*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, December 31, 2014

சூது கௌவும் 2014...

அகப்பா விழுத்தி
அகலவுரை நிறைத்து...

வேர்ப்பலாச் சுவையில்
வெதுவெதுப்பாய்
பூனை மயிரொதுக்கி
குங்கும் தேய்த்து
கொஞ்சி...

அகள விழியிலும்
முலை மேட்டிலும்
இடை பற்றும்
வயிற்றிலும்....

பொறு பொறு
கொஞ்சம் பொறு
போர்க்காலக் கிபீர்போல
ஏனிந்த வேகம்.

கண்ணாடி துளைக்கும்
ஒலிபோல்
ஒளிபோல்
முத்தங்களின்
மென்மையும்
மெதுமையும்
மேனி சுடுமாமே.

அங்கண் கொள்ளேன்
அகற்சி குறை.
பாலையில் ஊரும்
நீர்ப்பாம்பென
ரகசியங்களின்
பலவீனம் கண்டறியுமாம்
சில முத்தம்.

சூதாட்டத்தின்
விநோதச் சொல்போல
மறைந்திருக்குமாம் சில.

பிணைந்த பாம்பின் முத்தம்
பார்த்திருக்கிறேன்
இமைமூட மகுடியூது நீ.

கைது செய்கிறேன்
நான்
சில கௌரவ வார்த்தைகளை.

முலைப்பால்
சுவையறியாக் குழந்தைபோல
தவிப்பின் யுக்தி தரப்பாரேன்.

வேம்பூவின் வாசம் நிரப்பு
புங்கைப்பூவென உதிரவிடு
தாழ்முடி மல்லிகையோடு
கூடெடுத்துப்போ என் உயிரை
அது சுலபமுனக்கு.

வருடத்தின் கணக்கை
எண்ணி முடி
என்னில் முடி
எட்டிய நொடியே
நம்மோடு இனி 2014.

சுருக்காய் சுருக்காய்
இன்னும் சுருக்காய்
பாலேடு மீது படியும்
சிறு சிறு சுருங்கலாய்
இறுக்கி.....கிறுக்கி!!!


குழந்தைநிலா(ஹேமா)

Monday, December 29, 2014

'கண்ணா'மூச்சி ஏனடா...

நீ...
என்பது பொய்யாகி
இருளிலும் என்னோடிருக்கும்
நிழல்போல.

கருமுகில் கசியும்
ஈரம் விரட்ட
பொத்திய அன்பின்
பௌத்திரப் பொதியில்
கதகதக்கும்
உன் பெயரிலொரு
கருப்பு டெடிபியர்.

பாட்டுப் பாரதி
கண்ணம்மாவின் காதல்
மீராவின் வீணை
சாம்ராஜ்ய கருப்பு ராஜாக்களின்
சரித்திர முத்தங்களை
உருக்கி உருவேற்றி
கொலுசாக்கி
நமக்காய்
சிணுங்கும் கனவுக்குள்
புகுத்திக்கொள்ளேன் பூக்கருப்பா.

நிலையில்லா ஆணவம்
அதிகாரம்
கர்வம்
திமிர்
ஆதியிருப்புச் சடங்குகள்
இனி எதுக்கு?

ஒட்டகக் கொம்பாய்
கனவுயரங்களின் லாவகம்.

ஏறு ஏறு
அம்பாரியில் ஏறு
நானே கிரீடமாக
நீயே முத்தங்களாகு
கரியின் கருநிறத்தில்.

கருக்கொண்ட தீ உறையும்
மீண்டும் அத்தீக்குள்ளேயே!!!

குழந்தைநிலா(ஹேமா)

Tuesday, December 23, 2014

அவனும் நானும்...

போதையில்
தட்டிக்கொண்டேயிருக்கிறான்
கதவை.

திட்டுவதை
அதட்டுவதைத் தவிர வழியில்லை.

என்ன..... ?

'உப்' பென்று ஊதிவிட்டு
'உர்' ரென்று
பார்த்துக்கொண்டிருக்கிறான்.

என் கோப்பை
வைனின் சாரம் குறைய
வெறுமனே
சிவப்பு நிறத்தில்
மிதந்துகொண்டிருக்கிறது
அவனுக்கான வலி.

ம்ம்ம்....
இப்போது தூங்கியிருப்பான்.

மெல்ல மெல்ல அணைத்து
எனக்குள்
இறங்கிக்கொண்டிருக்கிறது
வெண்பனிக்குளிர் இதமாய்.

நானும் உறங்கலாம்
இனி
நாளை அவன்
கதவு தட்டும்வரை!!!

குழந்தைநிலா(ஹேமா)

Monday, December 22, 2014

இருட்டு இரவு...

முயல்குட்டியென
மிரட்சியுடன்
மிழற்றிக்கொண்டிருக்கிறது
ஸ்தலவிருட்சமாய்.

தொங்கு சதைகளில்
எதுக்களித்து
தெறித்த வாந்திபோல
முகம் சுளித்தாலும்
வயசுப் பொத்தல்கள்
தூர்வழி தெந்தனமாட....

பூக்களற்ற காலத்தில்
தேனும் வண்டுகளும்
பனிகுடைந்து
நுனிப்பாதம் விறைக்க
வெண்சுருட்டுப் புகையாய்.

காதலில் நலிந்தவன்
காமத்தால் நனைகிறான்.

துகிலாய்ப் போர்த்த
நுரை பூத்த
இலேசான இரவுகளை
வேண்டச் சொல்கிறான்
புதிரற்ற
ஒரு புதிய இரவிடம்.

கொத்திய கொக்கின்
நீர்வட்டமென வாழ்வை
எப்படிச் சொல்லலாம்
இறுக்கி வதைக்கும்...

பண்பாட்டுப் புடவை நுனியில்
தொட்டில் கட்டியசைத்து
பருவத்தை விழுங்கி
கூழாங்கல்லில்
கட்டித்தூக்கிய காமத்தை....?!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, December 19, 2014

பொம்மைகளற்ற பூமி...

போர்களின் துவம்சம்
முடியவில்லை
மண்புயலில் அமிழும்
கைக்குழந்தைகளோடு.

வேகத் தெருக்களில்
கையசைக்கும் சாத்தானை
வறுமையை
காற்றை
மழையை
எதிர்ப்படும் கடவுளை
அறியப் பிரியப்படவில்லை.

மனம் மரத்தாயிற்று
எப்போதோ.

அழுகுரல்களும்
இரத்தப் பிசுபிசுப்பும்
இன்னும் பிற ஞாபகமூட்டும்
வாசனைகளும் நாற்றங்களும்
நாசியோடு நின்றாயிற்று.

நாட்குறிப்புகளின்
விளிம்புகளிலும்
எச்சங்களின் சேடம்.

ஒரு வேளை
போரினால் இறந்த
குழந்தையொன்றறியலாம்
பாவமும் தர்மமும்
அதன் கொள்கையும்
மதம் சாரா
புதுக் கடவுளின் வருகையையும்.

போர்களும்
மதவெறித் துவேசங்களும்
கொன்றுவிட்டே செல்கின்றன
குழந்தைகளை.

எதற்கும் அசைவதில்லை
இப்போதெல்லாம் நான்
சத்தமிட்டுக் கூக்குரலிடுகிறது
தெருமுனை விலங்கொன்று!!!

 குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Sunday, December 14, 2014

*லாம்* களின் இருக்கை...

இருந்திருக்கலாம்
செய்திருக்கலாம்
கிடைத்திருக்கலாம்
சொல்லியிருக்கலாம்....

'லாம்....லாம்...'

படிமங்களில் நிலையழிந்த
இலையொன்று
தரைதட்டும் தரவாகிறது
சில 'லாம்' ங்கள்.

நெளியும் மண்ணுளியாய்
முன்னெப்போதோ
சேமித்த தர்மம்
கொடுப்பினைகள்
தொட்டு நீளும் கைகளில்
திசையறியாமல்.

மந்தார மரங்களுக்கும்
அலுவல்.

நிலையழிந்து
நிலம் தொடும் உடலுக்கு
உலுக்கித் தர ஏதுமில்லை.

மந்தணச் சொற்களையும்
மந்தாரப் புன்னகையையும் 
சேமிக்கிறது
தியானத்தின் பெருவெளி.

நீண்டு நழுவி
நடந்துகொண்டிருக்கின்றன
சில கொடுப்பினைகள்.

முழம் தள்ளித்
தனித்துறங்கும் குழந்தைமீது
முலைவெடித்துச் சீறும் பாலென.

கானல்நீர்க் குவளை
கொடுப்பினையாவது
கிடைத்துவிட்டுப் போகட்டும்
பட்ட மரத்தடியில்
நினைவுக் கனியுண்ணும்
பறவைக்கு.

அலட்சியமாய்
நிராகரித்துவிடாதீர்கள்
சில அங்கீகாரங்களை
மறந்தும்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, December 11, 2014

இறுக்கிய அனத்தம்...

மனம் சலிக்கிறது
கை விடப்பட்ட நாடோடியின்
கனவுப் பாடல்போல் தனித்து.

பேசித் திட்டி
உக்கிரச் சண்டையின் பின்
வார்த்தைகள்
நிறம் வழிந்து வேலியோரமிறந்த
பட்டுப்பூச்சியின் சிகப்பாய்
வயிறு பருத்து.

குட்டிச் சாக்குகளுக்கும்
தன் தந்தைக்கும்
ஏதுமில்லா முலையை
சூப்பிச் சப்பும்
நாய்க்குட்டிகளுக்கும் நடுவில்
பின்னிரவில் காத்திருக்கும்
சிறுமியாய் சிலசமயம்.

கூடிழந்த பறவையொன்றின்
நகச்சிலிர்ப்பை உணர்வதில்லை
காடு தொலைத்தவர்கள்.

அகமும் புறமும் சலித்து
கழுமரப் பழங்கறை
நனைத்து நுழைய
ஏந்திக் கொள்கிறது
வார்த்தைக் கொலைவாள்.

எச்சரிக்கையற்ற சில நிழல்கள்
பின்தொடரும்
செவிமடல்ப் பேய்களாய் !!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Thursday, December 04, 2014

காற்றின் கால் தடம்...

நினைவோடு ஒட்டிக்கொள்கிறது
சவரம் செய்யாத
உன் முகம்
தலைதடவி
விரல் கோர்க்க
பேசிக்கொண்டே தூங்கிவிடுகிறாய்
பரஸ்பர பார்வையை
என் பக்கம் துளைத்தபடி.

நிராகரிப்பில்லாத
உன் புன்னகை வளைப்பில்
இழுபடும் என் இதயம்
வியர்வை வாசத்தில்
அமர்ந்துகொள்கிறது.

பேசும்போது
அடிக்கடி நீ
சொல்லிக்கொள்ளும்
'குட்டிம்மா'
ஆழ்மன நெரிசலில்
அமுங்கினாலும்
அழியாமல்
பதிகிறது
உன் விம்பத்தோடு.

கணங்களை
இன்றாக்கி
இனியாக்கி
இரவாக்கி
பின்
நாளையாக்கிச் சுருக்க
எதிலும் நீயென
உருகி உடைகிறேன்
நொடிக் கம்பிகளுக்கிடையில்.

கொத்து ரோஜாக்கொடியில்
சிறுகணம் தங்கும் தேனியென
இல்லாமல்
இறுக்கி அணைத்துக்கொள்ளேன்
உன் எழுத்துக்களைப்போல்
ஒரு சிறு கணத்தில்
அதுவாகிக்கொள்ள!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 02, 2014

சங்கமம்...

பிரளய அலறலை அடக்கி
உயர்த்தி
வாசித்துக்கொண்டிருக்கிறது
அடைமழை.

முழுதாய்ச் சங்கமித்து...

பறை கொட்டி
ஆண்டாளாய்க் கண்ணனை
உள்ளூர நிரப்ப....

கனவோடு
இதழால் இதழுறிஞ்சி
மணிச்சிகைக் கொடியாய்
துவள...

கொதித்து வியர்த்து
தவிக்கும் உடலுக்கு
மயிற்பீலி வருடி...

அங்கங்கே
சிறு சிறு துளி தூவி
அந்தரக் கனவுறை போர்த்தி
சறுக்கிக் கடக்கும்
ஈர ராப்பூச்சி
பெருமலைக் காட்டில்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Monday, December 01, 2014

எனதிந்தப் பனியிரவு...

ஒரு மெல்லிசைப் பாடலிலோ
தாழப்பறக்கும் ஈசலின் இறகிலோ
வலசைப் பறவைகளின் ஒலியிலோ
கூட்டலையும் கழித்தலையும் சிலாகிக்கும்
என் நிலாவிடமோ
பனியடக்கி வேர்த்திருக்கும்
சுவர்க் கண்ணாடிகளிலோ
ஒரு கோப்பை பச்சிலைத் தேநீரிலோ
அடங்கா அர்த்தங்களுடன்
ழுழுவதுமாய் வியாபித்திருக்கிறது
எனதான இவ்விரவு.

ஒத்திகையில்லா வாழ்க்கை
ஒத்திகையில்லா மரணம்
நடுவே
ஒத்திகையில்லாக் கனவுகள்.

பிணங்களுக்கான முகங்கள் அவசியமற்றது
ஆனாலும் மனிதனுக்கு அவசியமானது
உறங்கப்போகும் எனக்கும்கூட.

எத்தனை தரம் தப்பித்திருப்பேன்
இந்த இரவிடம்.

நான் இங்கே இப்போ
தெளிவாயிருந்தாலும்
இப்பனியிரவு
பயங்கரமாயிருக்கிறது.

ஒருவேளை
கடைசியாய் இவ்வறையில்
மனித முகமொன்று இருந்ததென்று
சாட்சியும் சொல்லலாம் எனதிந்த இரவு!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

சரி...

தவறுக்குள்ளும்
சரி பொருந்தியிருக்கிறது.

வாழ்வியலோடு
வளைந்தும் சரிந்தும் எழுபவர்கள் நீங்கள்
எப்போதும் சரியைச் சரியென
ஒத்துக்கொள்ளப்போவதில்லை.

மொழியற்று முடங்கிய மனம்
நிலையற்று ஒழுங்கற்றுப் பறப்பதையும்
ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

எனக்குப் பிடிக்கிறது அந்தச் சரியை.

தோள்தட்டி முத்தமிட்டு
அணைத்துக்கொள்கிறேன்
சரியென்பார் யாருமின்றி
என்னை நானே.

மறைவாய் ஒரு சரி இருப்பதை
ஒருக்காலும் உணர்ந்து சரியென்று
முகம் மலர்பவரல்ல நீங்கள்.

உங்களுகென
ஒரு சரியை வைத்துக்கொண்டு
போராடுகிறீர்கள்.

சிவப்பு மதுபற்றி சுவையறியா
உங்களுக்கு அது சரியல்ல.

நானோ அருந்தி அருந்தி அருந்தி அருந்தி
ஆனால் நீங்களோ
குடித்துக் குடித்துக் குடித்தென்பீர்கள்.

என்னைச் சரியென முத்தமிடுகிறது மது
ஆகச்சிறந்த சரியை போதை என்கிறீர்கள்.

சரியான சரியே என்னை
சரியாமல் வைத்திருக்கிறது.

சரியே
உன்னை மிகவும் பிடித்திருக்கிறது
எனக்கு.

விடு...விடு...சரி...சரி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)