*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, July 30, 2012

கோழியும் கழுகும்...



வறுத்தெடுக்க மனிதன்
கொத்திக் குடிக்கப் பாம்பு
இயற்கையும் சிதைக்க....
உறக்கம் விற்று
திசையோடு தவமிருக்கிறது
காக்கும் அடைக்காய்.

ஆகாயக் காவலன்
கண்களில்
மிஞ்சிப் பொரித்த
ஒற்றைக் குஞ்சை
உறிஞ்சும் மரணம்.
 
அருக்கனையே மறைக்கும்
அதிகாரம் வானில்
அடங்கினால்
அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு.
இறகு இத்தினிதான்
எம்பி எதிர்க்கிறது
இருப்பு இருக்கும்வரை!!!

அருக்கன் - சூரியன்.

அரிகண்டம் - தன்னைத்தானே சித்திரவதை செய்துகொள்வதற்காக மாட்டிக்கொள்ளும்
இரும்புச் சட்டம் இல்லை வளையம்.

இத்தினி - கடுகிலும் சிறிதளவு.

எம்பி - உந்தி எழும்புதல்.

ஹேமா(சுவிஸ்)

Wednesday, July 25, 2012

இலவச மன்னிப்பு...

ஒவ்வொருமுறையும்
கைபிசைந்து நிற்கிறேன்
செய்த தவறுகளுக்காய்
என்னை முறைத்து
பின் ரசித்து
ரட்சிக்கும் தேவனாய்
உதறி விடுகிறாய்
மன்னிப்புக்களை.

இலவசவமாய்
கிடைக்கும் மன்னிப்பை
அலட்சியமாய்
எடுத்துக்கொண்ட நான்
மீண்டுமொரு
தவறுக்கு ஆயத்தம்
செய்துகொண்டிருக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 23, 2012

கறுப்பு ஆடி 2012...

காலக்கொடுமைகள்
நிரம்பி வழிய வழிய
எல்லாவற்றையும்
ஏந்திக்கொண்டிருக்கிறது
அகதித் தேசம்
கரையாப் பனிமலைக்குள்
போர்வையோடு புதைந்தவள்
திட்டித் தீர்க்கிறாள்
தன்னையும்
தன் மண்ணுக்கான போரையும்
அகதி தேசத்தையும்.

எங்கேயோ பார்த்த ஒரு முகம்....
சிங்களச் சிப்பாய் ஒருவன்
என்னைச் சிதைத்துத்
கழிவறைக்குள் தள்ளுகையில்
அங்கு.....
பெண்சதை தின்று
புணரத் தாவும்
இன்னொரு மிருகத்தோடு
போராடிக்கொண்டிருந்த
அதே அம்மா.

தொடையிலும் மாரிலும்
வேறு வேறு இடங்களிலும்
இரும்பு ஒட்டும் இயந்திரத்தால்
சுட்டுச் சிதைத்த வடுக்கள்
இன்னும்....இன்றும்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, June 09, 2012

காதல் குரல்...

நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை...
வசப்பட்டு வளைகிறேன்
ஓரிழையாய் உனக்காக
உன்னோடு என்னை!

மண்டியிட்டு மறுத்த
மௌனங்களைப் பிசைந்து
பேசும் பெண்ணாக்குகிறாய்
என் சொற்களால்
உன் வார்த்தைகளை
உடைத்த பாவமும் இப்போது!!!

உப்புமடச் சந்தியில்..."ஒரு தந்தையின் பிரசவம்!"

ஹேமா(சுவிஸ்)

Sunday, June 03, 2012

அவள் அப்படித்தான்...

விதிகளை நிர்ணயிக்கும்
நூதன மாத்திரைகளை
விழுங்கியிருந்தாள் அவள்.
வேம்புக் குயில்
மூங்கிலுக்குள் சாரம் அனுப்ப
சுவைத்தவன் நாக்கில்
ஒட்டிக்கொள்கிறது கசப்பு.

மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்...

சகாயங்களேதும் செவிநுழையா
சஞ்சாரப் பொழுதுகளில்
வெள்ளைச்சுருட்டு
சுட்டுப் புகைக்கிறாள்
சூரியக் கண்களில்.

மூங்கிலிசைத் துவாரம்
நொதித்து நிறம்மாற
நோய் எதிர்ப்புச்சக்தி
அதிகமாய்த் தேவையென
முறைப்பாடு வைக்கிறாள்
மாத்திரைக்கும்
பின் அவனுக்குமாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 27, 2012

ரசிகனின் நினைவில்...

கொஞ்சம் முன்வரை நினைத்திருக்கவில்லை
எனக்கும் உனக்குமான உறவுக்குள்
இப்படி....

நம்...நம் இயல்பிலேயே
கவிதையையும்...பிடித்த பாடல்களையும் சொல்லி
மலையும்...மழைமண்மணமும்
தாயும்.....தன்நாடும் அழகெனச் சொல்லி
நீ....தந்த ஒற்றைச் சிறகுகளுக்குள் பொத்தி வைத்து
ஒரு ஆயுத அமைதி ஒப்பந்தக் காலத்தில்
வைத்திருக்க முடிந்தது
இரவின் யன்னல்களுளினூடே
என்னை மட்டுமே அனுமதித்திருந்தாய் தென்றலாய்.

இப்போ...........
ஒற்றைச் சிறகைத் தாண்டி
இன்னொரு அன்புலகம் இருப்பதாய் சொல்கிறாய்
என் இயல்பில்லா அந்த உலகத்தில்
தங்க என்னால் முடியவில்லை
அந்த உலகில் வீசும் பாசத் தென்றலில்
பலமணிநேரங்கள் என் துணையில்லாமல்
உன்னியல்போடு
தனித்தியங்க முடிகிறதென்றும் சொல்கிறாய்.

நன்று நண்பனே....

ஒருவேளை முயன்றிருப்பேன்.அந்த உலகைக் கண்டிருக்காவிட்டால் என் உலகில் உன்னைப் பாதுகாத்திருக்க .நீயே வெளிக்கொண்டு வந்துமிருப்பாய் என் ஆழ்மன அன்பைக்கூட.பல பூக்கள் ஒடிக்கும் ஒரு சாவியை நான் கண்டிருக்கிறேன் உன்னிடம்.கேள்விகளும்,கருத்துக்களும்,சிக்கலில்லாப் பேச்சுக்களும்,நவீனத்துவம் இல்லாக் கவிதைகளும் வேண்டாமென உணர்வதாயும் சொல்கிறாய்.உனக்கான இயல்புலகம் அதுவெனக் கண்டிருக்கிறாய்.நீ உன் சிறகுகளோடு இணைத்திருக்கவில்லை உன் தேவைகளை.நீ அறிமுகப்படுத்திய உலகின்....அந்த மொழி சிரமமாயும் இருக்கிறது எனக்கு.

புள்ளியென்கிறாய்......கோலமென்கிறாய்.நானறிந்த ஒரு புள்ளி நீ மட்டுமே.கோடு போடத்தொடங்க நீ.....என்கிற அதே புள்ளியிலேயே முடிகிறது என் வட்டம்.வியர்த்த என் கரங்களுக்குள் நீ தந்த எத்தனை பரிசுப் பொருட்கள் என்னோடு உன்னப்போல் பேசும்.ஆனால்....நீயும் கடந்து போகிறாய்....நான்...?

அன்புப் பட்டம் ஒன்று காதுக்குள் கரையாமல் ......பெண் ஹிட்லர்......!

ஹேமா(சுவிஸ்)