*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label கவிதை நட்பு ஞாபகங்கள். Show all posts
Showing posts with label கவிதை நட்பு ஞாபகங்கள். Show all posts

Thursday, September 17, 2009

மலையடிவாரத்துத் தோழியே...3

உன் அப்பாதான் தோட்டக் கங்காணி.
பறங்கி வெள்ளைக்காரத் துரையோடு
கையில் ஒரு தடியோடும்
வெள்ளை வேட்டியும் சட்டையுமாய்
தேயிலை மலைகள் நடுவில்
தூரமாய் உயர மலையில் தெரிவார்.
உன் அப்பாவும் அம்மாவும்
இப்பவும் சுகம்தானே தோழி.

உன் அம்மா சுடும் ரொட்டியும்
சம்பலும் அது ஒரு அலாதி ருசியடி.
ஒற்றை ரொட்டிக்கு எத்தனை கைகள் நீளும்.
ம்ம்ம்...மாங்காய்க் குழம்பு.சேமக்கிழங்குக் கறி.
கடைந்தெடுக்கும் வெண்ணையில்
பொரித்தெடுக்கும் முருங்கையிலைக்கு எத்தனை சண்டை.
சுடுநீர்க் குளியல்.
எண்ணை சளிக்க வைத்து வலிக்க வலிக்க
இழுத்துப் தலை பின்னிவிடும் உன் அம்மா.
போடி போ...மனம் களைத்துச் சோர்கிறது.
முடியவில்லை எனக்கு உன்னை நினைக்க.

ஒரு நாள் பகல் பொழுதில் கண்ணை மூடிக்கொண்டு
இரு கைகளை ஒரு கையாக்கி சுடுகாடு தாண்ட
வேணுமென்றே யாரோ பயமுறுத்த
காய்ச்சல் பீச்சலோடு படுத்துக் கிடந்தோமே
இருவரும் வாரம் இரண்டு.
இன்னும் நான் அப்படியேதான். நீ ?

அந்த இந்தியத் தமிழ் மக்கள் பேசும் தமிழின்
இழுவையும் ஒரு சங்கீதம்தான்.
உன்னோடு திரிந்த
அந்த இளமைக் காலத்தில்
பன்னிரண்டு வயதுவரை
அந்தத் தமிழைத்தானே நானும் உச்சரித்தேன்.
பின்னர்தான் அணைத்தது
யாழ்ப்பாணத் தமிழ் என்னை.
காலம் பிரித்தது கல்வி என்கிற பெயரில்
உன்னையும் என்னையும்.

மறந்தே விட்டேனடி இன்னொன்றை.
உன்னோடு உங்கள் பண்டிகைகள்.
ரதி மனமதன் கூத்து,மாவிளக்குப் பூஜை
மஞ்சத்தண்ணி நீராட்டு என்று.
முழுதாக இல்லை என்றாலும்
நீறாக நினைவு தெளிந்து மறைகிறது.
இதைவிடப் பௌத்த மக்களின்
பன்சல (புத்தவிகாரை) புத்தனின் பெரிய உருவம்.
இருவரும் இறுக்கிக் கைகளைப் பிடித்தபடி
முட்டுக்காலில் தாமரைப் பூ வைத்து
ஊதுவர்த்தியும் ஏற்றிக் கும்பிட்டதும்
நினைவலையாய்.

இத்தனை வயது கடந்த பின்னும்
கடந்த தடங்களைத் தூசு தட்டி
உன்னையும் தேடுகிறேன்.
என் அம்மா கோழிக்கு அடை வைப்பா
பத்து முட்டை என்றால்,
அதில் எங்கள் அத்தனை பெயர்களையும்
பொறித்துக்கொண்டு காத்திருப்போம்.
எப்போ என் முட்டை குஞ்சாய்ப்
பொரிக்குமென்று.
அந்தக் குஞ்சுகளும்
எங்கள் பெயரிலே உலவி வரும்.

இன்றைய நாகரீகச் சூழலில்
அன்பும் அமைதியும் தெய்வமும் தூய்மையும்
தொலைந்த தேசத்தில் நாம்.
சொர்க்கமாய் இருந்த அத்தனையும்
இற்றுப்போனதாய்.
நோக்கமில்லாமல் நகரும் உலகம்.
அதனால்தான் அழிவுகளும் ஏராளம்.
இத்தனை அழிவுக்குள்ளும்
இயலுமானவரை காத்துவைப்போம்
விழிகளுக்குள் எம் அழியா நினைவுகளை.
என்ன இன்பம் என்ன சுகம்.

கண்கள் திரைகிறதடி
முழுதாகச் சொல்லாவிடினும்
எழுதியதில் முழுதாய் இருக்கிறாய் என்னோடு நீ.
அப்போது இருந்த நான்
இப்போ எனக்குள்ளும் இல்லை.
மலையடிவாரத்து என் தூரத்துத் தோழியே
என் இனிய நண்பியே
கூடப்பிறவா சோதரியே...சகியே
வளைத்துப் போடமுடியா
அந்த இன்பப் பொழுதுகளை
மீண்டும் கண்டுகொள்வோமா ?
நானும் நீயும்...
எப்போ சொல்லடி !!!

ஹேமா(சுவிஸ்)
[ஞாபகங்கள் போதும்]

Wednesday, September 16, 2009

மலையடிவாரத்துத் தோழியே...2


மூத்திரக்காய் மரத்தடியில்
பொன்னையா மாஸ்டர்
அதுதானடி மூக்குப்பொடி மாஸ்டரின்
முதலாம் மூன்றாம் வகுப்பு மிரட்டல்கள்.
பாடநடுவில் அவரின் யாழ்ப்பாணச் சமையல்
மணமும் மூக்கைத் துளைத்து
பசியையும் தூண்டும்.

அடுத்த வகுப்பை மறைக்க பிரம்புத் தட்டி ஒன்று.
என் அப்பாவின் வகுப்பு நடக்கும் அங்கே.
அவரின் சத்தம் ஊரையே கூட்டும்.
வீட்டுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் இடையே
ஒரு தேயிலை மடுவம் ,ஒரு கோயில்
ஒரு ஆறு,ஒரு வயல் வெளி,பாலம்,சிறுகுளம்
படிக்கட்டுக்கள் வைத்த சரிவாய் தேயிலைத் திட்டுகள்.
மீண்டும் சலசலக்கும் பெரிய ஆறு,பாலம்
கடக்கப் பள்ளி வரும்.
மூச்சு விட்டுக்கொள் கொஞ்சம்.
அப்பாவின் "டேய் பிள்ளைகளா"அதட்டும் சத்தம்
இத்தனையையும் தாண்டி
என் வீட்டுச் சுவரில் எதிரொலித்து
சமைக்கும் அம்மாவின் காதில் பட்டுப் போகும்.
இன்னும் அப்படியே அனைத்தையும்
அள்ளிக் காண்கிறாயா.
அத்தனை காட்சிகளும்
எத்தனை வருடங்கள் கடந்த பின்னும்
தூரத்துத் தோழியின் நினைவோடு
நிழலாடுகிறது மீண்டும்.

தேயிலை மலைமுகடுகள் தாண்டி
காலைச் சூரியன் சுள் என்று மேல் எழும்ப
மெல்லப் பனியும் சில்லென்று சேர
சொல்ல முடியா அழகுக் கோலங்கள்.
அப்பப்பா...
அனுபவித்த சுகங்கள்
நெஞ்சக்குழிக்குள் சோகங்களாய்.
விடியலின் வனப்பில்
தேயிலை மடுவத்தில் சங்கு ஊத
ஐந்து மணிக்கே ஊர்ந்து வரும் தொழிலாளர்கள்.
இடுப்பில் கைக்குழந்தைளோடும்
முதுகில் கூடைகளோடும் கூடும்
பெண்களும் ஆண்களுமாய்.
மேல்கணக்கு கீழ்க்கணக்கு
என்று டிவிஷன் பிரித்து பெயரும் வாசிக்க
இடையில் சாக்குக் கட்டி
வரிசையாய் பிரிந்து போய்
கொழுந்து பறிக்கும் அழகே அழகு.

இரப்பர் மரங்களில் பொருத்திய சிரட்டைகளை
பிய்த்துக்கொண்டு குடல் தெறிக்க ஓட்டம்.
தேயிலைக் கன்றுகள் நடுவில்
ஒளித்துப் பிடித்து விளையாட்டு.
மர அசைவு கண்டு அதட்டல் ஒன்று
"யாரடா அது"அது உன் அப்பா.
உன் அப்பாவை
பாப்பாவின் ஐயா"பாப்பையா"என்றே அறிமுகம் எனக்கு.
பெயர் நான் அறிந்திருக்கவில்லை இன்றுவரை.
சரியான பயமும் மரியாதையும் அவரில் எனக்கு.
ரதி என்று கூப்பிட்டால்
எட்டடி தூர நின்று"என்னாங்க ஐயா"என்பேன்.
நீயும் நானும் நடத்தும் நாடகங்களை
அப்பாவிடமும் போட்டுக் கொடுத்தும் விடுவார்.
வாங்கிக் கட்டியும் கொள்வோம்.
எத்தனை நாட்கள்.
அன்று வலியாய் இன்று வடுவாய்
நினைவுப் புண்கள் !!!

ஹேமா(சுவிஸ்)
[நாளை முடியும் ஞாபகங்கள்]

Tuesday, September 15, 2009

மலையடிவாரத்துத் தோழியே...1

மலையடிவாரத்து
என் தூரத்துத் தோழியே...
உன்னைக் கண்டு எவ்வளவு காலமடி.
கனவில்கூட வரமாட்டாயாமே.
என்னைப்போலவே
நீயும் அதே மலையடிவாரத்தில்
சுகமாய் இருப்பாய் என்கிற
நம்பிக்கையோடு நான் இங்கு.
காற்று வாக்கில் கூட
உன்னைப் பற்றிய செய்திகள்
கேட்டு நாளாயிற்று.
நான் இங்கு அகதித் தமிழ்க் கிளியாய்
வெளிநாட்டுக் கூண்டில்.

மலையடிவாரத்து
தூரத்து என் நண்பியாய்
இளமைக காலங்களை
நினைக்க வரும்போதெல்லாம்
சடாரென்று உன் உருவம்தான்
ஓடி முன் வரும்.
என் இளமைக்காலத்தை
முழுதாய் பங்கிட்டவள் நீதானே.
சின்னப்பாப்பாவைக் காணாவிட்டால்
ரதியும் தொலைந்திருப்பாள்.

உன் அக்கா,நீ,உன் தங்கை
நான்,என் தம்பி,தங்கைகள் இரண்டு.
பார்ப்பவர் சொல்வது
ஒரு தாயின் பிள்ளைகளாய்.
அதுவும் உன் அக்காவும் நானும்
நிறத்தில் உருவத்தில் ஒன்றாய்.
குணத்தில் ஒன்றாய்.
இளமை தொலைந்துகொண்டிருக்க
முதுமை முதுகில் ஏற
அன்றைய நாட்களை மீண்டும் மீட்கையில்
கண்களில் சொல்லொணாச் சோகம்.

முதுமை நரைகளுக்கு
இளமை மை பூசி மீட்டிப் பார்க்கிறேன்.
நீயும் வேணுமடி அதற்கு.
சிட்டாய் சிறகடித்த கணங்களை
மனக்குழிக்குள் இருந்து
தோண்டி எடுக்கிறேன் நீயும் வா.

நாம் நடந்த விளையாடிய அதே இடங்கள்
இன்னும் இருக்கிறதா?
தேயிலை மலைகள்,ரப்பர் காடுகள்,
பறித்த பழ மரங்கள் இன்னும் எவ்வளவு.
எம் தடங்களாவது தெரிகிறதா தோழி.
வான் தொடும் மலைகள் எங்கும்
விதவிதமாய் எத்தனை வர்ணப் பூக்கள்.
உங்கள் வீட்டில் வளர்ந்த
சண்டை போடும் கொண்டைச் சேவல்.
உன்னைக் கண்டாலே
கலைத்துக் கொத்த வரும் தீக்கோழி.
கட்டை வாழையில் குலை பழுத்திருக்க
முன் பக்கப் பழங்கள் இருக்க
உள்ளால் கோதிவிடும் அணில்கள் நாம்.

கொட்டும் மழையில்
ரெயின் கோட் மறந்ததாய் பொய் சொல்லி
சேறு விளையாடி
தொப்பையாய் நனைந்து வர
தலை துடைத்து உலர்த்துமுன்
அழுதபடி முட்டுக்காலில் இருவரும்.
பின் சேற்றுப்புண்
இரண்டு காலையும் பற்றிக்கொள்ள
குண்டியால் நடந்ததும் ஞாபகம் இருக்கா.

ஒட்டி ஒட்டி உறவாடி
உள்ளிருந்து இரத்தம் உறிஞ்சும்
ரப்பர் அட்டை கௌவிக் கடித்திருக்க
நான் கத்திக்குளறி ஆர்ப்பாட்டம் போட
தேயிலை கொய்யும் அம்மா
போயிலை எச்சில் துப்பி மருந்திட
இரத்தமும் கக்கி
பந்துபோல அட்டையும் உருண்டு விழ
இரத்தம் கண்ட அதிர்ச்சியில் நீயும் மயங்கி விழ...
உயிருக்குள் உணர்வுக்குள்
உறைந்து கிடக்கும் நினைவுத் துகள்கள் அது.

இன்னும் ஒன்று சகியே...
பாவம் என்று நினையாத பருவம் அது.
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
உங்கள் வீட்டுத் தோட்டத்தில்
போஞ்சி,கீரை,புடலை என்று
காய்கறிகளின் நுனி கிள்ளிப் போகும்
நத்தையின் மேல் கோவம்.
நத்தை அழிப்பு.நாம்தான் ஆமிக்காரனாய்.
ஒரு நத்தைக்கு இரண்டு சதம்.
நிலா வெளிச்சத்தில் நத்தை வீட்டு விலாசம் தேடி
வெற்று மீன்டின்னுக்குள் சமாதி கட்டுவோம்.
சேரும் நாளொன்றுக்குக் குறைந்தது
இருபது முப்பது நத்தைகள்.
நத்தை பிடித்த பணம்
பல்லி முட்டை மிட்டாயாய்
எம் வாயில் இனிக்கும்.
இன்று நினைகையிலும்
இனிக்கின்ற நாட்களாய் அது.

பெரும் கரும்பாறைகளில் பொறித்த
நம் பெயர்கள் கரிக்கட்டைக் கோலங்களாய்.
நாம் உரக்கக் கத்துவதை
அப்படியே திருப்பிக் கூறும் அதிசய மலைகள்.
மரங்கள் நடுவில் உரக்கக் கீதம் பாடும் புள்ளினங்கள்.
அடை வைத்து
இறக்கிவிட்ட கோழிக்குசுகளுக்காய்
சிறகடித்துத் திரியும் பருந்துகளுக்கும்
கீரிப்பிள்ளைகளுக்கும் கூட
நாம்தானே காவல்காரர் கம்போடு !!!

ஹேமா(சுவிஸ்)
[ஞாபகங்கள் தொடரும் நாளை]