*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 16, 2013

வாழ்வு (2)


பிரபஞ்ச எல்லையில்
மீண்டெழமுடியா மனதோடு
சில வன்மங்கள்
எதையும் சாசித்துவிடலாமென்கிற
நம்பிக்கையோடு தம் குவளைகளை
நிரம்பிக்கொண்டிருக்கிறது.

சுயமிழந்து பழுத்துவிழும்
இலையின் நரம்புகளில் இறக்கும்வரை
பச்சையம் இல்லாமல்
போகாதென்றாலும்
வன்மங்கள் நசித்தால்
நானென்ன அவர்களென்ன.

வானம் நுழைந்து மறைந்த பருந்தென
பாதைகள் குழம்பினாலும்
சில அனுமானப் பாதச்சுவடுகள்
காட்டுகின்றன
சரியான வாழ்வின் அஸ்திவாரங்களை!!!
விதிகளைக் கவிதையாக்க
முயற்சித்துத் தோற்றவள் நான்
எத்தனை முயன்றும்
இடைநடுவில்
சிறகு முளைக்கத் தொடங்கிவிடும்
என் விதிக்கு.

எழுத்தில் வடிகாலாய் கீறினாலும்
தாளில் விரிக்கத்தொடங்கும்
தன் சிறகை.

எனக்கான தலையெழுத்தை அழகாக்க
என்னுடன் இருத்தல் நலமென்றேன்
பறத்தலே தன் விதியென்று
உச்சந்தலை உழக்கிப் போனது
மாறாத சில கிறுக்கல்களை
மட்டும் விட்டுவிட்டு !!!


கீறிட்ட இடங்களை நிரப்பிச்செல்கிறது
வானில் முகில்கள்.

எனக்கான வார்த்தைகளுக்கு
இடம்விட்டுப் போக
கோர்த்துக்கொண்டிருக்கிறேன்
நிரப்பும் முடிவோடு.

என் பார்வையில் வானை ரசிப்பதா
அவன் பார்வையில் நீலத்தை ரசிப்பதா
இரவு நாம் விட்டுவைத்த
மௌனங்களையும் கோர்த்து
கோடிட்ட இடங்களை நிரப்புவதா ?

நீங்களும்.....
அண்ணாந்து வானம் பாருங்கள்
அவரவர் ரசனைகளுக்கான
கற்பனைகள் எட்டலாம்!!!

ஹேமா(சுவிஸ்)

6 comments:

சே. குமார் said...

என் பார்வையில் வானை ரசிப்பதா
அவன் பார்வையில் நீலத்தை ரசிப்பதா
இரவு நாம் விட்டுவைத்த
மௌனங்களையும் கோர்த்து
கோடிட்ட இடங்களை நிரப்புவதா ?

நீங்களும்.....
அண்ணாந்து வானம் பாருங்கள்
அவரவர் ரசனைகளுக்கான
கற்பனைகள் எட்டலாம்!!!

---

அழகான கவிதை...

Ambal adiyal said...

வலிகளின் ஆழம் புரிகிறது வார்த்தைகள் இங்கே
மௌனித்து இருந்தாலும் .உணர்வுகளைக் கொல்லும்
நினைவுகளைத் தவிர்த்தாலே சாலச் சிறந்தது .வாழ்த்துக்கள் தோழி .

மகேந்திரன் said...

முதலில் நீங்கள் தேர்ந்தெடுத்த நிழற்படங்களுக்கு ஒரு பூங்கொத்து...
பல கதைகள் பேசுகின்றன .படங்கள்...
கவிதைகள் அனைத்தும் .முத்துக்கள்...

மாதேவி said...

"நீங்களும்.....
அண்ணாந்து வானம் பாருங்கள்
அவரவர் ரசனைகளுக்கான
கற்பனைகள் எட்டலாம்!!! "
விதவிதமாய் தோன்றும் கற்பனைகள் அழகிய கவிதை.

Viya Pathy said...

"நீங்களும்.....
அண்ணாந்து வானம் பாருங்கள்
அவரவர் ரசனைகளுக்கான
கற்பனைகள் எட்டலாம்!!!"
அருமையான கருத்து அழகிய வரிகளில்

Thanglish Payan said...

Nice !!!

Post a Comment