*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, May 31, 2014

அவன்...அவன்தான்...

அவன் வாசனை வருகிறது
வந்திருக்கிறான் போலும் என் தேவன் இன்று
நேற்றே கனவில் புள்ளி வைத்தவன்....

அன்றுபோலவே
காய்த்த கைகளில்
காயாத பூவரசம்பூ கொண்டு வந்திருப்பான்...

கூரைபிய்த்திறங்கி
ஒற்றை இறகில் தன்னை அறிவித்தவன்
பிரபஞ்சம் தாண்டிய குருதிக்காடுகளில் வாழ்பவன்
தொலைத்தேன்....தொலைந்தேன்
மிக மிகத் தொலைவில்
இப்போ தலைப்பிரசவம்
அவனின் பெயரால் முத்தமிட வந்திருக்கிறான்
முத்தப்பிசாசவன்...

என்னோடு வாழ்ந்த
காட்டு வாழ்க்கையின் நிமிஷங்களைக் குறுக்கியவன்
ஒரு சிறகு தந்தவன்
நொண்டியா(க்)கி மறுசிறகோடு பறந்தவன்...

வானொலிப்பூச்சியவன்
ஒற்றைச் சிரிப்பில் உலகோடு கதைத்தவன்
இதழில் இளையராஜா பாடல் சொன்னவன்
அர்த்த ராத்திரியில்
சாந்தனின் பாடல்களைக் கேளடியென உறுக்கியவன்...

குண்டுகளையும் கோள்களையும் சேமித்த
சமகாலத்தில்
மின்னியலுக்குள் மேகம் புதைத்தவன்...

இன்னும் வாசனை அவன் புகைந்த மனதில்
தேடிக்கிடைத்த பொருளவன்
இன்னும் தொலையாமல்...

தேவதைகளை ஆள்பவன்
இந்தத் தேவதையை
கண்ணி வைத்தே கருக்கொண்டவன்...

ஓ....வேர்க்கிறதவனுக்கு
விசிறிவிடுகிறேன் அவன் வாசனைக்கு...

இன்னும் ஆள்கிறான் காதல் சாம்ராஜ்யத்தில்
வானுக்கும் மேகத்துக்குமிடையில் நம் கோட்டை
வாழ்த்துங்கள் மனமிருந்தால்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 29, 2014

ஒரு அரூபியும் ஒரு மீனும்...


புசுபுசு பூனைகளைத்தான்
நேசித்திருந்தேன்
ஒருபொழுதில்...

நெய்யும் கடலையும்
தின்று கொழுத்த பூனைகள்
என்னைத் தின்றபொழுதில்
முக்காடிட்டு
முள்வேலிகளே கிரீடங்களாய்
வடிவான அரூபியானேன்.

அறிவிக்கவிரும்பவில்லை
சமூகத்திடம் என்னை.

வெறுப்பின் இதயம் காடழித்தது
அன்போ அணைத்தணைத்து
பிரபஞ்சம் அளந்தது
ஆனாலும் போதவில்லை
கண்மூடிப் புத்தன்களுக்கு
அரூபிகளின் அலறல்.

வால் சுழற்றும் சிற்றசைவில்
உயிருள்ளதாய் நடிக்கும்
நெகிளிச் செடியென
இல்லா உயிரை
இழுத்து
மூச்சிட்டு வாழும்
தங்க நிற மீன் நான்.

சொண்டில் நிறமப்பி
தொட்டிக்குள்
உயிர் வாயுவை
விழுங்குவதுபோல
பசப்பி
குமிழிக்கனவோடு இறப்பேன்
மஞ்சள் நிறத்தோலுடன்.

தூக்கிப்போடுவார்கள்
பிளந்த போதிமர
வேர்களுகளுக்குள்
ஆயுதம் களைந்து
அப்போதும் என் முகம்
அரூபமாய்த்தான்
முள்முடியுடன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, May 26, 2014

அச்சில்...

தினக்குரலில்...17.06.2012
தினத்தந்தியில்...20.01.2013
கல்கி யில்...24.05.2014

யாழ் ’உதயன்’ சஞ்சிகையில்...


கல்கி தீபாவளி மலர் 2014...

Friday, May 23, 2014

சுவாமி...


வண்தமிழ் விறலோன்
கொற்றத்து மாறா
புண்கொண்ட மனதோள்
பறைதட்டி வேண்டுவது....

பூந்தண் பொறைப்புகழ் வேண்டா
நண்ணார் வானுரை வேண்டா
விண்கடல் விடர்ச்சிலை வேண்டா
வெண்குடை சாமரம் வேண்டா

உண்ணத் தமிழ் தா
பண்ணொடு பாக்கள் தா
கொண்ட நன்கல உலகு தா
நாண்டு சாவும் நேர்மை தா
கண்புகும் ரௌத்திரம் தா
விண்ணேகும் வரமும் தா

நீலமேனி வாலிழை பாகத்து
பனிமுல்லை மலரோனே
அருள் தா எனக்கு
நின் நிழற்கீழ் திருவடி நீழலில்
இருதாள் அமர!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 22, 2014

குட்டிப் ‘பூ’...

விலகி வழிவிடுங்கள்
வேலைகளுண்டு எனக்கும்.

பூக்கள் வளர்க்கிறேன்...

வண்ணம் தீட்ட
கடனாய் தந்தான்
இறைவன்
இரண்டு பென்சில்.

சீவிக்குறைத்த
பென்சிலுக்காய் கோபித்து
சண்டையிட்டு
பின்னிருந்து கண்கட்டி
சொல்லு நான் யாரெனக் கேட்கும்
சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
முத்தம் கொடுத்து...

பூக்கள் எடுக்கலாம்
முத்தம் போட்டு
எச்சில் உண்டியலுக்குள்
முட்டும் பூக்களின்
வண்ணம் ஒட்டினால்
பொறுப்பும் நானில்லை.

வேகமோடும் தெருச்சூரியனாய்
இறப்பும் பிறப்பும் ஒன்றாய்
கையேந்தும் கைகளுக்கு
சில்லறை எறியக்கூட
நேரமற்ற உங்களுக்கு
நானும் பூக்களும் ....??? !!!

Photo Barbara Graf-Weinland's Son from Germeny

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 20, 2014

பூக்களைக் கிள்ளாதீர்...


நிலைப்பாட்டைக் குறிக்கும்
பிரார்த்தனைகள்
நிறைவாகவே என்னிடம்.

அன்பைத் தவிர
இல்லையென்று ஏதுமில்லை
கையேந்தலும்
இறைஞ்சுதலும்
கெஞ்சுதலும் 
நினைவில்லை இதுவரை.

எத்தனை தரம்தான்
துரத்தமுடிகிறது
அவர்களால்
வாலை ஒட்ட
வெட்டிவிடுங்களேன் எனக்கு
நாயென நான் ஆட்டாமலிருக்க.

இயற்கை அசைவில்
அன்பின் அழைப்பு
கை கோர்த்தலில்
இளஞ்சூட்டின் பரவசம்
நாடியோடும் குருதியில்
குமிழுடைத்த நர்த்தனங்கள்
மார்தழுவலில் தேவரகசியம்.

மரத்தைக் காதலித்து
செடிகளுக்கு நீரூற்ற
சிலிர்க்கிறது பூக்களாய்.
மென்னீரத்தின்
நிர்ச்சலனத்தோடு.

கொய்தழிக்காமல்
வாடமுன்
காண்பிக்கிறேன்
என்னை நேசிப்பவர்கள்
யாராவது இருந்தால்!!!

ஹேமா(சுவிஸ்)