*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, October 17, 2014

சுயமா நான் சுகமா ?

என்னையறிந்துகொள்ள
யாரோ ஒருவரின் நிபந்தனையற்ற அபிப்பிராயம்
தேவைப்படுகிறதிப்போ எனக்கு
கருப்பொருள்
என் இருத்தல் பற்றியும்
என் எழுத்துப் பற்றியும்.

என்னைப்பற்றித் தெரிந்திருக்கிறது
என் எழுத்துவகை தெரிந்திருக்கிறது
ஆனால் 'நான்' எனும் என் உள்ளூடன் ஏதும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஆனாலும்....
அவரவர் விருப்பத்திற்கேற்றபடி
கதைக்கத் தெரிந்திருக்கிறது.

என் எழுத்துக்களின் திமிரோடு
நான் ஒரு கவிஞராகவோ , போராளியாகவோ
மேடைப் பேச்சின் வல்லமையுள்ளவளாகவோ
அதே நேரம் சிறு பெண்ணாகவோ
காட்டிக்கொண்டதேயில்லை எப்போதும்.

யாரோ ஒரு கவிஞனின்
நிறவேறாக் கவிதைகளைத் தொடர்ந்திருப்பேன்
சிலசமயம் முடிக்கப்படா ஓவியத்தை ரசித்திருப்பேன்
என் இமை நனைத்த மழையை ரசித்தும்
கால் புதைத்த பனியைத் திட்டியும்
நித்திரை கலைத்த தொலைபேசியை உடைத்தும்
அப்பாவின் சிகரெட் பழக்கத்தை வெறுத்தும்
அம்மாவுக்குப் பாயாசம் பிடிக்குமென்றும்
பார்வை மங்கல் பற்றியும்
என் நிலாவோடு கதைத்துக் கனகாலமாயிற்று
என்றும் புலம்பியிருப்பேன்.

அழகாய் பந்தி பிரித்து என் வலிகள் இல்லா வாழ்வை
விளங்கியும் விளங்காமலும் நேசமித்ரன் கவிதைபோல
நவீனத்துவமாய்
குறியீடுகள் மறைக்கப்பட்டிருக்கவேணும்
பலர் அறியா என் முகம் போலவே.

நான்கு புத்தகங்கள் வெளியிட்டு
பத்து மேடையில் பேசியவரைக் பெருங் கவிஞரென்றும்
ஐநூறு கவிதை எழுதினாலும் புத்தகம் வெளியிடாவிட்டால்
"முகப்புத்தகத்தில் என்னதான் செய்கிறாய்
என்ன எழுதிக் கிழிக்கிறாய்
உன்னை யாராவது பெருங் கவிஞர்கள்
இதுவரை பாராட்டியிருக்கிறார்களா"என்று
நான்கு புத்தகம் வெளியிட்ட கவிஞரும் பேராசிரியுமானவர்
திட்டுவதுபோல முற்றில்லா வாக்கியங்களோடு
தமிழில் எழுதி ஆங்கிலத்தில் ஒப்பமிட்டும் தரவேணும்.

ஆனால்....

தமக்காய் கூட்டமொன்று வைத்திருக்கும்
பாராட்ட மனமில்லாக் கவிஞர்களுள்
அவருமொருவர்
அவரும் என்னைப் பாராட்டியிருப்பதாய்க் காட்டக்கூடாது.

அகதி வாழ்க்கையில் தனிமைக் கொடுமையோடு
மலம் கழிப்பதுபோல எழுத்தில் மன நாற்றம் கழிக்க
எழுதித் தொலைப்பதையும்
கவிஞர் என்று காட்டிக் கொள்ளவோ
மேடைப் பேச்சுக்கு ஆயத்தமாகவில்லையென்பதையும்
தூஷண வார்த்தைகள் போலவும் போலில்லாததாகவும்
நல்லவானாய் நடித்துக்கொண்டே
நடிகைகளுக்குக் கிசு கிசு எழுதுபவன்போல
எழுதித் தரவேணும்.

முக்கியமாய் ஒன்று...

இலக்கிய இலக்கணத்திற்குப் பொருத்தமில்லா
நவீன நாகரிகம்போல
விளக்கமில்லாக் கையெழுத்துபோல
கையால் வரைந்த கிறுக்கலாய் ஒரு படமும்
எடுத்துத் தரவேணும்.

மிக மிக அழுத்தமாக....

நான் பெயர் புகழ் வாங்க எழுதுபவளில்லை என்பதையும்
அதேநேரம்....
பொழுது போக்குக்காகவும் எழுதுபவள் இல்லையென்பதையும்
என் சந்தோஷங்களையோ துக்கங்களையோ
எழுத்துக்களோடு கதைத்துக்கொண்டிருக்கும்
கதைசொல்லிபோல
எங்கட ஊர் நாய்க்குட்டி விசரிபோல ஒரு விசரென்றும்
சொல்லி முடிக்கவேணும்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

5 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
வரிக்கு வரி சொல்லிய வார்த்தைகள் அத்தனையும் உண்மைதான்... ஏதும் நடந்ததோ... பார்க்கும் போது அப்படித்தான் விளங்குகிறது..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Angel said...

என்னாச்சு ஹேமா !! நீங்க உங்க இயல்பான நடையில் நடத்தி செல்லுங்கள் !!சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க பெண் கவி சக்ரவர்த்திதான் எழுத்துக்களை அழகாக செதுக்க முடியும் உங்களால் ..
வீணர்கள் ஆயிரம் சொல்வார்கள் பொறாமையில் ..நீங்க உங்க பாதையில் செல்லுங்கள்
சிலருக்கு வாயைதிறந்து பாராட்டக்கூட கூட மனம் வாராது அதான் வேதனை விட்டுத்தள்ளுங்க பெண் சிங்கமே :)

மோகன்ஜி said...

நிபந்தனையற்ற அபிப்பிராயம் என்றுமொன்றுண்டு.
கவிஞர்களுக்கு அது வாய்ப்பதில்லை.
காதலிகளுக்கு வாய்ப்பதில்லை.
கூலிக்கு மாரடிக்கும் வேலையில் வாய்ப்பதில்லை
கருவில் சுமந்த அன்னை ஒருத்தியன்றி
ஒருவரிடமும் அது வாய்ப்பதில்லை.

அதுவே
தேவையுமில்லை ஹேமா.

தனிமரம் said...

ஹேமாவை யார் சீண்டியது நம் ஈழத்துக்கு கவிதாயினி போல கவி பாட யார் உண்டு! கவலை வேண்டாம் நாம் வாசகர் இருக்கின்றோம்!சும்மா வெற்றுவேட்டுக்கு எல்லாம் நாம் பதில் பேச வெளிக்கிட்டாள் நாய்கள் ராஜ்ஜியம் திண்ணையில்!ம்ம்

மோ.சி. பாலன் said...

ஆழமான வரிகள் ஹேமா.

Post a Comment