*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, July 26, 2008

இனியவன் நீ...


தென்றலாய் தொட்டாய்
புயலாய் தாக்கினாய்.
மறக்க நினைக்கிறேன்
மூச்சுக் காற்றுக்குள்ளும்
சுவாசமாய் நீ....தானே!

தன் உடம்பின்
பாரத்தை விடக்
கூடிய பாரத்தைச்
சுமக்குமாம் எறும்பு.

கையளவு இதயத்துள்
உன்னைச்
சுமக்கிறேனே நான்.

மறக்க நினைக்கும்
போதுதானே தெரிகிறது
உன்னை நான்
நேசிப்பதின் ஆழம்.

உறங்க மனமில்லை
நினைவில் நீ...

உறங்கினால்
விழிக்க மனமில்லை
கனவில் நீ!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 24, 2008

மாற்று உலகம்...

Glitter Graphics
மனமாயை விட்டு அகல
மோன நிலை குடிகொள்ள
ஆனந்த சிருங்காரம்
அள்ளிப் பரவிக் கொட்டி நிரவி.
துயரங்கள் தூர்ந்து விட
துர்க்குணங்கள் தொலைந்துபோக
சந்தங்கள் சேர்த்து
சங்கீதம் கோர்த்து
சொர்க்கத்துள் நுழைவதாய்.

தேவர்கள் பன்னீர் தெளித்து
தேவதைகள் பூத்தூவி
தரிசனம் கணச் சொடுக்கில்.
தாயின் கருவில்
மீண்டும் உருப் பெற்று
பன்னீர்க்குடம் உடைத்து
ஜனனித்த நிமிடத்தைக்
கண் முன் வானவில்லாய்.

வானுக்கும் மண்ணுக்கும்
நூல் தொடுத்ததாய்
ஊஞ்சலின் வண்ணம்.
நதிகள் நகர்ந்து வந்து
காந்தர்வ மணம் புரிந்து கொள்ள
கடல் மீன்கள்
கல்யாணியின் ஸ்வரங்களுக்குள்.

மழை கூடத் தாழ்வாரம் ஒதுங்க
தூவானம் தாலாட்ட
நிலத்தாமரை நிர்வாணமாய்.
உலகம் புதிதாய் பிறப்பதாயும்
மனிதன் மிக மிக
அழகாய் தெரிவதாயும்.
பூக்கள் தலை ஆட்டுகிறது இசைவாய்.

எப்படி...எப்படி...எப்படி
இத்தனை சந்தோஷ உலகமா!
எங்கு... எப்படி...
இசை என்னும் உலகம்
பெரும் கடல்.
நுழைந்துவிட்டால்
இத்தனையும் கிடைக்கும் இலவசமாய்.
வா என் கூட நீயும்
ஓர் இசையாய்!!!

ஹேமா(சுவிஸ்

Wednesday, July 23, 2008

கல்யாணம்...

நாட்டு நடப்பாலே
நாகரீகம் நலிஞ்சு போச்சு.
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேறு கேள்வி ஏதுமில்லை.

நல்லவனா கெட்டவனா தெரியாது.
படிப்பென்ன தெரியாது.
வேலையென்ன தெரியாது.
வயதென்ன போகட்டும் விடு.
குட்டையா நெட்டையா தெரியாது.
முடி கொட்டி தலை மொட்டையா
அதுவும் தெரியாது.

அதைப்போல பெண்ணும்
படிப்பென்ன கேள்வி இல்லை.
சமைப்பாளா கேள்வி இல்லை.(சமாளிக்கலாம்)
சின்னக் குழந்தை அவள்
இனிப்பைக் காட்டி
விருப்பம் கேட்கும் குழந்தை போல
கனடா என்றால்
கன்னியவள் மாட்டேன் என்றா
மறுத்திடுவாள்.

வாழ்க்கையென்ற வருங்காலம்
குடும்பம் என்ற கூட்டல் கழித்தல்
உணரமுடியாப் பருவம் அது.
தொட்டதெற்கெல்லாம்
நொட்டை சொல்லும் தாத்தா
பாட்டியிடமிருந்து விடுதலை.
அதைப் பாடமாக்கு இதைப் பாடமாக்கு
என்கிற பாடப் புத்தகத்திடமிருந்து விடுதலை.

ஆகா எத்தனை சுதந்திரம்.
தூக்கம் தேடும் வரை
தொல்லையில்லாத்
தொலைக்காட்சியும் தொலைபேசியுமாய்.
ஈரெட்டு வயதினிலே
தலை ஆட்டி நிற்பாள்
தஞ்சாவூர் பொம்மை போல.

பெண்ணைவிட மாப்பிள்ளைக்குப்
பத்தில் இருந்து பதினைந்து
வயதேதான் கூடவாம்
அதுவும் பரவாயில்லையாம்.

பச்சைக்குழந்தைக்கு
பாலைப் பருவத்தில்
பகட்டாகத் திருமணமும்
டொரண்டோவில்.

வருடம் ஒன்றிற்குள்
குழந்தைக்கும் ஓர் குழந்தை.
பராமரிக்கத் தெரியாமல்
பரிதவிப்பாள் பாவை அவள்
பாவம் பரிதாபம்.

நம் நாட்டின் கேட்டாலே
மலிஞ்சு போச்சு
முன்னைக் காலம் போல
சின்னப் பிள்ளைக்
கல்யாணம்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 21, 2008

நடிகர் திலகம்...

மனதைக் கழற்றி
முகிலுக்குள் முடக்கி,
மேடையேறிப் பாட்டும் கூத்துமாய்
காற்றோடு கதைப்பவனாய்...

சொந்த நினைவுகளை
ஓட்டுக்குள் ஆமையாய்
உள் இழுத்து,
வெள்ளைச் சிரிப்போடு
கலைக்குள் தொலந்தவனாய்...

இயல்பைத் தொலைத்து
நெருஞ்சி முள்ளுக்குள்ளும்
கண்ணில் நீர் மறைக்கும்
கலைஞனாய்...

எதைக் குறித்தும்
அக்கறை தவிர்த்து
தன் தொழில் ஒன்றையே
குறி வைத்து,
கூர்க் கோல் எறியும்
நடிகன் இவனாய்...
சிவாஜி கணேசன்.

இயற்கை அழியும் வரை
எமக்குள் நினைவோடு வாழும்
எங்கள் நடிகர் திலகத்தின்
நினைவோடு
இன்று ஒரு கணம்!!!

ஹேமா(சுவிஸ்

Sunday, July 20, 2008

உயிர் துளைத்து ஓர் உறவு...


குழம்பிக் கிடக்கிறேன்.
என்னைச் சேர்த்துச்
சரியாக்கு.
கை கொடு கொஞ்சம்...
இப்போதைக்கு.
உன் கதகதப்பு
தேவையாய்
இருக்கிறது
கொஞ்சம்.
குளிர்ந்து கிடக்கிறேன்
உயிர்ச் சூடேற்று
நிலம்...உன் மனம்
நீர்....உன் அன்பு
காற்று...உன் மூச்சு
ஆகாயம்...உன் உடம்பு
நெருப்பு...உன் அணைப்பு
உயிர்கள் இயங்க
இவைகள் என்றால்
என்னை இயக்க
இனி...
நீ மட்டும்
எல்லாமுமாய்.
வார்த்தைகள்
வர மறுக்கிற
மெளனத்தின்
மெளனத்துக்குள்
உன்னைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
அமைதி...பேரமைதி
முற்றிலும் ...சூன்யம்
ஆனால் இன்பம்.
கருப்பாய்...கடலாய்
முகிலாய்...மரமாய்
உன் உருவம்தான்
எப்படி?
அதையெல்லாம்
தாண்டிய
உன் மனதை
மட்டும்
தேடியபடி நான்.
இப்போ...
தேடிக் கிடைத்திருக்கிறது
உன் மனம்.
என்னைக் காணாமலேயே
உனக்குள்
சிறைப் பிடித்து
வைத்திருக்கிறாய்.
கள்வனடா...நீ
புரியாத வார்த்தைகள்
தேடி...
திட்டித் தீர்த்துப்
போன நீயா
பூவின் இதழை விட
மென்மையாய் மாறி
என் மனம் தொட்டு...
என் பெண்மை தொட்டு...
கதை பேசுகிறாய்.
ஆண்மைக்குள்ளும்
தாய்மை
இதுதானோ!

கண்ணா...
காதலின்
இன்பம் நீயா
இல்லை...
நீயே காதலா...
கட்டி விட்டாய்
கட்டுண்டு கிடக்கிறேன்.
விட்டுப் போனால்
உயிர் விட்டுப்
போகுமோ...அன்பே
எதை நான்
எப்படிச் சொன்னாலும்
நீ வேணும்
என்பது மட்டுமே
உண்மை!!!

ஹேமா(சுவிஸ்) 19.05.2005

Friday, July 18, 2008

கறுப்பு ஆடி...

ஆடிப்பிறப்பாம் நேற்று.
ஓப்பிள் காரில் பறந்தேன்
முருகன் கோவிலுக்கு.
அகதிக் கடவுளை சொகுசாய் பார்க்க.
பளபளப்பாய் உயர்ந்தரக ஆடை
நெஞ்சை மறைக்கும் நகைகள்
பிராங்கில் ஓடர் பண்ணிக் கட்டிய
கால்நீள வாசமில்லா மலர்மாலை.
பக்கத்தே இருமனைவிகளோடு.

கூப்பிய கரங்களுக்குள் கொலைவெறி.
முருகனை முறைத்தேன்.
அறைய நீண்ட கைகளை அடக்கியபடி நான்.
தெய்வங்கள் என்பவர் யார்...என்ன...
உண்மையா...?
என்றுமே பேசாத கற்களுக்கு
இத்தனை அலங்காரம்.
லிட்டர் கணக்கில் பக்கெட் பாலில் குளித்து
மிதமிஞ்சிய படையல்.

உண்ணுகின்ற குழந்தைத் தெய்வங்கள்
ஒற்றைப் பருக்கைச் சோற்றை
எறும்பு காவினாலும் தட்டிப் பறித்துத்
தின்னும் அவலம் என் ஊரில்.
இங்கோ....
பல்லக்கில் உலா வந்த
களைப்பில் தூக்கம்தானே.
பிறகெங்கே பக்தர்களின் பிரச்சனைகளும்
பேச்சுவார்த்தைகளும்.
அவனே கனவில் மிதப்பான்.
அடுத்தநாள் குதூகலத்திற்காய்.
வெம்பிய மாம்பழமாய் மனம் அவிய
ஆடிப்பிறப்பைத் தொடர்கிறேன்.

"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே"
என்று பாடிய காலம் போய்
கறுப்பு ஆடியாய் மாறி
ஆடி மெல்ல அசைகிறாள் என்றாலே
மனம் புயலடிக்கத்
துக்கம் விசாரிக்க சாவீடு போகிறது போல
ஒரு பாரம் ஈழத் தமிழருக்கு.

நேற்றும் மட்டக்களப்பில்
கைகள் கட்டப்பட்ட நிலையில்
மீண்டும் மனிதப் புதைகுழி ஒன்று.
காலகாலமாய் குடியிருந்த
கதிர்காமத்து முருகன் கோவில் கலைக்கப்பட்டு
போதி மரமும் புத்தரும் விகாரையும்.
மனிதனை வழிநடத்த கடவுள் என்கிற
ஹீரோவை வைத்துச் சொன்ன கட்டுக் கதைகள்.
உண்மையாய் ஒரு கடவுளும்
நல்லது செய்ததாய் சாட்சியே இல்லையே.

திசை மாறிப் பறந்த பறவை
திறந்து கிடந்த கதவிற்குள்
புகுந்து விட்டதாய் எங்கள் நிலை இங்கு.
நாகதாளியில் எழுதிய எங்கள் பெயர்கள்
இன்னும் அழியாமல்.
கூடுவிட்டுச் சொல்லாமலே வந்துவிட்டோம்.
எங்கள் கூடுகளை மரங்கள் இன்னும் பாதுகாத்தபடி.
விட்டு வந்த வழித்தெருக்கள்
புழுதி சேமித்துப் பொத்தி வைத்திருக்கின்றன
எங்கள் காலடித் தடங்களோடு.
பனம்பழப் பூச்சிகளும்
எச்சில் அமிலம் பூசி காக்கின்றன
பனம்பழங்களை எங்களுக்காய்.

அன்பு வறண்ட பூமி
வாய் பிளந்து காத்துக் கிடக்கிறது
அமைதி மழைக்காய்.
விழுவது மழை அல்ல.
மனிதச் சடலங்கள்.
தென் திசை தெய்வங்களே
என் தேசம் தூரத்தே அமைதி தொலைத்ததாய்.
உண்ட களைப்பில் நீ தூங்கு.
உண்மைச் சக்தி உனக்கிருந்தால் எமக்குக் கொடு.
நாங்களாவது தேடிக்கொள்கிறோம்
எங்கள் அமைதியை!!!

ஹேமா(சுவிஸ்)