*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, August 27, 2014

மின்மினிப் பூச்சி - தேவதை !

அனைவருக்கும் வணக்கம்...!

இது ஒரு கதை சொல்லியின் (முதல்) கதை.
என் எழுத்துகளை பிரசுரிக்க இடமளித்த
குழந்தைநிலா ஹேமாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என் எழுத்துகளின் தொடக்கம் ஹேமா..
இவர் மற்றும் இன்னும் சிலரின் எழுத்துகளை
வாசிக்க ஆரம்பித்து பின் மெதுவாய் கிறுக்கத் தொடங்கி
இன்று ஒரு கதையும் எழுதும்  அளவுக்கு முயற்சிகளை
தொடர்ந்திருக்கிறேன் என்றால் எல்லாம்,
இவரைப் போன்றவர்களின் எழுத்தின் தாக்கமே காரணம்..
இந்த முயற்சியை என் அபிமான கவிதாயினி பக்கத்தில்
வெளியிடுவதில் மிகுந்த பெருமையடைகிறேன்...!
முதல் கதை கொஞ்சம் கிறுக்கலான கவிதை
நடையில் இருக்கும். பொறுத்தருளவும்...!
கருத்துகள் அன்புடன் வரவேற்க்கப்படுகின்றன...!
பிரியங்களுடன்...
ஒரு கதை சொல்லி !

இனித் தொடரலாம் மின்மினிப் பூச்சி தேவதையோடு...

சுற்றிலும் மலைகள் சுழ்த்திருக்க, பல குடிசை வீடுகளுடனும்,
சில காரை வீடுகளுடனும், நெடுவாய் மூன்று தெருக்களும்
குறுகலான இரண்டு தெருக்களுடனும்
அழகாய் அமைந்திருந்தது அக்கிராமம்..

அது ஒரு மாலை நேரம்.
சூரியன் மெல்ல தலைச் சாய்த்து கொண்டிருந்தான்.
சிறுசுகளின் விளையாட்டு கூக்குரல்கள் செவிகளை
அறைந்து கொண்டிருந்தன..
கோழிகள் பஞ்சாரங்களில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
கால்நடைகள் வயிறு நிரம்பி விட்ட மகிழ்ச்சியில் மண்
சாலையின் புழுதி பறக்க துள்ளல் நடை போட்டன.
வயல் வெளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன் நான்.
சில எட்டுகள் வைத்தால் முதல் தெருவை தொட்டு விடலாம்
என்ற நிலையில் தான் கவனித்தேன்...

எதிர் வெயில் அவள் மேல் படர்ந்திருந்தது..
மஞ்சள் தாவணியின் முனை காற்றில்
அலைபாய்ந்து கொண்டிருக்க,
அதற்க்கும் அவளுக்கும் பொருந்தும்
கச்சித உடைகளும் தரிந்திருந்தாள்.
நேர் வகிடுடன் நீண்ட மயிர்தோகை கூந்தல்,
அந்த சிறிய ஒற்றைக் கல் மூக்குத்தியும்..
அதே அளவிலான ஸ்டிக்கர் பொட்டும் ஒட்டியிருந்தாள்.
அந்த அழகிய வட்ட முகத்தில்..

கொஞ்சமாய் முகம் சுளித்திருந்தாள்..
எதிர் வெயிலின் தாக்கமாக இருந்திருக்கலாம்.
அவள் பாதங்களிலிருந்த வெள்ளிக் கொலுசின் ஓசை
தெருவின் வீட்டுச் சுவர்களில் பட்டு எதிரொலித்தது..
அதுவே அவள் வரும் வேகத்தையும் அறிவித்தது..
ஆம்... ஏதோ அவசரத்தில் வருகிறாள்
அதுவும் என்னை நோக்கி...
என்ன நடந்ததோ, எங்கயும் மட்டிவிட்டோமோ
என்ற பயத்தில், முன் எடுத்த அடியை வைக்காமல்
பக்கவாட்டில் ஒதுங்கி சாலையை விட்டு இறங்கி நின்றேன்.

(அவள்- ஓர் அறிமுகம்
அவள் வேறு யாருமல்ல..
என் இதயத்தை எடுத்து வைத்துக்
கொண்டு தரமாட்டேன் போ என்று அடம்பிடிக்கும் ராட்சசி.
என்னதான் ராட்சசி என்றாலும் பேரன்பு மிக்கவள்.
எனக்கொன்று என்றால் துடித்துப் போவாள்.
அழகிலும்,குணத்திலும் மேன்மை பொருந்தியவள்.
இதோ பக்கத்திலும் வந்து விட்டாள்...

என்னடா... உன்னைப் பார்க்கத்தான் இவ்வளவு வேகமாய் வரேன்..
நீ ஒதுங்கி போகிறாய்..
மேலும் சுளித்தாள் முகத்தை..
மனசு கேக்குமா என்ன...?
இல்லடி,,, ஒதுங்கி போகல...
நீ வர்ற வேகத்தில் மோதி கிழே தள்ளி விட்டுட்டேன்னா...
அதான் ஒதுங்கி நின்றேன் என்றவனை முறைத்துப் பார்த்தவள்..
பின்பு சிரித்து விட்டாள்.
போடா.. எப்போதும் என்னை கிண்டல் பண்றதே
உனக்கு வேலையா போச்சு..
தலையில் கொட்டினாள்..
ஏய்.. லூசு எத்தனை முறை சொல்லியிருக்கேன்.
வெளி இடங்களில் நெருக்கம் காட்டி நிற்காதே என்று..
யாரும் பார்த்தா அப்புறம் அவ்ளோதான்..
அதனாலென்ன என் ஆள் பக்கத்தில நிற்க எனகென்ன பயம்..
அதுவுமில்லாம அப்பா,அம்மா ஊர்ல இல்ல தெரியுமா...?
பாட்டி ஊர்ல நாளை கும்பாபிஷேகம். முன்னமே கிளம்பி போய்ட்டாங்க,,
மெல்லமாய் கண் சிமிட்டினாள்..

ஒ... அதான் துளிர் விட்டு நிக்கிறியா.. வச்சிக்கிறேன்
சரி, இப்போ எதுக்கு அவசரமா தேடிட்டு வந்தவ என்னை..
அதில்லைடா... உனக்கு தான் தெரியுமே
சின்ன வயசிலிருந்தே எனக்கு அந்த அம்புலி காடு பார்க்கனும்னு ஆசை,
நீ தான் என்னை ஏமாத்திகிட்டு இருக்கியே..
நான் எத்தனை முறை உன்கிட்ட கேட்டிருக்கேன்..
இன்னைக்கு போலாமா...?
போயிட்டு சீக்கிரம் வந்திடலாம்..
கெஞ்சலும் ஏக்கமுமாய் பார்த்தாள்...

வேணாம்டி... அங்க போனா அவ்வளவு சீக்கிரம் திரும்ப முடியாது.
போறதுக்கே கன நேரம் ஆகிடும்.. அவ்வளவு நேரம் நாம்
இங்க இல்லாம இருந்தா வீணா பிரச்சினை ஆகும்...

அத நான் பார்த்துகிறேன்.. அங்க நிறைய மின்மினி பூச்சி
இருக்கும் தானே.. எனக்கு அதைப் பார்க்கணும்டா...
அதை கையில் பிடிச்சு... நீ மட்டும் எப்படி வெளிச்சத்தோட
இருக்கேன்னு அதுகிட்ட கேக்கணும்.. ம்ம்ம்,
அதான் எங்க வீட்டில யாரும் இல்லையே.. நீ உன் வீட்டில
பக்கத்து ஊர் நாடகம் இல்ல சினிமா பார்க்க போறேன்னு
சொல்லிட்டு எப்படியாவது வாடா... விரசா திரும்பிடலாம்..
முக பாவனை மாற்றாமல் சொன்னாள்..

மனசு தங்குமா எனக்கு....
சரி போகலாம்... என்றேன்
சொன்ன விநாடி அவள் முகத்தை பார்க்கணுமே
பஞ்சுமிட்டாய் கிடைத்த குழந்தை போல...
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவள்,
தலையால் ஒரு முட்டு முட்டினாள்.
எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது...
நன்றிடா...! சொல்லி விட்டு கேட்டாள்..
ஆமா அந்த காட்டில நிஜமாலுமே அம்புலி இருக்கா..?

எனக்கு சரியாய் தெரிந்திருக்கவில்லை..
முன்பு அங்கு போனதும் கிடையாது,,
அங்கு அம்புலி என்றொன்று இருப்பதாகவும்
அங்கு செல்பவர்களை தூக்கி சென்று விடும் என்றும்
செவிவழியாய் கேட்டதுண்டு..
இதை இவளிடம் சொல்லி ஏன் குழப்பனும்...
பாரு எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறாள்லென்று...
மனதிற்குள் நினைத்தவனாய்...

தெரியலடி... எதுவா இருந்தா என்ன..?
உன்னைப் பார்த்தால் ஓடிவிடும் என்றேன்.
போடா.. இங்க மட்டும் என்னவாம்...
அடிக்க வந்தவள் நிறுத்தி..
சரி.. நான் எப்போ கிளம்ப வேணும்,
இப்போவேவா..? என்றாள்.
ஏண்டி... என்னை பஞ்சாயத்தில் நிற்க வைக்காமல் விட மாட்ட போல,
கொஞ்சம் இருட்டட்டும்.. ஒரு ஏழு மணிக்கு மேல..
வடக்கு எல்லையோரம் இருக்கிற அய்யன் கோயிலோரமா வந்து நில்லு.
நான் வந்து கூட்டிப் போறேன்..
இங்க பாரு அந்த இரண்டு மலைகளையும்
அந்த புறமிருக்கும் ஆற்றையும் தாண்டி தான் போயாகனும்..
அதனால ஒழுங்கா சாப்பிட்டு வா..
அப்புறம் பாதிவழியில் நடக்க மலைச்சு நின்றால்
அங்கேயே விட்டுட்டு வந்திருவேன் சொல்லிட்டேன்...
ம்ம்ம்... அம்மா அடை சுட்டு வச்சிட்டு போயிருக்கா,,,
உனக்கும் சேர்த்து கொண்டுவரேன்..
இப்போ வீட்டுக்கு போறேண்டா...
சொல்லிவிட்டு சிறுபிள்ளை ஓட்டம் ஓடி தெரு கடந்து மறைந்தாள்...!
மெல்ல இருட்ட தொடங்கியிருந்தது...

நேரம் ஏழு மணி தாண்டியிருந்தது... இந்நேரம் வந்திருப்பாள்..
பதற்றத்துடன் வீட்டில் ஏதோ சாக்கு சொல்லி விட்டு கிளம்பினேன்..
அய்யன் கோயிலை நெருங்கினேன்..
ஆள் அரவமற்று கிடந்தது..
இன்னும் வரலையோ இவள்... எப்போதும் இப்படி தான் பண்ணுகிறாள்.
வரட்டும் இன்று... நல்லா நாலு திட்டினாதான் பயம் இருக்கும்..
மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தவனை பின்புறமிருந்து
தொட்டது ஒரு கரம்...
திட்டுகிட்டு திரும்பியவனை கத்திவிடாமல்
வாய் பொத்தியது அக்கரம்..
நிம்மதி பெருமூச்சு விட்டேன்... யாரோ அல்ல..
அவள் தான்..
எங்கடி போனவா..? இப்போவே நேரமாச்சு தெரியுமில்ல..
மிரட்டலாய்...
போடா.. நீ இப்போ வந்திட்டு என்னைச் சொல்றியா...
நீ சொன்ன நேரத்துக்கே வந்து காத்து கிடக்கேன் நான்...
யாரும் பார்ப்பாங்க என்று மதில் பக்கமா நின்றேன்...
பெருமிதமாக சொன்னாள்....

அறிவு கொழுந்து தாண்டி நீ...! சரி போகலாமா என்றேன்.

ம்ம்ம் ஆனா ஒரு அடி தள்ளி தான் வரணும்..
தொடாமல் இருக்கணும், அப்படின்னா போலாம்..
இல்ல, வீட்டுக்கு போறேன் என்றாள்....!
எல்லாம் விதி... கூட்டிகிட்டு போறதும் இல்லாம நிபந்தனை வேறயா..?
தலையில் அடித்து கொள்ள வேண்டும் போல இருந்தது....
சரி போகலாம் என்றேன்...
ம்ம்ம்.... முனகினாள்.
பாதங்கள் வேகம் காட்டின... பாதை சென்ற திசை நோக்கி...

அப்போதுதான் முளைத்திருந்த முழு நிலவு கொண்டு வந்திருந்த
தீப் பந்தங்களுக்கு வேலை இல்லாமற் செய்திருந்தது...
முதல் மலையை மெதுவாக கடந்தோம்...
இரண்டாம் மலை நெருங்கியதும்
அம்புலி காடு கண்ணில் பட்டதுதான்...
அவள் நடை வேகம் கூட்டிச் சொன்னாள்..
சிக்கிரம் வாடா என்னை சொல்லிட்டு நீ தான் மெதுவா நடக்கிறாய்..
வரியா இல்ல விட்டு போகவா...? என்றாள்.

ஏண்டி சொல்ல மாட்ட நீ.... காடு வரட்டும் உன் வேகத்தை பார்க்கிறேன்..

ஏண்டா... ?

அங்கதான் அம்புலி இருக்கே என்றேன்.

நிச்சயமாய் பயந்துபோய் இருப்பாள் போல..
நிஜமாவா...? பக்கம் வந்து கையை இறுகப் பற்றிக் கொண்டாள்..
ஏய்..சும்மா சொன்னேன் டி லூசு...
பயப்பதடாத என்றேன்...
ம்ம்ம்.. என்றாலும் கையை விலக்கவில்லை..
உணர்ந்தேன் அவளுக்கு என்மேலிருந்த
அன்பின் பிணைப்பையும் நம்பிக்கையும்,,
சற்று நேரம் எதுவும் பேசாமலே தொடர்ந்தது பயணம்...

ஆற்றை நெருங்கியதும் அவளே பேச்சை துவக்கினாள்...
ஆமா இன்று குளிச்சியா நீ...? என்றாள்..
இல்லை என்றேன்..
அழுக்கு பையா... இங்கதான் இவ்ளோ தண்ணி ஓடுதுல்ல..
போய் குளிச்சிட்டு வா.. நெட்டினாள் என்னை.
பரவால்ல... காலைல குளிச்சிக்கிறேன்...
ஏற்கனவே குளிரா இருக்கு... இப்போ குளிச்சா அதிகமாயிடும்
அப்புறம் ஏதும் ஏடாகூடமாயிடும் என்றேன்...
வேணாம்பா.... அப்படின்னா என்றைக்குமே நீ
குளிக்க வேண்டாம் என்றாள் கேலிச் சிரிப்போடு..
ம்ம்ம்.. நான்.

ஆற்றை கடக்க அந்த பழைய கல் பாலம் தான் எப்போதும் துணை..
பாலத்தை நெருங்கியதும் வெடுக்கென என் கையை உதறியவள்,
குட்டி ஓட்டம் காட்டி பாலத்தில் நின்று சொன்னாள்..
ஹை.... நான் தான் முதலில் தொட்டேன்... கீச்சு குரலில் சொன்னாள்.
பின் பாலத்தின் குறுக்காகவும், நெடுக்காகவும் சற்று தூரம் போய்
திரும்பி வந்து மறுபடி திரும்ப போய்....
சிறுபிள்ளைத்தனம் செய்து கொண்டிருந்தாள்... நான் இருப்பதையும் மறந்து...!
என்னடி பண்ற நீ....?

ஒன்னுமில்லையே என்றவள்...  பெருமூச்சொன்றை உதிர்த்து சொன்னாள்..
சின்ன பிள்ளைல இங்க சிலமுறை வந்துருகேண்டா தாத்தாவோடு...
அப்போல்லாம் பாலத்தின் மேல் தரை தட்டி சில நேரங்களில் தண்ணீர் ஓடும்.
காலால் எத்தி விளையாடுவேன்... அவ்வளவு சந்தோசமா இருக்கும்..
இங்க பாரு ஒருமுறை அப்படி விளையாடுறப்போ லேசா அடிபட்டுச்சு..
உடனே தாத்தா ஓடிபோய் அதோ அக்கரையிலிருந்து
ஏதோ இலை பறிச்சு வந்து மருந்திட்டார்...
என்று கணுக்காலிலிருந்த சிறு கீறல் தழும்பைக் காட்டினாள்..
கூடவே தாத்தாவின் நினைவுகளையும்...!
என் கண்களில் துளிர்த்த சிறு துளிகளை மறைக்க முயன்று..
ம்ம்ம் போகலாம் என்றேன்...
நல்லவேளை அவளிருந்த சந்தோஷ மனநிலையில் இதை கவனித்திருக்கவில்லை...!

காட்டை நெருங்கி விட்டோம் என்பதின் அடையாளமாய்
வெட்டவெளியில் தொடர்ந்தது பாதை...
தூரத்து நெட்டை மரங்கள் கையசைத்து வரவேற்ப்பது போல ஆடியது காற்றில்..
இப்போது நிலா தொடுவானிலிருந்து வெகுவாகவே மேலே வந்து விட்டிருந்தது.
நல்ல வெளிச்சம் பகலைப் போல காட்சியளித்தது.
காட்டு மிருகங்கள் இரவு உணவு முடித்து
அப்போதுதான் உறங்க தொடங்கியிருக்கும் போல,
மிக லேசான கர்...கொர் சத்தங்கள் தூரத்தில் கேட்ட வண்ணம் இருந்தன..
பக்கமிருந்த மரங்களில் பறவைகள் எங்களை கவனித்து
விட்டாற்போல அவ்வப்போது கீச்சிட்டன..

எங்கடா ஒரு மின்மினி பூச்சி கூட காணல...?

எனகென்னடி தெரியும்...
ஒருவேளை ரொம்ப வெளிச்சமாய் இருக்கிறதால வரலையோ என்னவோ..?
கோபப்பட்டு அவள் நிலவை முறைத்தலோ என்னவோ,
மேகக் கூட்டத்துக்குள் மறைந்து கொண்டது நிலா...!

லேசான இருட்டு அவளை கொஞ்சமாய் பயமுறுத்தியிருக்கும் போல..
மீண்டும் இறுகப் பற்றிக் கொண்டாள் என் கரத்தை...!
மனதிற்குள் சிரித்து கொண்டேன்.
வெளிகாட்டாமல்,
என்னடி..? என்றேன்.
ஒன்றுமில்லை நட என்றாள்.
இம்முறை நெருக்கம் அதிகரித்திருந்தது...!

அன்றே மலர்ந்திருந்த காட்டு மலர்களின் மணம் எங்கள் வழியெங்கும் நிரம்பியிருந்தது.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு குளம்...
அதில நிறைய தாமரை பூக்கள்...
நாங்கள் குளத்தை நெருங்கியதும் எங்கள் சத்தம் கேட்டு தவளைகள்
தான் சத்தத்தை நிறுத்தி விட,
அமைதியானது குளமும்.. வனமும்...!
நிசப்தமே படர்ந்திருந்தது எங்கும்..
அவள் அரை இருட்டிலும் தாமரை பார்க்க ஆசைப்பட்டு,
எனக்கு அத பார்க்கணும் கண்ணா என்றாள்.
என்னடா இவ ஆசைப்பட்டு கேக்கிறாளே...
என்ன செய்ய ன்னு தவித்து நின்றேன்..
என் தவிப்பு கடவுளுக்கும் கேட்டிருக்கும்...!
சரி என்று குளத்தில இறங்கி அதை பறித்துக் கொண்டு
வந்து அருகில் காட்டலாம் என்று இறங்க ஆரம்பித்தேன் குளத்தில்...!

அப்போது...........

சிவப்பும் மஞ்சளும் கலந்த ஏதோ ஒரு பெரிய
ஒளி பெருக்கு குளத்தின் எதிர்புறத்தில்
இருந்து குளத்தில் மேல்புறமாக நெருங்க பரவ ஆரம்பித்தது...!
புரியமால் பயத்தில் அவள் என் கை பிடித்து,
வேணாம் டா.. என்றாள்.
நான் அவளை சமாதானப் படுத்தி மீண்டும் இறங்க ஆரம்பித்தேன்.
அதற்குள் அந்த ஒளிப் பெருக்கு குளம் முழுக்க
பரவி விட்டிருந்தது.
கூட்டமா இருந்த அந்த ஒளி வட்டம் சிறு சிறு பிரிவா பிரிந்தது.
அவள் முகத்தில் அப்படி ஒரு ஆச்சரியம்...!

ஆம் அவை எல்லாம் மின்மினி பூச்சிகள்......
அவள் பார்க்க ஆசைப்பட்ட மின்மினி பூச்சிகளே தான்...!
அந்த வெளிச்சத்தில் அத்தனை தாமரை மலர்களும்
அவ்வளவு அழகாய் காட்சி தந்தது.
மெய்மறந்து சிலையாகி நின்றாள் அவள்..
அவள் முகம் தாயை பார்த்த குழந்தையின் பரவசம் போல ஆகியிருந்தது...!
சரி பூ வேண்டுமென்று கேட்டாளே என்றுனர்ந்தவனாய்,
மீண்டும் குளத்தில் இறங்க ஆரம்பித்தேன்..
அவள் சொன்னாள்...
வேண்டாம்டா......அது அங்கேயே இருக்கட்டும்.. அதுதான் அழகு எனறாள்...!

அவள் வார்த்தைகளை மின்மினிகளும் கேட்டிருக்கும் போல...
அத்தனை மின்மினியும் அவளை வட்டமிட ஆரம்பித்தது..
அவளைச் சுற்றிச்...சுற்றி,,,, அழகாய், அழகழகாய்...
கூடவே நானும் சுற்றினேன் மின்மினியாய் மாறி...!
அப்போது எனக்கொன்று சொல்லத் தோன்றியது..
சொன்னேன் அதை...
இப்போ நீ  ரொம்ப அழகா இருக்கடி...
தேவதை போல,,,,,
என்னடா...? சரியாய் கேட்காதவள் கேட்டாள்.
வேகமாய் கத்திச் சொன்னேன்..
தேவதை டி நீ.... அழகாய் புன்னகைத்து, மெதுவாய் முகம் சுளித்து,
கைகளை அகல விரித்துச் சொன்னாள்..
இறுக்கமா கட்டிக்கோடா தேவன் மட்டும் ஏன் தனியா நிற்க வேணும்...?

நிஜமாகவே மிரண்டு போனேன்.. இவளா பேசியது என்று...??
யோசித்து முடித்த நொடிப்பொழுதில் இழுத்தணைத்து கொண்டாள்.
இப்போதாண்டா உண்மையாலும் தேவதை நான்.உண்மைக் காதலின் மகத்துவத்தை எந்த ஆண்மகனும் உணர்திருப்பான்,
அந்த இடத்தில் இருந்திருந்தால்...!
எவ்வளவு நேரம் அப்படியே கடந்திருக்கும் என்பதை இருவராலும்
உணர முடிந்திருக்க வில்லை....!
தொடர்ந்து கொண்டிருந்தோம் எங்கள் காதல் கண்ணாமூச்சி
விளையாட்டுகளை மின்மினிப் பூச்சிகளோடு...!

மீதமிருக்கும் இரவில் நடந்திடப் போகும் விபரீதங்கள் எதையும்
துளியும் உணர முற்படதவர்களாய்..
நேரம் நள்ளிரவைத் தொட்டு விட்டிருந்தது.....

- தொடரும்...


சல்லடை நினைவுகள்...

வேர்களுக்குள் வேர்த்தபடி
என்னுள் கிளைவிட
தோல்கீறி
முயற்சித்துக் கொண்டிருக்கிறாய்.

சில....
நிழல் பரப்பும்
எலுமிச்சை வாச வேர்களின்
நடுவில்தான்
உனது வீடும்
எனது வீடுமெனச் சொல்லி...

வானம் தாண்டிய
ஒரு பெருவெளியில்தான்
முந்திய நம் குடிசை
இருந்ததாக
அன்றைய ஊடல் பொழுதில்
எழுதியும் வைத்திருந்தாய்.

எப்போதெனக் கேட்டபடி
உன் தோள் சாய
முன்பொரு காலமென
நீ...சொல்ல
நான்...சிணுங்க
மெல்ல என்....
கொலுசின் மணிகளைக்
கழற்றிக் கொண்டிருந்தாய்.

பூக்களில்தான்
உன் குடியிருப்போ
தேனீக்களின்
தோழியோ நீ
இறகுகளை
தேவதைகளுக்குப்
பரிசளிப்பாயோவென...

வான் பறக்கும்
பறவைகளாய் மாறி
கண் தரும் காமக்களியில்
உன்னோடு களிப்பதில்தான்
எத்தனை அற்புதம் !!!

குழந்தைநிலா ஹேமா !


Sunday, August 24, 2014

முடியாதவர்கள்...

அவதானமாய் வீழ்த்தப்படுகிறேன்
என் இருப்பின் சூத்திரங்களையே
ஆயுதமாக்கி.

வேடிக்கை பார்க்கிறது
காலம்
பிடி தளர்ந்த என் கையில்
அத்தனை ஆயுதங்களையும்
திணித்து.

பலம் குறையக் குறைய
திருப்பிக் கொடுக்க
முடிந்தளவு முனைகிறேன்
நரம்பறுத்த கைகளை நீட்டி.

ஒரு நிலைக்குப்பின்
என்னிடம் வாங்கிய
ஆயுதங்களாலேயே
என் ஆன்மாவையும்
அறுக்கத் தொடங்குகிறார்கள்.

மிக நிதானமாய்
நீந்தி வருகிறது
எனக்கான
முடிவிலியின் கணங்கள்
புஷ்பக விமானத்தில்!!!

குழந்தைநிலா ஹேமா !

Tuesday, August 19, 2014

பறத்தலுக்குமுன்...

உச்சுக்கொட்டியபடி
என் உயிர் பிரிவதை
பார்க்கவென்று
காத்திருக்கிறாய்
எச்சிலைக்கூட
விட்டு வைக்காத
காட்டுக்குரங்குபோல
வீட்டு மூலையில்
புழுதியலம்பி.

சிலந்தி
தன்னைத்தானே சிக்கெடுக்க
போராடிக்கொண்டிருக்கிறது
பூனையும் நாயும்
கோழியும்
இரை தேடிக்கொண்டிருக்கும்.

பானையிலிருக்கும்
துக்கிணிப் பருக்கை
எனக்கேதான்
போதுமாயிருக்கிறது
போய்விடு.

துடக்குக்கழிக்க வாசலில்
துடைப்பமெடுத்து
வைத்துவிட்டேதான்
போயிருக்கிறார்கள்!!!

குழந்தைநிலா ஹேமா !

Thursday, August 14, 2014

குழந்தைகளற்ற தேசம்...

நிலாக்குட்டி....
உனக்கென்ன
விடுமுறையும் அதுவுமாய்
குட்டியானை
அதுதான் உன் அம்மாமேல்
உருண்டு பிரண்டு சண்டைபோட்டு
பிஸ்ஸாவும் சினிமாவுமாய்
பொழுது போக்குவாய்.

நிலா....
மூச்சை முழுதாய் உள்ளிழுத்து
மெல்ல அனுபவித்து
வெளிவிடுவது போலானது சுதந்திரம்
நிச்சயம் நீ அனுபவிப்பாய்
வேற்று நாட்டில் பிறந்தாலும்.

நம் ஊரிலேயே எத்தனை முறைதான்
அடையாள அட்டையை
முழத்துக்கு முழம் காட்டுவோம்
எப்போதாவது எப்போதாவதுதானே
இங்கு அந்த அடையாளம்
தேவைப்படுகிறது.

அழிந்த வீதி
இறந்த ஊர்
அலையும் ஆவிகளின் அழுகுரல்
நச்சுக்காற்றைச் சுவாசிக்கும்
உன் இனச் சகோதரர்கள்
போரில் இறந்த
முதல் விரலையும்
கடைசி விரலையும் கோர்த்த
உன் அண்ணா அக்காக்கள் வாழ்ந்த
அடர்ந்த சூன்ய பூமி
அடையாளக் கல்லறைகள்கூட
அற்ற அரூபம் அறிவாயா ?

குழந்தைகளை அழிப்பதே
அடக்குமுறைக்கான யுக்தியாய்
ஆயுதமாய் கையாளுகிறார்கள்
நிலா இப்போதெல்லாம்.

இனத்தை அடியோடு ஒழிப்பதை
சரிவரச் செய்கிறார்கள்
காஸாவிலும் ஈழத்திலும்
நல்லவேளை நீ
அங்கு பிறக்கவில்லை.

கோவிலில்லா ஊரில்
குடியிருப்பதுபோல
குழந்தைகளில்லா
ஊரும் வீடும்
எப்படியிருக்கும்
நிலா ?

நீ கேட்ட பார்பிக் கிலுக்கி
அங்கு இனிக் கிடைக்காது
பார்பிகளும் தம் தாய்களை
சூழ்ச்சி அரசியலிலிருந்து
காப்பாற்றும் கவலையில்தான்.

தாயின் குறியில் குண்டு வைத்து
கருவிலேயே கொன்றார்கள் ஈழத்தில்
காஸாவில் ஒவ்வொரு இஸ்ரேலியனும்
குண்டாகி
கொன்று தின்கிறான் குழந்தைகளை.

நிலா....
உனக்கு அம்மா சொன்னாளா ஒரு கதை ?

அரசியல் கிலோ என்ன விலையென்று
ஏதுமேயறியாச் சிலரையும்
இராவணுவக் குண்டுகள் துளைப்பதுண்டு
உன் தாத்தாவைச் சிதறடித்ததுபோல.

ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தையும்
அப்படித்தான் நிலா
உன்னைப்போல
பாலும் சொக்லேட்டும்
அம்மாவின் மடியும்
ஒரு கரடி பொம்மையுமே
உலகமாயிருக்கும்
அதற்கெப்படித் தெரியும்
அரசியலும் துப்பாகியும்
இனமும் மதமும்.

கண்முன்னால் பறிகொடுத்து
பதுங்கு குழிக்குள் பரிதாபமாய்
புலம்பித் தவிக்கும் பெற்றோர்கள்
குழந்தைகள்
பெற்றுக்கொள்வார்களா இனி ?
சாத்தியமில்லையே நிலா
இப்போதைக்கு.

இன அழிப்பின் உச்சத்திட்டம்
இதுதான் நிலா
அறிந்துவை
நம் இனத்தின் பாடுகளை நீயும்
இன உணர்வு ஓர் நாள்
உன் மனதோடு
கேள்வி கேட்கும் நிச்சயம்!!!

செஞ்சோலைச் செல்வங்களின் நினைவுநாளில்....

குழந்தைநிலா ஹேமா !

Wednesday, August 13, 2014

தோலும் தோல்வியும்...

காமம் உரச
தீரா இரவு வலிதர
நீந்திக்கொண்டிருகிறது
உடல் நெளிய
மீன் குஞ்சொன்று.

தீர்மானமற்ற காதல்
காமத்தின் முடியாமை
ஒத்திய காயங்களுக்கு
விதியின் அகோர வெக்கை
மருந்திட முடியாப் பெண்மை.

ஆதுரமாய்
முத்தமிடுகிறது
அந்த மீன்குஞ்சு
முன்னொருநாள்போல்
பாதிப் பௌர்ணமி
அதிசயிக்க.

மனதையும் உடம்பையும்
இறுக்கி
சுற்றிப்படர்கிறது பசலை.

ஆனாலும் வேண்டாம்
ஒலிப்பதிவில் முனகி ஒலிக்கும்
காமம் விற்கும் ஒருத்தியென
ஒரு காதல் அசிங்கம்.

மேசை மெழுதிரியும்
அர்த்தமில்லாக் கவிதைகளுக்குள்
சிக்காத சில வார்த்தைகளும்
அழுகி நாறும் பூவிதழ்களும்
போதுமெனக்கு!!!

குழந்தைநிலா ஹேமா !

Tuesday, August 12, 2014

மழை குடிக்கும் ஓரிரவு...

உன் இரவில் என் விழிப்பு
என் இரவில் உன் நித்திரை.

அடைமழையின்
இரவிங்கே
அங்கே ?

உலர்ந்த இறகில் அடர்மகிழ்வு
நனைந்த இறகில் தளாத்துக்கம்
கை நிறைய உன் வார்த்தை மழை
காளான்களில் தவளை உருவம்.

அம்மாவுக்கு மாத்திரை சரியாகக் கொடுத்தாயா
சின்னச்சின்ன வேலைகளைத் தாங்கிக்கொள்
உன் புகை நாற்றத்தை அவளிடம் காட்டாதே
அணைத்து முத்தம் கொடு அழாது அந்தப்பறவை.

பசியென்று சொல்லிவிட்டு காத்திருக்கிறாய்
செய்மதிக் கோபுரத்தில்
இணையம் சொல்வதை நான் சமைக்கும்வரை
வயிற்றிற்குள் பிரபுதேவாவும் பீஷ்லூசியும்.

தூரத்துப்பச்சை நீயும் சரி நானும் சரி
இலைகள் அசைந்தாலும்
காற்றுத் தொங்கி நிற்கும் கடலுக்குள்.

கண்ணா...
பாலகுமாரனின் நாவல்கள் வாங்கியனுப்பு
உடையார் நாவல் பாலகுமாரனின் பிறவிக் கடன்
சோழ தேசத்தின் ஒட்டுமொத்த வாழ்வியல் பல
ராஜராஜத்தேவரும் பஞ்சவன் மாதேவியும்
இறப்பின் பின் தஞ்சைக் கோவிலைச் சுற்றியே
ஆன்ம வடிவமாக உலவுகின்றனராமே.

மனக்குளத்தில் என்னயுமறியாமல் கல்லெறிந்தேனா
சலசலப்பும் குழப்பமும் பிரார்த்தனையும் கேட்கிறது
பிளவுறும் மௌனமுடைத்தலறுகிறது சில சொற்கள்
உன் அழுகையின் மொழி கனக்கிறது
அன்பின் பற்றாக்குறையாக.

தெருவில் இருவரின் அன்பின் பிணைப்புப் பார்த்தேன்
இவர்கள் போல் போலியாய் நாமில்லை
மனங்கள் சாகும்வரை
அக்காதல் வருமா நீறு பூத்த என் வாழ்வில்
தேசத்தில் என் உயிரும்
ஊசலாடும் உள்ளூடலுமாய் நானிங்கு.

நம்பிக்கைக் கடவுளொருவர் உயிர்ப்பித்ததாய் சொன்னாய்
அவர் கழுத்திலும் ஆயிரம் வடை மாலைகள் பார்
வேண்டுதலுக்கும் விற்பனைக்கும் லஞ்சத்திற்குமாய்.

இப்போதைக்கு....
உன் முத்தத்தை தள்ளி வை தீயாய் சுடுகிறது.

கண்ணா...
கை கொடு பாரதி பாடலில் இளையராஜா இசை தொடு
இந்த மழையில் குடையாய் நானென்றேன்
மழையாய் நீயென்கிறாய்
காதல் தவிர்த்துக் கட்டிக்கொள் கொஞ்சம்
குடை வேண்டாம்
ஈரம் சொட்டச் சொட்ட நனைதலே இதம் இருவரும்!!!

குழந்தைநிலா ஹேமா !


Saturday, August 09, 2014

முக்கண்ணன்...

கருவியில் கண் வைத்து
துளைப்பவன் சும்மாயில்லை.

இயற்கையை
போரை
பிண்டத்தை
பணத்தை
பாசத்தை
காதலைக்
கடவுளை
அழிவை
ஆற்றலை
உயிராக்கி
உணர்வாக்கி...

நிஜத்தை நிழலாக்கி
சொல்லாத சொற்களைக்
கிளிக் கில் கூட்டியெடுத்து
புகையாக்கி...

பறவையைப் படமாக்கியவன்
சிறகுகளையும் வானத்தையும்
தனக்குள் அடக்கி...

விரும்பினால்
வியாபாரமாக்கியும்
வெளிப்பாடாக்கியும்...

வில்லனாயும்
உண்மை சொல்லும்
வீரனாயும்
அவனே ஊடகத்தில்!!!

நிழலில் ஜெரா நன்றி !

Jera Thampi

குழந்தைநிலா ஹேமா

Thursday, August 07, 2014

பச்சைக் கள்ளன்...

நீ...
உதடு
பதித்தெழுதியபோது
தெரியவில்லை
நம்
உயிர் தொட்டெழுதும்
வாழ்வின் உயிலென்று.

உன் நிழலால்
புசிக்கப்பட
என் மிச்சங்கள்
பாசியாய் வழுக்கி
எம்பிப் பறக்கிறது
உதட்டுப் பூக்களென
பச்சை பச்சையாய்.

காதலாய்
மலைப்பாம்பெனப்
பற்றிக்கொண்டு
என் இறகையும்
பறித்துக்கொண்டு
பற்றிக்கொண்டதும்
பறித்துக்கொண்டதும்
நானென
பறையடிக்கிறாயே
இறகுக்கள்வனே.

பறவையாதலும்
பைத்தியமாதலும்
சுகம்தான்
அன்பின் தோள்களில்.

பச்சைக் கள்ளா
உனக்கா தெரியாது
அன்பின் பாரம்!!!

குழந்தைநிலா ஹேமா.

Wednesday, August 06, 2014

குறிப்பற்ற யாசகம்...

ஆயுள் அவிரும்வரை
அஞ்ஞிமிறுக்கு
குறுஞ்செய்தியனுப்பலாம்.

தற்கொலையோ
இல்லை இயல்போ
இறுதியாய்த்தானே
உதடிறுகும்.

காத்திருக்கிறேன் குரல் கேட்க
நகச்சதை கடித்துத்துப்பி
இரத்தக்களறி...நுகர்ந்தும்
வந்தபாடில்லை அது
ஆனால்
அத்தனை கொடியதுமில்லை.

இன்றைய வெயிலை
உலர்த்தும் தென்றலிலும்
சில தீர்வுகள் இருக்கலாம்
சிந்திக்குமுன்
ஆவி நழுவுகிறது
சில பஞ்சுப்பூக்களோடு.

உரையாணி தேவையாயிருக்கிறது
பிரியங்களை மௌனமாய் மாற்றி
கனவுகளுக்குள் குறித்துக்கொள்ள.

இனிப்பெனத் தரும் கசப்பை
சொட்டுச் சொட்டாய்
உயிருருவிச் சிதிலடைத்து
வா........
எனக்கூறிவருமொருநாள்
மரணம் புதிர் அறுத்து.

சதுர்யுக யாசகம்
நெடுக நெடுக...!!!

குழந்தைநிலா ஹேமா.

Friday, August 01, 2014

நினைவோடு வாழ்த்து ....

முழுமதியன்று
என் தேநீர் குவளையில்
தவறி விழுந்த
ஓர் பால்நிலாத்துண்டு
அலைந்து களைத்துப்போய்
உருகித் தேய்ந்து தத்தளிகிறதே...

ம்...
எடுத்து வைக்கிறேன்
குளிர்ந்த பாலில்
அவன் வரும்வரை
சிந்தும் முத்தங்களை
சிந்தாமல் சேமித்து
சந்தம் பாடியே
மூழ்கிய நிலவை
முழுதாய்
சரிசெய்துகொள்ள !

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராம் !


Saminathan Ramakrishnan
 
குழந்தைநிலா ஹேமா

யாமம்...

யாமக் கவிதைகளை
எழுதத் தொடங்கியிருந்தான்.

மனங்கொள்ளா அலையென
அவன் தரப்போகும் முத்தம்
தோற்றப்பிழையாகி
உச்சுக்கொட்டுகிறது
இப்பொழுதே.

மனம் பிறழ்ந்த
அவன் பிறந்த நாளொன்றில்
எதிர்ப்படும்
விலங்கொன்றைக் கொல்கிறேன்
வன்மத்துடன் கூரிய நகங்களால்.

சொற்குவியலுக்குள்
புதைத்து வைத்த
அற்புதத் தோற்றமாகிறது
என்னை மூச்சிழக்க வைக்கும்
முத்தமொன்று
தருவதாகச் சொன்ன அந்த
ஒற்றை வார்த்தை.

அன்பே...
இனியெப்போதும்
உயிர் பறிக்கும் நிகழ்வொன்றை
ஒத்திரா
உவப்பில்லா
ஆழத் துளைத்தொரு முத்தமிடு
என்னை எரிக்கும்
தீயாய் இருக்குமது.

உன் ப்ரியக் கயிறு
முகரும் இறுக்கத்தில்
தெரிகிறதுன் நேசம்.

நடுங்கும் தேகமதை உப்பிட்டு
கொஞ்சம் பனி தூவி
இருள் மறைத்த
நிலவின் பின் புறம்
நட்சத்திரக் கட்டிலில்
கிடத்தென்னை.

குளிர்காலச் சருகாய்
எனக்கான கரிசனங்களை
இனி உதிர்த்துவிடு
ஒவ்வொன்றாய்...

ஒரு முத்தத்திற்கான
காரணமேதும் தெரிவதில்லை
ஒரு தற்கொலைக்கான
காரணம்போல!!!

குழந்தைநிலா ஹேமா