*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, March 31, 2008

கனவின் கனவு...


நெருங்கி வா என்கிறாய்.
வந்தாலோ...
நெருஞ்சி முள் ஆகிறாய்.
தூர விலகையில்
தூது விடுகிறாய்.
சேரும் நிமிடத்தில்
செருக்கும் காட்டுகிறாய்.
காணாத உன்னைக்
கனவிலே வரைகிறாய்.
காணும் வரமொன்றைக்
கண்ணாமூச்சி ஆக்குகிறாய்.
இரண்டாய்...
மூன்றாய்...
எதிர்காலம் சிறக்குமென்கிறாய்.
வாழ்வின் கனவை வளர்த்து
நீரும் பாய்ச்சுகிறாய்.
பார்க்கத் தவிக்கையில்
போர்வைக்குள் பதுங்குகிறாய்.
அயர்ந்து நான் தூங்குகையில்
கனகதை பேசுகிறாய்.
குழந்தையாய்
அள்ள நினைக்கிறேன்.
குமரனாய்
மெல்ல அணைக்கிறாய்.
தாளாத வேளை
தலை தடவி விடுகிறாய்.
ஏமாந்த நேரம் பார்த்து
மெல்ல மடி சேர்கிறாய்.
அன்பே...
எனை மயக்கும்
குன்னக்குடியின் தோடியோ...
கோடை காலத் துவானமோ...
நீ !!!!

ஹேமா(சுவிஸ்)2003

Sunday, March 30, 2008

ஹேமாவின் முதல் கிறுக்கல்...


(8 வயதில் எழுதிய வாழ்த்து மடல்)

Friday, March 28, 2008

உயிர்வலி...

love
காலமும் நேரமும்
ஒத்து வராத
தேசம் உனது
வந்தாய்.... சென்றாய்
என் கண்
பார்த்துக் கொண்டிருக்க
உன்னையும் என்னையும்
பிரித்துப்...பிய்த்துக்
கொண்டு போனது
புகையிரதம்ஒரு நொடி கலங்கிப்
பின் சுதாகரித்தேன்.

நீ பிரியும்போது
சுவாசம் பட்ட வேதனை...
நீ பிரிந்தபோது
உயிர் வலித்த வலி...
உன் பார்வை
தந்த தாய்ப்பாசம்...
நம் கைகள்
விட்டு விலகினபோது
கலங்கிய நம் கண்கள்...
உணர்ந்தாயா
உனக்குள்ளும் நீ.

உன் ஞாபகமாய்
நீ விட்டுப்போனவைகள்
என்னிடம் நிறையவே
எதைக் கொண்டு போனாய்
என்னிடமிருந்து நீ.

கதவின் கண்ணாடியில்
நீ பதித்த
கை ரேகைகள்...
நீ துடைத்த
துவாயின் வாசம்
என் சுவாசம் வரை...
புகை பிடித்த
அடையாளங்கள்
பல்கனியில்...
வியர்வை மணத்தோடு
பாவித்த துணிகள்...
குளியலறையில்
படித்துப் போட்ட
குப்பையாய் புத்தகங்கள்...
படுத்துக் கசங்கிய
போர்வை...
இன்னும்... இன்னும்
எச்சங்களாய் என்னோடு.

ம்ம்ம்ம்ம்........
தனிமை எனக்குப்
பழகிய ஒன்றுதான்.
என்றாலும்
முடியவில்லை
குளிருக்கும்
தனிமைக்கும்
மட்டும்தான் துணை
என்று நினைத்த
தலையணை
இப்போ....
கட்டி அழவும்
கட்டி அணைக்கவும்
உன் நினைவோடு
என் அணைப்புக்குள்!!!!

ஹேமா(சுவிஸ்)25.10.2007

Thursday, March 27, 2008

எங்கோ இருந்து கொண்டு...

என்னதான் செய்கிறாய்
எங்கோ இருந்து கொண்டு...
மொழி தெரியாக் குழந்தை போல
ஒரே குழப்பம்.
உன் உணர்வின்
பார்வை மட்டும்
பட்டுத் தெறிக்கிறது.
என்றோ விட்டுப் போன
உறவொன்று
சட்டென்று
கை சேர்ந்தாற் போல
சொட்டுக் கண்ணீரில்
மனம் கரைந்து போகிறது.

கரைந்து கொண்டே
இருக்கிறது நேரம்.
கணங்கள் தேடும்
தவிப்பின் படபடப்பு.
மீண்டு விடுபட
நினைத்துத்
தோற்றுப் போகிறேன்.

நட்பின் கனத்த இதயம்
முகம் காணாமலேயே
முட்டி மோதுகிறது.
அங்கொன்றும்
இங்கொன்றும்
புள்ளிகள் போட்டதும்
தொட்டுப் போகும்
கோடுகள்...
கோலங்கள்
அழகழகாய்....
அன்பும்
தூர இருந்தாலும்
தொட்டுச் செல்கிறது
மனதை மிக அழகாய்!!!!

ஹேமா(சுவிஸ்)

காத்திருப்பு...

Thinking Of You Comments For Myspace
உனக்குப் பிடித்த
என் உதடுகள்
உன் உதடுகளின்
முத்தத்திற்காய்
காத்துக் கிடக்கின்றன.
இப்போதைக்குப்
பேசிக்கொள்ள
மட்டுமே முடிகிறது.
கற்பனை முத்தங்களோடு
எத்தனையோ நாட்கள்
தயங்கித் தயங்கி .....
கேட்கவும் முடியாமல்
கொடுக்கவும் முடியாமல்
வார்த்தைகள் கூட
உன் உதட்டோரம்
தடுக்கி விழுந்தபடி....
உன் குரல் தரும்
அசைவை
உதடு மொழி பெயர்த்து
தர....
ரசிக்க என்றே
என் உதடுகள்
சில நேரங்களில்
காத்துக் கிடக்கின்றன
மெளனமாய்....
என்றாலும்
காத்திருப்புக்கள்
உன்
முத்தத்திற்காகவே.....
உன் ஈர உதடுகள்
என் உதடுகளை
ஈரமாக்கும் வரை
காத்திருக்கும்
காதலொடு....
நானும் கூட !!!

ஹேமா(சுவிஸ்)17.01.2007

வாழ்வுக் கோலம்


தொலைந்த இடத்திலேயே
நின்று கொண்டிருக்கிறேன்.
நிலை தடுமாற வைக்கிறாய்.
வயதும் வாழ்வும்
வளர்ந்ததே தவிர,
மனமும் தவிப்பும்
அடம் பிடித்தபடி
அதே இடத்தில்
சின்னக் குழந்தையாய்.
சிரிக்கத்தான் வந்தேன்
கொஞ்சம்
மனம் விட்டு...


மனதையே
பறித்துக் கொண்டாய்.
விட்டு விட்டேன்
மனதை உன்னிடம்.
சொன்னது குறைவாய்
சொல்லாதது
நிறையவாய்...
சின்னவன்
உன்னிடம் மறைவாய்.

ஏக்கமும் தவிப்பும்
ஆசையும் அன்பும்
என்னக்குள்ளேயே
அடங்கி
எரிகின்ற நெருப்பாய்
அணையாமல்
என்றும்.
சொல்ல முடிந்ததும்
சொல்ல முடியாததுமாய்
மெல்ல அமிழ்கின்ற
வார்த்தைகள்.

கனவுகள்தான்
கை கோர்க்கின்றதே
தவிர
நினைவுகள்
நெடுந்தூரமாகி...
நக்கலும்
நையாண்டியுமாய்
முடியவில்லை.
சமூகமும் சொந்தமும்
சாக்கடைச் சகதிகள்.
சொல்வதற்கு
அவர்கள் என்றால்
சாவதற்கு
நான் மட்டும்தானா!!!!!

ஹேமா(சுவிஸ்)