*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, August 30, 2009

காதல் கவிதை[கள்]

Friday, August 28, 2009

முடியாதது...

நேசித்தது...நெருங்கியது
கேட்டது...ரசித்தது
பாட்டானது...பழகியது
அழகானது...உயர்வானது
ஆனந்தமானது...மயக்கமானது
இன்பமானது...இடருமானது
இரவலானது...என்னதுமானது
ஆர்ப்பரித்தது...அவதியுமானது
எதிர்பார்த்தது...ஏங்கியது
பார்த்தது...பரிமாறியது
அணைத்தது...இனித்தது
சொந்தமானது சொர்க்கமானது
உறவானது...பிரிவுமானது
நிஜமானது...நிழலானது
மந்திரமானது...மறக்காதது
தூரமானது...துயரமானது
வேதனையானது...விரக்தியானது
காயமானது...கருகாதது
நெருப்பானது...நீறானது
ஒளியானது...இருளுமானது
வலியானது...வரமுமானது
கனவானது...கனமுமானது
விதியானது...கதியானது
கேள்வியானது...கேலியானது
பதிலானது...பௌத்திரமானது
போராடியது...பொய்யானது
காத்திருந்தது...காலமானது
தேடலானது...திரும்பாதது
சுமையானது..சுகமுமானது

என்றோ ஆனது
இன்றும் நினைவானது.

என்ன ??? !!!

சலிப்பானதா ?
சோர்வானதா ?
கோபமானதா ?
கொதித்ததா ?

இதயம் மௌனமானது
உணர்வுகள் புதிரானது !!!

கிறுக்கினது 2000 ல்.ஹேமா(சுவிஸ்)

Sunday, August 23, 2009

செல்லமாய்...

பூக்களுக்கு
பூவின் வண்டுக்கு
வானுக்கு
வானின் பறவைக்கு
ஆற்றுக்கு
நீந்தும் மீனுக்கு
மலைகளுக்கு
காடுகளுக்கு
டீச்சருக்கு
தோழிக்கு
கோழிக்கு
ஊரும் எறும்புக்கு
என்று எல்லாவற்றிற்கும்
பட்டப் பெயர்
வைத்துவிட்டு,
உன்னை மட்டும் எப்படி
சும்மா விட முடிகிறது
என்னால் !
உன் செல்லப் பெயர்
"ஹிட்லர்"தான்.
பிடிச்சிருக்கா !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 20, 2009

தேவையில்லை இரவல்...

தனித்த இரவொன்றில்
சிலையாய் இருந்தேன்.
என்மீது பாரமழுத்தி
என் மௌனங்களும்
சிலையாய் இறுகியபடி.

இரவலாய் சிறகுகள் கிடைத்தால்
கொஞ்சம் பறக்கலாம் போல.
எழும்ப வைத்தது
தூரத்து நிலவைத் தேடும்
நட்சத்திரங்களின் பாடல்.

இரவல் மூச்சுக்கள் பற்றி
இறாக்கைப் புத்தகங்களுக்குள்
இரவல் சிந்தனைகள் தேடினேன்.
கிடைத்தது.

மூங்கிலின் இசை
காற்றின் இரவல்.
சூரிய ஒளியின் இரவல்
நிலவிடமும் நட்சத்திரங்களிடமும்.

ஆனால் மனுஷியாய் எனக்குப்
பிடிக்கவில்லை இரவல் மூச்சு.
தனக்கு மிஞ்சித் தேடாத
பறவைகளும் மிருகங்களும்
மனிதம் தொலைத்த
எங்களை விட உயர்ந்தவையே.

இரவல் மூச்சே வேண்டாம்
சிலையாய்
இருந்து கொண்டு
மீண்டும்...
புள்ளியாய் சிறுத்துக் கொள்கிறேன்
சிலைக்குள் இருந்தபடியே !!!

வாழ்வியல் பற்றி எழுத மாட்டேனாம்
என்று தூண்டியவர் மேவீ

ஹேமா(சுவிஸ்)

Tuesday, August 18, 2009

பிசாசுகள்...

பிசாசுகள்...
வாழ்வின் சுவையறியாப் பிஞ்சுகள் மேல்
வெந்நீர் ஊற்றும் கொடிய பிசாசுகள்.
இதழ்கள் பிரிந்து துடிக்கும்
பூக்களை நிராகரித்து
வேர் அறுத்துச் சிரிக்க
அந்தப் பிசாசுகளால் மட்டுமே முடிகிறது.

புத்தனின்
பாதையில் நடந்தால் அல்லவோ
பூக்களின் அவலம் புரிந்திருக்கும்.
புழுக்களின் மேல் அல்லவா
படுக்கை போட்டுக் கொடுத்திருக்கிறது.
கொடுமையாய் இல்லை.

இடதும் வலதுமாய்
நாடிகள் ஊடே என் துடிப்பைப் பார்.
நரம்புகள் பிடுங்கப்பட்டு
ஆசைகள் புதைக்கப்பட்ட பிஞ்சுகளை
முட்கம்பிகளுக்கூடாக
காணக்கூட
கண் வேண்டாம் என்கிறேன் நான்.

இழப்புக்களும் பறிகொடுத்தலும்
இரத்த ஆற்று நீச்சலும்
பழக்கமில்லை உனக்கு.
அறிய மாட்டாய் நீ.

தலை தடவி...நீர் ஊற்றி
தளிர் ஒன்று தளைக்கும் வரை
தீக்குள் அவியும்
என் நெஞ்சு ஆறா.

பிசாசே ஓடிவிடு.
பச்சையம் உயிர்க்க வழிவிடு.
எங்கள் பிருந்தாவனங்களுக்குள்
ஏன் புகுந்தாய்.
ஆணிவேரின் அடியிருப்பை
அடியோடு ஏன் அகற்றினாய்.
உன் கரம் காத்து ஓடிவிடு.

அது வரை
புழுக்களோடு
சிநேகம் கொண்டாவது
உன் கை கடிப்பேனே தவிர
உன்னோடு ஒத்துப் போக
என் மனம் சாயா !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, August 15, 2009

ஏன் இப்படி...

பெருமழையில்
சிக்கிக்கொண்டிருக்கிறேனோ ஒரு வேளை.
கட்டிடங்கள்
இடிந்து விழும் அபாயம் வரலாம்.
அறிக்கை சொல்கிறது.
மண்வீடு கட்டி விளையாடிய வேளை
அழுததைவிட
அழுகை அழுகையாய் வருகிறது.

கனவில் காக்கா கரைகிறது.
அப்போ..யாரோ வரத்தான் போகிறார்கள்.
நம்பிக்கையோடு தலைவாழையிலை
வெட்டி வைக்கலாமோ.
பாதை நெடுகிலும் பரிமாற
நிறையக் கேள்விகளும் கதைகளும்
தேக்கி வைத்திருக்கிறேன்.
ஓ...கேட்பதும் கதைப்பதும் பிடிக்காதோ !

சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை பார்த்துக்கொள்கிறது.
விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.
என் அத்தனை பதட்டங்களையும்
பொத்தி எடுத்து போகிறது
உனது பெயர் !!!

ஹேமா(சுவிஸ்)