*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, May 17, 2009

தவிடு தின்னும் தமிழன்...

தூங்கமுடியா...
தூக்க முடியாச் சுமைகளாலே
நோய்களின் இடுக்குப் பிடிக்குள் நான்.
நுரை கக்கிய சவர்க்காரத் துண்டாய்
அடி நீருக்குள் அமிழ்ந்து கிடக்கிறேன்.
எழுத்துக்கள் குமிழியாய் எழுந்து
கண்ணீராய் சுரந்தபடி.

பெருந்துயரப் பாம்பொன்று என்னை
விழுங்கியும் கக்கியுமாய்.
அடங்காமல் மீண்டும்...மீண்டும் பற்றியெரியும்
போர்த்தீயின் சுவாலை
உடலையும் உள்ளத்தையும் சுட்டபடி.

என் இனத்தின் அவல ஓலம்
இரைச்சலாய் செவிப்பறை தெறிப்பதாய்.
இரத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் என் உறவுகள்.
நீ...ண்டகாலக் காய்ந்த இரத்த வாடையில்
நனைந்தும் ,உணர்ந்தும் ,கேட்டுமான மன ஓலங்கள்
இரவில்கூட அசந்து உறங்காதபடிக்கு.

கால்நடைகளுக்குக்கூட இடைநேரத் தீனி போட்டவன்.
வரும் விருந்து காத்திருந்து
வரவேற்ற வன்னித் தமிழன்-இன்று
தவிடு தின்னும் இனமாய்.
தான் தவழ்ந்த மண்ணே தன் காயத்து மருந்தாய்.
எலும்பில் தோல் தடவிய மனித எச்சக் குவியல்கள்
குமுறும் மனதால் மறக்க இயலவில்லை.

தீர்ப்பின் முட்டைகளுக்குள்
உயிர்கள் முழி பிதுங்கியபடி.
உடைக்கும் சொண்டுகள்
அலட்சியமாய் அல்லது திராணியற்றதாய்
அல்லது விலங்கிடப்பட்டதாய்.

சமாதானப் பருந்துகள்
ஒவ்வொரு முறை பறக்கையிலும்
இலவங்காய்க்காய் காத்திருக்கும் கிளியாய்
கிழிந்துவிடும் என் மனம்.
பனியின் விறைப்பை மிஞ்சி
முடங்கிகொள்ளும் ஏமாற்றம்.

உணவின் வாசனை
மூக்கின் நர்ம்புகளை உள் இழுத்தும்
பசியாத வயிறு.
மனம் முட்டிக் கிடந்தும்
எழுத முடியாக் கரங்கள்.

வேண்டுதலா எமக்கு.
பைத்தியமா எங்களுக்கு.
அடுத்த வீட்டிற்க்குக் கூட
கரைச்சல் தராத நாங்கள்
அடுத்தவன் நாட்டுத் தெருவில் கூச்சல் போட.
அதற்கா வந்தோம் அகதி முகவரி தேடி.
உண்ணாவிரதமும்...ஊர்வலமும்
கொடிகளும்...கூச்சல்களும் எதுவரை!
காக்கும் கரங்கள் எதுவுமின்றி.
இரங்கி எம்மை உணர மறுக்கும் உள்ளங்கள் இன்றி.

கனதூரம் கடந்த பின்னும்
என் தேசத்தின் திசையிலேயே என் மனப்பறப்பு.
பரிதாபம் பரிகசிக்க படுகிறான் பாடு தமிழன்.
அவலமும் களைத்துவிட
சகிக்கமுடியா அவதியோடு
உணர்விழந்து தவிக்கிறது என் புலம்பல் !!!

அன்பின் என் இனிய நண்பர்களுக்கு,
மனம் சரியில்லை.அதனால்தான் உங்கள் தளங்களைப் பார்க்கவோ
பார்த்துப் பின்னூட்டம் இடவோ மனமும் நேரமும் இல்லாத நிலை.
மன்னித்துக்கொள்ளுங்கள்.அதோடு இன்னும் ஒரு மாத விடுமுறையில் கனடா போகிறேன்.வந்து எப்பவும்போல குழந்தைநிலாவில் சுறுசுறுப்போடு சந்திப்பேன். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 28, 2009

வேண்டும் ஒரு சிற்பியும் ஒரு உளியும்...

கணங்கள் சுருங்கி
மனதை வறுத்தெடுக்கிறது உயிர்.
கால் தாண்டும் பிணங்கள்
பார்த்த முகங்களா
என்று கூடக் கவனிக்க
சுரணையற்று
நேரமற்று
இரத்தச் சகதிக்குள்
புதைத்த கால்களை
இழுத்தெடுத்துக் கொண்டு.

அன்றும் கூட அப்படித்தான்
இழுத்தெடுக்கையில் ஒரு விரல்
அகப்படும் ஒரு முகம்
அது தெரிந்து அறிந்ததாய் கூட
முனகிக் கொண்டிருந்தது.
என்றாலும் பேய்கள் துரத்த
வேகமாய் ஓடிக்கொண்டே இருக்கிறது அவலம்.

தீபாவளிக்கு வெடி கொளுத்தினால் கூட
பயந்த எம் சரீரம்,
பென்னாம் பெரிய குண்டுகளையும்
வெடிச் சத்தங்களையும் சுமந்தபடி
பயத்திற்கே தைரியம் சொல்லிக்கொண்டு
தீவின் கரைகள் எங்கும்
நாட்டின் நரம்புகள் எங்கும்
மிருகங்களைச் சிநேகமாக்கியபடி
பசியும் ,தாகமும்,தூக்கமும் ,படிப்பும்
பாசமும் தூரமாகி...அந்நியமாகி
அம்மா...அண்ணா என்கிற ஏக்கங்களை
மூட்டை கட்டி விட்டு
மூச்சுவிடச் சுதந்திர உலகம் தேடி
இழந்த உயிர்களுக்கும் உறவுகளுக்கும் ஈடாய்
ஏதோ ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்
என்கிற நப்பாசையில்.

நாலு பக்கமும் கடல் சூழ
நடுவில் ஒரு சிரங்கை மண்ணுக்குள்
மண்ணுக்காகவே உயிர் பலிகள்.

கேட்டது கிடைக்கவில்லை.
கிடைப்பதோ திருப்தியில்லை.
குண்டுகளும் ஆயுதங்களும்
துளைத்து உடைக்கிற கற்களா தமிழன்!
இறுகிக் கிடக்க வேண்டியதாயிற்று.
எங்களைச் செதுக்க ஏன் ஆயுதங்கள்.
கை தேர்ந்த ஒரு சிற்பியும்
கூரிய ஒரு உளியும் போதாதா !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 21, 2009

உலகத் தமிழா ஒன்று சேர்...

என் பூமியின் புழுதிக் குளியலிலேயே
பூப்பின் புனிதம் ஆனது என் தேகம்.
இப்போ...
கந்தக பூமியாய் அது
சுடுகாடாய் அது
மனிதன் வாழமுடியா மண்மேடாய் அது.
பிணக்காடு கடந்து
இரத்த ஆறு தாண்டியே
விலங்கிட்ட என் தமிழ்த்தாயை
தூர நின்று தரிசிக்கிறேன்.
கண்ணீர் கூட வற்றியவளாய்
பேதலித்துப் பிதற்றியபடி.

தோழா கொஞ்சம் நில்...கவனி
பறக்கும் நிலை தவிர்.
உன் சிறகு முறி.
அல்லது மடக்கி வை.
எங்களுக்கான இறுதி மணித்துளிகளின்
எல்லையில்தான் இன்றைய எம் பயணம்.
தனியாகப் பறக்கும் சக்தியைக்
சற்றுப் புறம் தள்ளு.
உனக்கு....இன்று
தனித்துப் பறத்தல் அவசியமற்றது.
கை கோர்த்துக்கொள்.
நடப்பது ஒன்றே
இப்போதைக்கு எமக்குத் தேவையானது.
கொடு உன் தோழமைக் கரத்தை !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, April 20, 2009

எம் தேசம்...

தேசம்...
எம் தேசம்
அது என்னவாய்...?

மனிதம் செத்து
மானுடம் மடிந்த படி.
புத்தன் வாழ்ந்த
சத்திய பூமியா-இல்லை
பேய் பிசாசுகளின
சுதந்திர தீவா.
மயிர் கொட்டியின்
உயிரை விடக்
கேவலமாய்...

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்
என்றானே பாரதி.

இன்று...
என் தேசத்தில்
பட்டினிச் சாவு
நித்தமும்...
நச்சு பூச்சியை
நசிக்கக் கூட
நெஞ்சில் வலி,
எம் தேசத்தில்-இன்று
எத்தனை உயிர்கள்
எத்தனை விதமாய்.

புத்தனும் போதித்திருக்க
மாட்டான்
பதவிக்காக
பட்டினிக் கொலையும்,
மண்ணுக்காக
மனித படு கொலையுமாய்
அஃறினையாய்
உயர்தினையாய்
எத்தனை உயிர்கள்.
எம் தேசத்தில் மாத்திரம்
எழுதினானா
ஒரே நாளில்
உயிர் பறிக்க
பிரமன்.

சொறிந்த புண்ணையே
சொறிந்து சொறிந்து
சீழ் வடிய வடிய
மூடிக் கட்டிய
வேட்டியும் சால்வையுமாய்
சிம்மாசனத்தில்...
மாறிய உருவங்களும்
மாறாத மனங்களுமாய்
அரக்க வம்சங்கள்
எம் தேசத்தில்.

தாயே...
என் தேசத்துத் தாயே
உன் கை ஒடித்து,
கால் முறித்து,
உன்
பிஞ்சுக் குழந்தை
குரல்வளை நெரித்து,
உன்
நெஞ்சு மிதித்தே
நடக்கிறார்கள்.

மனிதம் தொலைந்து
ஒளிந்து கொண்டது
புத்தனின்
முதுகிற்குப் பின்னால்.
பொறுமைக்குப்
பொருள் தெரியா
அகராதி அவர்களது.

காலங்கள் எத்தனை
அவலங்கள்
பார்த்தபடி...
பேச்சு வார்த்தை...
பேச்சு வார்த்தை...
யார் யாரோடு ???
"சப்" என்று
காதுக்குள் வலியெடுக்கும்
பொய் வாய்ப்பாடுகள்
வெளி நாடுகளுகளோடு.

வயோதிபர் மடங்கள் போல
விதவை மடங்கள்...
அநாதை மடங்கள்...
மடங்காய்...
இரு மடங்காய்...
மும் மடங்காய்...
முட்டி வழியமுன்
முடிவெடு தாயே
முடிவெடு
காப்பாற்று
உன் தேசத்தை !!!

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனஅழிப்புத் தாக்குதலில் இன்று திங்கட்கிழமை 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களில் 476 பேர் சிறுவர்கள்.

ஹேமா(சுவிஸ்)

Friday, April 17, 2009

நாசமாய்ப் போக...

சிலசமயங்களில்
என்னை அடக்கிவிட்டு
நான் மறந்த நிலையில்
என்னயே ஆட்சி செய்கிறது.
சில உணர்வுகளை
மூளை சரி செய்யமுன்
முந்திக்கொள்கிறது
அந்த நச்சுப் பிசாசு.
காறித் துப்பும் அளவிற்கு
காழ்ப்பு வார்த்தைகள்.
எங்குதான் கற்றுக்கொண்டதோ !

மின்னலின் வேகத்தோடு
மனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !

பார்வைகளில்
பட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
பட்டென்று கட்டவிழ்த்து,
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு,
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !

சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !

தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
காவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.

கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, April 13, 2009

இல்லாத ஒன்றைத் தேடி...

சோர்ந்து போனதாய் நினைவில்லை.
மனிதம் தேடும் பொழுதுகளில்
சுயநலம்
துரோகம்
களவு
வறுமை
நோய்
காமம்
சபலம்
ஏமாற்றம் இன்னும் இன்னும்...
சுற்றிய திசையெல்லாம் எதிர்கொள்கிறேனோ.

நேர்மையாய்...உண்மையாய்
ஒரு மனிதம் தேடி
பல நேரங்களில்
பரிதவிப்போடு காத்திருக்கிறேன்.
முகத்தில் புன்னகை
முதுகில் காறி உமிழும் மனிதர்களாய்.

என்றாலும்...என்றாலும்
ஒருபோதும் தேடுதல் இல்லா
கணங்கள் இல்லை.
உமி சலித்து அரிசி தேடி
கஞ்சி காய்ச்சும் ஓர் ஏழை போல.

புறம் கூறா ஒரு மனிதனையும்
பசிக்கு இரங்கி,
பிரதிபலன் நோக்கா ஒரு மனிதனையும்
நிச்சயமாய் சந்திப்பேன்.
நீங்கள் எதையும் பேசாதிருங்கள்.
என்னால் மனிதம்
தேடாமல் புறம் தள்ளி
குப்புறப் படுத்திருக்க முடியவில்லை !!!

ஹேமா(சுவிஸ்)

படம் தந்தது-கடையம் ஆனந்த்