*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, April 28, 2014

ஈரங்கள் திருடும் முட்டாள்...


இப்போதான் என் முன் காண்கிறேன்
மென்னீரம் பரவிய இந்த முகத்தை
இலையுதிர்காலத்து மரத்தடியில்
உலர்ந்த இலைகள் சில கவிழ்ந்து
அவன் முகம்போல.

அடையாளப்படுத்துகிறான் தன்னை...

பிறப்பொன்றில்
சாள
க் கதவிடுக்கில்
பாதிப்பாதியாய் நாம் நனைந்ததாயும்
உடலை உலர்த்திவிட்டு
ஈரமனதை நான் விட்டுப்போனதாயும்
பின்னர்
தானே தத்தெடுத்து வளர்த்தாயும்.

நனைந்த ஈர நாட்களில்
நானே இலைகளை உடுத்தியிருந்தேனாம்
தன் முற்றத்தில்
ஒரு வசந்தகால துய்யிரவில்
பொதிகளாய் சுமந்து வந்திருந்தானாம்
என்னில் திருடிய அத்தனையையும்
கனவுக் கிளையில் என் காதலன் கண்டு
தராமலும் போனானாம்.

என்னதான் பொதியில் என்றால்...

மழைநாளில் சேகரித்த
என் யன்னல் மின்னல்கள்
ஆயிரக்கணக்கில்
நான் சேகரித்த என் கவிதைக்கான
சில நிறத்தூரிகைகள்
சில உளறல் வார்த்தைகளும்
மற்றும்
என் கையில் காய்ந்த மருதாணிச்
சிவப்புமென்கிறான் திருடன்.

இராணுவ நுட்பங்கள் நானறிவேன்
அவர்களின் ஒரு மாதிரியான
இறுக்க வாசனையும் நன்கறிவேன்
சப்பாத்தின் அழுத்தங்களையும் அளந்திருக்கிறேன்
முன்னும் பின்னுமாய் அவனைத்துளாவ
ஆயுதமேதுமில்லை
முட்டிய அன்புதானென்கிறான்.

கால் வலியெடுத்துக் கொஞ்சம் கொலுவசைய
கொழுந்திலைகளால் தாம்பாளமிடுகிறான்
என்ன செய்ய இவனை
மீனாய்ச் செதிலிழக்கிறேன் அவன்முன்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, April 26, 2014

அறத் தீ...



காலம் கல்லாகிப்போனதோ
கடவுள்போல்.

உடைத்துத் திருத்த
உளி எடுத்த
சிற்பியும் பொறுக்கிறான்
கண் திறக்கவும்
அறம் காக்கவும்.

சால்வை உதறி
தோளில் போடவும்
அரசியலுக்கென
ஒரு வித நடையையும்
கண்விரித்தலையும்
பழகியிருந்தார்கள்
வார்த்தையில்
அரசியல் நடிப்பவர்கள்.

மக்களுக்கு
வாழ்வும் சுதந்திரமும்
சுபிட்சமாயில்லை
என்றபோதும்
வேறு வேறு பெயர்களில்
எரித்துக்கொண்டிருந்தார்கள்
நீதியை அவர்கள்
புகை தெரியாமல்.

வருடம் கடந்த போராட்டம்
வயதும் தளர
தளராத் தாய்
அற்புதம்மாளுக்கும்
ஒற்றைத் தீக்குச்சி போதும்
எங்காவது தொடங்கலாம்.

வன்முறையென
அவளை எரிக்கத்தொடங்கும்
அரசு
போர்முறையென்கிற பெயரில்
மனித உரிமைகளை!!!

ஹேமா(சுவிஸ்

Friday, April 25, 2014

நியமம்...


இறுகிக்
குவிந்து கிடந்த மனதை
வழியில் கிடக்கும்
பனித்திடல் விழுத்த...

காலுறைகளையையும்
போர்த்திய கம்பளியையும்
வாசலிலேயே கழற்றிவிட்டு
அசதியாய் பாரமாய்
நுழைகிறது நான்.

அங்கங்கள் இளக
ஒரு கோப்பை தேநீர்.

காலிக் கோப்பையையோ
அன்றி
என்னைச் சுற்றவோ


ஒற்றை இலையான்கூட
இல்லை.

 
சிதையும் சில சொற்களை
மீட்டெடுக்க
சிலாகித்த அன்பு அரட்டை
வலித்த நொடிகள்
நெகிழ்ந்த சமயங்கள்
அத்தனையையும்
அகழ்ந்தெடுக்க
அந்தப் பேரமைதி
போதுமாயிருக்கிறது.

அழவேண்டிருக்கிறது
இப்போ கொஞ்சம்...

இன்னொரு கோப்பைத் தேநீரில்
சற்றுப் பிறகாய் தோள் சாயலாம் ...

பனித்திடல் தாண்டியே
போகவேண்டிருக்கிறது
நாளையும்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 22, 2014

கூடுடையாக் கேள்விகள்...


கேட்கும்
கேள்வி தவிர்க்க
பதிலாய்
இன்னொரு கேள்வி
இரண்டுக்கும் இடையிலொரு
மௌன இடைவெளிவிட்டு
மிக அழகாய்.

அவ்வளவு சுலபமாயில்லை
பதில் சொல்வது
ஆனாலும்
பதில் இருக்கிறது
ஒத்தமாதிரியும்
ஒவ்வாமையாயும்.

பதில் வெளிப்படுகையில்
மனதின் வடிவங்கள்
ஒருசமயம்
வக்ரமாயும்
விரசமாயும்
விகாரமாயும்
வீணானதாயும்
வெகுளித்தனமாயும்
இருக்கலாம்.

கேள்விகள் குறித்த பதில்கள்
கேள்விகளுக்குள்ளும்
பதில்கள் குறித்த கேள்விகள்
பதில்களுக்குள்ளுமே
இயல்புகளை
ஆக்கிரமித்தபடி.

பதில்களும் கேள்விகளும்
கைகளுக்குள்
சாதாரணமாயில்லை
கைராட்டுக்கள்போல்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, April 21, 2014

நீலக்குருவி....


உயர்தர நிறங்களை
வறுமை தின்ன
நீல நிறத்தை
நிறைத்து நெளிகிறது
அவனது தூரிகைகள்
நீட்சிகளைப் பருகியபடி.

அவனறியாமல்
நீல அலைகளோடு
சுவரொட்டிய நான்
வெளித்தள்ளும்
குமிழ் மூச்சை மேயவிட
மீண்டுமது
உருத்திராட்சப் பூனையென
உருமாறி
உள்ளூரப் பயம் நனைக்கும்
வியர்வையாய்.

புத்தனின் வார்த்தைகளை
நிர்வாணப் பிண்டங்களை
நகரங்களின் அழிவுகளை
நிலாவை
நீரை
இயல்பாய்
மஞ்சளெனவும்
சிவப்பெனவும் கரைத்து
நீலங்களையே அப்பி வரைந்து
புன்னகைத்த உதடுகளால்
அள்ளிக் குதூகலித்தவன்...

கண் தூளிகளில்
கலங்கிய நீல நிறத்தை
இரவில்
என் ஆடையாக்கியாக்கிவிட்ட
அந்தகன் அவன்
அறியவில்லை
என் நுனி விரல்களில் ஒட்டிய
நீலக்குருவியின் இறக்கைகளை.

இருட்டிய கண்களில்

ஒட்டிய மிச்ச நீலத்துளிகள்
இரவை இன்னும் கருப்பாக்க
கீறிமுடிக்கா
நீலக்குருவிகளும்
வானங்களும்
முகங்களும்
மயில்களும்
அவன் தூரிகையில்
நீலங்களாக மட்டுமே
அதனதன் சாயலை
ஒத்தபடி.

சூத்திரம் நிறைந்த
புகழின் உச்சியில்
வறுமையும் நீலமும்
என்னை
நிராகரித்தொடங்கியிருந்ததப்போ...

அவனும் ??? !!!

Artist என்கிற மலையாளப்படத்தின் பாதிப்புக் கவிதையானது.
நண்பர் ”இத்ரீஸ்” ன் இந்த நீலக்குருவி ஓவியமும் மிகப்பொருந்தியது !

ஹேமா(சுவிஸ்)

Friday, April 18, 2014

கனவிது...


கிறங்கா மனதை அசைத்து
கனவைச் சமன் செய்தபடி
என் அறையெங்கும்
இறைந்து கிடக்கிறது
தொலைதூர முத்தம்.

பூனையின்
புசுபுசு கண்களில்
காதலைத் தேக்கி
எனக்குள்
பீச்சிக்கொண்டிருக்கிறது
பிரியங்களாய் அது.

முத்தங்களை
முலை முட்டிக் கேட்கும்
குழந்தையென
ஆக்கிவிட்டு
கலையாக் கனவுகளுக்காய்
காவலுக்கும் எனையிருத்தி
கசிந்துருகி காதலிசைக்க
காற்றையும்
கலைத்துப் பிடிக்கிறது.

வலிக்காத் தமிழ் கொய்து
முத்தங்கள் பிரித்து
பித்தம் நீக்கி
மலர் வாடக் கண் கலங்கி
உயிர்கள் நேசித்து
கொடூரமும்
சிதைவும் கண்டிரங்கி
மரங்கள் ஊன்றும்
மானுடமது.

ஆனாலும்
என் இரவை நீட்டி
மெது மெதுவாய்
கவிழ்த்து வீழ்த்தும்
பெரும்பள்ளமும் அது !!!

ஹேமா(சுவிஸ்)