*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, June 30, 2010

அறியாவயசு...

தப்பான
தப்பின் தாளத்துக்கும் ஆடுகிறது !

தரை விழுந்து இறந்த பூக்களை
தலையில் சூடிச் சிரிக்கிறது !

சொந்தங்களைக் கண்டதால்
புன்னகைத்து வைக்கிறது !

தான் பாடமாக்கிய
தேவாரமும் திருவாசகமும் என
தானும் சேர்ந்தே ஒப்புவிக்கிறது !

தகப்பன் தூக்கும் தீச்சட்டியை
தான் தூக்க அடம் பிடிக்கிறது !

ஓட்டை போட்ட பானையில்
நீர் பிடித்து
குடிக்கவும் ஓடுகிறது !

தன் தாய்
இறந்ததை அறியா
அந்தக் குழந்தை!!!


ஹேமா(சுவிஸ்)

Thursday, June 24, 2010

காற்றும் காவலும்...

யுகப் போர்
ஆசையில்லா மனம்
சமூக நெருடல்
காதல் அறுந்த தேசம்
ஆணின் அன்பு
தொலைந்த தருணங்கள்
தூசு தட்டித் தேடுகையில்
ஒரு குழந்தையின் வரவு.

தேடல் ஒத்திவைப்பு
வார்த்தைப் பசி
கவிதைகளால்
விருந்து உபசரிப்பு
வெற்றிலையும்தான்.

நிலவொளிச் சேமிப்பு
இரவின் இணங்கல்
அங்கும்...
ஆராதனைப் பூக்கள்
வாசனையோடு.

வார்த்தைகள்
கோர்த்த களைப்பில் தூக்கம்
கலைக்காமல்
ஜன்னலருகில் காற்று
காற்றுக்குள் புகுந்த பூபாளம்.
கடல்பெண் காவல்.

நேற்று...
மீசை முளைத்த கவிதை
இன்று...
மீசையோடு செல்லக் குழந்தை.

ஒவ்வொரு இரவும் புறப்பாடு
மழை ஈசலாகி
ஏதோ தேடல்.
இன்றாவது கிடைத்துவிடும்
என்கிற ஆசை.

இனி எப்படி...?
விட்டு வெளியேற
குட்டிப் புன்னகையோடு
தனிமையில்...
குழந்தை ஒன்று இங்கு தூங்க!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, June 17, 2010

அளவீடு...

குடிப்பது உடலுக்குக் கேடாம்
விளம்பரம் ஒன்று
அன்றே...
நிறுத்திவிட்டேன்
விளம்பரங்கள் படிப்பதை !

அம்மா...
நான் பெரியவனாயிட்டேன்
பூசிவிட்ட
நகப்பூச்சையும்
உதட்டுப் பூச்சையும்
துடைத்துக்கொண்டே!

விளம்பரம் - எங்கள் புளொக்.

ஹேமா(சுவிஸ்)

Friday, June 11, 2010

ப்ரியம் சுழித்தோடும் வெளியில்...

அதிர்வுகள் எத்தனை
சந்தித்தது இந்த உயிர்
சிதறாத
என் உயிரை பறித்த வீரன் நீ !

கருத்த வீட்டின்
இறுகிய கதவு
இழைத்தது
இரையாகியது
இல்லாமலே போனது
பின் கழற்றியது
பெரிதேயல்ல தோழனே
கருவாய்
தொடரும் பிறப்பில்
என் குழந்தையாய் நீ !

மனம் தவிர்த்து...
இரு மார்பும்
ஒரு பெண்குறியும்
நீண்ட
அழகான விரல்களோடு கால்களும்
தடித்த தொடைகளுமே
பெண்ணென்ற குறியாய்
நினைக்கும்
ஆண்கள் மத்தியில்
அதிசயமானவன் தான் நீ !

நீ...வெளியே
நான்...உள்ளே
விளையாட்டல்ல
இது வாழ்வு !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 04, 2010

மனசோடு ஒரு கா(த)வல்...

தாத்தாவின் ஜாகை.
றங்குப்பெட்டியில்
அடிபட்டது பந்து.
வலித்தது தாத்தாவுக்கு.
யாருடா அங்க.
இங்கிட்டு வா...இங்கிட்டு வா.
அங்கயெல்லாம் விளையாடறதில்ல !

அம்மம்மா எதையோ
அரக்கப் பரக்கத் தேடுறா.
அறுபது வருடத் தாம்பத்ய உறவாய்
ஆதிகாலத்து அதே றங்குப்பெட்டி
கறளும் பிடிச்சிருக்கு.
ஏய் இந்தா இங்கிட்டு வா.
நீ தேடுறது ஒண்ணும்
அங்கயிருக்காது !

தாத்தா இறந்து முப்பதாம் நாள்.
துடக்குக் கழிக்க
சாமான் சட்டெல்லாம் ஒதுக்கி
வீடு கழுவுகையில்
அதே றங்குப்பெட்டி
விளக்குமாறு தட்ட
ஐயோ....
தாத்தாவின் குரல் !

தைரியம்தான்
தாத்தாதான் இல்லையே
திறந்து பார்த்தேன் !

பெருவிரல்
நடுவிரல் மோதிரவிரல் என
தனித் தனியாய் தவில் கூடுகள்
ஐந்து ஆறு சுருக்குப்பைகளில் !

அழகான ஜரிகைப் பையில்
ஒரு சோடி
சிவப்புக் கண்ணாடி வளையள்களோடு
ஒரு ஜரிகை ரிபனும் !!!

ஹேமா(சுவிஸ்)