*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, July 24, 2011

1983 - 2011 கருப்பு ஆடி...

துண்டித்த தலைகள்கூட
புன்னகை சிந்தின 83ஆடியில்
நான் நினைப்பதுண்டு
"எனக்குண்டான வாழ்விது
என்னை வாழவிடு"
கெஞ்சுவதாக இல்லையா அது.

ஒட்டிய வயிறோடு
உயிர் விட்டிருந்தன
பசியோடு இருந்த
தமிழ்க் குழந்தைகள்
பெற்றவர்களின் கைகளில்.

1953 தொடக்கம்
சிங்கள
ஆட்சிக் கொடியெங்கும்
கொட்டிச் சிதறிக்கிடந்தன
தமிழ் இரத்தம்.

83 ஆடியில்
போதாத
சவப்பெட்டிகளுக்காக
காத்திருக்கவில்லை
தமிழ்ப்பிணங்கள்
தம்மைத் தாமே
அடக்கம் செய்துகொண்டன
கண்களைத் திறந்தபடி.

ஆடி இருளில்
வருடங்கள் கடக்கையிலும்
மெழுகுதிரிப் பொய் ஒளியில்
என்ன கொண்டு வந்தாய்
இந்த வருடத்திலாவது என்றபடி
காத்திருக்கின்றன அவைகள்
கரும்புலிகளையும் சேர்த்துக்கொண்டு.

உங்கள் நினைவு நாளில்
வேண்டுமென்றே வைத்த
உள்ளூராட்சித் தேர்தலில்
வெற்றி தமிழுக்கே
என்று சொல்வதைத் தவிர
இப்போதைக்கு வேறொன்றுமில்லை
பொறுத்தார்தானே பூமியாண்டவர்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, July 22, 2011

சொல்லா சாபமா...

சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்...

நீர்த்த உணவுக்குள்
ஒட்டாமலிருக்கும் உணவாய்
தனித்தேயிருப்பதாயும்
நாளைய வெக்கையில்
நசிந்து நாறப்போவதாயும்...

தொலைத்த கணங்களில்
மிஞ்சியிருக்கும் ஏதோவொன்று
இம்மியளவாவது
இம்சிக்காமல் சாவு வராது என்றும்...

மூலை முடுக்குகளில்
இடுக்களில்
மீனின் செவுளாய்
கண் காணாத சாபங்கள்
உள்ளிருப்பதாயும்...

கோடுகளுக்குள்
நடந்து ஓடிக்கொண்டிருந்தாலும்
பிறழ்வுகளுக்குள்
அகப்பட்டேயாவாய் என்றும்...

சிவப்புச் சட்டைபோட்ட
உன் கருத்த வேண்டுதல்கள்
இப்போ விலகியே இருந்தாலும்
இறுதியில் உன்னுடனே
தொடரும் என்றும்....

இன்னும் இன்னும்...
சொல்லிக்கொண்டேயிருக்கிறாள்
பாவியவள்!!

நன்றி உயிரோசை.ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 12, 2011

கூடு...நீ !

காத்திருக்கும் தூரம்
கைக்கு
எட்டக்கூடியதேதான்
கூடும் உன்னதுதான்
என்றாலும்
நீ...
தொடுவதாயில்லை.

ஒற்றைச் சிறகு
முளைத்தபோதும்
பின் பறக்கும்போதும்
கண்டு பிரமிக்கிறாய்
ரசிக்கிறாய்.

கோதுடைத்த அன்றே
கொஞ்சித் தலைகோதி
நட்பாய் அன்னையாய்
ஆசானாய் அன்பாய்
அனைத்துமாய் ஏந்திய
ஒருங்கணைத்த உறவாய்
நீ எனக்கு.

சிறகும் பறத்தலும்
வேண்டியிருக்கவேண்டாம்
உன் சிறகால் கட்டிய கூடே
போதுமாயிருந்திருக்கும்.

இனியும்...
இன்னும்...
காத்திருக்கும் கூடு
என்னோடு கூட
உன்னோடு கூட!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 04, 2011

கவிச்சோலைக்குள் நானும்...


எல்.கே கார்த்திக் அவர்கள் தனது கவிச்சோலையில் முத்தொள்ளாயிரம,குறுந்தொகை போன்ற சங்கப் பாடல் வரிகளுக்கு புதுக்கவிதை வடிவம் கொடுத்துப் பல பதிவுகள் போட்டிருந்தார்.அதன்பின்னர் போட்டியாகவே எழுதக் கேட்டிருந்தார்.நானும் கலந்துகொண்டேன்.எழுதிய ஏழ்வரில் என் வரிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.மனதிற்கு மிகவும் சந்தோஷம்.அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

பாடல்

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.

நான் எழுதிய வரிகள்

சேரன்
எதிர்த்த படை
தேர் காண
பிளிறும் வீரயானை
நீட்டிய தந்தம் நசுக்கும்
வெண்குடை - இங்கு
மதி தவற
மாறித் தெறித்த திங்களென
தூக்கிய தந்தம் தவறாய்!!!


விளக்கம்

"தங்களை பெரும் வீரம் நிறைந்த மன்னர்கள் என நினைத்து சேரமன்னனை எதிர்த்து வந்த மன்னர்களின் தேரைக் கண்டதும், சேர மன்னனின் யானைகளானது அத்தேரினை அழித்து, அத்தேர்மேல் வீற்றிருக்கும் வெண்குடையை தன் காலால் மிதித்து அழித்து விடும் தன்மை கொண்டது.அத்தகைய யானைப்படையைக் கொண்ட சேரனின் யானையானது வெண்குடையைப் பார்த்ததும் அழிக்க நினைக்கும் பழக்க தோஷத்தால் முழுநிலவன்று நிலவைப் பார்த்ததும்,நம் சேரனை எதிர்க்க ஏதோ எதிரிப்படைதான் வந்து விட்டது என நினைத்து அந்நிலவை அழிப்பதற்காய் நிலவை பிடிக்க தன் துதிக்கையை நீட்டுகிறது..."என்பதாம் இச்செய்யுளின் பொருள்.

ஹேமா(சுவிஸ்)

Sunday, June 26, 2011

தமிழ்மண நட்சத்திரமும் நன்றியும்.


மிகவும் சந்தோஷம்.அதேநேரம் தூக்கம் குறைவு.சாப்பாடு இல்லை இப்பிடியே இந்த வாரம் போச்சு.ஆனா மனசுக்கு நிறைவா எனக்கு முடிஞ்சதை எழுதிருக்கேன்னு நினைக்கிறேன்.தொடர் பதிவானதால உங்களுக்கும் கொஞ்சம் என்னால கரைச்சல்தான்.அப்பிடியிருந்தாலும் அலுக்காம வந்து என்னை உற்சாகப்படுத்தின எல்லாருக்கும்......எல்லாருக்கும் அப்புறம் வந்தும் பின்னூட்டம் போடாம ஒளிஞ்சிருந்து பார்த்த எல்லாருக்குமே நன்றி நன்றி நன்றி.

என்னை ஊக்கப்படுத்திய தமிழ்மணத்திற்கும் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.நகைச்சுவைப் பதிவு எழுதவே வராது.எப்படியாவது ஒரு நகைச்சுவப்பதிவு போட்டேயாகவேணும் என்கிற எண்ணத்தில்தான் "கள்ளக்கோழி" என்கிற பதிவு மிகவும் கஸ்டப்பட்டு எழுதினேன்.எழுத வைத்த தமிழ்மணத்திற்கு மீண்டும் நன்றி.இதில் என்னை உசுப்பேத்திவிட்டது நிரூவும் வடையண்ணாவும்.

முதல் நாளிலிருந்து காதல்,ஈழம்,இயற்கை,சமூகம்,நகைச்சுவையெனத் பலதையும் தொட்டு எழுதியிருக்கிறேன்.நட்சத்திரப்பதிவு இன்றோடு நிறைவாகிறது.என்றாலும் என் மனதில் தெறிப்பவைகள் இனியும் எழுத்துக்களாக எண்ணங்களாகத் தொடர்ந்தும் பதிந்துகொண்டுதானிருக்கும்.

இன்று இறுதி நாள் நடசத்திரப்பதிவுக்கு.அவசரமாக இன்று இரவு வீட்டிலிருந்து நன்றி சொல்லிப் பதிவு போடமுடியாததால் விரிவான பதிவாக எழுதமுடிதாமைக்கு வருந்தி இப்போதே நன்றி சொல்லிக்கொள்கிறேன்.ராமலக்ஷ்மி அக்கா முதன்முதல் வாழ்த்து உங்களிடமிருந்தே கிடைத்தது.மனதிற்கு நிறைவாய் நட்சத்திர வாரத்தை நிறைவாக்கி வைக்கிறேன்.மிக்க நன்றி உங்களுக்கு முதலில்.

வேலை மிகுதிக்குள்ளும் எனக்கு ஒவ்வொரு நாளும் வந்து ஓட்டும் போட்டு ஊக்கப்படுத்தியவர்கள் எல்லாருமே என் உறவுகள்.என் நண்பர்கள்.இத்தனை பேரும் என் நண்பர்களா என்று நினைக்கையில் மிகவும் சந்தோஷமாய் உணர்கிறேன்.இன்னும் நிறையப்பேர் தனிப்படவும் பாராட்டினார்கள்.இன்னும் சிலர் பார்த்து ரசித்ததோடு சரி.ஒரு வார்த்தை வாழ்த்தியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்.ஏதோ ஒரு குறையும் இருக்கவேணும்தானே.ஒருசிலரை மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.பரவாயில்லை.எப்போதும் என் உறவுகள்தான் அவர்களும்.

ராமலஷ்மி அக்கா,மேவீ,கலாநேசன்,பலாபட்டறை ஷங்கர்,ஸ்ரீராம்,மைந்தன் சிவா,றமேஸ், ஜோதிஜி,தமிழரசி,நண்டு நொரண்டு,அப்பாஜி அப்பாதுரை,ரதி,ராதாகிருஷ்ணன் ஐயா,காஞ்சனா அம்மா,தமிழ் உதயம்,ரிஷபன்,சமுத்ரா,தவறு,ஆர்.வி.எஸ்,நேசன், சங்கவி,நசரேயன்,சி.பி.செந்தில்குமார்,வேடந்தாங்கல் கருன்,வந்தியத்தேவன், விடிவெள்ளி செண்பகம்,ரியாஸ்,அத்திரி,அம்பிகா,புலவர் ராமாநுசம்,சிநேகிதன் அக்பர், ராஜநடராஜன்,கலா,பாலாஜி,ஜமால்,ஆயில்யன்,உழவன்,கவிதை சௌந்தர்,நிரூபன், மாலதி,திகழ்,ஓட்டைவடை நாராயணன்,கானா பிரபா,ஏஞ்சல்,அன்புடன் அருணா,ஷர்புதீன், சந்ரு,கந்தசாமி,தூயவன்,தமிழன் கறுப்பி,சத்ரியன்,சுந்தரா,மாதேவி,பிரியமுடன் வசந்த், இரா எட்வின்,மீனு,நாஞ்சில் மனோ,விக்கியுலகம்,நிலாமகள்,தினேஸ்குமார்,அரசன், சுந்தர்ஜி,போளூர் தயாநிதி,இராஜேஸ்வரி,செ.சரவணகுமார்,
ஜெரி ஈசானந்தா,தமிழ்ப்பறவை,மதுரை சரவணன்,அம்மாபொண்ணு,நடராசா குணபாலன், தாராபுரத்தான் ஐயா,சே.குமார்,வேலு ஜீ,துஷ்யந்தன்,சிப்பிக்குள் முத்து,அஷோக்,ரத்னவேல் ஐயா,கௌசல்யா,நெடுங்கேணியூர் குமரனார்,முனைவர் இரா குணசீலன்,கவி அழகன், பாரா அண்ணா,மல்லிக்கா,தேனக்கா,இக்பால் செல்வன்,அமைதிச்சாரல்,சிவகுமாரன்,ஜீ, கருணாகரசு,,கார்த்திக் சிதம்பரம்,பிரபு,மோகண்ணா,நேசமித்ரன்,கூடல்பாலா,மகன் தமேஷ், எல்.கே கார்த்திக்,குணசேகரன்,ஜெயம்.......

இன்னும் இன்னும் எல்லாருக்கும் காற்றலையில் கை கோர்த்த என் உறவின் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றியும் சந்தோஷமும் !

அன்போடும் நட்போடும் அன்பின் ஹேமா.

இருட்டான சூரியன்...

 

நடுநிசி இரவிலும்
பச்சை மஞ்சள் சிவப்பு விளக்குகளின்
சமிக்ஞைக்காகக் காத்திருக்கும்
வாகனமாய் நான்.
உனக்காக
நிற்கிறேன்
கவனிக்கிறேன்
தொடர்ந்தும்
காதலித்துக்கொண்டே
இறப்பேன்!


எந்த மாதிரியும்
என்னை அலட்சியப்படுத்த
நீ...
துணிந்தே இருக்கிறாய்
பரவாயில்லை விடு
உன்...
முத்த ஒப்பந்தத்திற்காகவே
காத்திருக்கும்
காலம் முழுதும்
என் கன்னம் !


எம் கையில் எதுவுமில்லையென்றேன்
"கையில் ரேகைகூடவா இல்லை"
கிண்டலாய்
சொன்னாய் சிரித்தபடி
நீ பிரிந்தபோதுதான் புரிந்தது
அதிஷ்டமில்லா
வெற்றுரேகையென !


எத்தனை பேசியிருந்தாலும்
காற்றில் கலந்த முத்தங்கள்
இன்னும்...
சில வேறு தவிர
தேடிப்பார்
மிஞ்சியிருப்பது
நான்...நீ
மிச்சம் மிகுதியாய்
நினைவுகள்
போதாதா
சாகும்வரை இது !


செத்துக்கொண்டே இருக்கிறேன்
பேச்சுக்களற்ற பூமியில்
உன்னைச் சந்திக்கிறேன்
இடைவெளி நிரப்பு
மிச்சமிருக்கும் சுவாசமெடு
பிச்சையாய்
ஒற்றை ஈரமுத்தமிடு
இனாமாய் என் உயிரெடு
உயிர்ப்பிக்க அல்ல
இப்போதெல்லாம்
உன்...
உதட்டில் விஷம்!


'கல்லுளி மங்கன்' என்றாய்
இல்லையென்றேன்
நம்பவுமில்லை
கல்லுக்கு
பால் வார்த்திருந்தாலாவது
குடித்து மிஞ்சியதும்
கக்கியிருக்குமோ
அன்பின் மிகுதியை!


தள்ளித் திறந்து வந்தது நீ
தள்ளிவிட்டுப் போனதும் நீ
கதவும் வாசலும்
காவலும் காத்தலுமாய்
நான் இப்போ!


செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !

ஹேமா(சுவிஸ்)