*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, January 29, 2010

பிடிக்கேல்ல...

அ...னா
ஆ...வன்னா...படிக்கட்டாம்
தேவாரம் பாடமாக்கட்டாம்
வீட்டுப்பாடம் செய்யட்டாம்
பிடிக்கேல்ல எனக்கு.

ஐஸ்ல வழுக்கி விளையாட
சுவரில பென்சிலால கீற
ஐஸ்கிறீம் குடிக்க
விஜய் படம் பார்க்க
அவரின்ர பாட்டுக்கு டான்ஸ் ஆட

புதுச்சட்டை போட
பள்ளிக்கூடம் போக
அண்ணாவோட சண்டை போட
அக்கான்ர சாமான்கள் களவெடுக்க

அம்மா மடியில படுத்திருக்க
நித்திரை கொள்ள
ம்ம்ம்..பிறகு
ஹேமா வீட்டுக்குக் காரில போக
விரல்.....சூப்பவும்தான்

எல்லாம் பிடிக்குது
அது மட்டும் பிடிக்கேல்ல எனக்கு
ஏன் ? !!!

இவன் என் சிநேகிதியின் மகன்.
பெரி...ய விஜய் ரசிகன்.பெயரும் சச்சின்.

ஐ லவ் யூ டா செல்லம்.


ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 26, 2010

ஏன் மாறினாள்...

இப்போ.....
அவள் முன்னைப்போலில்லை.
தேவைப்படுகிறது
எப்போதும் அவன் அருகாமை.
கை கோர்த்தபடி சேர்ந்து நடக்கிறாள்.
சிரிக்கிறாள் நிறையக் கதைக்கிறாள்.
மனம் குறுகுகிறேன்
வெறும் கையாலாகாதவனாய் எட்ட நின்றபடி.

கூப்பிடுமுன் எனையறிந்து
பட்டாம்பூச்சியாய் என் பக்கம் அமர்பவள்
இன்று என்னைத் திரும்பிப் பார்க்கவே
அரமணி நேரமாகிறது.
கள்ளி இப்போவெல்லாம்
முன்னைவிட அழகாயிருக்கிறாள்.
அவளைக் கைப்பிடித்த காலங்களில்
அவளால்தான் நான் அழகாயிருந்தேன்.

குளிக்கும் நீர்கூடப் பெருமையடிக்கும்.
கூந்தல் மலரும்
மரத்தில் இருந்ததைவிட மணம் வீசும்.
முகம் பார்க்கும் கண்ணாடியோ கர்வம் கொள்ளும்.
கொள்ளை அழகு இன்னும் மெருகேறி
நடையில்கூட ஒரு நளினம்.
ஆனால் என் இணக்கத்தை மட்டும்
சுனைப்பாய் நினைக்கிறாள்.

அவள் முன்னைப்போலில்லை இப்போ.
மென்மையின் தாயாய்
தெருவில் தடம் பதித்தால் சருகும் சப்திக்காது.
பின்னழகின் கூந்தல் நீளம்,
கீறிவிட்ட கண்ணும் ,மூக்கும்
குழிவிழும் கன்னமும்
செவ்விதழின் விரிப்பில்
அசந்த சிலைகூட வரம் கேட்கும் உயிர்பெற.
இவளால் நான் கொண்ட இறுமாப்பெத்தனை.

என்னவள் இல்லை இப்போ முன்னைப்போல.
இதோ...இதோ வருகிறான்
காவற்காரனாய் வாசலில் நான்
எனக்கொரு வணக்கம் சொல்லக்கூட மனமில்லாமல்
சொல்லி நுழைகிறான் அவள் அறைக்குள்.
மெல்ல அணைக்கின்றான் ஏதோ கொடுக்கிறான்
அன்புநிறை நன்றி சொல்லி முத்தமிடுகின்றாள்.
கரம் தொட்டுக் கட்டியணைத்துக்
கூட்டிப்போகிறான் என் கண்முன்னாலேயே.

மனம் கொதித்து உலையாகி விம்ம
எப்படி இருந்த என்னவள்
ஏன் மாறினாள் இப்படி
வரட்டும் அவள் இன்று
"என்னை விட்டுப் போய்விடுவாயா அன்பே"
கட்டாயமாய்க் கேட்டுவிடுவேன்.
நினைக்கையிலேயே
நெஞ்சு வெடிக்காதா கடவுளே !

அவளுக்கு வயது எழுபத்துமூன்று
வந்தணைப்பவர் அவளது வைத்தியர் !!!

[2003 ல் ஒரு சுவிஸ் தம்பதியரைப் பார்த்த அனுபவம்]
ஹேமா(சுவிஸ்)

Saturday, January 23, 2010

மௌன மொழி...

சொல்லடி என்றேன்
என்ன என்றாள்.
மௌனம் உடை என்றேன்
ம்....என்றாள்.
ஏனடி கொல்கிறாய் என்றேன்
அதற்கும் சிரித்தாள்.

நிலவு பிடிக்குமா
உன் மடி படுத்தால்
தலை கோதுவாயா என்றேன்.
அதற்கும் மௌனித்து
அழத்தொடங்கினாள்.

பிறகு பேச்சு வராமல்
கவிதை சொல்லவா என்றேன்.
இறுக்கிய கை தளர்த்தி
தலை நிமிர்த்தி கண் பார்த்தாள்.
மௌனம் கலைக்கவா என்றேன்
தலையசைத்தாள்.

ஏதாவது...தர...வா
வார்த்தை தொடங்கிய என்னை
மிச்சம்
பேசவே விடாமல்
இதழோடு இதழ் அழுத்தி
மீண்டும் மௌனித்தாள்.

மௌனமே வெட்கி
மௌனிக்க !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, January 20, 2010

பெண்...

வெண்பனிப் புயல் அடித்துக்
கலைத்த கேசம்.
வியர்வைக்குள் நனையும்
தங்கப் பாளம்.
வடித்தெடுத்த வண்ணங்களுக்குள்
வானவில் வளையும்.

குவிந்த இதழ் வடிக்கும் கள்.
உருகும் பனிக்கூழ் தடவிய
பள்ளம் பறிக்கும் வார்த்தை.
போரின் முடிவில்
பிணங்களின் மேல் படியும்
பரிதாபப் பார்வை.

பாலைவனத்தில்
பரவிக் கிடக்கும் மணல்.
தடாகத்து கானல் நீர்.
பூஜ்ஜியங்கள் கை கோர்த்து
பட படவென முட்டிக்கொள்ளும்
மன்மத மந்திரம்.

கனல் கக்கி
பாசாங்காய் நடிக்கும்
நெருப்பின் சாயல்.
வீரியம் பேசும்
வெத்து வேட்டு.

அழகையே மயக்கும்
அழகான இராட்சசி.
வார்த்தைகள் போலவே
பொய்யான பேய் !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, January 17, 2010

தமிழ்மண விருது 2009.

மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்.தமிழ்மணத்திற்கும் என்னை ஊக்கப்படுத்திய அத்தனை முகம் தெரியா உறவுகளுக்கும் காற்றில் கை குலுக்கிய என் நன்றி.

தமிழ்மண ஈழம் பிரிவில் இந்தக் கவிதைக்கான விருது.

கூட்டாஞ்சோறு உறவு கவிதை என் வாழ்வின் ஆன்மாவின் ஒரு பகுதி.இதில் சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் என்னோடு ஒன்றியவை.என் தாத்தா அம்மம்மாவீடு,அம்மம்மா காய்ச்சிய கூழ்,மாட்டுத்தொழுவம்,பெரிய 3 மாமரம்,அதன் கீழிருந்து பிலாவிலை மடித்து கை நீட்டிச் சண்டை போட்டுக் குடித்த கூழ் என்று...அத்தனையுமே என் இளமைக்காலம்.மறக்கமுடியா இந்த வார்த்தைகள் கோர்த்த கவிதைக்குக் கிடைத்த இந்த விருது என் வாழ்நாள் சந்தோஷம்.

மீண்டும் என்னை உற்சாகப்படுத்தி என்னோடு கை கோர்த்துக்கொண்ட என் உறவுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

ஹேமா(சுவிஸ்)

Wednesday, January 13, 2010

பொங்கலாய்க் காதல்...


என் கவிதைத் தொகுப்பு.
புரட்டிய கண்களில் ஏமாற்றம்.
எங்கும் இல்லை உன் பெயர்.
என்னடா....
அத்தனை எழுத்துக்களிலுமே நீதானே !

ஆசைகள் வற்றிய குளத்தில்
கல்லெறிந்துவிட்டு
அமைதியாய்
இன்னொரு குளம் தேடுகிறாய்.
வருவாயா மீண்டுமொருமுறை
காயம் செய்ய !

வெறுசாய்க் கிடந்த
காகிதத்தில் மை ஊற்றியவன் நீ
அர்த்தங்களைச் சேகரித்தவள் நான்
உன் விலாசம் மட்டும்
இல்லை அதில் !
தூரங்கள் தொலைவாயிருந்தும்
எதையும் துவாரமிடவில்லை
யாரையும் துளைக்கவுமில்லை களவெடுத்தோம்.
வேண்டதவளாய் ஆனபிறகு
பங்கைத் கொடுத்துவிடு
காட்டிக் கொடுக்கமாட்டேன் !

வந்து...தந்த காதல்
போக நினைக்கிறது.
முளைத்த காதல்
மடிய மறுக்கிறது
முடியும் விடு
அடித்துக் கொல்வேன்
மறக்க மட்டும் மாட்டேன் !

மறக்க நினைக்கையில்தான்
உன் நினைவுகள்
இன்னும் இன்னும் நெருக்கமாய்
என்ன செய்ய நான் !

தொலைக்கப் பிடிக்கவில்லை.
தொலைந்துவிடு தயவு செய்து
சொல்லாமலே !!!

இனிக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

அன்பின் பிரிவோடு ஹேமா(சுவிஸ்)

Monday, January 11, 2010

நான் சுகம் நீயும்...

இறந்த உடலைக்கூட
புணர நினைக்கும் உலகில்
என் இருப்பை
என் நலத்தை
எப்படித் தீர்மானிக்க முடிகிறது
உன்னால்.

கை கோர்க்க நீயானானாலும்
பறித்திழுக்கும் சமூகத்தில்
எப்படி....
என் வாழ்வின் இருப்பை
நுகர்வாய் நீ.

வௌவாலாய் தொங்கும் உலகில்
எனக்கு உலகமும்
உலகத்துக்கு நானும்
தலைகீழாய்த்தான்.

உள்ளதை உள்ளபடி
ஏதாவது எழுதலாம் என்றால்
இருளுக்குள் கௌவும்
எத்தனை எத்தனை
அசிங்க உணர்வுகள்
ஆபாசமாய்.

பாம்புச் செட்டையாய்
பிறந்த இனம் குணம்
ஏன் மதத்தைக்கூட மாற்றும்
பச்சோந்திக் கூட்டத்துள்
சிதறிய பரவசங்களோடு.

என்னைப் புரியாத உறவு
மனதைப் புரியாத நட்பு
விலக நினைக்கும் ஆனந்தம்
தூரமாய் நிற்கும் காதல்.

எனக்கான
அழகான ஓர் உலகத்துள்
நான் மட்டுமே.

தவம் செய்கிறேன்
கண்களைக் கழற்றி
காற்றில் கொழுவி
பொய்யாய்த் தொங்காத
ஒரு மனிதனுக்காக.

அன்று விசாரித்துப் பார்
நலமாய் இருப்பேன்
நான் !!!

[உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை]

ஹேமா(சுவிஸ்)

Thursday, January 07, 2010

பிரசவம்...

ஒற்றைப் புள்ளியைச்
சுற்றிய புள்ளிகளாய்
குட்டிக் கைகள்
குட்டிக் கால்கள்
குட்டிக் கொட்டாவி
குட்டிக் கனவோடு
தூரத் தெரியும் தாரகைச் சிதறலாய்
பனி நனைத்த மேனியாய்
சிலிர்க்கும் எனக்குள்
வானம் தந்த
கருவண்ணத்தில்
ஓர் உருவம் !

தொலைந்த பறவையின் சிறகை
பல்லக்காய் சமைத்து
வாழ்த்த வந்த தென்றலுக்குள்
பாதை வகுத்து
ஒளி பரப்பி
ஆதவனாய்
பச்சையம் பீச்சும்
அது!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, January 03, 2010

இன்னும் வரும்...

கவிதைகள் எனக் கிறுக்கல்கள்
அழுவாச்சியாய் நக்கல்கள்
ஒரு காதல்
இரண்டு சிநேகிதம்
உறவுகள்
அனானிகளின் அலட்டல்கள்
கசக்கிய காகிதமாய்
பயந்து
பதிவிடாத எண்ணங்கள்
வினையான
விளையாட்டான பின்னூட்டங்கள்
மைனஸ் பிளஸ் ஓட்டுக்கள் என
வருடம் முடிந்து
தொடங்கியும் ஆயிற்று.

இன்னும்...
சொல்ல மறந்த கதையாய்
நிறைந்து சுற்றும்
சில வார்த்தைகள்
கோர்க்காத எழுத்துக்களில் !!!

ஹேமா(சுவிஸ்)