்
சரிசெய்துகொள்ள !

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராம் !


Saminathan Ramakrishnan
 
குழந்தைநிலா ஹேமா

யாமம்...

யாமக் கவிதைகளை
எழுதத் தொடங்கியிருந்தான்.

மனங்கொள்ளா அலையென
அவன் தரப்போகும் முத்தம்
தோற்றப்பிழையாகி
உச்சுக்கொட்டுகிறது
இப்பொழுதே.

மனம் பிறழ்ந்த
அவன் பிறந்த நாளொன்றில்
எதிர்ப்படும்
விலங்கொன்றைக் கொல்கிறேன்
வன்மத்துடன் கூரிய நகங்களால்.

சொற்குவியலுக்குள்
புதைத்து வைத்த
அற்புதத் தோற்றமாகிறது
என்னை மூச்சிழக்க வைக்கும்
முத்தமொன்று
தருவதாகச் சொன்ன அந்த
ஒற்றை வார்த்தை.

அன்பே...
இனியெப்போதும்
உயிர் பறிக்கும் நிகழ்வொன்றை
ஒத்திரா
உவப்பில்லா
ஆழத் துளைத்தொரு முத்தமிடு
என்னை எரிக்கும்
தீயாய் இருக்குமது.

உன் ப்ரியக் கயிறு
முகரும் இறுக்கத்தில்
தெரிகிறதுன் நேசம்.

நடுங்கும் தேகமதை உப்பிட்டு
கொஞ்சம் பனி தூவி
இருள் மறைத்த
நிலவின் பின் புறம்
நட்சத்திரக் கட்டிலில்
கிடத்தென்னை.

குளிர்காலச் சருகாய்
எனக்கான கரிசனங்களை
இனி உதிர்த்துவிடு
ஒவ்வொன்றாய்...

ஒரு முத்தத்திற்கான
காரணமேதும் தெரிவதில்லை
ஒரு தற்கொலைக்கான
காரணம்போல!!!

குழந்தைநிலா ஹேமா

Thursday, July 31, 2014

ஜூலை 30...

ஓ...
வருடங்கள் எண்ணவில்லை
எண்ணத்தில் நீயிருப்பதால்.

கடக்கிறது இன்றைய
ஜூலை 30 ம்
நீ...விட்டு விட்டுப்போன
இடத்திலேயே
அப்படியே
இன்றும் நான் .

சாத்தான்களின் கனவுகளில்
வண்ண இறக்கைகளோடு
நான் வருவதாகவும்
தங்கள் இறகுகளைப்
பறிப்பதாகவும்
பறித்து
நிறம் மாற்றுவதாகவும்
குற்றம் சொல்கிறார்கள்.

எனக்கோ உறங்குகையில்
நீ விட்டுப்போன இறகும்
பறித்துப்போன இறகும்
வர வர
வண்ணமிழந்தபடி
பிறப்பின் கடனில்
இன்னொரு இறகும்
வளர்ந்தபடி.

ஒவ்வொரு விடியலிலும்
என் பல்கனி
கண்ணாடி தொட்டுப்போகும்
நீலநிறப் பொன்வண்டின்
எதார்த்தம்
சாத்தான்களைத்
துளைக்குமென்கிறேன்.

நீ.....
என்ன சொல்கிறாய் ?

அடுத்த 30 ஜூலையில்
சந்திக்கும்வரை
வண்ணத்தமிழ்
வணக்கங்கங்கள் கூறி....!!!

ஹேமா(சுவிஸ்)

நிமித்தமான இரங்கற்பா...

ஒரு மாறுதலுக்காக
யசோதரைகளுக்கு
முள்கிரீடம் அணிய
உத்தரவிடுகிறார்கள்
சித்தார்த்தன்கள்.

போதிமரங்களுக்குப் பதிலாக
சிலுவைகளை நிலைநிறுத்தி
ஆணிகளும்
அங்கே ஆயத்தமாய்.

நீதியும்
மறுதலிப்பும்
தண்டனையும்
மறுபரிசீலனையற்றே
சிவனின்
இறுக்கிய குரல்வளைகளில்
நீலம்பாரிக்க...

சித்தார்த்தனின் கருணை
பலிக்கான ஆயுதங்களுக்காக
தேர்வெழுதுகிறது
அடிக்கடி
காலாவதியான
திகதிகளில்...

இரக்கம் கேட்டவர்களுக்கு
இரத்தம் கொடுத்து
தற்காலிகமாய்
தள்ளிப்போடுகிறார்கள்
புத்தனாகாமல்
16 முதல் 30 வயதான
விடலைச் சித்தார்த்தன்கள்!!!

ஹேமா(சுவிஸ்)