*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, October 21, 2014

சதுரங்கக் காதல்...

சதுரங்கப் பலகையில்
உன் முத்தங்களுக்குப்
பலியான சிப்பாய் நான்.

காய்களென அடுக்கிய
பற்களில் அடியிலோ
நாக்கின் கீழோ
ஒளித்துவைத்த
எனக்கான
முத்தங்களைத் தந்துவிடு.
ஆடிக் களைத்த குதிரையென
நான் விழ
கண்களால் கொய்திழுக்கிறாய்
கமுக்கட்டுக்குள்.

பூனை மயிர்களை
ஒதுக்கிச் சிலிர்த்து
மீசை படர்த்தும்
கன்னக்குழிகளில்
நீ....
நிரப்பிய மோகம்
சூளையாகிறது
அசுரத் தீயாய்.

மிதக்கும் காற்றென
பலகைக்குள்
அடங்குகிறது என்னுயிர்
அசைதலுக்கும்
இசைதலுக்குமான
சம விரதத்தோடு.

சிலிர்த்து விறைத்த
என் கணுக்காலை
ஏவலாளிகள் கொண்டு
இழுத்துக் கட்டி
காமப்பேயென
மீண்டும் மீண்டும்
உறைந்த முத்தங்களை
எச்சிலாய்ப் பீய்ச்சிவிடுகிறாய்.

நான் வெல்ல நீ தோற்க
நீ வெல்ல நான் தோற்க
இன்னொரு ஆட்டம்
ஆரம்பமென
சொல்லிச் சொல்லியே!!!

நன்றி - கல்கி தீபாவளி மலர் 2014

நன்றி - அமிர்தம் சூர்யா

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் அக்கா...

தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_22.html

நன்றி

”தளிர் சுரேஷ்” said...

அருமை! இனிய தீபாவளிநல்வாழ்த்துக்கள்!

Post a Comment