*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 29, 2012

நுகத்தடி நெருடல்கள்...

நடைபாதைப் பயணங்களில்
வெறிக்கிறேன் இன்றுவரை
அவசர சமயத்தில்
கையில் திணித்து மறைந்த
ஒற்றை ரூபா முகத்தை.

தொப்புள்கொடி
சுற்றிய குழந்தையாய்
திணறி முழிக்கிறது
விட்டெறிந்த வார்த்தைகள்.

சாமியின் தலையில்
வார்க்கும் நம்பிக்கைப் பால்
எதிர்பாரா உதவிகள்
அருவருக்கும் எச்சிலாய்
என் முகத்திலேயே
பட்டுத் தெறிக்க
சுற்றும் பூமியின் சேதாரம்
கணக்கிட நினைக்கிறேன்
சேதம் உனக்கேதானென
சொல்லி இறைக்கிறார்கள்
இன்னும் அசிங்கங்களை
கமுக்கட்டுக்குள்
நன்றியைச் சேமித்தவர்கள்.

நன்றிகளாய்...அவமானமாய்
நெருடல்களைச் சுமக்கின்றன
என் நுகத்தடி!!!


நுகத்தடி-காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரம்.

ஹேமா(சுவிஸ்)

Thursday, March 22, 2012

கனவு...

உள்ளுக்குள்...
உறங்காத கன​வொன்​றை
​அவிழ்த்து விடுகிற
பரபரப்​பை விட
உ​டையாத
காற்றுக் குமிழியாக
கையில் எடுத்துப்
பார்க்கத்தான் ஆ​சை.

கனவை
கனவின் ரகசியத்​தை
கன​வாகவே பராமரிக்க​​
மிக மிகப் பிடிக்கும்.

அந்த...
இரவின் வார்த்​தைகள்
அன்று...சந்திரனை
பாம்பு விழுங்கிய தருணமென்று
த​லை​யோடு நீருற்றி
முழுகிக் ​கொள்ளுங்களேன்
தயவு செய்து!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, March 17, 2012

கடவுளுக்கான நேரமிது...

சத்தியமாய் இந்நேரம்
கடவுள்
தற்கொலை
செய்துகொண்டிருப்பார் !

இறந்தபின்னும்
திறந்திருந்த கண்களின் ஏக்கமும்
அடைத்த கதவுகளுக்குள்
கை துளைத்தாட்டும் விரல்களும்
புரட்சிகளும் அவலங்களும்
சாட்சியில்லா கற்பளிப்புக்களும்
கண்டபிறகுமா
அவர் இருக்கக்கூடும் !

போராட்டங்கள்
விடுதலைக்கான ஆயுத மனிதர்கள்
உயர்ந்தவர்கள்
எமக்காகத் தம்மை இழந்தவர்கள்
ஆனாலும் அவர்களின்
இறுதி அவலங்கள்
ஒரு உயிர்...
அதுவும் ஒரு உயிர்
புரட்சியை நடத்திக் காட்டி
தடங்கள் இல்லா
மரணம் அறிந்த பின்னுமா
கடவுள் இருப்பார் !

புரட்சிக்கான ஏடுகளில் எல்லாம்
இரத்தக் கறைகள்தான்
வேண்டாம் தாங்கமுடியா வலி
என்றாலும்
வேண்டும் புரட்சி
என்று சொல்வதில்
பயமில்லை எனக்கு
பிடிக்காவிட்டால்
தற்கொலை
செய்துகொள்ளட்டும் கடவுள் !

ஒட்டி உதிரும்
மணல் துகள்போல
என் தேசத்தில்
மரணம் மலிந்துவிட்டாலும்
வலிக்கத்தான் செய்கிறது
மரணம் சிலவேளைகளில் !

இல்லாமல் போன
மண்ணை...
என் மண்ணை மட்டுமே
இன்னும் நேசிக்கிறேன்
சாகட்டும் கடவுள்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, March 11, 2012

காலமாற்றம்...

பனிமூட்ட மஞ்சள் தெருவில்
இன்னும்...
இறுகப்பிடித்திருக்கும்
இலைகளையும்
கைவிடும் நிலையில்
பனிக்கால மரங்கள்.

அள்ளிக்களைய
வாகனம் வருமுன்
சேமித்துக்கொண்டேன்
பச்சையமிழந்து
புற்களை முத்தமிடும்
கொஞ்சப் பழுத்தல்களை.

உதிர்வதும் தளைப்பதும்
மறுக்கமுடியாததென்றாலும்
சாத்தியமாயின
தஞ்சமாய்
சிலமஞ்சள் இலைகள்.

இனி...
மொட்டை மரங்களாய்
எட்ட நின்றாலும்
பழங்கதைபேசிக்கொள்ளும்
அழகுபடுத்திய
என் பல்கனி சருகுகளோடு!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, March 07, 2012

நிலாவும் ஒரு கூண்டும்...

கூண்டோடு
காத்திருக்கிறாள் நிலா
ஒவ்வொருநாளும்
ஏதோ ஒரு பறவை
வாங்கி வருவேன்
கூட்டில் அடைத்து
வளர்க்கவென.

நித்தம் நித்தம்
ஆயிரம் காரணங்கள்
சுதந்திரம் பற்றியும்
காதல் பற்றியும்
விளங்காத அவளிடம்.

முத்தம் ஒன்று தருகிறேன்
நீயும் தாவென
நிலாவின் முகத்தில் சந்தோஷம்
சுதந்திரப் பறவைக்கு இணையாக
சுதந்திரமும் காதலும் புரியும்வரை
என் முத்தங்கள் அடைபடாமல்!!!
நிலாக்குட்டிக்கு இனிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.நிலாக்கிழவிக்கு 7 வயசாச்சு.குழப்படி குறை,வாய் காட்டாதே,நல்லாப் படி,சுகமா சந்தோஷமா இரு,உன்னை நீ நம்பு,துணிச்சலோடு வாழ்வில் முன்னேறு,உன் கையில்தான் உன் வாழ்வு!எல்லோரும் நிறைவான வாழ்த்துத் தந்தார்கள்.அதிரா அக்கா பரிசும் தந்திருக்கிறா நிலாக்குட்டிக்கு.வாழ்த்துச் சொன்ன எல்லோருக்கும் அன்போடு நன்றி சொல்றா நிலா கனடாவில இருந்து !

Sunday, March 04, 2012

உன் குழந்தை...

கவிதை தவிர
வேறு வழியில்
உன்னை வார்க்கத்
தெரியவில்லை எனக்கு
தெரிந்திருந்தால்
இதுநாள்வரை
காதலில் வளர்ந்த
எம் உணர்வுகளை
வடித்திருப்பேன்
பாடலாய்...
ஓவியமாய்...
சுவர் சித்திரமாய்...
இல்லையேல்
ஏதோ ஒரு
கலை வண்ணமாய் !

என் காதலைப் பிய்த்து
யாரிடமோ சொல்லி
யாசகம் கேட்டு வரைய
எனக்கு விருப்பமில்லை
உனக்கும்தான் !

ம்...என்கிற
ஒற்றைச் சொல்லில்
உன் உணர்வுகளைப்
புரிந்துகொண்ட எனக்கு
விளங்காததா !

தாய்மையின் உணர்வோடு
மடி தவழ்ந்தபோதே
என்னையும்
உணர்ந்திருப்பாய் நீ
இனி யார் யாரை
உணர்ந்துதான் எதற்கு !

எத்தனை கவிதைகள்
எம் காதல் புணர்வுக்குப்
பிறந்த குழந்தையாய்
இந்தா...இப்போதும்
ஒரு குழந்தை உன்னடியில் !

தள்ளிவிடாதே
என்னைத் தள்ளியதுபோல
இது உன் குழந்தை
நீ ஒன்றும்...
புத்தனில்லையே!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, March 01, 2012

எப்படிச் சொல்ல...

உடன்படிக்கைச் சடங்குகளாய்
ஒரு தேவதையை
பூசித்துக் கழித்த பொருளென
எச்சிலோடு கரைத்தெறிந்த
வார்த்தைகள்
தாங்கி நிற்கும் மனங்களில்
ஓமகுண்டமெனப் புகை

நிற்க...
நாற்கோண உருவங்களில்
தோராயமாய்
வெட்டி வீசிய வார்த்தைகளை
தூற்றித் துவலையாக்க
நீரடித் தாவரத்தூர்
தகர்க்கும் மௌனத்தை
நான்
காதல் என்கிறேன்
அவர்கள்
சாத்தான்கள் என்கிறார்கள்!!!

ஹேமா(சுவிஸ்)