| Tweet | ||||
Monday, June 30, 2008
Sunday, June 29, 2008
நிலவு...
கொள்ளை நட்சத்திரங்கள்தன்ணொளியோடு
வானில் இருந்தும்
இரவல் ஒளியில்
அழகு ராணியாய்
வலம் வரும் வானத்துப் பெண்.
காணாமல் போய்விடுகிறாள்
அடிக்கடி எங்குதான்?
மனம் சோர்வெடுக்க
ஓய்வெடுத்துக் கொள்கிறாளோ
பூமியின் அக்கிரமங்களைச்
சகிக்க முடியாமல்!
ஈழத்தின்
பட்டினிப் போராட்டம் பார்த்தே
பாதி தேய்ந்தே போகிறாளோ!
நாணித்தான்
முகிலுக்குள் ஒளிகிறாளோ
காதலின் புனிதம் இழந்து
காமத்தின் கோரத்துள்
காவடி ஆடும்
இளைஞரைக் கண்டு!
ஐயோ...
என்னதான் செய்வாள்
பாவம் அவள்
ஏதாவது சொல்லப் போக
அவளுக்கும் துளை போட்டு
ஓட்டையாக்கி விட்டால்!!!
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||
Friday, June 27, 2008
அநாதையில்லை யாரும்...
உயரப் பறக்கசிறகுகள் அற்று
அழுது களைக்க
அடுத்த கிளையில்
அசந்தே போனேன்.
கொத்திக் கலைத்த
அதே காக்கா...
அழைத்துப் போனது
தின்ன உணவும் தந்து அன்பாய்
மன்னிப்பும் கேட்டது.
இன்னும் நிறைவாய்...
கட்டித் தருவேன்
கூடும் ஒன்று.
இல்லை...இல்லை
கூட்டிப்போவேன்
உன் இனம் வாழும்
பகுதிக்கு என்றது.
பாம்பும் ஒன்று மரத்தடியில்
புற்றுக்குள் காத்திருக்கு
இரையாக்க
என் குஞ்சுகளை.
பாம்பின் புற்றால்
புத்தியும் வந்தது.
தூரப்பறந்தே உணவும் தேட
மனமும் இன்றி
உதவியும் இன்றி
குஞ்சுகள் வாடிப் படுக்க
பசியின் அவதிக்குள் நான்.
அகதிகளுக்காய் வானில் இருந்து
வந்து விழுந்த
உணவுப் பொட்டலம்
விழுந்தது எனக்கும்.
வயிறாற உண்டபின்
வந்தாய் என் ஞாபகத்தில் நீ.
நான் அழ...
காக்கா அழ...குஞ்சுகள் அழ...
அன்பு காட்ட
அடுத்தவர் இருக்கும்வரை
அநாதையில்லை யாரும்.
அப்படிப் பார்த்தால்...
ஆதியில் பிறந்த மனிதனும்
ஆதாம் ஏவாளும் அநாதை.
அநாதரட்சகன் கூட...
அநாதைதானே!!!
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||
Wednesday, June 25, 2008
இயலாமையின் எல்லை...
கற்பனைகள் உடைந்த கற்குவியலுக்குள்கனத்த மனதோடு.
நேசித்தலின் அளவை விட
வெறுத்தலின் வேக்காட்டோடு.
இனி ஒன்றும் செய்வதற்கில்லை
விலகுவதைத் தவிர.
சலசலத்த சமூகத்தின் இடையே
சின்ன அமைதியோடு நான்.
உன்னால் அதுவும் தொலையும் தறுவாயில்.
மன்னித்தலும் மறத்தலும்
உன்னைப் பொறுத்தவரை
தேவையற்ற ஒன்று.
வருடங்கள் எட்டின் வாக்குவாதங்கள்
செவிடன் காதில் ஊதிய சங்காய்.
சாக்கடைக்குள் கலந்து கொண்டிருக்கும் உனக்கு
என் புத்திமதிகள்
சாத்தான் காதில் ஓதும் புலம்பலாகவே.
இப்போ எல்லாம்
என்னைவிட புகையும் போதையும்
உன் துணையாக.
கட்டி வைத்துக் காவல் காக்க
ஒன்றும் குழந்தையல்ல நீ.
அன்பின் கட்டுக்குள் அடங்காத நீ
அழிவை நோக்கியே.
என்னவனே...
கண்கள் வலிப்பதை அறிகிறாயா.
கற்பனையில் காதலித்த
அந்த அழகான நாட்கள்.
உனக்குள்ளும் இப்படியா...
நீயுமா... என்பதுபோல.
கற்பனைக்கும் உண்மைக்கும்
எட்டாத் தூரமாய்.
சிறுக்கி நான் ஏமாந்தது என் குற்றமே
சொன்னாயா நீ என்ன!
திறமைகள் நிறைந்திருந்தும்
முயற்சியோ தேடலோ அற்றவனாய்.
மற்றவர்களைக் குறை சொல்லியபடி.
இன்றிருந்தோர் நாளையில்லை.
உலக ஒற்றுமைக்காய்
கூக்குரலிடும் ஒரு பத்திரிகைவாதியாய்.
இருந்தும் அசிங்கமான வார்த்தைகளோடு
படிப்பை பண்பை மறந்து
பிற்போக்காய் ஏனடா நீ.
ஏற்றிவிட ஏணி தருகிறேன்
ஏறாமலேயே எட்டியும் உதைக்கிறாய்.
தனித்த இரவில் கூட வந்து பார்
உன்னோடுதான் பேசிக்கொண்டிருப்பேன்
உலகம் ஒன்று எங்களுக்காய் உருவாக்கியபடி
உன் உயர்வின் எதிர்பார்ப்போடு.
காற்றோடு கலக்கும்
உன் திறமைகளைத் திரும்பவும்
கேட்க மிகுந்த ஆவலுடன்!!!
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||
Monday, June 23, 2008
நம்பமுடியவில்லை...
காற்றுப் பதிந்துதந்தது...
உன் நஞ்சு கலந்த
நாராசமான
வார்த்தைகளை.
உயிர் இருந்தும்
இறக்க வைத்தாயே
உன் உயிர் கலந்த
உறவு கூட
ஒரு கணம் மயிர்
கூச்செறிந்தது.
உன் நேசத்தை மட்டுமே
சுவாசித்த என் மூச்சும்
மூச்சுத் திணறியது.
உன் உருவம் தேடி
நகர்கிற நொடிகள் கூட
நடுங்கி
நிலை கலங்கிப் போனது.
உன் வரவுக்காகவே
காத்திருக்கும்
கனவுகள் கூட
வெறுத்துக் கறுத்து
இருட்டாகிப் போனது.
உன் குரலின் இனிமைக்காக
காத்திருக்கும்
தொலைபேசி கூட
மெளனமாய்
மொழி இழந்தது.
நினைவுகளில்
உனை நிறுத்தி
கற்பனையில்
உனை வளர்த்துக்
காத்திருக்கும்
என் நினைவுகள் கூட
கதி கலங்கி போனது.
இன்றுவரை
என்னை உன்னோடு
சிந்தனையில்
சேர்த்து வைத்த
என் செவிகள் கூட
பொய்யானதோ
உன் காதல் என்று
பைத்தியமாகிப் பிதற்றியது.
எனை விட
உனை நேசித்த
என் நிழல் கூட
நொருங்கிப் போனது.
நீ......
சொன்ன நச்சு வார்த்தைகள்
நீ.... உனை
மறந்த பொழுதானாலும்
என் வாழ் நாளில்
ஒரு பொழுதும்
மறக்காத
வலி தந்த வடுவை
மாற்ற
இனி ஒரு போதும்
முடியாது உன்னால்!!!!
02.02.2007
| Tweet | ||||
Saturday, June 21, 2008
காலக் கைதி...

விதியே வழிவிடு...
நீ மாத்திரம் என்னை
பற்றிக் கொண்டிருக்கிறாயே ஏன்?
உன்னை நான் வெறுக்கிறேன்.
வாழ என்று நினைக்க
ஏன் மறுக்கிறாய் நீ மட்டும்.
நான் களைத்துவிட்டேன்.
கண்களுக்குள் காளான்கள்
கண்ணீர் விட்டே வளர்க்கிறேன்.
காலத்தின் கொடுமை கண்டு
கலங்கி நடுங்கித் தவிக்கிறேன்.
உன்னால்...
உண்மை அன்பின்
தன்மை புரியாமல்
வெறுப்பதா...விரும்புவதா
தெரியாமல் இறுகிப் போகிறேன்.
ஏன் நான் மாத்திரம்
உன் சிலுவையில்
அறையப் பட்டுக் கொள்கிறேன்.
அன்பின் நாயகன்
அறியாமை யூதர்களால்
சிலுவையில் அறையப் பட்டது போல்.
என்னை எவருமே
புரிந்து கொள்ளவில்லையே.
உன்னை நான்...
வெறுப்பதை விட
என்னை நானே
வெறுத்துக் கொள்கிறேன்
வேதனையோடு!!!
| Tweet | ||||
Subscribe to:
Posts (Atom)




