*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, July 27, 2014

முகவரியில்லாப் புழுதிகள் ...

எனதான முகவரி
என்னிடமில்லை இப்போ
ஒரு முடக்கில்
வைரவர் கோயில் பின்புறத்தில்
என் வீடென ஞாபகம்.

நான் அளைந்த புழுதிகளையும்
கூழாங்கற்கள் நிறைந்த
சிரட்டையையும்
தாத்தா அம்மம்மாவின்
புகைப்படங்களையும்
றங்குப்பெட்டியில்
சேர்த்துவைத்திருக்கும் அது.

ஒவ்வொரு சந்தியிலும் தரித்து
பயணிக்கிறது என் கால்கள்
கை நீட்டி அழைக்கும்
உறவுகளுக்குள்
என் கண்களை
தேடி அலைந்தாலும்
எதுவும் எனதாயில்லை.

பரவாயில்லையென
தொடரும் பயணத்தில்
சந்திகள்
பழக்கபட்டதாயில்லாமல்
கிளைகள் விட்டு
வலம்சுழிவிட்டும்
குச்சு வேலிகளில்
பொட்டு விட்டும்.

வானங்களுக்குள்
தவறவிட்ட
சிறு சிறகுகளுக்காய்
என் தேடல்கள்
நனையும் கண்களை
காயவைத்தபடி.

பற்றி எரியும் என் மனம்
குரங்கு வம்சமாய்
காற்றை
எரித்தபடி
முடியாத தேடல்களோடு
சந்திகளில் மட்டும்
நிறுத்திப் பின் தொடர்கிறது
கால்கள் புதைய!!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

Subramaniam Yogarasa said...

ஹூம்.........எமக்கு மட்டும்!

கும்மாச்சி said...

பிறந்த மண்ணை பிரிந்த ஏக்கம் கவிதை வரிகளில்..........

இசக்கிமுத்து said...

தேடல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் ... வலியும் தான் !

Post a Comment