*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, June 29, 2014

மதம் பிடித்த புத்தம்...

ஆடு கடித்து மாடு கடித்து
புல் பூனை கடித்து
மனிதனைக் கடித்து
மதத்தைக் கடித்து....

பள்ளிவாசல் முனையில்
பாடிக்கொண்டிருந்தான்
தெருப்பாடகன் நமந்த நாயிடம்.

இப்போதெல்லாம்
காடுகளே கொல்கிறது
தொலைவானப் பறவைகளையும்
மான்களையுமென
நாயும்....

சூரியனைக் கடித்து
நிலவைத் தின்ற பிசாசுகளென
அவ்வழி பறந்த
ஆட்காட்டியும் அலறியது.

மதக்கிடங்கில்
பேதமற்றுக் கடித்துக்குதறும்
மஞ்சள் நரிகள்
பயங்கரவாதியென்றது புலிகளை
உலகமும் ஆட்டியது
பெருந்தலைகளை.

வீடற்றுக் கல்வியற்று
கோயில்கள் பள்ளிகள்
பாடசாலைகள்
ஏன் கல்லறைகளைக்கூட
தம் நிலத்தில் ஆகாதென
உடைத்தும் சிதைத்தும்
மரக்கீழ் வாழும்
ஆதிமனிதர்களென
புத்தன் தவிர
அத்தனை பேரும்.

வீடற்ற வலிகளும்
வேலி நுழைந்த கதைகளும்
பசியும் பண்பாடழியும் கோபமும்
தெரியுமெனக்கு.

அடங்கிவிடுமா
வீரமும் விடுதலையும்
வேண்டுதல் தலங்கழித்தால்
அடங்கிப்பூத்த கண்ணீரும்
காய்ந்த குருதியும்
வழிகாட்டும்
நமக்கான இருப்பிடங்களை.

தேடிக்கிடைக்காதது எதுவுமில்ல அமீன்
கிடைக்காமலா போகும் எமக்கானது!!!

ஹேமா(சுவிஸ்

Friday, June 27, 2014

போதை ஒழிப்புத் தினமாமே...

திறக்கும் மதுப்புட்டி
வாசனைபோல
போதை துளைத்த
உன் வார்த்தைகளின்
இளஞ்சூட்டில்
இன்னும் நான்.

மதுவின்
இறுதிச் சொட்டில்
இதழ் முத்தமென
இதமாய் இனித்து
மிதக்கிறது
மனதின் ப்ரியங்கள்.

குவளை வழியும்
பகார்ட்டியில்
நீந்தவிட்ட
பனிக்கட்டி வார்த்தைகளில்
எனக்கான போதையை
அளவிட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஒரு கதைசொல்லியின்
புலம்பலாய்
தெளிவற்று விலகி
விளங்கிக்கொள்கிறார்கள்
நாகரீக மதுக்கனவான்கள்.

நீயின்றியும்
நான் நனைவேன்
நமக்கான மழையில்.

உயிரை
உருக்கும் கனலென
'ஜிவ்'வென
போதுமாயிருக்கிறது இக்காதல்
தப்பிப் பிழைத்துக்கொள்ளலாம்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, June 24, 2014

பிடி நழுவா முகச்சில்லுகள்...

கவித்துவமாய்
மந்திரக்காரியின் அலறல்
என் காலில் கோலுடைத்தபடி.

மஞ்சள் நீரில்
முக்கியெழும்பி
கொம்பில்லா விலங்கு பற்றி
பண் அள்ளித் தெளிக்கிறாள்
கண்ணில்லா
ஆந்தையின் சாம்பலோடு.

அஞ்சி நகர்ந்து
கரம் குவித்த மார்மேல்
மலர்குற்றிய கூனல் கிழவி
கூர்வாளால் திருப்பி
கெக்களித்த கோரமுகத்தில்...

நீ நனைந்து நாளாயிற்று
உன் இதயம் சாக்கடை
உனதல்லா முகமும்
ஈரமில்லா இதயமும்
ஏனுனக்குச் சனியனே...

கோலித் திரும்பிய
கொக்கிப்புழுவென
தாயும் நாயும் காக்கவியலா
உன்னை
திருகுவது தவிர வேறில்லையென
கொக்கரித்து
குரல்வளை அழுத்த...

மண் அழுந்த
மரமாகியிருந்தேன்
வேருக்கு விழிநீர் வழிய
ஊன்றிய கால்களோடு!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 23, 2014

நீ...நான்...கடவுள் !


’கடவுளே’ என
உடல்முறித்து
அலுத்துக்கொள்ள
முன்னாலிருப்பவன்
தன்னைக் கூப்பிட்டதாக
'நானா' என்கிறான்.

கடவுளை
அறிமுகப்படுத்தவில்லையே
அம்மா இப்படி.

சூலும் வேலும்
புலியும் மயிலும்
அகோரமாயும்
ஆயுதங்களோடும்...

சிலசமயம்
சின்னப்புன்னகையோடு
கே ஆர் விஜயா
உருவத்தில்
பெண் கடவுளாகவும்
சிவாஜி கணேசன் உருவத்தில்
ஆண்கடவுளாகவும்
நாகேஷ் உருவத்தில்
நகைச்சுவைக் கடவுளாகவும்...

பூக்களும் நகையுமாய்
பணக்காரச் சாமிகள்
பலவாய்
விதம் விதமாய்.

கடவுளிடம்
கிழிந்த சட்டையில்லை
கூரையில்லா வீடில்ல
பசியில்லை
கழிவறையுமில்லை
காலையில் எழும்பி
படிக்கவும் தேவையில்லையாம்
தானாகவே புத்தி அதிகமாம்
பொன்னையா மாஸ்டர்
சொன்னது ஞாபகம்.

நீதி சொல்ல
காதலித்த கடவுள்
களவாடிய கடவுள்
கதை சொன்ன கடவுள்
கோபித்த கடவுள்
மண் சுமந்த கடவுளென
ஆயுதம் இல்லாக்
கடவுள்களே இல்லை
காணாமல் போகமுடியா
கைதாக முடியா
தீவிரவாதக் கடவுள்களோ.

மீனுக்கும் குருவிக்கும்
கறையானுக்கும் பூனைக்கும்
யார் கடவுள் ?!

கடவுள் உலகத்தில்
ஆயுள் அகலமாமே
புண்ணியம் செய்தால்
பூச்சிகளும் பறவைகளும்
பட்டுச்சிறகோடு
பறக்குமாமே அங்கு.

சிவாஜி கணேசன்
சிவனாய் சிரிக்கிறார்
அட்டகாசமாய்.

விருத்தெரிந்தபின்
சிவாஜி நடிகனெனவும்
கடவுள்கள் ஆகாயத்திலும்
தேவலோகத்திலுமெனச்
சொன்னார்கள்.

அதன்பிறகு கடவுள்கள்
அட்டகாசமாய்ச் சிரித்தே
நான் கண்டதில்லை
எங்குமே.

முதன் முதலாய்
கடவுளென நான் நம்பும்
ஓருருவம் கண்டேன்
என் முன்னால்
சிரிக்கிறது
பார்க்கிறது
பேசுகிறது
அலங்காரமில்லா
குட்டிப்புன்னகை
கண்களில் தேக்கி.

’என்னையா கடவுள்’
என்றாய் என்றதால்
தோள் தொட்டு
’வா காப்பி குடிக்கலாம்’என்றேன்
எனையுரசி நடந்தே வருகிறது
தெருக்கடை தேநீர்ச்சாலைக்கு.

இனி....
கை குலுக்கி விடைபெறும்
கல்லாயும் போகாது
தொலைந்தும் போகாது
தொடர்பிலும் இருக்குமது!!!

ஹேமா(சுவிஸ்)

யாழ் ’உதயன்’ சஞ்சிகையில் வெளியாகிய கவிதை.நன்றி ஜெரா Jera Thampi !

Friday, June 20, 2014

கரையா வண்ணம்...

இப்போ...
சிறகுகளை ஒடுக்கி
வண்ணம் ஊற்றப்பட்டாலும்
வானவில்லாய்த்தான் இருந்தேன்
வாழ்வு எப்படியாயிருந்தாலும்.

பெண்ணைப்போற்றும்
பேச்சுக்களை மட்டுமே
நாடகமாய் வைத்திருக்கும்
என்னிடம்
நிலாவும் மழையும்
கோபம் கொண்டிருக்கிறது.

இனி
நான் உதிர்வதை
என் திசைக்காற்றே
அறிந்துவைத்திருக்கிறது.

இப்போதைக்கு
உயிரிறுக்கி வைத்திருக்கும்
இவ்வண்ணப்பூச்சின் இறுக்கம்
சிறையானாலும் கவசமாய்.

அதுவரை கவிதையோ
கதையோ எழுதுங்கள்
என் வாழ்வின்
பாவம் தீர.

உயிரை உறுதிப்படுத்த
உரையாடிக்கொண்டிருப்பேன்
நானும் அவ்வப்போது!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 16, 2014

வாழ்விலக்கணம்...

ஆசைக் கயிற்றில் நடக்கும்
கூத்தனாய் வாணாள்
வானுலகம் காத்திருக்கும்
மிகுதி வாணிபத்துக்காய்.

ஊனமனதை
காலம் விழுங்கிச் சமிக்க
வாஞ்சையில் சுழலும்
அந்தரங்க மெய்.

உச்சக்கட்ட மீட்பில்
உயிர்க்கூட்டில் படிம நாகமாய்
விடமவிழ்க்கும் இறை வெறுத்து.

பட்டாம்பூச்சியின்
இறுதி மூச்சில் தொட்டணைத்தவனும்
முலையிரங்கித் தேடும் தன் குழந்தையும்
நீர்த்தாவரமாய் விழிமிதக்க...

இங்கே...
உறவுகள் தவிக்க
துவங்குகிறது உப்பரிகை ஊர்வலம்.

கண்ணாமூச்சி விளையாட்டை
கொம்பேறி ரசித்துக்களிக்கிறது
மரணம்
காலம் காலமாய்!!!

அன்போடு நம்முள் கலந்து கலைந்த ஆன்மாவுக்கு சாந்தி கொடுத்து நாமும் சாந்தி பெறுவோம் !

ஹேமா(சுவிஸ்)

Saturday, June 07, 2014

ஆதார உதடுகள்...

ஆதாரங்களின்றி
அழுதுகொண்டிருந்தன
சில எலும்புக்கூடுகள்
சில பூச்சிகளும் புழுக்களும்
போனால் போகட்டுமென
கொடுத்த பாதுகாப்போடு...

விதிகளைப் புரட்டிப்போட்டு
விதைத்துக்கொண்டிருக்கிறது
காலம்
ஒரு புழுவின் முதுகில்
சில குறிப்புக்களை
ஏற்றியபடி...

நிர்ப்பந்தங்கள் ஒன்றும் புதிதல்ல
அந்த எலும்புகூட்டுக்கு
ஆசைகள் களைந்த
மஞ்சள் காக்கைகள்
கரையுமிடத்தில்தானே
கரைந்தது இந்த உயிர்
அப்போ
ரகசிய அறைகளில்
பிரார்த்தனைகளும்.

அனிச்சையாய்
உதிர்ந்து கொட்டியது
புனித இரத்தம்
ஒவ்வொரு அலறலின்
இறுதியிலும்...

வாழ்வு அடங்கும்போது
உயிர்
சில இறுதிக் குறிப்புக்களை
இடத்திற்கிடம் செருகும்
அது உதட்டிலும்கூட...

இப்போதும் தேடும்
எலும்புக்கூடுகள்
ஆதார உதடுகளை
காணாத பெருங்கவலை
அவைகளுக்கு !!!

http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6208

ஹேமா(சுவிஸ்)

Tuesday, June 03, 2014

நெய்தலும் நிலாக்காலமும்...


வாளெடுத்த வேந்தன் கையில்
மலைசரித்த மாவீரன் மார்பில்
கடலும் திணறும்
மூச்சு வெப்பத்துள்
தனம் அழுந்த
விழிவேர்க்க
சுனையாக் கரும்பாகி....

வேர்ப்பலாக்கொடியிடையென
விரல் விலக்கி
வேர்க்கும் விழியில்
விழிசெருகி
பனையோலைக்கை வளைத்து
தொன்னையாக்கி
தானே ’கள்’ளென்னும்
கோ கள்வன்...

தங்க வட்டிலில்
தேனும் தினையும்
கறியும் கூழுமாய்
குழைத்தவன் கையில்
வாழையிலையென
வளையுமென் தேகம்....

சிம்மாசனச் சிங்கம்
கிளியாகி
கௌவிய சொண்டு கடித்து
நானா இல்லை நீயாவென
வம்பிழுத்து
சன்னதமாடிக் களைத்து
பின்
ஓடத்தில்
நானும் கூட...

யானை காதில் மந்திரமோதி
சிறையிட்ட நிறைகோலன்
மஞ்சன அறை தாழிட்டு
தாவடமறுத்த வெற்றுமேனியன்
தானே கைதியாகி...

தாவணிக்கும்
வாசனையுண்டோவென
வெள்ளந்தியாய் வினவி
விடியாக் கட்டளையிட்டு
இரவடைத்து
விளக்கில்
கொடியேற்றுவிழா...

அற்புத இரவு விடிகையில்
கொடியே போர்வையாகி...!!!

(தாவடம் + உருத்திராட்ச மாலை )

ஹேமா(சுவிஸ்)