*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, August 06, 2013

நேற்றைய கனவு...


இல்லைகளை இருப்பதாய்
நிரப்பிக்கொண்டிருக்கிறான்
யாரோ ஒருவன்.

நீரைச் சலனப்படுத்தா
நதி நீந்தும் சருகில்
புன்னகைக்கும் அவன் முகம்.

புவி வரைந்த வான்பறவை
அடைக்கலமாக்கிக்கொள்கிறது
அவன் சிரிப்பை.

அவன் நட்ட சிறு விதை
ஆழ்ந்து அகன்று
பெருவிருட்சமென
ஊன்றுகிறது வேர்களை
எனக்குள்.

கிளைதொட்ட வண்டொன்று
ஒரு வரிப்பாடலோடு
தூது வருகிறது.

புலனில் அகப்படா அவனுருவம்
போர்த்திய கம்பளிக்குள்
மூச்சுக்காற்றாய்
நான்தானென நகையாட....

சணத்தில்
தூர தேசத்துப்பறவையாய்
தாவிக் கடல் விழுங்கி
கரைந்துகிடக்கிறேன்
அவனருகில்
நேற்றைய கனவில்
நான்....!!!

ஹேமா(சுவிஸ்)

13 comments:

இராஜராஜேஸ்வரி said...

கனாக்காலம் ..!

முனைவர் இரா.குணசீலன் said...

கனவுகளைக் காட்சிப்படுத்தும் கலைநுட்பம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கவிதை நன்று.

Surenthirakumar Kanagalingam said...

கனவுகளை ஓவியமாய்த் தீட்டிய கவிதை!, இயற்கையுடன் காதலும் சேருவது அழகு!

ராஜி said...

புலனில் அகப்படா அவனுருவம்
போர்த்திய கம்பளிக்குள்
மூச்சுக்காற்றாய்
நான்தானென நகையாட....
>>
பக்கத்தில் அவன் இருப்பதாய் நம்பும் நம்பிக்கைதானே காதலுக்கு அழகு!! அருமையான கவிதை

சே. குமார் said...

கிளைதொட்ட வண்டொன்று
ஒரு வரிப்பாடலோடு
தூது வருகிறது.

--------

ஆஹா... அருமை...

அழகான நம்பிக்கைக் கவிதை

இளமதி said...

//அவன் நட்ட சிறு விதை
ஆழ்ந்து அகன்று
பெருவிருட்சமென
ஊன்றுகிறது வேர்களை
எனக்குள்//...

என் மனதிற்குள்ளும் ஆழப்புதைந்து முளைவிடுகின்ற வரிகள் ஹேமா!...

அழகிய கனவென்னும் ஓவியம். ரசித்தேன்!
வாழ்த்துக்கள்!

த ம.2

Seeni said...

mm...

ராமலக்ஷ்மி said...

அருமை ஹேமா.

Ramani S said...

சணத்தில்
தூர தேசத்துப்பறவையாய்
தாவிக் கடல் விழுங்கி
கரைந்துகிடக்கிறேன்
அவனருகில்
நேற்றைய கனவில்
நான்....!!!//

கற்பனையில் இது அனைவருக்கும் சாத்தியமே
ஆயினும் இதை அப்படியே படிப்பவர்களும்
உணரும்படி எழுத்தில் வடித்தல் எல்லோருக்கும்
நிச்சயம் சாத்தியமில்லை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 4

வேடந்தாங்கல் - கருண் said...

போர்த்திய கம்பளிக்குள்
மூச்சுக்காற்றாய்
நான்தானென நகையாட....// வார்த்தை விளையாடி இருக்கிறது தோழி...

கீத மஞ்சரி said...

கனவும் நனவும் எதிரெதிர்த்திசையில் நகரும் அவலத்தை அழகிய கவிதையாக்க ஹேமாவால் மட்டுமே இயலும். மனந்தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் ஹேமா.

விமலன் said...

நேற்றைஅய கனவுகள் இன்றைக்கும்,என்றைக்கும் படர்கிறதாய்/

Post a Comment