*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, May 31, 2013

யாழ் நூலக நினைவு...

நெருப்பு நெருப்பை அணைக்காது.யாழ்/நூலகம் இது எம் சொத்து.மனதில் அணையா நெருப்பு.ஒருவேளை வரும் தலைமுறை துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்தாலும் அது எமக்குக் கற்பித்த பாடத்தையும் இழப்பையும் மறக்காது !






ஹேமா(சுவிஸ்)

Thursday, May 30, 2013

காதல் துளிகள் (7)


உன்
கூண்டுக்குள்
பிடிபட்ட
கிளிதான் நான்.
நீ.....
கிள்ளியெறியும்
நான்கு
நெல்மணிக்காகவா
சீட்டுக்களை
இழுத்துப்
போட்டுக்கொண்டிருக்கிறேன்
புரியாதவனே !


சபிக்கப்பட்ட
நாளொன்றில்
கெடு வைக்கிறான்
கொல்லவா இல்லை
கொள்ளவா
கொசுவை விட
மோசமானவன் !


பாடிக்கொண்டேயிருக்கிறேன்
யாரும்
கேட்கமாட்டார்களெனத்
தெரிந்தும்
அநாதரவற்ற
குளக்கரையோரத்தில்.....
குயிலெனச் சொன்னவன்
இப்போதெல்லாம்
கோட்டான்
என்கிறான் !


காப்பி குடிக்கிறாயா
என்று கேட்டால்
பார்சலில் அனுப்படி
என்கிறான்
நகைச்சுவைதான்
இருந்தும்
அவன் பாஷை
புரியவில்லை இன்னும் !


கனவுகள்
பலித்துக்கொண்டிருப்பதாய்
பறக்கிறான்
கனவுகளுக்கு
கால் முளைக்க
வைத்துக்கொண்டிருக்கிறேன்
நான் என்பதை அறியாதவன் !


பனிபூத்த நாளொன்றில்
நடந்த தடங்கள்
தெளிவாக
அள்ளியெடுக்க
கைச்சூடு தாங்காமல்
உருகி வழிகிறான்
திருடன்.....
இன்னும் ஊடலில்தானோ !


ஒற்றை விநாடிக்குள்
கொள்ளை போக
முடிகிறது
அன்பின்
முடிச்சுகளுக்குள்
மட்டுமே
இங்கே ஒருவன்
கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்க
என்னையே !


கொஞ்சம் கோபமா
இல்லை நானயறியாத
ஊடலா
பேச வரமறுக்கும்
என்...
மௌனங்களை மொழிபெயர்த்து
தன்...
கவிதைகளாக்கியிருப்பான்
இந்நேரம்
நாளை பிரசுரமாகுமது !

ஹேமா(சுவிஸ்)

Monday, May 27, 2013

எனக்கானது இது...


மொட்டுவிட்ட பூவுக்கு
நீறூற்றுதல்
உமக்கு வாழ்வியலானால்
எனக்கென்ன.

வியாபார
ப் பொருளென்று
பேரம்பேச அரிதாரமிட்டு
இனி இவள்
காதல்வசப்படுவாளென்றும்
அறிவித்து
இன்னும் புதிது புதிதாய்
ஏதேதோ.

பருவத்தால்
உடல் மாற
மதத்தால்
மலர் அர்ச்சனையால்
உருமாற்றி
கடவுளின் காவல்காரர்கள்
வரலாற்று எழுத்தாளர்கள்
கலை வளர்ப்பாளர்கள்
கையில் என்னை
கற்பழிக்கக் கொடுக்க
புன்முறுவலோடு
இத்தனை
பூச்செண்டுகள் தந்தா
உங்கள் புனிதம் காப்பீர்.

என்னவோ....அது
இருந்துவிட்டுப் போகட்டுமே
எனக்கென்ன...

தொப்புள்கொடிப் பிறப்பும்
மரணவீட்டுப் பிணமும்
ஒருவேளை
தீட்டாக இருக்கலாம்.

என்னையும்
தீட்டென்று ஒதுக்கி
துர்நாற்றக் கண்ணீரை
என் குழந்தைப் பருவமுடைத்து
ஏன் நிரப்புகிறீர்.

உமக்கென்ற சடங்குகள்
இருந்துவிட்டுப்
போகட்டுமே எனக்கென்ன...

பழமைவாதமும்
பாட்டி சொன்ன வடைக்கதையும்
புனிதமென்றால்
என் இன்றைய தெளிவும்
தேவையற்ற சம்பிரதாயச்
சடங்குகளும்
எனக்கு என்னோடு.

என் பறப்புகளுக்கு
இரு சிறகுகள் போதாதென்று
தவமிருக்கப்போகிறேன்
மண்ணுருண்டை
உடைத்து வரும்
சிற்றீசலுக்காக.

எனக்கான ஆசைகள்
கனவுகள்
சிறகு கொண்டு வரும்
ஈசலோடு
இருந்துவிட்டுப் போகிறேனே
உங்களுக்கென்ன!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 26, 2013

கடவுள் கவிதை...


கண்மூடிக்கிடக்கையில்
ஆழ்மன இருள்
ஒற்றைக் கீற்றொளி...
கடவுள் என்கிறார்கள்
ஞானிகள்
நானோ அதை
நான் என்கிறேன்
ஆக்ரோசமாக
தள்ளி விட்டு எழும்ப
என் உடம்பை அசைக்க
அந்த ஒளியே உதவுகிறது
இனியாவது
என்னை உதறி
ஒற்றையில் வாழலாமென
நினைக்காதேயென
கர்வமாய் முறைக்கிறது
அந்த ஒற்றைத் துளி ஒளி !
 
நிழல் உடைக்கும்
ஒரு கனவு
வான் துளைத்துப் பறக்கும்
சுந்தந்திர வெளியில்
ஒரு பறவை
சுட்டெரிக்கும் சூரியனால்
வெளிர்க்கும் பச்சையம்
பாரங்களைச் சுமக்கும்
வேர்கள்
வியர்த்துப் புழுங்க
மனிதம் மறந்த மனிதனுக்குள்
இரக்கம் வர
பிரத்தியேக
இயக்கமொன்று வேண்டி
எழுதிக் களைத்து
கிழித்துக்கொண்டிருக்கிறது
ஒரு கவிதை!

ஹேமா(சுவிஸ்)

சபிக்கப்பட்ட இரவு...


பொழுதுகளை
மௌனிக்க வைக்கிறது
என் வீட்டு மெழுகுதிரி
மெல்ல வெளியில் பார்வை பரவ
பகலின் வெளிச்சத்தை
மௌனிக்க வைத்த
இரவைச் சபித்தபடி
தெருவைக் கடக்கிறது
ஒரு காட்டணில்.
தன் மகவை
வயிற்றின் மேல் கட்டியபடி
சாலையில் ஒரு தகப்பன்.
மெல்லிய காற்றையே தாங்காமல்
கொம்பிழக்கும் ஒரு இலை.
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
ஏதோ ஒரு அவலம் ஆபத்து.
என் அறையில்
இசைக்கிறது மொழியற்ற ஒரு பாடல்.
தனியாக எரியும் மெழுகுதிரிக்கு
நான் துணையென்று நினைக்க
தலையாட்டி
தான் எனக்குத் துணையென்கிறது.
உன் நினைவை மட்டும்
சொல்லாமல் ஒளிக்கிறேன்
மெழுகின் ஒளியும் மெல்லிய இசையும்
மனதை நிறைத்தாலும்
நிறையவில்லை இன்றைய நாளும்
நீயில்லாமல்....!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 19, 2013

பெருவிழாக் குறிப்பொன்று...


அன்பின் பற்றாக்குறையென
அதிர்ந்து அழுகிறது
வீணையொன்றின்
சிறுதுண்டொன்று
மீட்டிய விரல்களைத்
தேடியபடி.

பிரபஞ்சச் சுழியீர்ப்பின்
எல்லையில்
இருப்பற்ற ஒரு சாலையில்
ஆழப் புதைந்த நிகழ்வை
எவரும் சொல்ல
இல்லையில்லை....
எவருமே இல்லா நிலையில்
அந்தந்த இடங்களில்
மானிடம் வாழ்ந்து
வீழ்ந்ததை
சாட்சி சொல்ல வாழும்
கருக்குப்படலையின்
மூச்சிளைக்கும்
கூப்பிடு ஓசை.

என் பெயரை
அவர்கள் பெயரை
உச்சரிக்கும்
தெருப்படலை
பதறி
மௌனித்து
பின் அலறுகிறது
ஆழப்புதைந்த
அத்தனை பெயர்களையும்
அந்த
அன்பு வீணை மீட்டியின்
பெயரையும் கூட!!!

ஹேமா(சுவிஸ்)



 

நேற்றோடு
முடிந்துவிட்டதென்று
திரை மூடி
அணைத்திருக்கிறார்கள்
தொடரும்.....
போட்டதைக் கவனிக்காதவர்கள் !