*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 30, 2013

சாத்தியக்கூறுகளின்போது...


நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்...

நீர் தெளித்து
புள்ளியிட்ட கோலத்தில்
மஞ்சளாய்
காக்கை எச்சம்
திருஷ்டிப்பொட்டென...

சுழித்தோடும்
நீருக்குள் போராடி
கடலட்டையொன்று
செத்து
மீண்டும் மேலெழுந்து
சுழன்றபடி....

தளிர்கொன்ற சூரியன்
அதேமரத்தில்
வேரொட்டி வளரும்
குருவிச்சைக்கும்
பச்சையம் பகிர்கிறான்....

ஒரு ஆற்றாமைக்
கவிதையை 

ச்சீ....என்கிறது 
எழுத்துலகம்....

பிற்போடப்பட்ட செய்திகளை
வாசிப்பதாக உறுதியளித்தவன்
இறந்துவிட்டதாக
அடுத்த செய்தியில்....

கருத்தரிக்கா
த் தாயின் 
கல்லறை நிழலில்
தேம்பியழும்
அநாதைக் குழந்தை....

ஊடறுத்த
சில சொற்களில்
குற்றம் இருப்பதாக
வரையறுத்து
தூக்கிலிடப்படுகிறது
நூலகமொன்று....

மாதங்களற்ற சிசுவொன்றை
பெற்றெடுக்கிறாள்
பார்வையற்ற
பெண்ணொருத்தி....

முலையறுத்த
எம் தேசப் பெண்களுக்கு
குறியறுத்த மனிதர்களை
காட்டி
போர் வேண்டாமென
போதிக்கிறது
உலக சமாதானம்....

இயற்கையில்
நஞ்சு படிகிறதாமென
போராடி
ஆயுத விற்பனையில்
வெற்றி பெறுகிறது மனிதம்...

எல்லாமும்
அவரவர் நினைவில்
சரியாகவும்
அடுத்தவர் பார்வையில்
தவறாகவும்....

தொடர்ந்துகொண்டிருக்க.....

நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்!!!

ஹேமா(சுவிஸ்)



Friday, April 26, 2013

அவனு(ஆணு)க்கும் வெட்கம்...



காதல் சிலுவையில்
முத்த ஆணி அறைந்தால்....

அத்தனை
அவஸ்தையோடு நீ
என்றாலும்.....
புதுக்காதலன் கதை சொல்லி
பொறாமை நெருப்பு மூட்டி
சில முத்தங்களும்
சில வெட்கங்களும் பெற
நான் பட்ட பாடு.

இன்றும் என்னை
ஈரமாய் வைத்திருக்கிறது
உன் வெட்க முத்தம்.

சிட்டுக்கள்
கூடிப் பேசும் ரகசியமாய்
சில்லென்று நனைக்கிறது
நேற்றைய நினைவுகள்.

தொட்டாச் சிணுங்கியாய்
சுருங்குவதும் விரிவதுமாய்
மனதைக் கூசச் செய்து
கிள்ளிக் கடக்கிறது இப்போதும்.

நீ கேட்பது போக
நான் கேட்டும்
உன் முகம்
முத்தாய் வியர்த்ததும்
குரலில்
வெட்கக் கோடுகள் கீறியதும்
தரலாமா வேண்டாமா யோசித்ததும்
புதிய அனுபவமாய் உனக்கும்
ஏன்..........எனக்கும்தான்.

என் ஆதங்கம்தான் அதிகம் இதில்

நான் உன்னருகில்
இல்லாமல் போனதும்
உன் சிவந்த முகத்தைக்
காணாமல் தவித்ததும்
எப்படி நெளிந்து
உன்னைச்
சமன் செய்திருப்பாயென்பதும்
காற்றலையில் களவாய்
போனதப்போது.

பாதி நிலவுக்குள்
பக்க முகிலுக்குள்
உன் வெட்கம் மறைய
செவ்வானச் சூரியனாய்
உன் முகம்.

புதிதாய்
புத்தம் புதிதாய்
புதிதான முத்தப்பூக்களோடு
நீ.....தந்து விட்டுப்போன
முத்தத்து நினைவோடு
ஜோடி மயில்
முத்தம் பார்த்து
பிரமித்தபடி நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 23, 2013

புத்தகமானவனுக்கு...


செப்படி வித்தைகள் கற்ற
சொக்கும் உன் சிரிப்புனக்கு
பத்திரமாய் புத்தகமாகி
ஞாபக ஊஞ்சலில்
இப்போ.

தொலைதூரமானவன் மட்டுமே
தொலைந்தவனல்ல நீ
உன்னைப் படிக்கும்போதெல்லாம்
ஒற்றைத் துளிக் கண்ணீர்கூட
கரைப்பதில்லை
உன் நினைவுகளை.

அன்பே....
சுவர்க்கப்பூமியில்
வசித்துக்கொண்டே தேடுகிறேன்
என்னைச் சுற்றிக்கிடக்கும்
சுவர்க்கம் நீதானே.

புத்தகமாக்க நினைத்தும்
கோர்வைக்குள் அடங்காதவளென
கை விட்டவன்
அப்போ நீ...
என் புத்தகத்தில்
ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும்
இப்போ நீ.

கனவுச் சூரியனடா நீயெனக்கு
பகலும் இரவும்
வெளிச்சமாய் எந்நேரமும்
நல்லதொரு வழிகாட்டியாய்.

ஒரே ஒருமுறை
ஒரே ஒருமுறை
வருவாயா
என் கைகளை
இறுக்கிக்கொள்கிறாயா
உன்னைத்தாண்டி
எந்த மரணமும்
என்னை நேசிக்காது.

வாசிப்பும் நீ
வசிப்பும் நீ
எனக்குள் மட்டுமே
திறந்து மூடும்
புத்தகமும் நீயே!!!

ஹேமா(சுவிஸ்)

(புத்தகதின வாழ்த்துகள்)

நிறையாத ஓவியங்கள்...


திணிக்கப்பட்ட விதிகளின்
மௌனித்த பொழுதிது...

வரைந்த பொழுதில்
தனைமறந்த பிரம்மன்
தவறவிட்ட
தூரிகை எச்சங்களாய்
இவர்களோ.

வலு நொடித்தாலும்
விதைத்த தைரியம்
மனதோடு
கக்கத்தில்
தன்னம்பிக்கையும் கூட.

வசைபாடும் சமூகத்தில்
பாசத்தால்
தம் வசமிழந்து
இரணங்களின் முடிவில்
தொடங்கும் மரணமென
இவர் வாழ்வு.

ஆழ ஊன்றும்
ஊன்றுகோலால்
மாற்றுத் திறனாளிகளென
விதியை
நொந்து எழுதியபடி
பயணிக்கும்
ஆற்றாமைகளோடு
வாழ்வு சலித்தபடி.

என்றாலும்
அன்போடு
ஒரு கையணைக்கும்
வா
நீயும்....என் இனமென!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, April 19, 2013

சொல்ல மறந்து...


எழுத நினைத்த நேரத்தில்தான்
இறந்துகொண்டிருக்கிறது
அது....
தன்னைக்குறித்தும்
தன் தனிமை குறித்தும்.

ஈர மரக்கிளைகள்
பற்றிக்கொண்டு
சுரக்கும் கண்ணீரோடு
பச்சிலைக் கடனுக்கு
உடன்பட்டு
எச்சில் பறக்க
கதறியது ஒரு நாள்
ஓவென்று.

உருபு மயக்கத்தோடு
ஒரு வேற்றுமை
மற்றொரு வேற்றுமையின்
பொருளில் வருவதுகூட

பொருத்தம் இல்லையென
கருத்துச் சொல்லிப் போனார்கள்
தெருவைச் சிலாகிப்பவர்கள்.

தனித்துப் பேசுபவர்களை
விசரென்று அறிபவர்கள்
தாங்களும் ஒரு வகையில்
அவர்களேயென
சொல்லிவைக்கலாம்
எதுவிதத் தயக்கமுமின்றி
மலசலக்கூடச் சுவர்களிலோ
பள்ளிச்சுவர்களிலோ.

சிலுவைகளில் தனித்து
அறையாமல்
குருதி சுண்டிக் கருக்குமளவு
கதறிப் பின்
இறப்பவர்களுக்கு
புதிது புதிதான
சில ஆறுதல் வார்த்தைகளை
சொல்லி ஆசீர்வதியும்
எம் பிரானே!!!

ஹேமா(சுவிஸ்)


Thursday, April 18, 2013

நான்...


நானாயிருக்கக்கூடாது
என்னைக் காட்டவேண்டாம்
என்றே
சரி செய்வேன்
ஒவ்வொரு கவிதையின்போதும்.

கற்பனைக்காய்
ஆயிரம் சம்பவங்கள்
அடுக்கி உயிர் கொடுத்து
உள்வாங்கும்
சில அனுபவங்கள்
அனுபவித்தலே உணர்வானாலும்
அடுத்தவர் உணர்வெழுத
தேடுவேன்
தனிமர நிழல்.

என் எழுத்தின் இயல்பை மறைக்க
மெனக்கெடடுவேன்
சம்பவங்களைத்
திணித்துக்கொண்டிருப்பேன்
எங்கிருந்தோ
ஒரு சிறு அசைவு
என் இயல்பைக்
காட்டிக்கொடுத்துவிட்டு
கை காட்டி நகைக்கிறது
அழுவாச்சியென்று!!!

ஹேமா(சுவிஸ்)