*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, October 18, 2011

முகிழ்ப்பு...

red rose love romance 3 pictures, backgrounds and images
அவிழ்த்துவிட்ட கூந்தலுக்குள்
குறுந்தாடி புதைய
ஒற்றைக்குச்சியென
ஒடிந்து கிடந்த தேகத்துள்
பிரியங்களோடு அணைக்கிறது
ஒரு சேகுவேரா டீசேர்ட்.

சந்தன மணம் பரப்பிய
சாதுர்யங்களின் தகிப்பில்
கலந்த மையிருட்டோடு
மெய்தேடிக்களைத்து
முதுகுத் தண்டில்
பனியூற்றும் பயிற்சிக்கு
கணங்களின் நுனியில்
பிரார்த்தனைகள்.

சிகரெட்டின் வாசனைக்குள்
ஈரமுத்தம் சகித்த இதழோடு
குயவன் கையில் களிமண்ணாய்
தேகம் ஒத்துழைக்க
சலிப்பற்றுப்போகிறது முகிழ்ப்பு.

எதிர்த்தலில்லாமல் ஏற்றுக்கொண்டு
அடிமையென
மெல்ல மெல்லக்
கரைந்துகொண்டிருக்கிறது உயிர்!!!

ஹேமா(சுவிஸ்)
நன்றி உயிரோசை பங்குனி இதழ்.

Thursday, August 11, 2011

கூழாங்கல்...

ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப
உருண்டுகொண்டேயிருக்கிறேன்.
குதித்தும் தாவியும்
நொருங்கியும் கரைந்துமாய்
சிக்கிக்கொண்டாலும்
தடையறுத்த ஆறுதல்
எவருக்குமில்லை.

உருண்டுகொண்டேயிருப்பதால்
அறுபட்ட சில நிகழ்வுகள்
மாறி மாறி...
இருள் ஒளி கடக்கும் முகடுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள்.

ஓ.....
பாறையில் வேர் விட்ட
சிறுவிதை.
குட்டி மீன்கள்
பெரிய மீன்களாய்.
படர்ந்த பாசி
அடியில் ஊடுருவும் விஞ்ஞானம்.

என்றாலும் தட்டித் தடக்கி
உருண்டுகொண்டே....யிருக்கிறேன்
ஒற்றைக்கல்லாய்!!!

ஹேமா(சுவிஸ்)


விடுமுறை விடுமுறை கோடை...பெரிய விடுமுறை.சந்திப்போம் நண்பர்களே !

Tuesday, August 02, 2011

இருள் வழி...

எங்கோ...
போயிருக்கிறது அது
கண்ணைக் கட்டி
இருளுக்குள் விட்டுவிட்டு !

மலையும் ஆறும் கலக்கும்
மிருகங்கள் புணரும்
காடுபோலிருக்கிறது
கண்ணாமூச்சி விளையாடி
கை விட்டுப் போனது யார் இங்கே !

பிந்திய இரவின் முனகலும்
பயந்து ஒதுங்கும் மானை
மயக்க முயலும் துணையுமாய்
விரகத்தின் வேதனையை
நீட்சியாக்கிவிட்டபடி...

மூடித் திறக்கும் கதவுவழி
ஏதேதோ உருவகங்கள்
கற்பனைக் கழிவுகள்...

ஓடிக் களைத்த வீராங்கனையாய்
கண்ணாடி பார்த்து
களிப்படைந்து
உடை மாற்றி
மீண்டும் வந்து
போர்வைக்குள் நுழைகையில்
ஏதோ ஒன்று
குறுக வைக்கிறது என்னையே!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, July 24, 2011

1983 - 2011 கருப்பு ஆடி...

துண்டித்த தலைகள்கூட
புன்னகை சிந்தின 83ஆடியில்
நான் நினைப்பதுண்டு
"எனக்குண்டான வாழ்விது
என்னை வாழவிடு"
கெஞ்சுவதாக இல்லையா அது.

ஒட்டிய வயிறோடு
உயிர் விட்டிருந்தன
பசியோடு இருந்த
தமிழ்க் குழந்தைகள்
பெற்றவர்களின் கைகளில்.

1953 தொடக்கம்
சிங்கள
ஆட்சிக் கொடியெங்கும்
கொட்டிச் சிதறிக்கிடந்தன
தமிழ் இரத்தம்.

83 ஆடியில்
போதாத
சவப்பெட்டிகளுக்காக
காத்திருக்கவில்லை
தமிழ்ப்பிணங்கள்
தம்மைத் தாமே
அடக்கம் செய்துகொண்டன
கண்களைத் திறந்தபடி.

ஆடி இருளில்
வருடங்கள் கடக்கையிலும்
மெழுகுதிரிப் பொய் ஒளியில்
என்ன கொண்டு வந்தாய்
இந்த வருடத்திலாவது என்றபடி
காத்திருக்கின்றன அவைகள்
கரும்புலிகளையும் சேர்த்துக்கொண்டு.

உங்கள் நினைவு நாளில்
வேண்டுமென்றே வைத்த
உள்ளூராட்சித் தேர்தலில்
வெற்றி தமிழுக்கே
என்று சொல்வதைத் தவிர
இப்போதைக்கு வேறொன்றுமில்லை
பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, July 22, 2011

சொல்லா சாபமா...

சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்...

நீர்த்த உணவுக்குள்
ஒட்டாமலிருக்கும் உணவாய்
தனித்தேயிருப்பதாயும்
நாளைய வெக்கையில்
நசிந்து நாறப்போவதாயும்...

தொலைத்த கணங்களில்
மிஞ்சியிருக்கும் ஏதோவொன்று
இம்மியளவாவது
இம்சிக்காமல் சாவு வராது என்றும்...

மூலை முடுக்குகளில்
இடுக்களில்
மீனின் செவுளாய்
கண் காணாத சாபங்கள்
உள்ளிருப்பதாயும்...

கோடுகளுக்குள்
நடந்து ஓடிக்கொண்டிருந்தாலும்
பிறழ்வுகளுக்குள்
அகப்பட்டேயாவாய் என்றும்...

சிவப்புச் சட்டைபோட்ட
உன் கருத்த வேண்டுதல்கள்
இப்போ விலகியே இருந்தாலும்
இறுதியில் உன்னுடனே
தொடரும் என்றும்....

இன்னும் இன்னும்...
சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்
பாவியவள்!!

நன்றி உயிரோசை.ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 12, 2011

கூடு...நீ !

காத்திருக்கும் தூரம்
கைக்கு
எட்டக்கூடியதேதான்
கூடும் உன்னதுதான்
என்றாலும்
நீ...
தொடுவதாயில்லை.

ஒற்றைச் சிறகு
முளைத்தபோதும்
பின் பறக்கும்போதும்
கண்டு பிரமிக்கிறாய்
ரசிக்கிறாய்.

கோதுடைத்த அன்றே
கொஞ்சித் தலைகோதி
நட்பாய் அன்னையாய்
ஆசானாய் அன்பாய்
அனைத்துமாய் ஏந்திய
ஒருங்கணைத்த உறவாய்
நீ எனக்கு.

சிறகும் பறத்தலும்
வேண்டியிருக்கவேண்டாம்
உன் சிறகால் கட்டிய கூடே
போதுமாயிருந்திருக்கும்.

இனியும்...
இன்னும்...
காத்திருக்கும் கூடு
என்னோடு கூட
உன்னோடு கூட!!!

ஹேமா(சுவிஸ்)